Wednesday, June 16, 2010

அகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல்


அகநாழிகை ஜூன் இதழ் வழமை போலவே நல்ல காத்திரமாக வந்துள்ளது. வாசுவின் தலையங்கமே நமக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றது.ரொம்ப அருமையா சில வார்த்தைகளில் சுருக்கென சொல்லுகிறார்.யோசித்துப் பார்த்தால் மிகச்சரியாகவே படும். என்னதான் நாமெல்லாம் பெரிய அறிவுஜீவின்னு வெளம்பரப் படுத்திக்கொண்டாலும் ஊடகங்களுக்கு எவ்வளவு தூரம் அடிமையாக வாழ்கிறோமென்கிற ஆதங்கம் அவர் எழுத்தில் தெரிகிறது.

நான் பலதடவை அவர்கிட்டே சண்டை போட்டிருக்கிறேன்,’யுவர் மேக்கசைன் இஸ் ஃபுல்லி லோடட்னு’.அது நூற்றுக்குநூறு உண்மை. இன்று பெரிய இலக்கிய பத்திரிக்கைகள் என பீத்திக்கொள்ளும் பத்திரிக்கைகள் கூட ஒரு பேட்டி, ஒரு பெருங்கதை, 2 அல்லது 3 சிறுகதை, வாசகர் கடிதம் என்றளவிலேயே இருக்கின்றன.

ஆனால் நீங்கள் ‘அகநாழிகை’ வாசகாராயின் உங்களுக்கு நல்லாவே தெரியும் எத்தனை நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வருகின்றனவென்று. ஒரு இதழ் அதுவும் இலக்கிய சிற்றிதழ் நடத்துவது எவ்வளவு கஷ்டம், எத்தனை நடைமுறை சிக்கல்கள் உள என்பது 25 ஆண்டுகளாக ஒரு மாதம் கூட விடுபடாமல் தஞ்சையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘சுந்தரசுகன்’ இதழாசிரியர் சுகனின் நண்பன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்.

சரி... எதுக்கு இவ்வளவு பெரிய பில்டப். காசு சம்பாரிக்க முடியாதுன்னா எவனாச்சும் பத்திரிக்கை நடத்துவானா? ஆளப் பாருன்னு.. நீங்க கேக்குறது எனக்கு கேட்கிறது.சத்தியமாக இல்லை. இதழ் நடத்துவது என்பது ஒருவித சந்தோஷம்,திருப்தி,போதை. ஒரு நல்ல பதிவு போட்டாலே எவ்ளோ சந்தோசப்படுறோம் நாம. சிற்றிதழ் கொண்டு வருவது அதையும் தாண்டிய ஒரு பரவசம் அளிக்கும் நண்பர்களே.

ஒரு தனிமனிதனின் உழைப்பு போதாது. ஒரு குழுவின் உழைப்பு முழுவதுமாக உட்கொள்ளும் மாய வேலை இதழ்பணி. ‘வலைப்பூ’ இருக்கு, ஏகப்பட்ட நல்லது, கெட்டது இணையத்துல இருக்கு..எதுக்கு சார் பத்திரிக்கை யெல்லாம் னு கேட்கிறீர்களா?

விடை எளிது தோழர்களே- உங்கள் எழுத்துக்களை உங்க கவிதையை, கதையை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து பாருங்கள், நீங்கள் உங்க எழுத்தோடு இன்னும் நெருக்கமாகிவீர்கள். அதுவே புத்தகமாக பார்த்தீர்களென்றால் அம்மகிழ்ச்சி பன்மடங்காகும்.(இதுதாண்ணே பலபேரு புக் போடுறேன்னு திரியுறாங்க! நல்ல விசயம்..தானே)

இப்ப என்ன திடீரென்று ‘அகநாழிகை’ மேல் அக்கறை என்றால் .... ஒன்றுமில்லை. மனசுல தோணுச்சு. பல நல்ல பத்திரிக்கை வந்த கொஞ்ச காலத்துலயே மக்களின் ஆதரவின்றி,சரியான நேரத்தில் ஆதரிக்காததால் காணாமல் போயிருக்கின்றன. இதுவும் அதுமாதிரி ஆகிவிடக்கூடாது என்ற ஆசை,பயம்.

