Wednesday, March 31, 2010

கள்ளம்

                                                  மயில்ராவணன்

அவளின் பெயரை மகளுக்கு சூட்டினேன்
மனைவி சந்தோஷித்தாள்
மகனுக்கு மனைவி பெயர் சொன்னபோது
ஏனோ மனசு கனத்தது.

Monday, March 29, 2010

பகுத்தறிவு

மகனுக்கு அரைக்கால் டவுசர் என்றாள்
இல்லை முழுக்கல் டவுசர்தான் என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்

அரசு பள்ளி என்றாள்
இல்லை தனியார் பள்ளி என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்

கல்லூரி செல்ல சைக்கிள் என்றாள்
இல்லை மோட்டார் சைக்கிள் தான் என்றேன்
நான் பட்ட கஷ்டம் அவன் படவேண்டாம் என்றேன்

மகனுக்கு காதல் திருமணம் என்றாள்
இல்லை நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என்றேன்
நான் படும் கஷ்டம் அவன் பட வேண்டாம் என்றேன்.
                                                                                      - மயில்ராவணன்


டிஸ்கி:
         பார்க்கும்போதெல்லாம் எப்போ கவிதை எழுதப்போறீங்கன்னு கேட்டு என்னை கவிதை எழுத வைத்த கவிஞர் பலாபட்டறை ஷங்கருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.(இக்கவிதைத் தலைப்பு மட்டும் அவர் வெச்சது!!)

Friday, March 26, 2010

கிணிங் கிணிங்



                                                                            மயில்ராவணன்

                             விடிகாலையில் முகம் தெரியாத இருட்டு! “கிணிங் கிணிங் கிணிங்” வெளியே பால்காரன் ஆனந்தனின் மணியோசை கேட்டு மளாரென எழுந்தாள் சந்திரலேகா! அம்மா எழுந்து போய் பால் வாங்கும் முன் இவளே சமையல்கட்டுக்குள் ஓடி தூக்குவாளியை எடுத்துக் கொண்டு கொலுசு ஒலிக்க வாசலுக்கு ஓடினாள். தூக்கு வாளியை நீட்டி பாலை வாங்கியவள் திரும்ப வீட்டினுள் வந்து சமையல்கட்டில் வைத்துவிட்டு படுக்கையில் குப்புற விழுந்தாள்.

                             சந்திரலேகா +2 பரீட்சை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தாள். படிப்பு படிப்பு என்றிருந்து விட்டு இப்போதுதான் காலைத் தூக்கத்தை சுகமாய் அனுபவிக்கிறாள்.

                           ஆனந்தனுக்கு வயது 26. பட்டப்படிப்பை முடித்துவிட்டு சும்மா இருக்காமல் வேலைக்கு எல்லாப் பக்கமும் அலைந்து தேடிக் கொண்டிருக்கிறான். அப்பா தான் இந்த நகர்புறத்தில் வீடு வீடாக சைக்கிளில் சென்று பால் ஊற்றிக் கொண்டிருந்தார். சும்மா இருந்து கிடப்பதற்கு பதிலாக இவனே அப்பாவின் சைக்கிளை இந்த ஒரு மாதமாக எடுத்துக் கொண்டான். காலை நேரத்தில் சைக்கிள் சவாரி விடுவது உடலுக்கும் நல்லதாகப் போயிற்று!

தேக ஆரோக்கியமே வெற்றியின் முதல்படி என்பது அவன் நினைப்பு. காலை நேரத்தில் இந்த நகர்புறத்தில் தங்களது வீட்டு நாய்களை சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்லும் செல்வந்தர்களை கண்டால் இவனுக்கு சிரிப்புதான் வருகிறது. நாய்கள் தான் அவர்களை வாக்கிங் கூட்டிப் போவதால் நினைத்து சிரிப்பான்.

சந்திரலேகாவின் அம்மா.வீட்டோடு சரி.அப்பா பிரபல கம்பெனி ஒன்றில் சேல்ஸ் ரெப்பாக இருக்கிறார்.சந்திரலேகா வீட்டுக்கு ஒரே பெண். கண்ணே கண்ணு என்றுதான் செல்லமாய் வளர்த்தாள். சந்திரலேகாவிற்கு கேட்டது உடனே கிடைக்கும்.

சந்திரலேகாவின் அம்மாவிற்கு ஒரே ஆசை....தன் மகளுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என்பது.அதுவும் பால்கொண்டு வரும் ஆனந்தனுக்கே கொடுத்தால் என்ன என்று. ஆனந்தனை பற்றி அக்கம்பக்கம் பூராவும் விசரித்து தெரிந்து கொண்டாள். வீட்டுக்காரரும் எது சொன்னாலும் தலையை ஆட்டுபவர். நினைத்த மாதிரி திருமணம் முடிந்து விட்டதென்றால் சொந்தமாக பிஸினஸ் தொடங்கித் தரலாம், என்று முடிவு செய்திருந்தாள்.

அடுத்த நாள் காலையில் சந்திரலேகா பால்காரனின் கிணிங் கிணிங் சப்தத்திற்கு எழுந்திருக்கவில்லை. அம்மாதான் பாலுக்காக தூக்குவாளியோடு சென்றாள். ஆனால் அவனோ இவளுக்கு அதிர்ச்சியடையச் செய்யும் விதமாய் ஒரு தகவல் சொன்னான். அது- ”நாளையில் இருந்து நான் பால் கொண்டு வர மாட்டேன்”.உடனே ‘ஏன்’ என்று பதட்டத்தோடு கேட்டாள்.

