Saturday, April 6, 2013

Baadshah - பாட்ஷா

                             முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ், கண்களில் ஒத்திக் கொள்வது போல் ஒளிப்பதிவு செய்த நம்ம K.V.குகன், இதுக்கு காரணமா இருந்த இயக்குனர் சீனு வொயிட்லா மூவரையும் பாராட்ட வேண்டும்.
                                           
கதை என்னடா தம்பின்னு கேட்டீங்கன்னா ஒன்னும் புதுசா இல்லை.சினிமா ஆரம்பித்த காலங்களிலே இருந்து சொல்லப்படும் கதைதான்.நாயகன் நாட்டுல நடக்குற குண்டுவெடிப்புகள்,மாஃபியா கும்பலின் வெறியாட்டம் இதையெல்லாம் இதையெல்லாம் வேறருக்க முடிவெடுத்து அதை எப்புடி செயல்படுத்துறார். சரி இதுலா எதுக்குடா காஜல் அகர்வால்,நாசர், ப்ரம்மானந்த், M.S. நாராயணா,சுகாசினி,முகேஷ் ரிஷி,ஆஷிஷ் வித்யார்த்தி ”தனிக்கல்ல” பரணி,சுதா,ப்ரகதி,சுரேகா வாணி .... இம்புட்டு பேரு வர்றாய்ங்கன்னு கேட்டீங்கன்னா காரணம் இருக்கு.

                                         
சீனி வொயிட்லா நல்ல மசாலா படங்கள்- காமெடி+ஆக்சன் கலந்து கொடுக்கறதுல கில்லாடி.தூக்குடு,கிங்,ரெடி இப்படி நிறைய ஹிட் குடுத்த இஉஅக்குனர். சரி படத்துக்கு போலாம்.படம் பேர் போட்டவுடனே
நன்றி “மகேஷ்பாபு”ன்னு போட்டாய்ங்க...ஆகா நாம ஜூனியர் N.T.R சினிமாவுக்கு தான வந்தோம்.. என்னாத்துக்கு மகேஷ்பாபு பேர போடுறாயுங்கன்னு பார்த்தா முதல் 10 நிமிடம் ஒரு சின்ன அறிமுகக் காட்சி(டாகுமெண்ட்ரி மாதிரி)- இந்தியா ஏன் இப்புடி இருக்குன்னு சொல்லி சில பல குண்டுவெடிப்பு சம்பவங்களைக் காண்பிக்கிறார்கள்.அதுக்கு பிண்ணனி குரல் மகேஷ்பாபு.

  

அப்புறம் வழக்கம்போல ஒரிஜினல் தெலுகு சினிமாலு. பெரிய கல்லெல்லாம் கால்ல கட்டி, நல்ல பெரிய பெரிய இரும்பு சங்கிலியெல்லாம் போட்டு ரெண்டு கைகளையும் கட்டி வெச்சிருக்காய்ங்க நம்ம கதாநாயகன.
பக்கத்துல ஆஷிஷ் வித்யார்த்தி நின்னுகிட்டு வயலின் வாசிச்சிக்கிட்டே(ஏதோ பழைய சீனப் படமொன்றில் பாத்திருக்கேந் ஒரு வில்லன் கோஷ்டி எதிரி + அவன் காதலி ரெண்டு பேரையும் சுட்டு கொன்னுட்டு கோடரிய தூக்கி போட்டு வயலி வெச்சு வாசிச்சிகிட்டு இருப்பாய்ங்க) N.T.R அப்பாவ கொல்ல போறேன்னு சொல்றாப்டி. அப்புறமென்ன N.T.R அம்புட்டு பேத்தயும் அடிச்சி போட்டுட்டு அப்பாவையும் கூட்டிட்டு போறாப்டி.

அப்புறம் ஜானகிய(காஜல் அகர்வால்) காதல் பண்றதுக்காக இத்தாலி கெளம்பி போறார்.ஜானகி ரொம்ப நல்ல பொண்ணு. நல்லதே செய்யும்,நல்லதே நினைக்கும் ஒரு ரொம்ப நல்ல பொண்ணு.காதல் காட்சிகள், பாடல் காட்சிகள்னு படம் முதல் பாதி ஜாலியா போவுது. திடீர்னு காஜலுக்கு திருமணம் நிச்சயம் ஆகுது நம்ம நவ்தீப் கூட.நவ்தீப் பெரிய போலீஸ் ஆபிசர் ஆனால் பெரிய மாஃபியா கும்பல் தலைவனான ஸாது பாயோட கைக்கூலி.

ரெண்டாம் பாதிதான் செம.நாசர் ஒரு கண்டிப்பான(வீட்ல) காவல்துறை அதிகாரி. எப்பப் பார்த்தாலும் தன்னோட தங்கச்சி புருசனும், போலிஸ் இன்ஸ்பெக்டருமான ப்ரம்மானந்தத்தை திட்டிகிட்டே இருக்காரு.
கல்யாண வேலைகள் செய்யும் "Marriage Contractor"ஆ நாசர் வீட்டுக்குள்ள வரும் N.T.R மற்றும் அவர் நண்பர்கள் பிரம்மிய உசுப்பேத்தி “கனவு உலகம்” அது இதுன்னு சொல்லி அவர் பண்ணும் சேட்டைகள் அதகளம்.