ஒன்றை மட்டும் மறுபடியும் மறுபடியும் தெளிவாக்க விரும்புகிறேன் - ‘சிறுபத்திரிக்கை மட்டும் நடத்தி யாராலும் பணம் சம்பாதித்து விடமுடியாது, எனவே நீங்கள் ‘அகநாழிகை’ வாசித்து பயன்பெறுங்கள்’. அவரின் முயற்சிக்கு என்றென்றும் வாழ்த்துக்கள்.

அகநாழிகை சந்தா செலுத்த / புரவலராக இணைய / பதிப்பக வெளியீடுகளை பெற : ICICI வங்கிக் கணக்கு எண்.155501500097 - P.VASUDEVAN, Madurantakam Branch புத்தகங்களை வாங்க
தொடர்பு கொள்க : aganazhigai@gmail.com / +91 999 454 1010

Tuesday, June 15, 2010

ஞங் ஞங்ங் ஞ ஞா

                              -மயில்ராவணன்

பூரணி ஒரு கணம் தன்னையே மறந்து போனாள்.அந்தக் கணம் முதல் மனதில் சந்தோசம் ஆட்கொண்டுவிட்டது! ஆகவே அவள் ஒரு சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல மாறிவிட்டாள் என்று நான் சொல்லி வருகிறேன். இந்தக் கதையை நீங்கள் ரசிக்கும்படி எழுதத்துவங்கிய மயில்ராவணாகிய நான் பூரணிக்கு சிறகுகள் முறிந்து விட்டதும் பட்டாம்பூச்சியாகி விட்டாள் என்றதும் இது ஏதோ பின்நவீன மாய மந்திர எழுத்து என்று பயந்து பின்வாங்கி விடவேண்டாம்.


இது சாதா ரோஸ்ட் தான்.ஆனியன் கூட கலக்காத ரோஸ்ட்.பூரணி என்கிற பெயர் பூர்ணமாக இருப்பதால் கதாநாயகிக்கு அந்தப் பெயர். ஆனால் துரதிஸ்டவசமாகவோ, இல்லை சாதகக்குளறுபடியோ பாவம் பூரணி,கவுதம்மேனன் பட ஹீரோயின் மாதிரி இந்த சாதா ரோஸ்டின் முடிவில் பரலோகம் சென்றி விடகிறாள்.


உலகம் முழுவதும் பூரணி மாதிரியான பாவப்பட்ட பேக்குகள் இருக்கத்தான் இருக்கின்றன.கதைக்குள் வருவோம். நமது நாயகனின் பெயர் சேது.உடனே உங்களுக்கு ‘எங்கே செல்லும் இந்த பாதை? யாரோ யாரோ அறிவார்’ பாடலும் அதில் நடித்த விக்கிரமின் முகமும் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பே அல்ல.இந்தக் கதையை நான் பட்டுக்கோட்டையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் எழுதியது.அப்போது விக்ரம் என்ற நடிகரே இல்லை.


சேது ஒரு விளையாட்டு வீரன்.பூரணி சேதுவிடம் மனதை பறி கொடுத்து விட்டாள்.அவனை மைதானத்தில் கண்டதும் ஆயிரம் பூக்கள் இவள் உள்ளத்தில் மலர்ந்தன. அவனை பார்வை அம்புகளால் துளைத்தெடுப்பாள்.அழகான கண்கள்,எடுப்பான மீசை.கச்சிதமான கிராப் தலை என்று அழகின் மொத்த வடிவம் நம் சேது. பூரணி என்ன?பள்ளியில் எல்லோருமே சேது என்றால் ஜொள் வடிப்பார்கள்.


பூரணி மட்டும் என்ன அழகில் தோற்றுப் போய்விடுவாளா? கொவ்வை இதழ்கள்,பப்ளிமாஸ் கன்னம்,கிளிமூக்கு, ஒரே ஒரு சிங்கப்பல்! ஒரு பல் இருந்தால் ராசி குறைவு என்றும் இரண்டு வேண்டும் என்னைப்போல என்றும் நண்பர் ’கருந்தேள்’ராஜேஷ் கூறுகிறார். அதனால்தானோ என்னவோ நம் நாயகி ராசியில்லா நாயகி ஆகிவிட்டாளோ! என்று எனக்கே சந்தேகம் வருகிறது.