”நான் ஒரு பொண்ணை உயிருக்கு உயிராய் விரும்புறேன்மா! வீட்டுல இதுபத்தி சொன்னேன். அப்பாவும் அம்மாவும் ரொம்ப கோபப்படறாங்க. அவளை என்னால மறக்கவும் முடியல.வேற வழி இல்லாம நாங்க ரெண்டு பேரும் ஊரை விட்டு போறதா முடிவு பண்ணி பேசி வச்சிருக்கோம். 

                   உங்ககிட்ட சொல்லிடலாம்னு தான் சொன்னேன்..” ஏமாற்றத்தை முகம் இருட்டில் சரியாய் அவனுக்கு காட்டித் தந்திருக்காது என்ற நம்பிக்கையில் ”உனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒரு குறையும் வராது..சந்தோசமா கூட்டிப் போய் குடும்பம் நடத்து ஆனந்து” என்று திரும்பினாள்.

அடுத்த நாள் பொழுது ஆனந்தனின் கிணிங் கிணிங் ஓசை இன்றித் தான் விடிந்தது! பறிகொடுத்தது போன்ற சோகம் அம்மாவிற்கு! சந்திரலேகா படுத்திருக்கும் இடம் பார்த்தாள். அங்கு வெறுமையாய் இருந்தது! சந்திரலேகா இல்லை! பதட்டமாய் எழுந்து விளக்கைப் போட்டாள். பாயில் ஒரு பேப்பர் மீது பேனா இருந்தது! அதை எடுத்துப் படித்தாள்.

”அம்மா, என்னை மன்னித்துவிடு! அப்பாவிற்கும் சொல்லி விடு! அவர், அப்பா அம்மாவிடம் சொல்லி சம்மதம் வாங்கி விடு சந்திரலேகா என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த தைரியம் இல்லை. அவர் வீட்டில் சொல்லியே கோபப்பட்டார்களாம்.திட்டத்தை போட்டு விட்டோம். நான் அவருடன் செல்கிறேன்.”
இப்படிக்கு
சந்திரலேகா ஆனந்த்.

அடிப்பாவி! இந்தப் பூனையும் திருட்டுப் பால் குடிச்சிருச்சே! என்று கணவரின் அறைக்கு சென்றாள் “ என்னங்க ... நம்ம பொண்ணு” என்று கூறிக்கொண்டு.

Wednesday, March 17, 2010

நித்யானந்தாவும் இன்னபிற கதைகளும் - வா.மு.கோமு

நடைபெறாத சம்பவம் மற்றொன்று:
  
ஒரு நாள் காவிரி ஆற்றின் கரையோரம் நித்யானந்தா உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அதை வால்பையன் பார்த்து விட்டான். வால்பையனுக்கு அன்று ஞாயிற்றுக்கிழமை! நேற்றைய இரவில் மீதமான சரக்கை இரண்டு துண்டு வெள்ளரிப் பிஞ்சை கடித்துக் கொண்டு குடித்து விட்டான். அறைக்குள்ளேயே  அடைபட்டுக் கிடந்தால் தூக்கம் வந்துவிடுமே என்று காலார நடக்கத் தீர்மானித்து கிளம்பிவிட்டான்.வெறும் வயிற்றில் இறங்கிய சரக்கு குபுகுபுவென மசமசப்பைத் தந்திருந்தது! மணலில் கால் புதைய நடந்தவன் தான் நித்யானந்தா ’தண்டால்’ எடுத்ததை கவனித்தான். ஒரே குழப்பமாகவும் இருந்தது! 


உடற்பயிற்சியை மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தார் நித்யானந்தா.வால்பையன் அவரையே சுற்றிச்சுற்றி வந்து உன்னிப்பாக கவனித்தான்.தவறாகப் போய் விடக்கூடாதல்லவா!
”ஐய்யோ! நித்யானந்தா..உங்களது பர்சனல் விசயத்தில் தலையிவதாக நினைக்க வேண்டாம்! உங்களது கேர்ள் ஃப்ரெண்டு ரஞ்சிதா போய் விட்டாள். வீணாக எதற்கு இப்படி சிரமப்படுகிறீர்? முதலில் எழுந்து வந்து அவளை எங்கே என்று தேடிப் பிடியுங்கள்” என்றான்.


ஒரு சம்பவம் கற்பனையாக :-
நித்யானந்தா,அமலநாதன்,முஜீப் மூவரும் பத்து வருடம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்கள்.ஜெயிலர் இவர்களிடம் ‘நீங்கள் பத்து வருடம் உள்ளே இருக்கப் போகிறீர்கள்...உங்கள் தேவை என்ன? ஒரே ஒரு பொருள் கேளுங்கள்..நிறைவேற்றி தருகிறோம்’ என்றார். நித்யானந்தா “பெண்” என்றார்.  முஜீப் “செல்போன்” என்றார். அமலநாதன் “சிகரெட்” என்றார்.


பத்து வருடங்கள் கழித்து மூவரும் வெளியே வந்தார்கள். முஜீப் செல்போன் மூலம் வியாபாரம் பேசி,கமிஷனாக ஏராளமான பணம் சம்பாதிருந்தார். அதேபோல் அமலநாதன் வெளியே செல்கையில், “ நெருப்பு பெட்டி இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே சென்றார். நித்யானந்தா பத்து குழந்தைகளோடும் மனைவியோடும் சென்றார்.


இரண்டாவது சம்பவம் கற்பனையாகவே :-
நித்யானந்தாவும், பாதர் அமலநாதனும் திக்கஸ்ட் ப்ரெண்ட்ஸ்.அவர்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் கிடையாது! ஒளிவு மறைவு இருந்தால் நண்பர்களாக கண்டிப்பாக இருக்க முடியாதுதான் ஒன்றை நாம் புரிந்திருக்கிறோம். மறைத்து மறைத்து பழகும் நட்பு நீடிக்காது! காதலுக்கும் அப்பிடித்தான். 


