Saturday, January 30, 2010

Over The Hedge சிரிக்க..கொஞ்சம் சிந்திக்க..

                                                                                -மயில்ராவணன்
2006ல் வெளிவந்த குழந்தைகள் படம்.’RottenTomatoes'ல வேற நல்லா எழுதியிருந்தார்கள். இளவேனில் காலம் தொடங்குகிறது. நெடுநாள் உறக்கத்தில் இருந்த விலங்குகள் ஒவ்வொன்றாக எழுகின்றன.ஒரு மரநாய்(racoon) போன்ற உயிரினம் கையில ஒரு குச்சியோட ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுக்க முயற்சி செய்யுது, அனைத்தும் தோல்வி.சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு திரும்பினா இயக்குனர் அங்க வெச்சுருக்காரு முடிச்சு(twist).

ஒரு சின்ன குகை,அதுக்குள்ள ஒரு சின்ன தள்ளுவண்டி முழுதும் திண்பண்டங்கள், பக்கத்தில் உறக்கத்தில் ஒரு பெரியக் கரடி. எப்புடி!!!.  மெதுவாக எல்லாப் பொருளையும் களவாடிக் கொண்டு வந்திருக்கலாம் அந்த ரக்கூன்,விதி யாரை விட்டது? கரடி கையில் இருக்கும் சிப்ஸ் டப்பாவை எடுக்கப் போய் மாட்டிக்கொள்கிறது.

பதட்டத்தில் அந்த சின்ன தள்ளுவண்டியும் மலையிலிருந்து உருண்டோட, ஒரு லாரியில் சிக்கி அவ்வண்டி 
சின்னாபின்னமாகின்றது. கரடிக்கு கோபம் தலைக்கேற, ரக்கூனைச் சாப்பிடப் போகிறேன்னு சொல்லுது. பயந்து போன ரக்கூன் ‘அண்ணே, ஒரே வாரம் டைம் கொடுங்க. உங்க எல்லாக் கணக்கையும் செட்டில் பண்ணிபுடுறேன்’னு சொல்ல, சோம்பேறி கரடியும் ஒத்துக் கொண்டு திரும்பத் தூங்கத் தொடங்கியது.

தலை தப்பிய சந்தோசத்தில் ரக்கூன் காட்டிற்குள் வந்தது.அங்கு காட்டின் எல்லையில் புதிதாகக் கிளம்பியிருக்கும் நீண்ட புல்வேலியைக் கண்டு விலங்குகள் மிரண்டிருந்தன. அதைப் பயன்படுத்திக் கொண்ட ரக்கூன்," அந்த எல்லைக்கு அப்பால் தான் சொர்க்கம் இருக்கு, நிறைய சுவையான பண்டங்கள் நமக்காகவே வைக்கப்பட்டிருக்கு" என சொல்லி ஆசை மூட்டியது. நிறைய 
சிறுசிறு விலங்குகளும் அவை செய்யும் சேட்டைகளும் 
அருமை.
அதுக்கப்புறம் நடக்கும் சம்பவங்கள்,ஒரு கட்டத்தில் இவ் விலங்குகளை அடக்க pest contollerகளான ’The Verminator’ ஐக் கூப்பிடுவதும், அது வேறு சிலப் பிரச்சனைகளில் கொண்டு போய் விடுவதும், பெண் பூனைக்கு அழகுபடுத்தி வீட்டில் இருக்கும் பெரிய ஆண்பூனையைக் கவரச் செய்வதும், கிளைமாக்சும் வயிறு குலுங்க வைக்கும். நேரம் கிடைத்தால் பாருங்கள் குடும்பத்தோடு.


வழமைப்போல் இப்படத்தின் டிரைலர் இங்கே
வழமைப்போல் இப்படத்தின் மேலதிக விவரங்கள் இங்கே:


டிஸ்கி:
சரி....இது என்ன பெரியக் கதை...இதப் போயி....இது மைக்கேல் ஃப்ரை என்பவர் எழுதிய காமெடித் தொடர்.அதை Tim Johnson, Karey Kirkpatrick இரட்டை இயக்குனர்கள் படத்தை உருவாக்கிய விதம், பிண்ணனிக் குரல் கொடுத்து உயிரூட்டிய Bruce Willis போன்ற ஹாலிவுட்டின் பெருந்தலைகள், கலகலப்பாகப் போகும் திரைக்கதை போன்றவை இப்படத்தைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது.

Friday, January 29, 2010

The Tournament கெட்ட ஆட்டம்

                                                                 -மயில்ராவணன்
ஏழு வருஷத்துக்கு ஒருமுறை உலகப் பணக்காரர்கள் கொஞ்சம் பேர் ஒரு இடத்தில் கூடி ஒரு வித்தியாசமான சூதாட்டம் ஆடுவார்கள். உயிரை மதிக்காத நன்றாக சண்டை போடக்கூடிய 30 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மீது பணம் பந்தயம் கட்டுகின்றனர்.


24 மணிநேரத்திற்குள் இந்த 30 பேரும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்.கடைசியாக எஞ்சியிருக்கும் ஒருவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு(நொந்து நூடில்ஸ் ஆகி பரிசு வாங்கி என்ன செய்ய?!).

அடுத்து உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் சில விளக்கங்களும்:


 1.முப்பது போட்டியாளர்களும் எங்கிருக்கிறார்கள்? யார் யாரென்று மற்ற போட்டியாளர்களுக்கு எப்படி தெரியும்? இவிங்கள எப்படி ஃபாலோ பண்றது?
                  30 போட்டியாளர்களும் நகரின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரது உடம்பிலும் ஒரு சின்ன 'chip' பொறுத்தப்படுகின்றது. மேலும் போட்டியாளர்களுக்கு ஒரு 'tracking device' கால்குலேட்டர் சைஸ்ல ஒரு கருவியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோட வேலை சக போட்டியாளர்கள் சுற்றுப்புறத்தில் இருந்தால் ’அதிர்வலைகள்’ ஏற்படுத்திக் காட்டிக் கொடுத்துவிடும்.


 அதேபோல் இவர்கள் அனைவரையும் கண்காணிக்க ஒரு 'Control room’ வேறு உள்ளது. அங்கிருந்துதான் இப்போட்டியைக் காணும் கோடிஸ்வரர்கள் இருக்கும் பெரிய ஹாலுக்கு ஒளிபரப்பபடுகின்றது-டிவி ல ‘cricket highlights' போடுறமாதிரி.


2.இதுல என்ன சுவாரசியம்? படம் முழுக்க குருதியாக இருக்கப் போகிறது?
                  படம் முழுக்க இரத்தம் தான். கண்டிப்பாக 'Tender Hearted' மக்கள் தவிர்க்கவும்.
 இயக்குனர் சுவாரசியத்துக்காக வைத்திருக்கும் நபர் தான் ‘Father Macavoy'. குடிகார அப்பாவிக் காமெடிப் பீஸ் போன்ற பாதிரியார் எப்பிடி ஆட்டத்தில, தலைவிதியால சேர்க்கப்படுகிறார்? அவருக்கு ’Lai Lai chen' எப்படியெல்லாம் உதவி புரிகிறார்? இதெல்லாம் படத்தப் பார்த்தேத் தெரிந்துகொண்டால்தான் நன்றாக இருக்கும்.


3.ஹீரோ தான செயிப்பாரு கடைசியிலே எப்போதும் போல? அவருக்கொரு ஃபிளாஷ்பேக் இருக்குமே?
 ஆமாம் சாமிகளா.சரியாகச் சொன்னீர்கள். ஆனால் அவன் படும் பாடு!!(கவுண்டமணி பாஷையில் சொல்றதுன்னா ‘டங்குவார் அறுந்து போச்சுறா சாமி!’)   நம்ம ஹீரோவ ஆட்டத்தில சேர்க்குறத்துக்கே பெரிய விலை கொடுக்கிறான் இப்போட்டியை நடத்தும் ஆள்.  கடைசி வரைக்கும் யூகிக்கமுடியாத ஃபிளாஸ்பேக் !!!

வெவ்வேறு நாட்டிலிருந்து வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் , பணமுதலைகள் , ஆட்டம் நடக்கும் இடம் ,கேளிக்கை ,டெக்னிக்கல் பூச்சுற்று வேலைகள், லாய் லாய் சென்னின் அழகு , ஃபாதரின் அழுகை ,கடைசி பேருந்து சண்டை , பட ஆரம்ப ஹோட்டல் சண்டை என நிறைய பார்த்து ரசிக்கக் காட்சிகள் உள.


வழமைபோல் இப்படத்தின்   விவரம்  இங்கே
வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே


டிஸ்கி:
  வீட்டில் தனியாக இருக்கும்போதே பார்க்கவும் . குழந்தைகள்,  இல்லத்தரசிகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம். நான் படம் பார்த்த இரவு முழுக்க இப்படத்தின் ஹீரோ மொட்டை டுப்பாக்கிய வெச்சு மண்டையில சுடுற மாதிரியேக் கனாக் கண்டேன். ’Scott Mann' ரூம்போட்டு யோசிச்சு முதல்படத்த இப்பிடிக் குடுத்திருக்காரு!

Wednesday, January 27, 2010

Kekexili : Mountain Patrol

                                                  -மயில்ரவாணன்

'Mountain Patrol'-kekexili இயற்கைய நேசிக்கும் மக்கள், இயற்கைக் கொடைகள் எவ்வாறெல்லாம் கயவர்களால் கொள்ளையடிக்கப்
படுகின்றன போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுவோர் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்.