பூரணிக்கு இரவுக்காலங்களில் வரும் கனவுகளில் சேதுதான் தினமும் வந்துவிடுகிறான்.வேறு யாருமே வருவதில்லை! இவளும் தனித்தே இருக்கிறாள்.அவன் ஒரு யானையில் வந்து இறங்கினால் கூட யானை உடனே காணாமல் போய்விடுகிறது. கனவுகளில் பூரணியும்,சேதுவும் மட்டும்தான்.என்ன ஒரு குறை என்றால் எல்லாம் கருப்பு வெள்ளையில் தான்!கலர்கனவு வருவதில்லை.அந்தக் கால ஜெமினி,சாவித்திரி வெள்ளைப்பட காதல் போல!


பூரணி தன் தோழி சிந்துவிடம் தன் காதலை ஒருநாள் உடைத்தாள்.சிந்து கட்டுக்கோப்பானாவள்.வகுப்பில் முதல் மதிப்பெண் எல்லாப் பாடத்திலும் அவள்தான்! இதை தவறு என்றாள்.வீட்டில் பார்த்து உடனே கல்யாணம் செய்துகொள் என்றாள்! பூரணிக்கு கோபம்! முகத்தைக் கோணிக்காண்பித்து, ‘பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்’ பாட்டு பாடி நீ வேண்டுமானால் ஒரத்தநாடு பக்கம் நெல்வயல் வரப்பில் ஓடுடி”, என்று சிந்துவை கிண்டலடித்தாள். சிந்து பாடப்புத்தகத்தில் மூழ்கினாள்.


பூரணி தன் அடுத்தகட்ட பனிகளை ஆரம்பித்தாள்.சேதுவை கண்ணால் கண்டதும் புன்னகைவீசினாள்.அவனும் புன்னகை வீசிச் சென்றான்.பூரணி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். அவன் அதற்கும் புன்னகை புரிந்து நழுவினான். பள்ளி ஆண்டுமலரில் கவிதை ஒன்றுடன் அவன் புகைப்படமும் வந்திருக்க ஐந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டாள். நிரந்தர ராத்திரி என்ற தலைப்பில் உருகியிருந்தான், இவளுக்கு சேது தன்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான் என்றே நினைப்பாய் இருந்தது! படித்துப் படித்து கவிதை மனப்பாடாஅகி விட்டது பூரணிக்கு!


தளிரே!உன்முகம்
மத்தளத்தில் முழங்கப்பட்ட
  இன்னிசை மழை!
அந்த மழையில் நனைந்து
உடல் நடுங்க நிற்பது நான்!
நான் ஒரு நாட்டியமேடை
அதில் சலங்கையிட்டு
நடனமாடுவதோ நீ!


வெற்றிலைக்கு சிவப்பு வர்ணமா?
உன் உதடுகள் போட்ட பிச்சை அது!
புத்தனின் மவுனத்தை புரிந்து
கொள்வதில் தாமதம் ஏன்?


தளிரே!இதை மடியிலிட்டு
தாலாட்ட சொல்லவில்லை.
மந்திரம் போலுன் மார்பில்
மறைத்து வைத்தாலே போதும்.
நான் அமர்ந்து விட்டேன்
மணமேடையில் அப்பொழுதே!


அன்பே! உன் இதயவாயிலை திறந்துவிடு!
எனக்கொரு புதிய விடியலை கொடு!


பூரணிக்கு தலைகால் புரியவில்லை! இந்தக்கவிதையை எனக்காகவே எழுதியிருக்கிறான் சேது என்றேநினைத்தாள். சேது விளையாடுவான்,புன்னகைப்பான் என்றுதான் இத்தனை நாள் இவளுக்குத் தெரியும்.சேது கவிதையும் எழுதுவான்.


உள்ளத்தில் அலைமோதும் காதலை பொறுக்கமாட்டாமல் ஒரு சுபயோக சுபதினத்தில் பூரணி சேதுவிடம் ஒரு நாள் கொட்டினாள். காதலை கேட்டாள்!’நோ’ என்றான்.மனைவியாகிறேன் என்றாள்.உலகம் ரொம்ப பெரியது. அதில் அனுபவிக்க ஏராளம் உண்டு என்றான். என்னை என்ன செய்வாய்? என்றாள்.அன்பு காட்டப்படவேண்டியவளாம்.சமூகத்தின் பலவீனமான அங்கமாம்! நான் ஒரு பறவை என்கிறான்.குடும்ப உறவுகளுக்குள் சிக்கமாட்டேன் என்றான்.