                    அதுவும் வெற்றி பெறாது!  நித்யானந்தாவும்,பாதர் அமலநாதனும் ஒன்றாகத்தான் எங்கும் வெளியே செல்வார்கள். ஒரு திரைப்படம் பார்க்க என்றாலும் இருவரும்தான். இருவருக்கும் இன்று ஒரு சிறப்பான நிகழ்ச்சி இருந்தது! திரைப்பட நடிகை நளினாசிரீ இன்று நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வருவதாக மெசேஜ் விட்டிருந்தாள். sms பார்த்ததும் நித்யானந்தா அமலநாதனுக்கு தகவல் கொடுத்து விட்டார். அவரை பிக்கப் செய்து கொண்டு செல்வதற்காக நித்யானந்தா தன் காரில் அமலநாதனை தேடி வந்தார். பாவமன்னிப்பு கேட்பவர்களின் வரிசை அன்று நீண்டிருந்தது.
இவர் வெளியே காரில் காத்திருந்தார். அமலநாதன் செல்போனிற்கு 
ரிங் விட்டு ரிங் விட்டு கட் செய்தார். அமலநாதன் ஓடிவந்து இவர் காரில் ஏறிக் கொண்டார். காரில் ஒரு கண்ணாடி ஜன்னல் கொஞ்சம் இறக்கிவிட்டார். வெளியே இருந்து பாவமன்னிப்பு கேட்டார்கள். பாவத்தை சொன்னார்கள்.


அமலநாதன் காரில் ஏறியதுமே “நமக்கு இன்று நிரம்ப நேரமகிவிட்டது.ஸாரி” என்றார். ”எவ்வளவோ விரைவாக முடிக்க முயன்றும் முடியாமல் போய் விட்டது. அவர்கள் தங்கள் பாவங்களை சுருக்கமாக சொல்வதேயில்லை.கதை போல நீளமாய் சொல்கிறார்கள். எனக்கோ கடுப்பாய் இருக்கிறது.  அவர்கள்நான் அப்பிடி செய்தேன் இப்படி செய்தேன் என்று கூறுகிறார்கள் ... ஒரு கற்பழிப்பை, இது ஒரு பெரிய விசயமா? நீ கற்பழித்தாய்...அவ்வளவுதானே...அந்த 
உண்டியலில் ஐந்தாயிரம் போட்டு விட்டு நகர்ந்து செல்” என்பேன், என்றார்.


  ”சரி இவ்வளவு தானா விசயம்...இப்படி முன்புறம் வந்து நீங்கள் தயாராகுங்கள்... பவுடர்,சீப்பு,கண்ணாடி,செண்ட் என்று இதோ இருக்கிறது. நான் பார்த்துக் கொள்கிறேன். உள்ளே யார் இருக்கிறார்கள் என்று வெளியே இருப்பவர்களுக்கு இந்த கண்ணாடிகள் காட்டிக் கொடுக்காது ! நான் இதை ஜமாளிகிறேன்”, என்கிறான். “சரி இந்த உண்டியலில் 20 ஆயிரம் போட்டுவிட்டு போ” என்றார் நித்யானந்தா. அதர்கு அவன், ஐயோ பாதர் இது மிக அதிகம்...போன தடவை 5ஆயிரம் உண்டியலில் போட்டேன்...அபராதத் தொகையை ஏற்றிவிட்டீர்களா? “ என்றான். “இல்லை...தொகை ஐந்தாயிரமே தான்...ஆனால் பதினைந்தாயிரம் முன்னதாகவே உண்டியலில் போடச் சொல்கிறேன்,ஏனெனில் நீ அடுத்தடுத்து சீக்கிரமே கற்பழிப்புகளை நடத்துவாய்” என்றார் நித்தியானந்தா.


டிஸ்கி:
                பாலுணர்வுதான் தன்னுடைய முழு வாழ்க்கையும் என்று ஒருவன் கருதினால் அந்த வாழ்க்கை முழுமையாகவே வீணாகிவிடும். பாலுணர்வு சக்தி என்று ஒன்று தனியே கிடையாது. சக்தி என்பது ஒன்றுதான். அந்த சக்தி வெள்யேற ஆண் பெண் கலவி துணை செய்கிறது! அவ்வளவுதான். --...வாழ்க வளமுடன்.


Tuesday, March 16, 2010

காதல் கவிதைகள் - வா.மு.கோமு

என்னைக் கிள்ளி
எடுத்து
உன் கூந்தலில்
சூடிப்போ!

*************************************************************
நீ எல்லாவற்றையும்
மறைக்கிறாய்.
என்னையும் உன்னுள்.

*************************************************************
ஒவ்வொரு பார்வையிலும்
ஓராயிரம் ரகசியத்தை
உன் விழிகள் சொல்கின்றன.
-சும்மாதான் பார்த்தேன்
என்கிறாய்!என்னையே உன்
பார்வையால் விழுங்கிவிட்டு.

****************************************************************
உன் கடிதங்களை
எதிர்பார்ப்பது கூட
வழக்கமாகி விட்டது.
எப்பொழுதும் நீ
கடிதம் எழுதாத போதும்.

******************************************************************
எனக்கு பிடிக்காததையே
செய்யும்
எனக்குப் பிடித்தமானவள் நீ.

*******************************************************************
உனக்கே என்னை
தெரியவில்லை எனில்
யாருக்குத் தெரிந்து
என்ன பயன்?

**************************************************************
நீ தான் சொன்னாய்
நீ என்னில் பாதி என.
தவறு சகி
நான் உன்னுள் முழுமை.