ஒருவன் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறான் தன்னுடைய ஜீப்பில்.திடீரென்று ஒரு பெரியவர் கண்ணாடிக் கதவைத் தட்டி எழுப்புகிறார்.முன்னால் 5, 6 பேர் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கின்றனர். அடுத்த காட்சி, அந்த நபர் வேட்டைக்காரர்களின் ஜீப்பில் கொண்டுசெல்லப் படுகிறான். போகும் வழியில் மான்களைச் சுட்டு அதன் தோலை அங்கேயே உறிக்கின்றனர். சிக்கியவனின் நெஞ்சம் பதைக்கிறது,கைகள் கட்டப்பட்ட நிலையிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறான், அடுத்த விநாடி அவன் ’ரிதாயின்’ ஆளா என விசாரித்து சுட்டுக்கொள்ளப் படுகிறான்.

கெகிஜிலி kekexili(அழகிய மலைகளும்,பெண்களும்-திபெத்திய மொழியில்) - சீனாவின் பழமையான, அருமையான மலைப்பகுதி.கடல்மட்டத்திலிருந்து சுமார் 4700 மீட்டர் உயரம் கொண்டது.திபெத்திய மலைப்பிரதேசங்களில் வாழக்கூடிய ஒருவகை மான்களை அதன் விலைமதிப்பற்ற தோலுக்காக வேட்டையாடுகின்றனர் அனுமதியின்றி,அத்துமீறும் வேட்டைக்காரர்கள். இவர்களை தடுப்பதற்காக வேண்டி 1993ல்'volunteers' சேர்ந்து ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கு கின்றனர்.அதற்கு ஓய்வுபெற்ற திபெத்திய ராணுவத் தளபதி ’ரிதாய்’ தலைமை தாங்குகிறார்.


1996ல் இப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்படுகின்றான். அதன் நேரடி ரிப்போர்ட் பணிக்காக வேண்டி பெய்ஜிங்கிலிருந்து ஒரு பத்திரிக்கை தனது நிருபரை அனுப்புகிறது. அவனுடையப் பார்வையில் சொல்லப் படுவதுபோல் செல்கிறது இப்படம்.

இரவு விருந்து முடிந்து மறுநாள் அதிகாலை பயணம் தொடங்குகிறது.நம் மனமும் கூடவே பயணிக்கிறது.நாட்கள் 1,2,3 என நகர்கின்றது. ஒரு காட்சியில், ஒரு கூட்டமே இப்பாதுகாப்புப் படையினரிடம் மாட்டிக் கொள்ளும். அதில் ஒருவன் காட்டும் மணற்குழியில் நூற்றுக்கணக்கான மான்தோல்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும். பின் அதைப் பாதுகாப்புப் படையினர் எடுத்து உலர்த்துவர். இப்படையின் வீரர்கள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். நிருபருக்கும் ரிதாய்க்கும் நடக்கும் உரையாடல், பனிப்போர்,மணல் புதைக்குழி போன்ற பலக் காட்சிகள் நம் நெஞ்சைப் பிழியும்.

மா ஜான்லின் யார்? அந்த வேட்டைக்காரக் கும்பலின் தலைவன் யார்? ரிதாய் அவனைச் சந்தித்தானா? திபெத்தியர்களின் சவப் பழக்கவழக்கங்கள் என்ன? சீன அரசு கெகிஜிலியை அரசுக் காப்பு வளமாக(Natural Reserve)ஆக ஆக்கியதா? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை திரைப்படத்தில்.

வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே

வழமைபோல் இப்படத்தின் மேலதிக விவரம் :  இங்கே

டிஸ்கி:
   இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ’சுவான் லூ ’ ரொம்ப மெனக்கெட்டு எழுதி இயக்கியிருக்கிறார். பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், படத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறியது. மான் வேட்டை தடை செய்யப்பட்டது.மான்களின் எண்ணிக்கையும் இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது.கெகிஜிலியும் natural reserveஆக அறிவிக்கப்பட்டது.

Saturday, January 23, 2010

Animals Are Beautiful People இயற்கை நேசி..

                                                                            -மயில்ராவணன்
மனுசப் பயலுங்களே இல்லாத படம் சொல்லுங்க காம்ரேட்னு நண்பர் கோகுல்கிட்ட சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு ‘Animals are beautiful people' பாருங்கன்னு dvd குடுத்தாரு. தென்மேற்கு ஆப்பிரிக்கப் பாலைவனமான Red Namib Desert பற்றியது. 


ஒரு பெரிய பாலைவனம்.எங்கும் பெரும் மணற்குன்றுகள்.மிகப் பழமையானதும்,வறண்டதுமான சுமார் 50,000 * 2 மைல்கள் வெறும் மணல் மற்றும் மணல் மட்டுமே.ஆனால் இப்படிப்பட்ட இடங்களிலும் வாழும் உயிரினங்கள் பற்றிய படமே இது.சிறிய வண்டுகள்,எறும்பு வகைகள் என படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே கன்ணுல ஒத்திக்கிற மாதிரி இருக்கும். ஒரே இடம்,அவ்விடத்தில் வசிக்கும் விலங்குகள் ஆனால்  கோடைகாலம், முன்பனிக்காலம், குளிர்காலம், கார்காலம் இப்படி வெவ்வேறு காலங்களில் எப்படி வசிக்கின்றன, என்னவெல்லாம் செய்கின்றன போன்றவனவற்றை அழகாக படம்பிடித்திருக்கின்றனர்.


படத்தை எல்லாரும் பாருங்க...the piratebay ல இருக்குன்னு சொன்னாப்ல. எனக்குப் பிடிச்ச சில பல காட்சிகளை மட்டும் வரிசையாச் சொல்றேன்.


மணல்பாம்பு தன்னை மணலில் புதைத்துக் கொண்டு வாலை மட்டும் வெளியே தெரியும்படி ஆட்டும்.இதைப் பார்த்த எறும்புகள் புல்லென நினைத்து அருகில் ஓட, அவற்றை சாப்பிட வரும் பல்லிகள்தான் பாவம் பாம்பிற்கு இறையாகின்றன.


ஒரு வண்டு போன்ற உயிரினம் (எண்ணிக்கையில ரொம்பக் குறைவாம்) எப்பப்பார்த்தாலும் புட்டத்தை(டிக்கியை) ஆட்டி சத்தம் எழுப்பிக்கிட்டே இருக்கு..என்ன காரணமுன்னா அவர்கள் வகையறா யாராச்சும் இருந்தா ‘அதுக்கு’ கூப்பிடுதாம்...இன்னும் ஒரு வகை இனப்பெருக்கம் கூட ஓடிக்கிட்டேதான் செய்யுது.மணல் சுடுமாம்....என்ன டெக்னிக்கு!
  
பன்றி போன்ற இன்னொருத்தரு கண்ணாலத்துக்கு முன்னாடி வீட்டை சுத்தம் செய்து ரெடி பண்றாரு.ஆனா என்னக் கொடுமையின்னா தங்கமணி வீட்டுக்கு வந்ததுலேருந்தே வீட்டைக் கலைக்குற வேலயத்தான் பாக்குறாப்ள.



நெருப்புக்கோழிப் பொழப்புதான் கஷ்டம்.பெண்ணினத்தைக் கவருவதற்கு பிரபுதேவா கணக்கா வளைஞ்சு வளைங்சு ஆடுறாப்ள. அப்புறம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சு முட்டைப் போட்டு அடை காக்குறதுக்குள்ள தாவு தீந்துபோவுது.மலைசாதி மக்கள் ஒருபக்கம் மெதுவாக வந்து முட்டையை தூக்கிட்டுப் போக முயல்கிறார்கள்.விரட்டுகிறது. குரங்குகளும் முட்டையத் தின்ன வருகின்றன விரட்டுகிறது. ஆண் பெண் என்ற வித்தியாசம் கிடையாது முட்டையைப் பாதுகாப்பதில்.யார் வேலையின்றி இருக்கிறார்களோ அவர்கள் முட்டையப் பாதுகாக்கவேண்டும்.


படத்தில் Grey Pied Hornbill என்றொரு வகைப் பறவையக் காண்பிப்பர்.எவ்வளவு பொறுப்புள்ள பறவை.தங்கமணி முட்டைகளை அடை காக்கிறதுக்கு தனியாக ஒரு உயர்ந்த மரத்தில் பொந்து அமைத்து,மண் எடுத்து வந்து, எச்சில் துப்பி துப்பி,குழைத்து ஒரே ஒரு ஓட்டை மட்டும் விட்டுவிட்டு முழுவதுமாக பூசி விடும்.’maternity leave' ல ஆணியேப் புடுங்க வேண்டாம்னு சொல்லி, ஆண்பறவை ஓவர்டைம் ட்யூட்டி பார்த்து பறந்து, பறந்து உணவு கொண்டுவரும். முட்டையிலிருந்து வந்த குஞ்சுகள் சிறிது காலம் கழித்து கூட்டைவிட்டு வெளியே வந்து விடும். இந்தக் காட்சிகள் அனைத்தும் படத்தில் மெய்சிலிர்க்க வைக்கும்.