அவனிடம் பின்னர் பூரனி உறுதியாய் கூறிவிட்டாள். வாழ்வது உங்களுக்காகத்தான்...அதில் மாற்றமில்லை. வருடங்கள் பல ஆனாலும் காத்திருப்பேன்” என்று.அதுதான் கடைசியும் கூட.ஆறுமாதம் கழித்து அவன் வீட்டை விசாரித்து சென்றாள். அவன் மாமா பதுகாப்பில் இருந்தவனாம்.மாமா இறந்தபின் ஆள் சென்ற இடம் தெரியவில்லை என்கிறார்கள். வாழ்க்கைப் பயணம் விரைவாகவே ஓடியது!


கிளைமேக்ஸ்--
ஏழு ஆண்டுகள் கழித்து நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பூரணி. பூரணி இந்தக் கதையின் ஆரம்பத்தில் தன்னையே மறந்து போனதாக எழுதியிருந்தேன்.அதுதான் உண்மை. பஸ் நிறுத்தத்தில் சேதுவை பூரணி இப்போது பார்த்துவிட்டாள். இன்னமும் தன்னை ஞாபகம் வைத்திருப்பானா? சந்தேகத்தில் பார்த்தவளிடம் சேதுவே வந்தான். நலம் விசாரித்தான்.மீண்டும் இறக்கைகள் முளைத்துக் கொண்டன பூரணிக்கு.


சேது ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில் இருக்கிறானாம். படித்த டிகிரி படிப்புக்கு அதுவே அதிகம் என்றான்.இவள் டீச்சராய் இருப்பதற்காக மகிழ்ந்தான். இருவரும் காபி குடித்தார்கள். புதிதாய் சிகரெட் குடித்தான். தவறுடா சேது இது! என்று சொல்லும் ஆசை வந்தது.

”திருமணம் ஆயிற்றா?” என்ற முக்கிய கேள்விக்கு வந்தான். நான் சொன்னது விளையாட்டுக்கு அல்ல!என்றாள். ஆனால் சேது திருமணம் செய்து கொண்டதாய் கூரினான். இவள் வீட்டுமுகவரி வாங்கிக் கொண்டான்.உங்க மனைவி அழகா? என்றாள். ‘ஆம்’ என்று கூறி விடைபெற்றான்.


தனக்கு திருமணம் நடைபெறாத செய்தியை சொல்லி அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த சேது அடுத்தநாள் அவள் முகவரிக்கு தேடி வந்தான் மனசு முழுக்க பூரணி மீது காதல் நிரப்பிக்கொண்டு! பூரணிக்கு நீங்க என்ன ஆகணும்? தகவல் இப்போதான் கிடைச்சுதா? நல்லாத் தான் இருந்தாங்க........ஆனா நேத்து நைட் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, என்றார் ஒருவர்.பாடியை ஆஸ்பிடல் கொண்டு போய்விட்டதாகவும் அவரே கூறினார்!ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்!

Monday, June 7, 2010

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

                                                   -மயில்ராவணன்

                          இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்கள் எல்லாம் பதினாறு வயது பெண்களின் உடல் வாகைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டும். ஆகவே பதினாறுகள் நிற்கும் பஸ்நிறுத்தத்தை இருபத்திஇரண்டுகள் தவிர்த்து வேறு நிறுத்தத்திற்கு சென்று விடுவார்கள். முகம் ஒடுங்கிப்போன இருபத்தி இரண்டு பார்ப்பதற்கு முப்பது போன்று தோற்றமளித்தது. என் பார்வையை அது சட்டை செய்யவில்லை. கிட்டே நெருங்கி வந்து மணி 
என்ன என்றது!


                       நானோ வேறு ஏதோ ஞாபகத்தில் நாலே முக்காலோ கிளாக் என்றேன். சார் நான் கேட்டது டைம்! என்றது மீண்டும். சாரி மேடம்...ஐந்தேமுக்கால் என்றேன். தேங்க்ஸ் என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றது. இதற்கு சிரிப்பு வேறு க்லோஸப் விளம்பரப்பெண் போல!


பஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. காலேஜ் பையன்கள் ஒரே ஒரு லாங்சைஸ் நோட்டை கையில் பிடித்து விரலில் வைத்து பம்பரம் போல சுற்றிக் கொண்டு வந்தார்கள்.இருபத்தி இரண்டு என் அருகிலேயே பஸ்சுக்காக காத்திருந்தது!