***************************************************************
என்னை மறந்து விட்டீர்களா? என்கிறாய்.
மறக்கவில்லை.
ஞாபகத்திலிருந்து அடித்திருக்கிறேன்.
மறப்பதற்கான முயற்சியா? என்கிறாய்.
முயற்சியல்ல சோதனை
வெற்றி பெறுவீரா? என்கிறாய்.
உன்னால் முடிந்திருந்தால், என்கிறேன்.

*****************************************************************
எப்போதும் போல் வசந்தம் வருகிறது
பூமி குளிர்கிறது
நீயும் நானும் வேறுவேறு பக்கம்
சுவாசித்தும்.

*****************************************************************
ஆறாதிருந்த ரணத்தின் மேல்
கனல் கக்கும் வேல்
எய்தவள் நீயும் சுகமற்றிருக்க !

*****************************************************************
அன்பை விதைத்து விட்டு
அறுவடை சமயத்தில்
பைபை சொன்னவள் நீ.

*****************************************************************

எனது பிரியத்தின் மீது
மிகப்பெரிய முற்றுப்புள்ளியை
வைத்தவள் நீ!

*****************************************************************
நாவுகள் நிஜம் பேசுமென்பது
நம்பத்தகுந்ததல்ல என்பதை
மறுபடியும் நிரூபணம் செய்தவள் நீ !

******************************************************************

Sunday, March 14, 2010

என்னை மன்னிச்சிடுங்க....

                                                                     மயில்ராவணன்
                       அவர்கள் பள்ளித்தோழிகள். மாலா,விமலா. இருவருக்குமே ‘லா’ என்கிற எழுத்தில் பெயர்கள் முடிவடையும் ஒற்றுமையுயை நீங்கள் கவனிக்கவும். மாலா நல்ல துட்டு பார்ட்டி.விமலா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்.இவள் ஒரு ஓடுகாலியும் கூட.ஒரு பெண்ணைப் பற்றி எடுத்தவுடன் மயில்ராவணன் வலைப்பூ நடத்தும் அடியேன் தரக்குறைவாக பேசக்கூடாது தான்.


               இருந்தாலும் இந்த விமலா இருக்காளே பத்தாவது 
லீவுல ஒரு ஓட்டம் ஒரு பையனுடன் ஓடிவிட்டு பைசா பற்றாக்குறையால் வீடு திரும்பியவள்.காதல் வெற்றியடைய வேண்டுமின்னா பைசா பிரச்சனை வரவே கூடாது. பைசா பிரச்சனை வந்ததென்றால் அந்த இடத்தில் காதல் போய் விடுகிறது.


இந்த விமலா பின்னர் மூன்று வருடங்கள் கழித்து வீட்டார் பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு குழந்தை ஒன்று பெற்று சுகமாயிருக்கிறாள். மாப்பிள்ளை கான்வெண்ட் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக இருக்கிறான்.பெண்குழந்தை அரசாங்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறது.மாலா விசயத்திற்கு வருவோம். 


               மாலாவின் கணவர் டாக்டர் ஷங்கர். சொந்தமாக மருத்துவமனை இல்லை என்றாலும் நகரில் பிரபல மருத்துவமனை ஒன்றில் பொது மருத்துவராக இருக்கிறார். எலும்புமுறிவு சிகிச்சைக்கான நிபுணரும் கூட.சிற்றிதழ்கள் படிக்கும் டாக்டர். சமீபத்தில் அவர் கையில் நான் பார்த்த சிற்றிதழ் ‘அகநாழிகை’. பாருங்கள் எப்படி கதை போகிறதென்று!! 


மாலாவுக்கு ஒரே பெண்குழந்தை யூகேஜி முடித்துவிட்டு first standard போகிறாள். இவள் படிக்கும் கான்வென்ட் ஸ்கூல் வேன் டிரைவர் தான் விமலாவின் ஹஸ்பண்ட். எப்புடி! புதுசாக் கத எழுதும்போது இப்படி எல்லாம் கொண்டு வந்து ஒன்று சேர்க்க வேண்டும்.


மாலாவும் விமலாவும் திடீரென சந்தித்துவிட்டார்கள். விமலாதான் எதேச்சையாக அந்த வீட்டின் முன் நின்று கொண்டிருந்த மாலாவைப் பார்த்து சந்தேகமாய் அருகே சென்று முடிவு செய்தாள். இருவரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். மாலா விமலாவை வீட்டினுள் கூட்டிசென்றாள்.உள்ளே திருமண போட்டோவில் டாக்டர் ஷங்கர். 


                  இவரா உன் கணவர்.அதே ஹாஸ்பிடலில் தான் நர்ஸாக இருக்கிறேன். இவர் ஒரு தப்பான ஆள் ஆயிற்றே. நர்ஸ் ப்ரியாவோடு கொஞ்சி கொஞ்சி பேசுபவர்..”ஜொள்ளு மன்னன்” என்று தீப்பெட்டி இல்லாமலேயே சிறப்பாக பற்றவைத்தாள் விமலா!பற்றவைத்தவள் மறுபடி சந்திப்பதாக கூறி சென்றுவிட்டாள்.


டாக்டர் ஷங்கர் தன் மாருதியின் முன்பக்கத்தில் நர்ஸ் ப்ரியாவோடு அரட்டைக் கச்சேரி போட்டுக்கொண்டு வண்டியோட்டிக் கொண்டிருந்தார். ”ப்ரியா நீ என் இறந்து போன தங்கை செல்வி மாதிரியே இருக்கிறாய்.நீ என்னை அண்ணா என்றே கூப்பிடு...ஹாஸ்பிடலில் சார் போடுகிறாய் இங்கேயுமா சார்?” என்றதும், “சரிங்கண்ணா” என்றாள்.