இதேபோல் ஒரு குருவி commit ஆன தங்கமணிக்காக மெனக்கெட்டு வீடு கட்டும்..ஆனா அந்தப் பெண்பறவை தரம் பார்க்கிறேன் பேர்வழின்னு (கஷ்டப்பட்டு code அடிச்சா ’கருந்தேள்’ மாதிரி ஆட்கள் Q.C ன்னு சொல்லி ‘bug' போடுறமாதிரி!!) இப்படி அப்படித் தொங்கி சிலநேரம் கூட்டப் பிச்சுப்புடும்.பாவம் ஆண்பறவை பர்ஸ்ட்லேர்ந்து தொடங்கும்.  மான்கள் இனத்திலேயே அழகான oryx இங்கு அதிகம், புலிகள், சிங்கங்கள், யானைகள், விதவிதமானப் பறவைகள், தாவர வகைகள் என படத்தில் வரும் அனைத்துமே ரொம்ப அருமையான இயற்கைக் கொடைகள்.

  
இங்கு வாழக்கூடிய ஒரே மக்களினம் கலகரிப் பகுடியில் உள்ள சிலரே.தலையைக் கீழே வைக்காமல் இவர்கள் தூங்கும் அழகே தனி.கிழவர்கள் சிறு குழந்தைகளுக்கு செய்கையின் ஊடாகவும், சத்தங்கள் எழுப்பியும் வனவிலங்குகள் பற்றி போதிக்கும் காட்சி அடடா..



அதேபோல் இவர்கள் வேட்டைக்கு செல்லும்போதெல்லாம் ஒரு பறவை சத்தம் எழுப்பி விலங்குகளை உழார் படுத்திக் கொண்டே இருக்கும்.மேலும் தண்ணீர் தாகம் அதிகமாகி அவன் எப்படி குரங்கின் மூலம் நீர்நிலையை அறிகிறான் போன்ற காட்சிகள் சிரிக்க மர்றும் சிந்திக்க வைப்பவை.


 1974 ல் வெளியான இப்படத்தின் டிரைலர் கிடைக்கவில்லை.
                                                                             உங்களுக்காக இங்கே
 வழமை போல் இப்படத்தின் மேலதிக விவரங்கட்கு இங்கே
  
டிஸ்கி:
என்னதான் நாமெல்லாம் இணையம்,நானோ டெக்னாலஜி அது இதுவென எவ்வளவோக் கண்டுபிடித்தாலும், பயன்படுத்தினாலும் இம்மாதிரியான படங்களைப் பார்த்தால் புரியும்- கடவுள்தான் ஒரு அற்புதமான கிரியேட்டர்,இயற்கைதான் அவருடைய ஆகச்சிறந்தக் கண்டுபிடிப்பு என்று.இப்படத்தின் இயக்குனர் நாமெல்லோரும் ரசித்துப் பார்த்த ‘Gods Must Be Crazy' எடுத்த Jamie Uys.

Thursday, January 21, 2010

FOOD,Inc. கசப்பான உண்மை

                                                                 -மயில்ராவணன்
நேற்று ஒரு documentary படம் பார்த்தேன். அமெரிக்காவில் உள்ள ஒரு அழகான வயல்வெளியில் தொடங்கி பின்ணனியில் குரல் ‘நாம் உணவு உட்கொள்ளும் முறைகளில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்னமும் பார்த்தால் உணவுப் பொட்டலங்களிலும் மற்ற பொருட்களிலும் பார்த்தோமானால் பழைய படங்களே இருக்கும்.  உதாரனம்-விவசாயி, பச்சை பசேலனெ இருக்கும் விளைநிலங்கள்.

அப்படியே அக்காட்சி department storeக்குள் நுழைகிறது. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மளிகைச் சாமான்கள்,காய்கறிகள்,இறைச்சி வகைகள் என அத்தனையும் மிக நேர்த்தியாக பைகளில் அடைத்து அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. பிண்ணனியில் குரல் ஒளிக்கத் தொடங்குகிறது,


அமெரிக்க கடைகளில் குறைந்தது 47000 பொருட்கள் உள்ளன.இங்கு பருவகாலமேக கிடையாது, வருடம் 365 நாட்களும் தக்காளி கிடைக்கும். காய்களாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு எத்திலீன் வாயு பாய்ச்சி கனிய வைக்கப்பட்டவை. அவை தக்காளி மாதிரி ஆனால் தக்காளி அல்ல, இறைச்சியும் வேறொருவகைத் தயாரிப்புதான். ‘நீங்கள் உன்ணும் உணவைப் பற்றி எப்போதாவாதது யோசித்து பார்த்தது உண்டா? அவ்வுணவு எங்கிருந்து வ்ருகிறது எனத் தெரியுமா? யார் அதை உற்பத்தி செய்கிறார்கள்?எவ்வாறு? என யோசித்தது உண்டா? இப்படி நிறையக் கேள்விகள்..

அப்புறம் உண்மைகளை ஆராய்ந்துப் பார்த்தால் இவையனைத்துமே நான்கு அல்லது ஐந்து தயாரிப்பாளர்கள் அல்லது நிறுவனங்களிலிருந்தே வருகின்றன. விவசாயப் பண்ணைகள், விளைநிலங்கள் போன்றவற்றில் உற்பத்தி என்ற நிலை மாறி அனைத்தும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரிய பண்னாட்டு நிறுவனங்கள் சில இதில் ஈடுபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை மிகக் கேவலமாக நடத்தி இம்மாதிரியான மிகக்கொடியப் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. காட்சிகள் அப்பிடியே இவையனைத்தையும் படம் பிடித்துக் காண்பிக்கின்றன. சுகாதாரமற்ற பராமரிப்பற்ற இருட்டு நிறைந்த கோழிப் பண்னைகள், மாட்டுக் கொட்டகைகள், பன்றித் தொழுவங்கள் என அனைத்தும் உள்ளது உள்ளபடியேக் காண்பிக்கப்படுகின்றன...புள்ளிவிவரங்களுடன்.

திருப்பூர் பனியன் கம்பெனியிலோ அல்லது ஹ்யுண்டாய் கார் கம்பெனியிலோ இவ்வளவு இயந்திரங்கள் இருக்குமா என்று சந்தேகம் வரும் இப்படத்தில் காட்டப்படும் கோழி, மாட்டிறைச்சி தயாரிக்கும் கம்பெனிகளைக் காட்டும்
பொழுது. இந்தப் படத்தில் நிறைய துறைசார் வள்ளுனர்கள், உற்பத்தியாளர்கள், நுகர்வோரின் பேட்டி வருகின்றது.


இறுதியாக சில வரிகள்: அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடலான ‘This land is you land' பாடல் பிண்ணனியில் ஒலிக்க..


  ‘You can vote to change this system'
   'buy from companies that treat 
     workers,
             animals,
                     and the environment
                                        with respect.'
    'When you go to the supermarket,
          Choose foods that are in season, 
          Buy foods that are organic,
 Know what is in your food.'
      Read labels.  
     The average meal travels 1500 miles from the
     farm to the supermarket.
                   Buy foods that are grown locally.
                   Shop at farmers' markets.
                   Plant a garden.(Even a small one).
                   Reintorduce kevins law.
          You can change the world in every bite.
                      Hungry for change.               
                        goto
                   takepart.com/foodinc
வரிகள் வருகின்றன.


வழமைபோல் இப்படத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே
இப்படத்தின் டிரைலர் இங்கே
kevin's law பற்றிய விவரம் இங்கே
டிஸ்கி:
      இப்படத்தின் இயக்குனர் ”Robert Kenner” மற்றும் அவரது குழு பாராட்டுக்குறியது. பெரும்பாலும் சோளம் அனைத்து உணவுப் பொருட்களில் கலக்கப்படுவது, எலிக்காய்ச்சல் உண்டாக்கும் கிருமிகள் போன்ற நிறைய விசயங்கள் உள்ள இப்படம் அனைவரும் பார்க்கவேண்டியப் படமல்ல பாடம்.

Wednesday, January 20, 2010

சௌந்தரசுகன்- இலக்கிய மாத இதழ் Soundarasugan

சௌந்தரசுகன்- இலக்கிய இதழ்





1987 ல் தொடங்கி இன்றுவரை திங்கள் தோறும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இலக்கிய இதழ் ’சௌந்தரசுகன்’. சனவரி 2010 இதழ்


சுகனின் 272 வது இதழ். 23 ஆண்டுகாலமாய் வாசகர்களின் பார்வையில் பயணித்து வருகிறது சுகன்.


வாசகனின் இரசனைக்கு எற்ற இதழ் அல்ல சுகன்.வாசகனுக்கு புதிய புதிய இரசனைகளை கொண்டு வந்து சேர்க்கும் இதழ் சுகன்.


தரமான எந்தப் படைப்பும் பெயரின் ஒளிவட்டம் பார்க்காது சுகனில் வரும்.


உங்களுக்குப் பிடித்த உங்கள் உயர்ந்த படைப்புகளை சுகன் இதழுக்கு அனுப்பலாம்.


விளம்பரங்கள் வாங்கிப் போடுவதில்லை.எதற்காகவும் சமரசம் செய்துக் கொள்வதுமில்லை.


சுகன் இதழின் ஆண்டுக் கட்டணம் ரூ.120,அரையாண்டுக் கட்டணம் ரூ.60,தனி இதழ் ரூ.10.


சுகன் இதழுக்கு ஆண்டுக் கட்டணம் கட்ட விரும்புகிறவர்கள் சு.சௌந்தரவதனா என்கிற பெயருக்கு தொகையை அனுப்பி வைக்க


வேண்டும்.வங்கி மூலம் செலுத்த விரும்பினால் விபரங்கள்-
கணக்கின் பெயர் - சௌந்தரசுகன்
கணக்கு எண் - cDCC 5306
கிளை - I.O.B வங்கி, நீலகிரி வட்டக்கிளை எண்-212, தஞ்சாவூர்.


