Wednesday, March 3, 2010

தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்

குடும்ப வாழ்வின் சூட்சுமங்களை சராசரிகள் மட்டுமே சமாளித்து ஓடுகிறார்கள். இலட்சியவாதிகள், போராளிகள், கொள்கையாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவது குடும்ப 
வாழ்வின் வன்முறையால் தான். எந்த சித்தாந்தத்தையும் மூளையில் வைத்துக் கொண்டு குடும்ப வாழ்வை எளிதாக எதிர்கொள்ள முடியாது.


தோழர் வரதராஜன் அவர்களின் பரிதாபகரமான மரணம் நம்மை சிதறடிக்கிறது. நமக்கு செய்தியாக அவரது மரணம் பலவற்றைச் சொல்கிறது. அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் மனசின் ஆழத்தை நிமிண்டுகின்றன. இந்த அறிவியல் தொழில் நுட்ப காலத்தின் ஒய்யாரமான காலத்தில் வாழ்வதற்கு வெட்கமாய்த்தான் இருக்கிறது. மாற்றங்கள் என்பது இயல்பாய் வரவேண்டும். ஒரு அதிர்வின் மூர்க்கத்தோடு படு செயற்கையாய் நுழைந்து அதுவரை நாம் நம்பிய, கட்டிக்காத்த அத்தனையையும் தூக்கி மிதித்து துவம்சம் செய்து நாம் அண்டி நிற்க கூட வழியில்லாமல் செய்து விடுகிற இந்த நவீன வாழ்வு அச்சம் தருவதாகவே இருக்கிறது.


நிஜங்களை விட நிழல்கள்தான் அருமையானவை என்று நம்மை நம்ப வைக்கிறது. நேரில் பேசுவதை விட இருந்த இடத்தில் இருந்தே கைப்பேசியில் பேசுவது நல்லது என்று நினைக்க வைப்பது போல.நிஜங்களைப் பார்த்தால் வெறுப்பாய் இருக்கிறது.அவை எப்போது வேண்டுமானாலும் எதிர்வினையை துவக்கி விடுமோ என்கிற உள்பயம் இருக்கிறது. இரத்தமும், சதையுமான அதன் சூடு தாங்க முடியாதது போல இருக்கிறது.


நிழல்களின் குளிர்ச்சியில் உறைந்துப் போய்விடலாம்.அதன் ஜாலங்கள் நம்மை ஆக்கிரமித்து மயங்கி மழுங்கடிக்கின்றன. வெயிலில் வேர்வை சிந்தி உழைப்பதை விட,  அமைதியான, சத்தமில்லாத நிழலில் கண்ணை மூடி யோகா செய்வது அனைத்து விடுதலையையும் கொண்டு வந்து சேர்க்கும் போல தோன்றுகின்றது. மழுங்கவும், சில்லிட்டுப் போகவும் ஆசையாய் இருக்கிறது. உலகமயமாக்கல், தனியார் மயமாக்கலின் ஒப்பனைகள் எல்லாம் நமக்கு உபதேசிப்பது பலவீனங்களை மட்டுமே என்பதை அறிந்து கொள்ள முடியாத 
படிக்கு இன்றைய காலத்தின் குரூரம் நம்மீது நம்மீது படிந்து கிடக்கிறது.


இலக்கியம் நமது வாழ்வின் சாரமாய் இருக்கும் அதே வேளையில் நம் வாழ்வை சுடர வைக்கும் தூண்டுகோலும் அதுவேதான். ஆனால் இலக்கியமாய் இயற்கையாய் வாழ எதுவும் அனுமதிப்பதில்லை. இயர்கை உணர்வை இழந்து விட்டுதான் நாம் அனைத்து ஆடம்பரங்களையும் பெற முடியும்.  உறவுகள் சகிப்புத்தன்மை என்கிற சூழலில் மட்டுமே வளரும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அலகாய் துண்டாடப்பட்டிருக்கிறான். யாரையும் யாரும் சகிக்க வேண்டியதில்லை என்பதன் அபாயத்தை யாரும் உணர யாராயில்லை. உணரும்போது தனிமையைத் தவிர வேறு எதுவும் அவர்கள் பக்கம் இல்லை. மரணத்தை வலிந்தேற்பது ஒன்றைத் தவிர.


ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது துணைவியின் துணைவி உள்பட அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது. தமிழின் ஆதிகால உணர்வும் கூட. உளவியல் சிக்கல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன.  இது மாசுகளின் காலம். நீர் மாசு, காற்று மாசு,ஒலிமாசு என்று இயற்கை நமக்களித்த அற்புதங்கள் அனைத்தும் மாசாகிப் போய் நமக்கான 
மயானபரப்பாகிக் கொண்டிருப்பதைப் பற்றிய கவலை நமக்கில்லை. இத்தனை மாசுக்களுக்கும் தாய் மாசு மனமாசு.இம் மனமாசு ஒவ்வொருவர் உள்ளேயும் பெருவடிவெடுத்து நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த பெருவடிவுடன் கூடிக் களிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.

         இதனால் சமூகம் சாக்கடையாகி நாற்றத்தை தூவிக் கொண்டிருக்கிறது.இவற்றிலிருந்து தப்பிக்க நம்மிடம் அபூர்வமான மருந்தொன்று இருக்கிறது. ‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.                                                                                       - சுகன் -

20 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே . . .

நல்ல பதிவு. .

butterfly Surya said...

அன்பே சிவம்.