ரோட்டோரமாக பள்ளி வாகனம் ஒன்று குறுக்கே குழியில் விழுந்து கிடந்தது.  இவரும் வண்டியை ஓரம்கட்டினார்.ஒவ்வொரு குழந்தையாய் ஜன்னல் வழியாக தூக்கிக் கொண்டிருந்தனர். எந்த குழந்தைக்கும் பெரிதாய் பாதிப்பு ஒன்றும் இல்லை.வண்டி அப்பிடியே சாய்ந்திருக்கிறது!டிரைவருக்குத்தான் கால் முறிந்துவிட்டது! கூட்டத்தில் தன் குழந்தையையும் டாக்டர் ஷங்கர் கண்டார்.
* * * * * * * * * * * *
இந்தப் பாழாய் போன ஷங்கர் ப்ரியாவோடு எங்கே ஜல்சா செய்ய போய்விட்டாரோ! பள்ளி சென்ற குழந்தையை இரண்டு மணிநேரமாக காணவில்லை.ஹாஸ்பிடலுக்கு போன் போட்டாலும் யாரும் சரியாய் பதில் பேசமாட்டேன் என்கிறார்கள். ஷங்கர் செல் ஸ்விட்ச் ஆஃப் என்கிறது! அடி ப்ரியா உன் 
குரல்வளையைக் கடிக்காமல் விடமாட்டேனடி! என்று மாலா புலம்பிய சமயம் போன் ரிங் ஆனது. ஷங்கர் தான் ”குழந்தைக்கு தலையில் அடி” என்கிறான். ஹாஸ்பிடல் வரச் சொல்கிறான். ஐய்யய்யோ! என் செல்லத்திற்கு என்னவாயிற்று! ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் வந்தாள்!


* * * * * * * * * * * *
குழந்தை தலைக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது! இவளைக் கண்டதும் “மம்மி” என்று படுக்கையிலிருந்து கொண்டே கைநீட்டியது. ஓடிப்போய் அணைத்துக் கொண்டாள். வேன் கீழே சாய்ந்து விட்டது! டிரைவருக்கு கால் முறிந்து போனது,என்று சொன்னது. பிள்ளைக்கு ஒன்றுமில்லை என்றதும் மனம் 
ப்ரியாவுக்கு தாவியது! ஷங்கர் சட்டையை எட்டி பிடித்து கொண்டாள். எங்கே என் சக்காளத்தி? உனக்கு ஹாஸ்பிடலில் 
கம்பெனி கொடுப்பவள்? என்று எகிறினாள். டாக்டர் ஷங்கர் மனைவியை சமாதானப்படுத்த படாதபாடுபட்டார். ப்ரியா என் தங்கை என்றார்.செத்துப் போன என் தங்கை போலவே இருப்பாள் என்றார்.


அதே சமயம் ப்ரியா அறைக்குள் வந்தாள்.பார்த்ததும் அசல் செல்விதான் நேரில் வந்து விட்டாளோ? என்று தான் நினைத்தாள். “ஐயோ! எவளோ சொன்னாள்னு உங்களை பேசிட்டேனே...என்னை மன்னிச்சிடுங்க” என்று அழுதாள் மாலா! டாக்டர் தேற்றினார். ”அண்ணி பாப்பாக்கு ஒண்ணுமில்லை, 
கவலைப்படாதீங்க! என்றாள் ப்ரியா! பக்கத்து அறையில் கால்முறிந்த டிரைவரை பார்க்க, ஐயோ என்று ஓடிவந்தாள் நர்ஸ் விமலா! தன்வினை தன்னைச் சுடும்! சந்தேகக்கோடு அது சந்தோசக் கேடு! இரண்டு கருத்து சொல்லியாச்சு! உங்களிடமிருந்து விடை பெறுகிறான் மயில்ராவணன்.
                                  

Wednesday, March 10, 2010

வெவ்வெவ்வே

                                                         -மயில்ராவணன்
“ரஞ்சிதாவுக்குத் தான் காதல்ங்ற விசயமே பிடிக்காதுன்னு தெரியும்ல பார்வதி.நீ ஏன் அவகிட்ட திரும்ப திரும்ப அதைப்பத்தியே பேசிக்கிட்டுருக்கே? பார் அழறா பார்..அழாத ரஞ்சிதாக் கண்ணு....அவளை அடிச்சுடலாம்..? என்று நான் “ரஞ்சிதாவின் முதுகைத் தொட்டேன்.

“நீ ஏண்டி சுகந்தி அவளை தேற்றிட்டு இருக்கே? பெருசா காலேஜ் வந்து BA எடுத்துட்டா...முதல் வருஷமே இவளை நாம வீட்டுக்கு அனுப்பி இருக்கனும்.நம்ம ரூம்ல இந்த சாமியார் சனியனை ஹாஸ்டல் வார்டன் குண்டம்மா போட்டு உட்டுட்டா!
எந்நேரமும் சாமிபடத்துக்கு ஊதுபத்தி, சூடம் காட்டிட்டு...
போகச்சொல்லு சுகந்தி அவளை ஏதாச்சும் சாமிமடத்துக்கு” என்று கத்தினாள் பார்வதி.

“நீ பேசாம இருடி பார்வதி..ரூம்க்கு இவளை மாதிரியும் ஒருத்தி வேணும். உனக்கு விசயம் தெரியுமா பார்வதி... இன்னிக்கி என் ஆளு மாயாஜால் கூட்டிட்டு போய் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்தான். ’The Queen"ன்னு ஒரு காதல் படம் டயானாவ பத்தி எடுத்தது.கூட்டமே இல்லை..என் ஆளு என் உதட்டை....! என்றபோது ’ஙேஏஏஏஏ’ என்று ரஞ்சிதா ஆரம்பித்தாள். காதுகளைப் பொத்திக் கொண்டாள்.தலையணையை தூக்கி பார்வதி மீது வீசினாள்.