கட்டணம் அனுப்புகிறவர்கள் முகவரியை அவசியம் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி- soundarasugan@gmail.com
பிளாக்-  எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம்


அனைத்து தொடர்புகளுக்கும்


சு.சௌந்தரவதனா
சி-46 இரண்டாம் தெரு,
முனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613 007


மேலும் சுகன் பற்றிய தகவல்களுக்கு அடியேனின் மெயில் ஐடி - mayilravanan@gmail.com

Monday, January 18, 2010

வெறுங்குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம்-வா.மு.கோமு

உங்களுக்கு தெரியப்படுத்த....


மகாத்மாவை தெரிய வருகிறது
உங்களுக்கெல்லாம்
ஆனால் பாருங்கள் பகத்சிங்கை
யாரெனக் கேட்கிறீர்கள்.
அப்படியாயின் கிடக்கட்டும் விடுங்கள்.
-தகவல் ஒன்று.
சுள்ளிமேட்டு ராமசாமி தி.மு.க. காரன்
பாவம் கிட்னி பெய்லியராகி செத்துப்போயிட்டான்.


-தகவல் இரண்டு
அத்திக்காடு சின்னச்சாமி மதிமுக காரன்
பாவம் எழுச்சி பேரணிக்கு
மெட்ராஸ் போறச்சே லாரி மோதி
வைகுந்தம் போயிட்டான்.


-தகவல் மூன்று.


பெரியபுளியம்பாளையம் சுப்பு இந்தா இருக்கே
புளியமரத்திலே சுருக்கு மாட்டிட்டு செத்துட்டான்.
நெஞ்சுல ரெட்டெல பச்சை குத்தியிருந்தான்.


மகாத்மா,பகத்சிங்க்,ராமசாமி,சின்னசாமி
அல்லாருமே செத்துப் போயிட்டாங்க!
நீங்கெல்லாம் மூச்சு வாங்குற காத்துல
கார்பண்டை ஆக்சைடு
இருக்காமா கவலப்படாதீங்க!


==============================================
திருவிழா முடிந்த வீதி


தைப்பூச விழாவுக்காக வீதி சுற்றி
வந்த தேர் அலைக்கழிப்பு முடிந்தானபின்
அமைதியானது தேர்முட்டியில்!
எதை எடுத்தாலும் பத்து ரூபாய் சாமான்காரர்கள்
அவ்வப்போது கடந்து போகும் பயணிகளை
நம் கடைக்குத்தான் வுருகின்றனரா
எனப் பார்த்து ஈ ஓட்டினர்.
சாலையெங்கும் கரும்புத் தோகைகள்
மிட்டாய் காகிதங்கள் மீந்திருந்த
மக்காச் சோளங்கள் என இறைந்து கிடந்தன.
தைப்பூச சிறப்பு பேருந்துகள்
அதனதன் ரூட்டுக்கு சென்றுவிட்டன.
முதலியார் வீட்டு பேரக்குழந்தை
உடைந்து போன பலூனை
வாயில் சப்பி மென்று கொண்டிருந்தது.
இன்று ஏதவது தேறுமாவென
மொட்டை முனிசாமி கையில் வதங்கிய
அலுமினியப் போசியோடு சில்லறைக்காய்
வீதிக்குள் கால் வைத்தான்,
பொம்மை கடைக்காரனின் பொம்மை அழுதது
விளையாட ஒரு குழ்ந்தை வேண்டுமென!
பஸ் நிறுத்தத்தில் பாலுக்காய் அழும்
குழந்தையை இடுப்பில் வைத்தபடி
வற்றிய முலை பார்த்து
பெருமூச்சு விட்டாள் பிச்சைக்காரி.
ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து
“இன்னைக்கும் இட்லியா?”
என்றொரு குரல் கேட்டது.
தெருவில் நின்றிருந்த கருநாய்
யாராவது மொபெட்டில் போனால்
கடித்தத் துரத்தலாமென
தருணம் பார்த்து நின்றது!


Saturday, January 16, 2010

We Were Soldiers போரின் மறுபக்கம்

                                                            -மயில்ராவணன்
நவம்பர் 1965 வியட்னாம் டிராங்க் பள்ளத்தாக்கு(மரணப் பள்ளத்தாக்கு)ல் நடந்த உண்மைச்சம்பவங்கள்.இந்த கதை வியட்னாம் வீரர்களுக்கு காணிக்கை,அமெரிக்க வீரர்களுக்கு testament என்ற வரிகளுடன் படம் ஆரம்பிக்கிறது.

இந்த கதையை சொல்வதானால் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஃப்ரெஞ்ச் படை 1954ல் நடத்திய தாக்குதலை 5 நிமிடம் தான் காண்பிக்கின்றனர்....திரை முழுதும் இரத்தம் ஓடுகிறது.வியட்னாம் வீரர்கள் எளிதாக வெல்கின்றனர்.


ஹெரால்ட் மூரின் ‘We Were Soldiers Once......And Young' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு அருமையான திரைப்படம் தான் ‘we Were Soldiers'.’Braveheart' படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்தாவான 'Randall Wallace'இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இவர் அமெரிக்காவின் பிரபல நாவலாசிரியரும் கூட.

மெல்கிப்ஸன் லெப்டினன்ட் கர்னல் ஹால்மூராக வாழ்ந்திருப்பார்.அவர் மனைவியாக வரும் மேடலின் ஸ்டொய் படம் முழுவதும் அழுவாச்சிதான்.சர்ஜண்டாக வரும் ஸாம் எலியட் படம் முழுவதும் மெல்கிப்ஸனோடைய வருவதால் அவரும் முக்கிய பங்கு வகிக்கிறார்.போர்க்களத்தில் நொடிப்பொழுதில் முடிவுகள் எடுத்து உத்தரவுகள் பிறப்பிப்பதனாலும் சரி சிறு குழந்தைகளின் தகப்பனாகவும் சரி,மனைவிக்கு நல்ல கணவனாகவும் சரி,கதாபாத்திரத்தின் கணம் அறிந்து நடித்திருப்பார் மெல்கிப்ஸன்.

ஹால்மூர்(மெல்கிப்ஸன்) புதிதாக கலோனலாகப் பதவியேற்று தன்னுடைய அனுபவமில்லா படையினருக்கு பலவிதமான போர்த்தந்திரங்களையும், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் விமானப்படையைப் பற்றியும் விளக்குகின்றக் காட்சி,சர்ச்சில் ஹால்மூரும் அவரது படைவீரர் ஒருவருக்கருமான உரையாடல்-பின்பு அவ்வீரன் போரில் இறந்து கிடக்கும் போது அவன் கையில் இருக்கும் ஜெபமாலையைப் பார்த்து அடையாளம் கண்டு கண்கலங்கும் காட்சி,ஹால்மூர் மற்றும் இதர வீரர்கள் வீட்டைவிட்டு நள்ளிரவில் மனைவியரைவிட்டு பிரிந்து போருக்கு கிளம்பும் காட்சி,போரில் எரிந்து போன நண்பனை இழுக்கும்போது சதை கையோடு வரும் காட்சி-அந்த சமயம் பிண்ணனியில் வரும் flute இசை இன்னும் எத்தனையோ நெஞ்சைவிட்டு நீங்காத காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வீட்டில் இருக்கும் சமயத்திலெல்லாம் 1950ல் ஃப்ரெஞ்ச் படைக்கும் வியட்னாம் படைக்கும் நடைபெற்ற போர் பற்றிய நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறான்.  
போர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அமெரிக்கப் படையை நிலைகுலைய செய்கின்றனர் வியட்னாம் வீரர்கள்.நெடிய மலைகளும்,புட்புதர்களும் வியட்னாம் படையினர்க்கு சாதகமாக இருக்கின்றன.

இருப்பினும் அமெரிக்கப் படையினரின் புதிய விமானப்படையைக் கொண்டு ஓரளவு சமாளிக்கின்றார் கலோனல் ஹால்மூர்.ஒவ்வொரு முறையும் ஹால்மூர் பலவாறு வியூகங்கள் அமைத்து போரிட்டாலும் வியட்னாம் வீரர்கள் இவர்களை வளைத்து வளைத்து தாக்குகின்றனர்.இதற்கிடையே இவர்களுடன் வந்த ஒரு நிருபர் போர் படக்காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கிறான்.ஒரு கட்டத்தில் போரின் உக்கிரம் அதிகமாகவே நிருபரிடம் அமெரிக்க அதிகாரி  துப்பாக்கி,குண்டுகள் தந்து போரிடச் செய்கிறான்.
ஹால்மூர் கடைசியில் ‘Broken Arrow broken arrow' என்று 4,5 முறை ஆபத்து செய்தியை base stationக்கு அறிவித்ததும் அதிபயங்கரமான போர் விமானங்களை அனுப்பி குண்டு மழை பொழிகிறது அமெரிக்க ராணுவம்.
போர் மூர்க்கமாகப் போய்க்கொண்டிருக்கிறது.வியட்நாம் படைத்தலைவனும் பின்னால் இருந்து தாக்குமாறு பல வழிகளைக் கூறியவண்ணம் உள்ளான்.ஒருகட்டத்தில் அமெரிக்க ரணுவத்தின் கை ஓங்குகிறது.