ஆனால் தற்கொலைதான் தீர்வா..? அல்லது ஓஷோ சொல்வது போல் அதுவும் ஒரு வித நம்பிக்கையா..?

Thenammai Lakshmanan said...

//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //

மிக உண்மை மயில் ராவணன்

புலவன் புலிகேசி said...

//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.//

இதைத்தான் நான் சொன்னேன் என்னை நாத்திகன்னு சொல்லிட்டாங்க தல...

மரா said...

@ கருந்தேள்
அற்புதமான வார்த்தைகள். நன்றி நண்பரே!

மரா said...

@ பட்டர்ஃபிளை சூர்யா
உங்க கைப்பேசியில் கூட இந்தப் பாட்டு தான் வருது.நன்றி.

மரா said...

@ தேனம்மைலக்‌ஷ்மணன்
வருகைக்கு நன்றி.

மரா said...

@ புலவன் புலிகேசி
நீங்க கடவுளை மறந்துட்டு மனிதனை நினைக்க சொல்றீங்க.நான் உங்ககூட காய்..

சைவகொத்துப்பரோட்டா said...

அருமை நண்பரே, இப்பெல்லாம் அன்பு என்றால் கிலோ விலை என்று கேட்குறாங்க.

Chitra said...

‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.”


........அருமையான பதிவு.

கிருஷ்ண மூர்த்தி S said...

மயில்ராவணன்!

சில நினைவுகள் சந்தோஷமானவை, அதே நேரம் சோகமானதாகவும் சமயங்களில் இருந்து விடுவதுண்டு!

தோழர் WRV யை கட்சி கைவிட்டுவிட்டது என்பது சோகம். அவருடைய கடிதங்களில், அவர் மனைவியை விவாகரத்து செய்யும் அளவுக்கு, அதுவும் அவர் மனைவியே முன்னெடுத்துச் செய்தது தான் என்று இன்னும் நிறைய விஷயங்களை மறைக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருப்பதையும் பார்க்கும்போது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இந்த சாபத்தை நினைத்து வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை!

கேரளாவில் பினரயி விஜயன் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்கள்! கட்சி அங்கே ஊழல் செய்தவரைப் பாதுகாக்கிறது!

இங்கே, மாதர் சங்கத்து உள்ளூர்த் தலைகள் நிறையவே எல்லை மீறி, ஒரு நல்லதொழனின் உயிரைக் காவு கொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். கட்சியும் அதற்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது புரிகிறபோது எழுந்த அதிர்ச்சி....!

இங்கே மரணம் என்பது கூட மிகப் பெரிய விஷயமில்லை! ஏதோ ஒரு நிலையில் எல்லோருக்குமே நிகழ்வது தான்!

எப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.

வேறு என்ன சொல்ல?

மரா said...

@ கிருஷ்ணமூர்த்தி
ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கு.
//எப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.
//
மிகச் சரியான வார்த்தைகள். நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரம் கூப்பிட்டுக்கிவான்றது உண்மையோ?

Karthikeyan G said...

ரொம்ப நல்லா இருக்கு..

Karthikeyan G said...

பல விசயங்களை சொல்லிருக்கீங்க..

கிருஷ்ண மூர்த்தி S said...

இதை வேறொரு விதமாகவும் சொல்லலாமே!

கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது! நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்!

சாமக்கோடங்கி said...

// அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //

இது உண்மையான வரிகள்..

நன்றி..

மரா said...

@ கார்த்திகேயன் ஜி
வருகைக்கு நன்றி நண்பரே.

@ கிருஷ்ணமூர்த்தி
//கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது! நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்!//
சொல்லலாம். ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்.

மரா said...

@ சாமக்கோடங்கி
ஆமாம் ப்ரகாஷ்.காந்தி இதைக் கையில் எடுத்ததால்தான் மிகப்பெரிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்./

எது சத்தியமான வார்த்தை? ஜெயமோகனுடையதா? இல்லவே இல்லை!

அதிகாரத் தரகுவேலை மட்டுமே போதும் என்று செயல் பட்ட ஹெச் எஸ் சுர்ஜீத் காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியைக் கரையான் அறிக்கை ஆரம்பித்து விட்டது.

கிழடுகளின் பிடியில் இருந்து கட்சி வெளியே வரும், கொஞ்சம் நல்ல மாற்றம் வரும் என்று தான் காரட் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது நம்பியவர்களில் நானும் ஒருவன்.

கிழடுகளின் பிடி, சிந்துபாத் கதையில் வரும் நொண்டிக் கிழவன் தொழில் ஏறி அமர்ந்து கழுத்தை நெரிப்பது போல இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது போல!

காரட் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல! அவரை அப்படி ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும்படி செய்த, மாநிலக் குழுவைப் பற்றி, மாதர் சங்கத்தை உத்தமர்களாக்கிவிடும் முயற்சியில், வீணாக காரட் தலையை உருட்டுவானேன்?

cheena (சீனா) said...

அன்பின் மயில் ராவணன் - அன்பு - அது இல்லாமல் வாழ்க்கையே இல்லை - இருப்பினும் நாம் அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. ம்ம்ம்ம் - அன்பே சிவம்

தோழர் வரதராஜனைக் கட்சி கை கழுவு விட்டது வருந்தத் தக்கது. நல்லதொரு தோழர்.

நல்வாழ்த்துகள் மயில்ராவணன் - நட்புடன் சீனா