”முழுசா கேளு ரஞ்சிதா...ஙேங்ஙேன்னா விட்டுடுவமா? “
        “ஐ அப்புறம் என்னாச்சு சுகந்தி?” என்று கிட்டே வந்தாள் பார்வதி.
        “அந்த உதடுகள் இருக்கே....யப்பா” என்று நான் மேலே பார்க்க...
        “கொன்னுட்டேடி ய்யோ அப்புறம்?” என்றாள் பார்வதி..ரஞ்சிதா காதுகளைப் பொத்திக் கொண்டு கட்டிலில் குப்புற சாய்ந்தாள்.


எப்போதும் ரஞ்சிதாவை நாங்கள் இப்படித்தான் செய்வோம்.எங்களுக்கு சினிமா கூட்டிப் போகும் காதலர்களே கிடையாது.சும்மா வேடிக்கைப் பேச்சுதான் ஹாஸ்டல் ரூமில். ரஞ்சிதாவுக்கு விளையாட்டு என்பதே தெரியாது! காதல் என்றோ,ஆண்கள் என்றோ பேசினாலே பிடிப்பதில்லை!அழுது ஆர்ப்பாட்டம் போடுவாள்.


”பாவம் இன்னைக்கு இத்தோட விட்டுடலாமா பார்வது?” என்று கண் அடித்தபடி கேட்டேன்.
”என்னோட ஆள் இன்னிக்கு என்கிட்ட ஈவ்னிங் பண்ணின குறும்பை உன்கிட்ட சொல்லவே இல்லையே...நீ கேளேன்” என்றாள்.
”ஐயோ நான் மாட்டேன் சாமி” என்று கத்திக்கொண்டு காதுகளை பொத்தியபடி ரஞ்சிதாவுக்கு அருகாமையில் குப்புற விழுந்தேன்.
”வெவ்வெவ்வெவ்வெ” என்று என்னைப் பார்த்து பழிப்பு காட்டினாள் பார்வதி.
இதில் பாருங்கள் --
அடுத்த நாள் காலையில் எங்களுக்கு நம்பவே முடியாத செய்தியை பக்கத்து அறைக்காரத் தோழிகள் சொல்லிப் போனார்கள்.பார்வதி அதிர்ச்சியில் சிலை மாதிரி நின்றாள்.எனக்கே விசயம் அப்படித்தான் இருந்தது!
”ரஞ்சிதா வாட்ச்மேன் நித்யானந்தத்தோடு ஓடிப்போய் விட்டாளாம் இரவில்”.

Sunday, March 7, 2010

லண்டன் ராணியும் உலக மக்களின் இளவரசியும்

                                                                       -மயில்ராவணன்

             நம் எல்லோருக்கும் மிகவும் தெரிந்த கதைதான். நமக்கெல்லாம் பரிச்சயமான விஷயங்கள்தான்.ஆனால் அதுவே 
பெரிய இடங்களில் நடக்கும்போது மீடியாவின் வெளிச்சத்தில் 
விழும்போது, முக்கியமாகிப் போய்விடுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


         டோனி ப்ளேர் தான் வெற்றி பெற்று பிரதமரானதை அந்த மகிழ்வான செய்தியை ராணி எலிசபெத்திடம் தெரிவிக்க, அவருடைய பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகிறார். உயர்ந்த 
அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு கூட, அரண்மனையில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி விளக்கப்படுகிறது. இது நாம் நினைப்பது போல சாதாரண “புரோட்டாகால்” அல்ல.

ராணியின் முன்பாக அவரை மண்டியிட்டு கைகளில் முத்தமிட்டு வணங்க வேண்டும். ஒருபோதும் தன்னுடைய முதுகுபுறத்தை அவர்களுக்கு தெரியுமாறு நிற்க கூடாது. மேலும் அம்மா எனும் பொருள்படி அழைக்காமல் மேடம் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாட்டுகளுடன் அனுமதிக்கப்படுகிறார். 

இந்தக் காட்சிகள் ரொம்ப அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். ராணியின் உதவியாளர் கூறும் சில வரிகள் :
  
                    -- Its not 'mom' as in 'farm'
                   -- It is 'mam' as in 'ham' (hamilton!!)

ராணிக்கும் டோனிக்குமான சிறு உரையாடல்:
                   Tony blair -- I've been elected as a 'Prime minister"
                   Queen     -- you've been elected to work under me
                   Tony blair -- ஈ ன்னு முழித்து சமளித்து ஒருவகையாச் சிரிக்கிறான்.
                   Queen      -- you are customised to say 'yes' Mr.Blair
   
சார்லசுடன் விவாகரத்து பெற்ற நிலையில், டயானா
 பாரீஸில் டோடி ஃபயத்துடன் ஹோட்டலிலிருந்து வெளியேறி பயணிக்கும்போது,பாப்பராஸி என்றழைக்கப்படும் “Gossip” 
ஃபோட்டோகிராபர்களால் துரத்தப்பட்டு, பாலத்தின் தூண்களில் கார் மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார்.


இந்தச் செய்தியை ஜான்வரின் என்ற அந்தரங்க காரியதரிசியின் மூலமாக எலிசபெத் அறிந்து கொள்கிறார். மொத்த குடும்பமும் இது ஏதோ மூன்றாவது குடும்பத்தில் நடந்த சம்பவம் போல, இது தொடர்பான செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்த காலத்தில் டயானா 
இங்கிலாந்தின் முக்கியமான, தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார் என்றால் அது மிகையல்ல. இவருடைய வேல்ஸ் அறக்கட்டளை மூலம் பல்லாயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி வழங்கிக் கொண்டிருந்ததன் மூலம் புகழேணியின் உச்சியில் இருந்தார். சார்லசும், டயானாவும் விவாகரத்து பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்பவர்களும் உண்டு.