வியட்னாம் படைத்தலைவன் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு 
ஓடுகிறான்.பிணக் குவியல்களும்,கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் மலை போல கிடக்கின்றன.நிருபர்கள் வேறு இவையனைத்தையும் பார்வையிடுகின்றனர்.மெல்கிப்ஸன் குலுங்கி குலுங்கி அழுதுவிட்டு மிச்சமுள்ள வீரர்களுடன் ஊர் திரும்புகிறான்.இறுதிக்காட்சிகளில் வரும்இசையும்,ஒளிப்பதிவும்,ஒலிப்பதிவும் நனி நன்று.

இறுதி 15 நிமிடங்கள் ரொம்ப அருமையாக கொண்டுபோயிருப்பார்கள்.
வியட்னாம் படைவீரன் களத்தைப் பார்வையிடுதல்,மெல்கிப்ஸன் வீடு திரும்புதல்,கல்வெட்டு ......etc..etc..

இது வியட்னாம் போரில் பங்குபெற்ற அமெரிக்க ராணுவம் பற்றி மட்டும் கூறவில்லை,மாறாக வியட்னாம் படையினரையும் சிறந்த வீரர்களாகவும்,
நேர்மையானவ்ர்களெனவும்,போரின் தாக்கங்கள்,பின்விளைவுகளையும் சோகத்தையும் படைவீரர்களின் மனைவியர் படும் துன்பத்தைச் சித்தரிக்கும் படமாகவும் உள்ளது.நிறையக் காட்சியமைப்புகள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின்
‘Saving Private RYAN'ஐ ஞாபகப்படுத்துகின்றன.இருப்பினும் இதுவும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.

இந்த படத்தின் ட்ரைலர் இங்கே
மேலும் இப்படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே இருக்கு.


டிஸ்கி:
வித்தியாசமான war cinema.போர்க்களத்தை மட்டும் காண்பிக்காமல் parallel ஆக அவர்களின் குடும்பத்தையும் அவர்கள் படும் துயரததையும் சேர்த்துக் காண்பித்திருக்கிறார்.சமயத்தில் அதுவே சில நேரத்தில் தொய்வையும் ஏற்படுத்துகின்றது.

Friday, January 15, 2010

ஷாராஜ் கவிதைகள்


என்னால் நிச்சயமாக
சொல்ல முடியும்
நான் காணாமல் போய்விட்டேன் என்று
நம்புவது உங்களுக்கு சிரமமாகலாம்
நேரில் நானே தெரிவிப்பதால்
ஒருவேளை நீங்களும் இதை
உணர நேர்ந்தால் அறிவீர்கள்
என்பதும் உறுதி, ஒரே ஒரு சந்தேகம்
காணாமல் போவதற்கு முன்பு- நான்
இருந்தேனா என்பது மட்டும்.
--------------------------------------------------------------

வந்தமர்கின்றன நீலங்கலந்த சாம்பல் நிறம்
கழுத்தசைவில் பச்சை மெஜண்டா
கருநீலம் எனக் குழம்பி மின்னச்சிலதும்
கறுப்பில் சிலதும் - இரண்டும் கலந்து சிலதுமாய்
கோபுரத்தில் புறாக்கள்.
ஆகாசத்தின் விரிந்த மனசையா
இரைதேடிச் சலித்ததையா
எதைப்பேசி முணுமுணுக்கின்றனவோ
தங்களுக்குள்,
அண்ணார்ந்து பார்க்கும் கண்களுக்குச்
சிக்குவதில்லை புறாக்களின் ரகசியமொன்றும்
கோபுரத்து பொம்மைகளுக்குமப்படியே
உற்றுப்பார்த்தால் இன்னொன்றும் தெரிகிறது
எள்ளலா விகசிப்பா எனவறியாதபடிக்கு
உறைந்திருக்கும் அப்பொம்மைகளின்
காரைப் புன்னகை.
---------------------------------------------------------------------


Wednesday, January 13, 2010

தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்க்ள்..........
                        ---------------------------------------
தேடியபோது கிட்டாது
கிட்டினாலும் நிறைவளிக்காது
நிறைவு தந்தாலும் பொருள் தராது
பொருள் தந்தாலும் சுகம் தராது
சுகமே தந்தாலும் நிலை நிற்காது
நிலை நின்றாலும் நானாகாது என்று
தெரிந்தும் இவைகளை எழுதிய நான்
இன்றும் எனக்குப் புதிதே
எளிதே ! பயமே !
--------------------------------------------------------
காலம் மனிதனைத்
தின்று கொண்டிருந்தது.
மனிதர்கள்
காலத்தை நொறுக்கிக்
கொண்டு இருந்தார்கள்.
காலம் என்பது
கற்பனை.
அதில்
இன்னொரு கற்பனை
மனிதன்.
--------------------------------------------------------
        தூசிபடலம்
கனவு காண்பதென்
வாழ்க்கை !
வாழ்வதல்ல !
வாழ்வதென் வழி 
விதிக்கப்பட்டது
விதி யாயல்ல
பிறக்கவில்லை என்
வாரிசு !
வேண்டவில்லை என்போல்
இன்னொருவன்
கனவை நனவாக்குவதென்
சிரமம்
சிரமமே எல்லாமல்ல
இருண்டு கிடக்குதென்
பாதை.
போகும் பாதி எனின்
நானே அஃதல்ல
ஒளிவேண்டிப்பறப்பதென்
சிறகு !
கண்ணறியாது என் இருபுறமும்
வீசுது பயனற்று
வானம் எனக்கு
மண்
விளைவது என்
உயிர்
பழம் பழுக்குது
நுனியில்
என் கால்களோ
புழுதியில்
ஆம் என்
புழுதியே நான் மீதியாய் !





Tuesday, January 12, 2010

சவக்களை - பொ.முத்துவேல்

அந்தி வேளை
கோபுரக் கலசத்தில்
மின்சாரம்...
தும்பைப் பூவாய் பூத்திருந்தது!

அடங்காமல் திரியும்
சிற்ப அழகை
படச் சுருளால்
அதட்டி அமர்த்த
முயன்றுகொண்டிருந்தது
தம்பதியொன்று!

காதைப் பிளந்து போட்டபடி
பாடல்...
பீப்பிக்காரன்
விட்டு விட்டு
ஊதிக் கொண்டிருக்கிறான்...

கூத்து...கும்மாளம்...
மிரண்டு ஓடின
அடையவந்த குருவிகள்

வட்டமடித்தது பருந்து.

நன்றி: சுந்தரசுகன்

பிறவி -பொ.முத்துவேல்

நான்...
மவுனம் சுமக்கிற சவம்...!


பொறுப்பதை வேறெப்படி சொல்வது?
அவிழ்த்துவிட்ட கோயில்காளப்போல
மனசு மட்டும் அலைந்து திரிகிறது...!
கவிதையின் சூத்திரம் தேடி
ஆமாம்,
கவிதைக்கு சூத்திரமேது
சொல்லுகிற விதம்தானே
அந்த விதம் தேட
தண்ணி தெளித்து விட்டாயிற்று!
எப்பொழுதோ
நான்
மவுனம் சுமக்கிற சவம்...!
அரும்பு மீசைப்பருவம்
அப்பிவிட்ட
துடிப்புகளின் துயரம் பார்த்து...!
ஆட்டுக்காவலுக்கு ஓநாய் வந்ததுபோல
வெள்ளை வேட்டியில் வலம் வரும்
பெரிய்ய்ய...மனுசங்களைப் பார்த்து!
இமைமூடாத தூக்கம் போல...
 நான்
சாகாமல் செத்துப்
பிறக்காமல் பிறக்கிறேன்
கவிஞனுக்குரிய அடையாளத்துடன்...!

நன்றி:  சுந்தரசுகன்

Thursday, January 7, 2010

வால்கிரி----ஒரு தோல்வியின் இசை VALKYRIE

மயில்ராவணன்
லேண்ட்மார்க் டிவிடி அரங்கினுள் நுழைந்தவுடன் நமது கண்னில் படுமாறு “வால்க்ரி(valkyrie)” சிடிக்கள் அடுக்கி வைக்கப்படிருக்கின்றன. இதைப்பற்றிய எந்த விவரமும் அறியாத நிலையில் ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து சமீபத்தில் பார்த்து முடித்தேன். வழக்கம்போல “டாம் குரூஸின்” மற்றொரு “MileStone" ஆகவே இருந்தது.
”பிரயான் சிங்கரின்” இயக்கத்தில், அருமையான ஒளிப்பிதிவு மற்றும் இசையில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம், இரண்டாம் உலகப்போரின் போது, போரின் போக்கையையே மாற்ற முயற்சி செய்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில், கலோனல் பதவியில் இருக்கின்ற டாம் குரூஸ், ஜெர்மனியின் மீதும், ஜெர்மானிய போர்வீரர்கள் மீதும், அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்.                                                                               

                                                                                
அங்கு நடைபெறுகின்ற ஒரு யுத்தத்தில், ஒரு கையையும், ஒரு கண்ணையும் இழந்து ஜெர்மனி திரும்புகிறார். அதே நேரம், ஹிட்லரின் மீது நம்பிக்கை இழந்த ஜெனரல் ட்ரெஸ்கோவும் அவரது உதவியாளரும்,
 அவரை கொல்வதற்காக வெடிகுண்டு பார்சல் ஒன்றை பரிசளிக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் அதனை மூடி மறைதுவிடுகிறார்கள் டிரெஸ்கோவும், பெர்லினில் உள்ள மற்றொரு நன்பர் ஓப்லிக்கும். ஆனால் சரியான நபரை கண்டடைந்து மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கும் நிலையில், இதைபோலவே கருத்து கொண்ட ஸ்டாஃபன்பர்க்கை (டாம் குரூஸ்) சந்திக்கிறார்கள்.