’ம்மா சுமதி, அன்று உனக்குப் பிறந்தநாள்...நான் உனக்காக குங்குமச்சிமிழ் பரிசு குடுத்தேனம்மா... நீயும் அதை வாங்கீட்டு கோடி நட்சத்திரம் ஒண்ணா சேந்தாப்ல ஹ்ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரிச்சியேம்மா...உன்னால அந்த குங்குமச்சிமிழுக்கு அழகு வந்ததா? இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா? அம்மா...சுமதி? என்று சிவாஜி போல ஒருவன் வசனம் பேச, என் அருகில் நின்ற பெண் சுமதி போலிருக்கிறது. உதடுகள் பிதுங்க என்னைப் பார்த்தாள். 


                       நான் என்ன சிம்புவா? சும்மா சம்மு சம்மு சம்மு சம்மாணம் பண்ணிடுவேன்னு வசனம் பேச? இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க? நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹா!ஹா! என்று சிரித்தான். நான் நினைத்ததை கண்டு கொண்டானோ? 
பையன்கள் பஸ்சுக்காக காத்திராமல் அகன்றார்கள். சுமதி அமைதியானாள்.


எனக்கு திடீரென சிந்தனை தறிகெட்டு ஓடியது!பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லை! இன்று ரத்தமில்லா கொலை ஒன்றுசெய்யபோகிறேன். ஆமாம். அந்த கொலையை நான் செய்வதற்காக யோசித்தபோதே என் முகம் விகாரமாகி விட்டதாம்.


                      ஆபிஸில் ஷாலினி, நைட்டு தூக்கமில்லையா மயில்? விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க? பேய் மாதிரி முழிக்கிறீங்க? என்று கிண்டலடித்தாள்! ஆனால் அவள் முகம் தான் தூங்கா முகம் போல இருந்தது!


நான் பஸ்ஸிற்கு காத்திராமல் நடையிட்டேன். சுமதி, சார் நடந்தேவா என்றாள். அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காவு கேட்கும்பேய்களையும், குறுக்கிட்ட பூதங்களையும் கைகளால் அப்புறப் படுத்தி விட்டு வீடு நோக்கி நடந்தேன்.


நான் வீடு வந்த சமயம் உள்ளே..அனுஷ்காவின் கொஞ்சும் குரல் வீட்டினுள் கேட்டது!” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா! இலையில் சோறு போட்டு!” என்று! எனக்கா வந்தது கோபம்! 


                      “அனு” என்றேன். அப்பா வந்துட்டார்டா கண்ணா! சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது! அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார்! கறுவினேன்.


வாழ்வில் எப்போதும் சந்தர்ப்பங்கள்தான் முந்திக் கொள்கின்றன. நாம் தான் தயாராக எப்போதும் இருப்பதில்லை, என்று வேறு மனம் கூறியது. அனுஷ்கா எனக்கு காபி கலந்து கொடுத்தாள். நான் லுங்கியை அணிந்து கொண்டே வாங்கிக் கொண்டேன். பக்கத்து வீட்டிலிருந்து குட்டிப்பெண் ஓடி வந்து அனுவை, அம்மா கூப்பிடுது என்று அழைத்துப் போனாள். நான் தயார் ஆனேன். பாண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து விரித்தேன். 


                         ஷோபாவுக்கு விரைந்தேன். சதக்...சதக்.. ஸ்பிரிங் ஒருபக்கம் தெரித்தது! அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை! பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா! காபியை எடுத்துக் கொண்டு ஷோபாவில் நிம்மதியாய் அமர்ந்தேன். ஒரு மூன்று வாரமாக மனைவியை கொஞ்சவே விடாத சனியனை ஒழித்தாயிற்று! 


                        இவள் அக்கா ஃபாரினில் இருந்து வாங்கி வந்து கொடுத்த குட்டிச் சாத்தான் அது! எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள்? இவள் அவளுக்கும் மேல்! முத்தம் கொடுக்கலாம் என்றால் குழந்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறதாம்! இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்! பாட்டு வேறு!


சரி போகட்டும்! விசயம் என்னவாயிற்று என்கிறீர்களா? மங்கிய பூஜ்ய வாட்ஸ் பல்பு போல ஒளி மங்கிய என் மனைவியின் முகம் காண ஒரு மாதம் சிரமம் தான் எனக்கு! ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது! இப்போது இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு ஒளிர்கிறது!


ஒன்று போனால் தான் ஒன்று வரும்.
மூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்!
டிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்!
டூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்!