அதே நேரத்தில் ஒட்டுமொத்த UKவும் டயானாவின் மறைவுக்கு எலிசபெத்தின் “reaction"ஐ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால் சார்லசுடனான விவாதத்தின் போது,  இது டயானாவின் சொந்த விசயம்,குடும்ப விவகாரம் என்றும் அதில் தன்னுடைய வருத்தம் கலந்த வார்த்தைகளோ, செயலோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், ஆதலால் தமது குடும்பத்தினர் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறிவிட்டு குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றுவிடுகிறார்.


இதனை அறிந்து கொண்ட லண்டனின் முக்கிய நாளிதழ்கள் டயானா விவாகரத்து ஆகியிருந்தாலும் கூட,ஒரு 
காலத்தில் ராணி எலிசபெத்தின் குடும்பத்தின் முக்கிய 
அங்கத்தினராக இருந்த காரணத்தால் நிச்சயம் இதற்கு, பக்கிங்ஹாம் அரண்மனையும், ராணியும் இரங்கலைத் தெரிவிக்க வேண்டுமென சூடாக செய்தி வெளியிட்டு கடிந்து கொள்கின்றன.


இது அப்போதைய பிரதமர் டோனி பிளேருக்கு சவாலான தலைவலியாக உருப்பெற்று 
வருகிறது. இதைத் தொடர்ந்து, ராணியை டெலிபோனில் தொடர்பு அறிக்கை மற்றும் இரங்கலை தெரிவிக்குமாறு கோருகிறார்.ஆனால் எளிதில் இவருக்கு கட்டுப்படாத கோடாலியாக எலிசபெத் வலம் வருகிறார்.

ஆனாலும் தனது விடாமுயற்சியின் மூலமாகவும், இரங்கல் தெரிவிக்கப்படாவிட்டால் மக்கள் மனதில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதன் மூலமாக அவருடைய மனதைக் கரைக்கிறார்.


கடைசியில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து 
தொலைக்காட்சி மூலமாக தனது இரங்கலையும், வருத்ததையும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறார். இதன் மூலம் தன் புகழுக்கு நேரவிருந்த கலங்கத்தை துடைக்கிறார்.


உண்மையில் இந்த சம்பவத்தின் மூலம் வெற்றி பெற்றது அப்போதைய பிரதமர், டோனி பிளேர் தான். தான் ஒரு பிரதமர் என்பதையும் தாண்டி அலட்சியப்படுத்தப் படும்போது அதைக் கண்டுகொள்ளாமல், அருமையான பேச்சுத் திறமை, செயல் திறன் ஆகியவற்றின் மூலம் யாருக்கும் அசையாத பக்கிங்ஹாம் ராணியையே அசைத்த பெருமை இவருக்குத்தான்.


மேலும் இதனால் ஆரம்பத்தில் ஆத்திரம் அடைந்த ராணி பின்னாளில் நடந்தவை அனைத்தும் தனது நன்மைக்குத்தான் என்று உணர்ந்து தோட்டத்தில் டோனி பிளேருடன் நடந்து செல்லும் போது விவரிக்கிறாள்.


அதிகார உணர்வுகளோடு வாழ்ந்த ஒரு மாமியாரையும், உலக மக்களின் நன்மைக்காக வாழ்ந்த மருமகளையும், நாட்டிற்காக தன்னையும் தாழ்த்திக்கொண்டு, ராணிக்காக வாதாடிய ஒரு பிரதமரையும் இந்த படத்தில் மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார் இக்காவியத்தை இயக்கிய ஸ்டீபன் ஃப்ரீயர்ஸ்.


                அடிப்படையில்,டயானாவை வெறுப்பவராக தன்னைக் கட்டிக் கொள்ள முயலும் ராணி(மாமியார்),  உறங்க முடியாமல் இரவில்,தொலைக்காட்சியில், டயானா தொடர்பான செய்திகளை காணும் போதும், காட்டில் தனியாக வளைய வரும் மானை தப்பித்துப் போகும்படி துரத்தும் நேரத்தில் டயானாவை நினைத்துக் கொள்ளும் நேரத்திலும் ‘கல்லுக்குள் ஈரம்’ இருப்பதை உணர்த்துகிறார்.
   
கொஞ்சம் பிசகினாலும் டாகுமெண்டரியாக மாறிவிடக்கூடிய அபாயமான கதையை, திரைக்கதை மூலம் அற்புதமான காவியமாக நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் பீட்டர்மார்கன் மற்றும் இயக்குனர் ஸ்டீபன் ஃப்ரீயர்ஸ்க்கு ஒரு ராயல் ஸல்யூட் அடிக்கலாம் இப்படத்தை நமக்கு தந்ததற்கு. 


வழமைப் போல் இப்படத்தின் மேலதிக விவரம் இங்கே
வழமைப் போல் இப்படத்தின் டிரைலர் இங்கே

 டிஸ்கி:
             பிரிட்டிஷ் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முயல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டியத் திரைக் காவியம்.ராணி எலிசபெத்தாக நடித்திருக்கும் “ஹெலன் மிரென்” அப்பிடியே எலிசபெத்தாகவே வாழ்ந்திருப்பார்.டோனி ப்ளேராக வரும் மைக்கேல் ஷீன் சரியானத் தேர்வு. சார்லசாக வருபவர், ராணியின் கணவர், உதவியாளர்,டோனியின் துணைவி அனைவரும் அப்பிடியே அச்சு அசலாக இருப்பர்,  நம் மனதில் புகுந்து கொள்வர். ரொம்ப நல்ல படம், சுறுக்கி எழுத மனமில்லை. முழுசாப் படிச்சு காமெண்ட் போடுங்க நண்பர்களே.....