                                                           
ஸ்டாஃபன்பர்க் தனக்கு முழு அதிகாரம் வழங்க்பட்டால் தன்னால் இதனை முடிக்க முடியும், என்றும் மேலும் , இதனை ராணுவ மற்றும் அரசியல் கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கிறார். இதனை ஏற்றுக்கொண்ட இந்த இரகசிய குழு பொறுப்பை இவருக்கு அளிக்கிறது.
ஹிட்லர் கொல்லப்பட்டால் மட்டும் போதாது என்றும், அவருக்கு துணையாக இருக்கும், ஜெர்மன் கோரிங் மற்றும் கொள்கை பரப்பாளர் கோயபல்ஸ் ஆகியோரும் கொல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஆப்ரேஷன் வால்க்ரி என்ற ஒரு சதித்திட்டத்தை உருவாக்குகிறார். இந்த ஆப்ரேஷன் வால்க்ரி என்பது, ஆபத்து காலத்தில், ஹிட்லர் எதிரி படையினரால் கொல்லப்பட்டால், அடுத்து போரின் நடவடக்கியைலும், அரசியல் நடவடிக்கையிலும் நடக்க வேண்டியவற்ற உள்ளடக்கியது. இதைத் தொடர்ந்து, தனித்தனியான மாநிலங்கள் ஒருங்கினைக்கப்படும், ஹிட்லரின் நாசிப்படை ஒடுக்கப்பட்டு, அதன் செயல் பிரிவு தலைவர்களான கோயபல்ஸ் மற்றும், கோரிங் ஆகியோர் தலைமறைவாக்கப்படுவார்கள் என்று ஹிட்லரால் தீர்மானிக்கப்பட்டது. இது அந்த காலத்தில் மிகப்பிரபலமான வாக்னர் என்ற இசையமைப்பாளரால் உருவாக்க்கப்பட்ட ஆர்கெஸ்ட்ராவாகும். இது ஹிட்லரின் ஃபேவரிட் லிஸ்டாகும்!.

                                                                            
இந்த திட்டதில் பெரிய மாற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் ஹிட்லர் கொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக, ஜெர்மனி ஸ்டாஃபன்பர்க் தலைமையில் ஒருங்கினைப்பட்டு, அனைத்து நாசி தலைவர்களும் சிறையிலடைக்கபட்டு, அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ரிசர்வ் ஆர்மி மூலம் சட்டம் ஒழுங்கு கட்டுபடுத்தப்பட்டு, பேச்சு வார்த்தைக்கு எதிரி நாடுகளுடன் தயார் செய்யப்படும் என்று மாற்றி அமைக்கிறார். ஹிட்லரை அவரது வீட்டில் வுல்ஸ் லயரில் சந்த்தித்து , தன் புதிய சட்டத்திருத்ததின் அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கூறி ஒப்புதல் பெற்கிறார். ஹிட்லரும் அரை மனதுடன் இவர் மீதுள்ள நம்பிக்கையால் ஒப்புதல் அளிக்கிறார்.
இதைத்தொடர்ந்து, ஸ்டாஃபன்பர்க் மற்ற சகாக்களுடன் சேர்ந்து, பிளாஸ்டிக் டெட்டனேட்டர், பிரிட்டிஷ் பென்சில் ஆகியவற்றை கொண்டு வெடிகொண்டு ஒன்றை தயாரிக்கிறார். இதனை
அறிந்த ஜெனரல் ஃபிரம் என்பவர் இவரது முயற்சி தோல்வி அடைந்தால் தானே ஸ்டாஃபன்பர்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கூறி எச்சரிக்கை செய்கிறார். இருந்தாலும் தன்னுடைய முய்ற்சிக்கு உத்வியாக, ஹிட்லரின் அலுவலகத்தில் கம்யூனிகேஷன் ச்சீஃபாக பனிபுரியும், ஒருவரின் மூலம் தொலைத்தொடர்பை நிறுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் சதிக்கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார்.
போர் நடவடிக்கைகளை விவாதிப்பதற்காக ஹிட்லர் ஸ்டாஃபன்பர்க் உள்ளிட்ட அனைத்து ரானுவத்தளபதிகளையும் தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அங்கு 1.5 கிலோ வெடிகுண்டுகளுடன் ஸ்டாஃபன் பர்க்கும் , அவரது உதவியாளரும் செல்கிறார்கள். வெடிகுண்டை செட் செய்வதற்கு தனி அறை வேண்டும் என்பதால் , காலையில் முகச்சவரம் செய்யும்போது, பிளேடால் கழுத்துக்கு கீழே கீரிக்கொள்கிறார். இதனால் இரத்தக்கறை படிந்த தனது மேலாடையை மாற்றுவதற்கு தனி அறை வேண்டும் என்று கூறி அங்கு சென்று, சட்டையை அணிந்து கொண்டே, வெடிகுண்டை தயார் செய்கிறார். உதவியாளரை தான் மட்டும் தனியாகவே இந்த சதித்திட்டத்தை செயல் படுத்த முடியும் என்றும், அதனால் காரில் சென்று காத்திருக்கும்படியும் உத்தரவிடுகிறார்.
கைப்பையில் எடுத்துசென்ற வெடிகுண்டை ஹிட்லரின் காலுக்கு அருகாமையில் வைத்துவிட்டு, தனது சகாக்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஹிட்லர் உரை நிகழ்த்த ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியெறுகிறார். இவரது திட்டப்படி அடுத்த பதினைந்து நிமிடங்களில் வால்க்ரி இனிஷியேட் செய்யப்பட்டு விடும் என்று நம்பி வெளியேறுகிறார். வெளியே வந்த அடுத்த நிமிடம், கட்டிடமே அதிரும் அளவிற்கு கரும்புகையை கக்கியபடி குண்டு வெடிப்பதை தனது கண்களாலேயே கான்கிறார். இவரது திட்டப்படி அனைத்து செய்தித்தொடர்புகளும் காலவரையின்றி நிறுத்தப்படுகின்றன. ஹிட்லரின் ஆதரவாளர்கள், ஹிட்லருக்கு என்ன ஆனது என்பதிலேயே குறியாக இருக்கின்ற நிலையில், இவர் அங்கிருந்து காரில் தப்பிச்செல்வதை கவனிக்கத் தவறுகின்றனர்.
வழியில் மறிக்கும், செக்போஸ்ட் காவலாளியிடம், தான் ஹிட்லருக்கு நெருங்கியவன் என்றும் வேண்டுமானால் ஹிட்லரிடம் உடனிடியாக பேசித்தெரிந்துகொள் என்றும் மிரட்டி விட்டு அங்கிருந்து விமானத்தில் பெர்லினுக்கு திரும்புகிறார். முன்னதாக தனது மனைவி , குழந்தைகள் அனைவரையும் யாருக்கும் தெரியாத படி தொலை தூரத்தில் உள்ள கிராமத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதை நினைவு கூர்கிறார்.
ஆனால் பெர்லினில் கால் பதித்த பிறகுதான், தன்னுடைய திட்டத்தில் உள்ள பின்னடைவை உணர்கிறார். ஓல்பிக் எந்த உத்தரவையை ரிசர்வ் ஆர்மிக்கு வழங்காமல் மவுனம் காப்பதை
விரும்பாத ஸ்டாஃபன்பர்கின் நன்பர் Quirnheim அவசர சட்டமான வால்கிரியை இனிஷியேட் செய்கிறார். இதனை அறியாத ஸ்டாஃபன்பர்க் ஓல்பிக்கை இரகசிய போனில் அழைத்து ஹிட்லரின் அலுவலகம் வெடித்ததை தானே தனது கண்களால் பார்த்ததாகவும், ஹிட்லர் இறந்து விட்டதாக உடனடியாக அனைவருக்கும், இரகசிய தந்தி அனுப்பும்படிய்ம் சொல்ல ஓல்பிக் அதற்கு கீழ்படிகிறார். ஒட்டுமொத்த ஜெர்மனியும் பதறுகிறது. இரகசிய தொலைதொடர்பு அதிகாரிகள் நடுநிலையாளர்கள் என்பதால் எந்த செய்தியையும் மறைகாமல் அனைவருக்கும் வால்கிரி ஆனையை அனுப்பி வைக்கிறார்கள்.
ரிசர்வ் ஆர்மி, எஸ் எஸ் படையை சுற்றி வளைத்து கைது செய்கிறது, ஹிட்லரின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்படுகிறார்கள். வால்கிரிக்கு பனியாத மாகான மேயர்கள் கைது செய்யப்பட்டு, அதிரடியாக அவை பெர்லினை தலைமையிடமாக ஏற்றுக்கொள்ளச்செய்யப்படுகிறார்கள். தலைமறைவாக இருந்த ஹிட்லரின் அரசியல் எதிரிகள் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்கிறார்கள். ஜெர்மானிய மக்கள் கொடுங்கோலர் ஹிட்லரின் இறப்பை கொண்டாடும் விதமாக ஆப்ரேஷன் வால்கிரிக்கு நேரடி ஆதரவளித்து ஸ்டாஃபன்பர்குடன் இணைகிறார்கள். இவை அனைத்து, ஹிட்லர் கொல்லப்பட்டதாக வெளியான அடுத்த இரண்டரை மணி நேரத்தில் நடைபெறுகின்றன.
ஹிட்லரின் வலது கரமான கோயபல்ஸை கைது செய்ய ரிசர்வ் ஆர்மி அவரது வீட்டை முற்றுகையிடுகிறது. இதற்கு சற்றும் அஞ்சாத கோயபல்ஸ் கைது செய்ய வந்த இரானுவத்தளபதியை மிகச்சாதாரனமாக எதிர்கொண்டு தொலைபேசியில் ஒரு முக்கிய நபர் காத்துக்கொண்டிருப்பதாக கூறி பேசும்படி கோருகிறார். தொலைபேசியில் பேசிய குரலுக்கு சொந்தக்காரர், ஜெர்மனியின் சர்வாதிகாரி, ஜெர்மனியைத்தன்னால் மட்டுமே காக்கமுடியும் என்று கருதிய அடோல்ஃப் ஹிட்லர் என்பதை உணர்ந்த கேப்டன், அங்குசத்திற்கு பயப்படும் யானையைபோல அச்சத்துடன் அடுத்த உத்தரவை பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.
நடந்ததை அறியாத ஜெர்மனியின், மாகானங்களை ஒருங்கினைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார். தொடர்பற்று இருந்த அவரது அலுவலக வானொலி திடீரென உயிர்பெற்று ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்றும், கொல்ல நடந்த முயற்சியில் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டார் என்றும் , சதிகார்களும் அவர்களின் ஆதரவாளர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தொடர்ந்து அறிவிக்கிறது. இது தவறான தகவல் என்றும், குண்டு வெடிப்பை தானே நேரில் நிகழ்த்தியதாகவும், ஆதலால், இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார். இதற்கிடையில், ஸ்டாஃபன்பர்கின் தொலைதொடர்பு முழுவதும் துண்டிக்கப்படுவதை தொடர்ந்து, ஹிட்லர் உயிருடன் உள்ளார் என்பதை மறைமுகமாக உணர்ந்து கொண்ட அவரது சகாக்கள் அவரிடமிருந்து பிரிந்து வெளியேறுகிறார்கள்.
கைது செய்யப்படுவதற்காக இரானுவம் தனது அலுவலக வாசலுக்கு வந்திருப்பதை அறிந்த ஸ்டாஃபன்பர்க் அங்கிருந்து தனது கைத்துப்பாக்கியுடன் வெளியேற முயற்சி செய்யும் போது,
தனது சில ஆதரவாளர்கள், மற்றும் மெய்காப்பாளரோடு கைது செய்யப்படுகிறார். விசாரனையின் முடிவில் அதிரடியாக மரணதண்டனை பெறுகிறார்.
மிகச்சிறப்பான காட்சி அமைப்பின் மூலமும், ஒரு வேகமான திரைக்கதையுடனும், ஹிட்லர் இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட வில்லை என்ற வரலாற பல முறை படித்திருந்த போதிலும், திரில்லாகவே கதை நகர்த்தி இருப்பதை மிக முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். சூழ்நிலை , வசனம் ஆகியவற்றின் முக்கியத்துவம் கருதி மவுனம் காக்கும் இசை தேவையான இடங்களில் மழையாய் பொழிகிறது. முக்கியமாக வாக்னரின் இசையை பயன்படுத்தி, ஸ்டாஃபன்பர்க் எண்ணத்தை வசனமின்றி நமக்கு உணர்த்தி இருப்பதை கூறலாம்.
தேர்ந்த நடிகர்களை பாத்திரப்படைப்பிற்கு தக்க முறையில் பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்டாஃபன்பர்கின் உண்மையான தோற்றத்திற்கும், டாம் குரூஸின் தோற்றத்திற்கும் பத்து சதவீத வேறுபாடே தெரிகிறது. அவ்வளவு நேர்த்தியான் மேக்கப் மற்றும் உருவ அமைப்பு. ஜெர்மானிய கலாசாரத்தை அருமை பிரதிபலிக்கும் பல்வேறு பாத்திரபடைப்புகள் இடம்பெற்றிருக்கின்றனர். வரலாற்றை திருத்தி கூறாமல், ஏற்கனவே வெளியான வால்கிரி என்ற நூலை காட்சிப்படுத்தி இருப்பது மிகச்சிறப்பான அனுபவமாக இருக்கும் என்பதே உண்மை.
கடைசி காட்சியில், தான் கனவு கண்ட தேசத்தை பார்ப்பதற்கு முன்பே தான் கொல்லப்படுவதற்காக தன் ஒற்றைக்கண் கலங்கும் காட்சியும், தனது உயரதிகாரி கொல்லப்படுவதற்கு முன்பு தனது உயிர் போக வேண்டும் என்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கும் மெய்காப்பாளரும், சில பர்சனல் காரனங்களுக்கு, தானே தலையில் சுட்டுக்கொண்டு இறந்து போகும் கவர்னரும், தான் துவக்கிய இந்த சதி தோல்வி அடைந்து விட்டதெ என்ற துயரத்தில் கையெறி குண்டுக்கு தன்னையே பலி கொடுக்கும் ஜெனரல் டிரெஸ்கோவும் அருமையான காட்சிகளாகும்.
நாம் வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை, ஆனால் வரலாறு தினமொரு வன்முறையை நிகழ்த்திக் கொண்டுதானிருக்கிறது. அவை காலத்தின் பல்வேறு படிநிலைகளில் கறைகளாக படிந்து கொண்டிருக்கின்றன. மக்களை நேசிக்காத எவரையும் நன்பர்கள் கூட நேசிப்பதில்லை என்பதையும், ஒரு வன்முறைக்கு மற்றொரு வன்முறை தீர்ப்பாகாது என்பதையும், காலம் தனது புனிதமான எழுதுகோலால், எழுதிக்கொண்டேதான் இருக்கிறது என்பதையுமே இந்த வால்கிரி திரைப்படம் உணர்த்திச் செல்கிறது. மனித நேயத்தையும், மக்களையும் நெசித்து, காலம் அழகான நாட்களை மட்டுமே எதிர்வரும் நாட்களில் குறிப்பெடுக்கும் என்ற ஆவலோடு வேறொரு திரைப்படத்தில் தொடர்கிறேன்.