                                                   

“Baadsha Project" என்னா, அது வெற்றியடைந்ததா இல்லையா, ஸாதுபாய் யாரு,சித்தார்த்க்கு படத்துல என்ன வேலை, M.S.நாராயணாவோட காமெடி ட்ராக், எவ்வளவு அழகா காட்சிகளை இயக்குனர் இணைக்கிறார், கல்யாண மண்டபத்துல நாசர் குடும்பத்து வெண்கள் தெரியாத்தனமா மது கலந்த ஜூஸ் குடிச்சிட்டு போடும் ஆட்டம் இது எல்லாத்தையும் வெண்திரையில் காண்க. N.T.R ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான விருந்து. போலவே தெலுங்கு மசாலா படப் பிரியர்களுக்கும். புது HairStyle, அருமையான நடனம்,வசன உச்சரிப்புன்னு N.T.R கலக்கியிருக்கார். தமன் இப்ப வருகிற நிறைய பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைச்சுகிட்டு இருக்கார், இப்படத்தின் பாடல்களும் அதிரடி தான். நம்ம சிம்புகூட ஒரு பாட்டு பாடியிருக்கார்.

டிஸ்கி: அந்தரு பாகுன்னாரா.. Onsite ஆந்திராவில் இருக்கும் Nashville,Tennesse வந்திருக்கேன். அதான் திடீர்னு தெலுங்கு படம் :-)

Tuesday, August 23, 2011

கருணை புரிய தருணமிதுவே!


 வணக்கம். நான் உங்கள் பாசத்துக்குரிய மயில்ராவணன் பேசுகிறேன். ஒரு உதவி.
தெருக்கூத்து கலைஞர்களுக்கு 'Mobile, Portable Stage' ஒன்று தயார் செய்து தரலாமென்று நண்பர் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பிரியப்படுகிறார். போலவே அவர்களைப் பற்றிய குறும்படமும் தயார் செய்யணும்னு சொல்றார். ஹரி ரொம்ப காலமாகவே தெருக்கூத்து கலைஞர்களுக்காகவே கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர். எனக்கு கடந்த 5 வருஷமா நல்லாவே தெரியும் அவரை. அதனால் உங்களால முடிஞ்ச தொகையை அனுப்பி உதவுங்க


அம்மாபேட்டை கணேசன் அவர்களை வைத்து எடுக்கும் ஆவணப்படத்திற்கு விதைத்தவசம் என்று தலைப்பிட்டிருக்கிறேன். நேற்று நானும் தனபாலும் கால்கட்டு அவிழ்க்க அந்தியூர் சென்று வந்தவரை பார்த்து வரலாம் என்று போயிருந்தோம். செல்லச்சொக்கு போட்டிருந்தார், கால் வலி தாளாமாட்டாதவராய். கொஞ்சம் மனவருத்தமும் கூட... பக்கத்து வீட்டு அம்மையிடம் சோமாரக் கெழமையென்ன படம் புடிக்க சீனீமாக்கார பசங்க வராங்க என்று பெருமை பீற்றிக் கொண்டார் போல . அந்த அம்மைக்கு கொஞ்சம் வாய் சாஸ்தி. கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வையிங்கறாப்பல இருக்கப்பட்ட மொகரக்கட்டைங்கள வுட்டுட்டு இந்த நடையழகனத்தாம் படம் புடிக்க வர்றாங்களா? என்று ஏவிடியம் பேசிவிட்டாளாம். எலும்பு கூடி நட வந்து நானும் வேசம் போட்டு ஆடறனோ இல்லியோ லட்சம் உரூவா செலவானாலும் போச்சாது! எம்மூஞ்சி எதுனாச்சிம் உள்ளூரூரு சினிமாக்கொட்டாயில தெரியாட்டி போவுது கலைஞரு குடுத்த பொட்டியில வர்ற மாதிரியாச்சும் ஒரு ஏப்பாடு பண்டிவுடு என்றவரை கண்கரிக்க பார்த்திருந்தேன். கோரியபடிக்கு ஒரு சில இடங்களில் உதவிக்கரம் நீண்டிருக்கிறது. கையிருப்பு போக நிதியாதாரம் இன்னும் தேவையிருக்கிறது. அந்த ஏழைக்கலைஞனின் ஆவலை நிறைவேற்ற அன்பர்களே 
ஆவணப்பட த்திற்கு பண உதவி செய்வதைக் குறித்து மறுபடியும் ஒருமுறை பரிசீலியுங்கள் .


கண்ணனாக கனகராஜ் வாத்தியாரும் துரியனாக அம்மாபேட்டை கணேசன் அவர்களும் சந்திக்கும் காட்சி.
அபிமன்னன் சுந்தரி கல்யாணம் : கூத்து.