Wednesday, March 3, 2010

தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்

குடும்ப வாழ்வின் சூட்சுமங்களை சராசரிகள் மட்டுமே சமாளித்து ஓடுகிறார்கள். இலட்சியவாதிகள், போராளிகள், கொள்கையாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவது குடும்ப 
வாழ்வின் வன்முறையால் தான். எந்த சித்தாந்தத்தையும் மூளையில் வைத்துக் கொண்டு குடும்ப வாழ்வை எளிதாக எதிர்கொள்ள முடியாது.


தோழர் வரதராஜன் அவர்களின் பரிதாபகரமான மரணம் நம்மை சிதறடிக்கிறது. நமக்கு செய்தியாக அவரது மரணம் பலவற்றைச் சொல்கிறது. அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் மனசின் ஆழத்தை நிமிண்டுகின்றன. இந்த அறிவியல் தொழில் நுட்ப காலத்தின் ஒய்யாரமான காலத்தில் வாழ்வதற்கு வெட்கமாய்த்தான் இருக்கிறது. மாற்றங்கள் என்பது இயல்பாய் வரவேண்டும். ஒரு அதிர்வின் மூர்க்கத்தோடு படு செயற்கையாய் நுழைந்து அதுவரை நாம் நம்பிய, கட்டிக்காத்த அத்தனையையும் தூக்கி மிதித்து துவம்சம் செய்து நாம் அண்டி நிற்க கூட வழியில்லாமல் செய்து விடுகிற இந்த நவீன வாழ்வு அச்சம் தருவதாகவே இருக்கிறது.


நிஜங்களை விட நிழல்கள்தான் அருமையானவை என்று நம்மை நம்ப வைக்கிறது. நேரில் பேசுவதை விட இருந்த இடத்தில் இருந்தே கைப்பேசியில் பேசுவது நல்லது என்று நினைக்க வைப்பது போல.நிஜங்களைப் பார்த்தால் வெறுப்பாய் இருக்கிறது.அவை எப்போது வேண்டுமானாலும் எதிர்வினையை துவக்கி விடுமோ என்கிற உள்பயம் இருக்கிறது. இரத்தமும், சதையுமான அதன் சூடு தாங்க முடியாதது போல இருக்கிறது.


நிழல்களின் குளிர்ச்சியில் உறைந்துப் போய்விடலாம்.அதன் ஜாலங்கள் நம்மை ஆக்கிரமித்து மயங்கி மழுங்கடிக்கின்றன. வெயிலில் வேர்வை சிந்தி உழைப்பதை விட,  அமைதியான, சத்தமில்லாத நிழலில் கண்ணை மூடி யோகா செய்வது அனைத்து விடுதலையையும் கொண்டு வந்து சேர்க்கும் போல தோன்றுகின்றது. மழுங்கவும், சில்லிட்டுப் போகவும் ஆசையாய் இருக்கிறது. உலகமயமாக்கல், தனியார் மயமாக்கலின் ஒப்பனைகள் எல்லாம் நமக்கு உபதேசிப்பது பலவீனங்களை மட்டுமே என்பதை அறிந்து கொள்ள முடியாத 
படிக்கு இன்றைய காலத்தின் குரூரம் நம்மீது நம்மீது படிந்து கிடக்கிறது.


இலக்கியம் நமது வாழ்வின் சாரமாய் இருக்கும் அதே வேளையில் நம் வாழ்வை சுடர வைக்கும் தூண்டுகோலும் அதுவேதான். ஆனால் இலக்கியமாய் இயற்கையாய் வாழ எதுவும் அனுமதிப்பதில்லை. இயர்கை உணர்வை இழந்து விட்டுதான் நாம் அனைத்து ஆடம்பரங்களையும் பெற முடியும்.  உறவுகள் சகிப்புத்தன்மை என்கிற சூழலில் மட்டுமே வளரும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அலகாய் துண்டாடப்பட்டிருக்கிறான். யாரையும் யாரும் சகிக்க வேண்டியதில்லை என்பதன் அபாயத்தை யாரும் உணர யாராயில்லை. உணரும்போது தனிமையைத் தவிர வேறு எதுவும் அவர்கள் பக்கம் இல்லை. மரணத்தை வலிந்தேற்பது ஒன்றைத் தவிர.


ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது துணைவியின் துணைவி உள்பட அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது. தமிழின் ஆதிகால உணர்வும் கூட. உளவியல் சிக்கல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன.  இது மாசுகளின் காலம். நீர் மாசு, காற்று மாசு,ஒலிமாசு என்று இயற்கை நமக்களித்த அற்புதங்கள் அனைத்தும் மாசாகிப் போய் நமக்கான 
மயானபரப்பாகிக் கொண்டிருப்பதைப் பற்றிய கவலை நமக்கில்லை. இத்தனை மாசுக்களுக்கும் தாய் மாசு மனமாசு.இம் மனமாசு ஒவ்வொருவர் உள்ளேயும் பெருவடிவெடுத்து நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த பெருவடிவுடன் கூடிக் களிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.

         இதனால் சமூகம் சாக்கடையாகி நாற்றத்தை தூவிக் கொண்டிருக்கிறது.இவற்றிலிருந்து தப்பிக்க நம்மிடம் அபூர்வமான மருந்தொன்று இருக்கிறது. ‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.                                                                                       - சுகன் -