இந்த திரைப்படைத்தைப் பற்றிய மேலும் விவரங்கட்கு:

          http://www.imdb.com/title/tt0985699/
         http://www.youtube.com/watch?v=FHtCaVtryiE


டிஸ்கி:
    இரண்டு மணிநேரப்படம்....அதனால் சுறுக்கி எழுத மனமில்லை..

Monday, January 4, 2010

பிலடெல்பியா Philadelphia



















































கசப்பின் வலி -மயில்ராவணன்
மருந்தின் கசப்பை விடவும்,ஊசிகளின் வலியைவிடவும் புறக்கணிப்பின்
வலி கொடுமையானது.’மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது’ 
என்று சுஜாதா கூறுவார். 
‘பிலடெல்பியா’(philadelphia) திரைப்படம் இதைத்தான் கூறுகிறது. 
ஜானதன் டெம்மின் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் மற்றும் டென்சல்
வாஷிங்டன் ஆகியோரின் அருமையான நடிப்பில், இறக்கும் தருவாயில் 
உள்ள ஒருவன் நீதியின் முன் கம்பீரமாக போராடி வெல்லும் மிகச்சிறந்த 
திரைப்படம் ஃபிலடெல்ஃபியா. தான் ஒரு Gay என்பதற்காக ஆரம்ப காட்சிகளில் , பிறர் பார்வையில் குற்றவாளியாக தெரிந்தாலும், தன்னுடைய 
personal  விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதற்கோ , அதை ஒரு குற்றமாக கருதி வேலைநீக்கம் செய்வதற்கோ பிறருக்கு உரிமை
இல்லை என்பதை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோர்ட்டிலேயே நடைபெற்றாலும்,
கொஞ்சம் கூட சோர்வில்லாமல் நகர்கிறது.
அது ஒரு வழக்கமான பொழுதாகத்தான் ஆண்ட்ரூ பெக்கிற்கு விடிந்தது.அவனுடைய சிறப்பான வேலை மற்றும் பொறுப்புணர்ச்சியின் காரணமாக அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலதிகாரிகள் முக்கிய சில பொறுப்புகளை ஆண்ட்ரூவிற்கு வழங்குகின்றனர்.இந்த இன்ப அதிர்ச்சியில் 
இருந்து ஆண்ட்ரூ மீள்வதற்குள் அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கின்றது. மீட்டிங்கின் போது தலையில் ஏற்பட்டிருக்கும் தழும்பிற்கு 
காரணமாக எதையோ சொல்லி மழுப்புகிறார்.
மறுநாள் அலுவலகத்தில் அமர்ந்து முக்கியமான கோப்பு ஒன்றை திருத்திக் கொண்டிருக்கும்போது கடுமையான உடல் சோர்வுக்கு உள்ளாகி நண்பர்கள் உதவியுடன் மருத்துவமனையை அடைகிறார்.இரத்தப் பரிசோதனையின் முடிவு மருத்துவரால் வழங்கப்படும்போதுதான், தனக்கு எய்ட்ஸ் இருப்பதை அறிகிறார்.அதே நேரத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருவதைத் தொடர்ந்து,போனில் தொடர்பு கொள்கிறார்.அப்போது முக்கியமான கோப்பு ஒன்றைக் காணவில்லை என்பதை அறிந்து பதற்றம் கொள்கிறார்.இருப்பினும் உடனடியாக அலுவலகத்திற்கு சென்று கோப்பை சரிபார்த்துக் கொடுத்து கம்பெனிக்கு கெட்டபெயர் ஏற்படுவதைத் தவிர்க்கிறார்.