உதவி செய்ய தொடர்புக்கு: ஹரிகிருஷ்ணன் - 9894605371


M.Harikrishnan,
Account no: 534323956
Indian Bank,
Mecheri. 636451

Micr Code : 636019092
IFSC Code: IDIB000M025


உதவி செய்ய நினைப்பவர்கள் மேற்கண்ட இந்தியன் வங்கி எண்ணுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன். ICICI அல்லது HDFC அக்கவுண்ட் வேண்டுவோர்க்கு என் அக்கவுண்ட் விவரங்கள் தனிமெயிலில் அனுப்பி வைக்கிறேன்.


பின்குறிப்பு:
   உதவியவர்கள் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தால் நான் ஹரிகிருஷ்ணனிடன் சொல்லிடறேன். எல்லோர்க்கும் நன்றி.

Thursday, June 2, 2011

ஹிட்லர்- ஒரு வரலாற்றுப் புதிர்போர்கள் ஆபத்தானவை.
இனவெறி அணுகுண்டை விட ஆபத்தானது.

இந்த கருத்தில் நான் வெகு தெளிவானவன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இது இந்த கட்டுரையின் நோக்கம்.

        உலகம் முழுதும் எதிர்மறையாளர்களால் நிறைந்துள்ளது. எந்த விஷயத்தையையும், அணுகும் முறையில் தெளிவில்லாமல் இருந்தால் வரலாறு முழுதும் வெறுப்பை மட்டுமே உமிழும்
.
1940 களில் ஜெர்மனி ஒரு திறமையான நிர்வாகியால் மிக மோசமாக நடத்தப்பட்டது என்பதே உண்மை. ”ஹிட்லர்ஒரு வரலாற்றுப்புதிர்என்ற புத்தகத்தை படிக்கும் வரை எனக்கும் மேற்கண்ட குழப்பமளிக்கும் கருத்தாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு கொடுங்கோலன் நம்மிடையே வாழ்ந்தான் என்பதையும் மறுக்க முடியாது. வேண்டுமானால் அவன் வாழ்ந்த நாடு அவன் வரலாற்றை அடியோடு புதைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். ஆனால் அவன் வாழ்க்கையை பற்றி பல்வேறு திரைப்படங்களும் நூல்களும், விவாதங்களும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.

ஹிட்லர் பற்றி தமிழில் வெகுசில நூல்களே வந்துள்ளன. அவற்றில் இராசமாணிக்கம் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் குறிப்பிடத்தகுந்தது எனலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கொடுங்கோலனின் தனிப்பட்ட வாழ்வையும், அவன் அவ்வாறு அவல நிலை வாழ்வதற்கு காரணமான வரலாற்று சுவடுகளையும், இந்த நூலில் ஆசிரியர் அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார்.
எனது சகோதரர்கள், சகோதரிகள், மனைவியின் தாயார், என்னுடன் இணைந்து பணியாற்றிய விசுவாசமிக்க ஊழியர்கள், செயலாளர்கள், இவர்களுக்கு குறைந்தபட்ச எளிய அடிப்படை வாழ்க்கைகான வசதிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
என்று முடியும் உயில், ஒரு மிக மோசமான சர்வாதிகாரியின் நேர்மையான வார்த்தைகள் என்பதை ஏற்றுக் கொள்ள எனது சராசரி மனம் மறுக்கிறதுதான். ஆனால் அதுதான் உண்மை.

ஒரு மிகச்சிறந்த அரசியல் ஒழுக்கம் நிறைந்த போராளியாக ஹிட்லரை முன்னிறுத்துவதன் மூலம் இவர் ஹிட்லரின் அனைத்துக் கருத்துகளையும் ஆதரிப்பவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கித் தள்ளி விட முடியாது
.
யூத வெறுப்பையும் (Anti-Semite) , லட்சக்கனக்கான அப்பாவி மக்களின் சாவிற்கும் தன் எதிர்ப்பை இந்த புத்தகத்தின் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலான பகுதிகள் ஆழ்ந்த கருத்துகளை தற்கால அரசியலோடும், பாராளுமன்ற நடவடிக்கைகளோடும், துரோக அரசியலை, மக்கள் விரோத அரசின் போக்கை மறைமுகமாக சாடுவதாக இருப்பதாக எண்னத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தான் ஒரு சாதாரன அநாதை ஓவியனை, ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக மாற்றியது என்பதை அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூல்மிகச்சிறந்தவரலாற்று ஆவணம் என்று கூட சொல்லாம். நூலின் வடிவமைப்பு அருமை. 236 பக்கங்களில் 140 ரூபாய்க்கு ஒரு நாவலின் வேகத்துடன் படிக்க கிடைக்கும் இந்த நூல், பொதுவாக வரலாற்று நூல்களை படிக்கும்போது தோன்றும் சோர்வை நிச்சயமாக தராது.

டிஸ்கி:

      இவருடைய மற்ற நூல்கள்ஆண்மீகம் சம்பந்தப்பட்டவை என்பதை உண்மையில் நம்ப முடியவில்லைஇந்த நூல் முழுக்க ஒரு “optimistic approach” இருப்பதை உணர முடிகிறது