             இந்த சூழ்நிலையில்தான் ஆண்ட்ரூ ஒரு 'HomoSexual' என்பது நமக்கு தெரிய வருகிறது.ஆனாலும் இதனை அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இருந்து மறைக்கிறான்.மேலும் தனக்கு எய்ட்ஸ் என்ற ரகசியத்தையும் தனக்குள்ளாகவே புதைக்க முயற்சி செய்கிறான்.இதுவரை திரைப்படத்தில் tom hanksன் தோற்றம் மிக அழகாகவே உள்ளது.முகத்திலும்,கழுத்திலும் உள்ள சில தழும்புகளைத் தவிர. ஆனால் காலம் தனது மோசமான தீர்ப்பை இவரின் உடலின் மீது எழுதி, இவரை ஒரு எய்ட்ஸ் நோயாளியாக வெளிப்படையாக தெரிய செய்யும் பிற்பகுதி காட்சிகள் கண்ணில் நீரை வரவழைக்கிறது.
           இந்நிலையில் மேலதிகாரிகளால் கோப்பு காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்.நடந்த சம்பவம் துரதிஷ்டமானது என்றும், இது முதல்முறை என்பதால் வருத்தம் கலந்த மன்னிப்பை ஏற்கும்படியும், இனி  நடக்காது என்றும் விளக்கம் அளிக்கிறான்.இருப்பினும் இவரது விளக்கத்தை ஏற்காத கமிட்டி இவரை வேலையில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை வழங்கி இவரை வேலையில் இருந்து வெளியேற்றுகிறது.
          இதற்கிடையில் ஏற்கனவே தனக்கு அறிமுகமான வக்கீல் ஜோமுல்லர்(டென்சல் வாஷிங்டன்) என்பவரை அணுகி தனக்கு நீதி கிடைக்க செய்யுமாறு வலியுறுத்துகிறார்.பெக் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதை உரையாடலின் போது என்பதை தெரிந்து கொண்டு வெறுப்பு கொள்கிறார். மேலும் அவரை உடனடியாக தன்னுடைய அலுவலகத்தில் இருந்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறார். இதனால் வெறுப்படைந்த ஆண்ட்ரூ அங்கிருந்து வெளியேறுகிறார்.



                                    
         ஜோமில்லர் இரக்கமில்லாதவர் இல்லை, இருப்பினும், அன்றைய காலகட்டத்தில் போதுமான விழிப்புனர்ச்சி இல்லாத காரனத்தாலும், பெக்கை ஒரு homo sex என்று அறிந்த காரனத்தாலும் மட்டுமே அவரை வெறுக்கிறார் என்பதை பின்வரும் காட்சிகளில் நமக்கு விளங்க செய்கிறார். அவனுடன் கைகுலுக்கியதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அவரது டாக்டரை அணுகுகிறார். படம் வெளிவந்த காலகட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு படித்த திறமையானவர்களைக் கூட சரியாகச் சென்றடையவில்லை என்பதை மிக அழகாக சித்தரிக்கிறார் டைரக்டரு. இந்நிலையில் ஆண்ட்ரூ தனக்காக வாதாட யாரும் முன்வராத நிலையில் தானே தனது வழக்கை நடத்த முடிவு செய்து லைப்ரரியில் அமர்ந்து தற்செயலாக ஜோமில்லரை சந்திக்கிறான்.
           ஆண்ட்ரூ பெக்கின் பரிதாபமான  நிலையைப் பார்த்து ஜோ அவனுடைய வழக்கை ஒத்துக்கொள்கிறார்.இதற்கு பிறகு நடக்கும் பல சம்பவங்கள் மனிதநேயம்,மனித மாண்பு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்போரை, செயலில் இறங்கி முடிந்தால் அடுத்தவனுக்கு உதவுங்கள் என்பதுபோல் சொல்லாமல் சொல்லி செல்கின்றன.
          ஆண்ட்ரூவின் பாலியல் விருப்பத்திற்கு உலகே எதிர்ப்பு தெரிவித்தாலும் கண்ணியமான அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மேலும் அவரைப் புண்படுத்தாமல் அன்புடன் நடந்து கொள்வது சிறப்பான விசயம்.
          கோர்ட்டில் கோப்பு காணாமல் போனது என்பதைவிட  ஆண்ட்ரூவிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதாலேயே அவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டான் என்று ஆண்ட்ரூவிற்கு ஆதரவாக ஜோ வாதாடுகிறார்.எதிர்தரப்பில் இருந்து ஆரம்பத்தில் இதனை மறுத்த அலுவலக நிர்வாகம் தனக்கு எய்ட்ஸ் என்பதை சக ஊழியர்களிடம் மறைத்ததை தவறாகக் காரணம் கூறி தாங்கள்  செய்தது சரியே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர். மேலும் பெக்கிற்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதை அவர் கூறாமல் எப்படி தங்களுக்கு தெரிய வரும்? என்று திசை திருப்ப முயற்சி செய்யும்போது, ஆரம்பத்தில் முகத்தில் தழும்புகள் இதனை தன்னிடம் இருந்து வெளிப்படுத்தி கொண்டுதான் இருந்தது என்றும், கூற....அதற்கு எதிர்தரப்பு, தங்களால் வெளிப்படையாக ஒரு தழும்பை இப்போது காண இயலாத நிலையில் எப்படி இதை ஏற்றுக்கொள்ள முடியும் எனும்போது, ஜொ அவரது சட்டை பொத்தான்களை கழட்டி உடலில் உள்ள தழும்புகளை காண்பிக்கும்படி கோருகிறார். இது ஒரு முக்கியமான திருப்பு முனையாக வருகிறது.
         இதனைத் தொடர்ந்தாற்போல வரிசையாக வழக்கு மன்றக் காட்சிகள்.வசனங்கள் இப்படத்தின் பலம்.விசாரனையின்போது  உடல் மற்றும் மனச்சோர்வின் காரணமாக கீழே விழும் ஆண்ட்ரூ ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறான்.
       தொடர்ச்சியாக வழக்கை ஜோமில்லர் திறமையாக வாதாடி பாலியல் தொடர்பான முடிவுகளில் அலுவலகத்திற்கு எந்த தொடர்போ, உரிமையோ இல்லை என்பதை நிரூபிக்கிறான்.முன்னதாக ஆண்ட்ரூ பெக்கின் தற்போதைய மனச்சிதைவு மற்றும் மன அழுத்ததிற்கும் அவனது homosexulaity-தியேட்டர் சம்பவத்தை பலர் முன்னிலையில் அம்பலப்படுத்தி, அசிங்கப்படுத்தியதேக் காரணமென்பதையும் நீதிபதிக்கு எடுத்துரைகிறார்.
            ஜூரியின் கருத்தைக் கேட்கும் நீதிபதி மிகப்பெரிய தொகையை கார்ப்பரேட் கம்பெனிக்கு அபராதமாக விதித்து ஆண்ட்ரூவிற்கு கிடைக்கும்படி செய்கிறார்.இதனை ஜோ ஆண்ட்ரூவிற்கு தெரிவித்துவிட்டு வீடு வந்து சேரும்போது ஆண்ட்ரூவின் மரணச்செய்தி வருகிறது.ஆண்ட்ரூவின் இருதிச்சடங்கு நிகழ்ச்சியில் அவரது மங்கிய குழந்தை நினைவுகள் தொலைக்காட்சியில் காண்பதோடு நம்முன் சலனத்தை ஏற்படுத்தி செல்கின்றன.
            ஆண்ட்ரூ பெக்காக நடித்துள்ள tom hanksன் நடிப்பு அபாரம்.மிகவும் சிக்கலான,controversy கருவை மிக அழகாக,அருவருப்பற்ற நிலையில் படமாக்கியிருப்பது பாராட்டுக்குறியது.நோயின் முதிர்ச்சியில் படிப்படியாக உடலியல் மாற்றங்களை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள விதம் பாராட்டுக்குரியது.ஜோமில்லராக வரும் டென்சல் வாஷிங்க்டன் நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்.
           குறிப்பாக சில காட்சிகள் மனதைக் கீறி விடுகின்றன.ஆண்ட்ரூ கோர்ட்டில் சட்டையைக் கழட்டி தழும்பினைக் காண்பிக்கும் காட்சி....மிகை நடிப்பில்லாமல் சோகத்தை வரவழைத்துவிடும்.மரணப் படுக்கையில் இருக்கும் ஆண்ட்ரூவை ஒவ்வொருவராக நலம் விசாரிக்கும்போது நம் கண்கள் குளமாகிவிடுகின்றன.வழக்கு தொடர்பாக வீட்டில் ஜோவும், பெக்கும் விவாதிக்கும் தருனங்களில், opera  பாடல் ஒன்றில் மனம் ஒன்றி அதன் அர்த்தத்தை கையில் மருந்து ஏறும் நிலையில் நடந்து கொண்டே பேசும் காட்சியில், நோயுடன் வாழ்வதை விட தான் இறப்பதையே அதிகம் விரும்புகிறார் என்பதை மறைமுகமாக வெளிப்படுதுகிற காட்சி சிறப்பானது.
          எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்கு நமக்கு உரிமையில்லைஆனால் மனிதாபிமானம் என்ற ஒன்றை மட்டும் மனதில் கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை அருமையாக உன்ணர வைக்கும் திரைப்படம்தான் பிலடெல்பியா’(Philadelpia).


டிஸ்கி: 
      'The Silence Of The Lambs' என்ற அற்புதமான படத்தை இயக்கிய ’Jonathan Demmeன் 
மற்றுமொரு தரமான படைப்பே இந்தப் படம்.