Saturday, June 13, 2009

மோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries


(Journey Makes the change on life) --கோகுல்--


மனிதனுக்கு தான் வாழும் இடத்தை விட பிறரின் கலாச்சாரத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதற்கான முயற்சியின் விளைவாக பல நாடுகளை கண்டறிந்து, குடியேறி , குடிபெயர்ந்து, குடிபெயர்த்து….தன் சந்ததிகளை விட்டுச்செல்வதற்கான ஆசை ஆரம்ப காலம் முதலே இருந்து வந்துள்ளது. அதன் விளைவுதான் இன்றைய அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும்.


வரலாற்றின் கரையில் சிலர் மட்டும் சற்றே பிறழ்ந்து, வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களைப்பற்றிய நிகழ்வுகளையும் சரித்திரம் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வின் பதிவுதான் “மோட்டார் சைக்கிள் டைரிஸ்”. இரு வேறு தளத்தில் வாழும் இரண்டு நன்பர்கள், ஒரு கருத்து மட்டும் இருவருக்கும் பொதுவாக இருக்கிறது, அதுதான் அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவிற்கு தரை வழி போக்குவரத்தை மேற்கொள்வது. ஆசை , கனவு , இலட்சியம் அனைத்தும் உண்டு ஆனால் இலக்கு மட்டும் தெளிவில்லாத பயனம். அது மிக மிக ஆபத்தான கருத்தே என்றாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தோன்றாத இள வயது. ஆசை மட்டும் அதிகம் , முதிர்வு குறைவு. குடும்பத்தின் ஆசியுடன் அந்த பயன நாளும் வந்து விட்டது. இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த “லா பெடரோ” மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாட்டின் மறுபகுதியில் வாழும் காதலிக்கு பரிசளிக்க ஒரு சிறிய நாயும் பயனிக்கிறது. கண்களின் வழியாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை அழகை அள்ளிப்பருகிக் கொண்டு, அருமையான இசையுடன் நமது காதுகளும் பயணம் செய்கிறது.


எப்போதாவது கடந்து போகின்ற விவசாய டிராக்டர்களுக்காக போடப்பட்ட குண்டும் குழியுமான தார்சாலைகளில் தட தடத்து செல்கின்ற மோட்டார் சைக்கிள் உங்கள் நன்பரில் ஒருவனாக ஒட்டிக்கொள்கிறது .பயனம் சிறிது களைப்பைத்தர காதலியின் வீட்டில் ஓய்வு எடுக்கிறது.


ஒரு மனம் பரந்து விரிந்த இந்த உலகைக் காண பறக்கிறது. மற்றொரு மனம் காதலியோடு காதலோடு தங்கி விட சொல்லி புலம்புகிறது. இறுதியில் வென்றது உலகைக் காதலிக்கும் மனம்தான். காதலிக்கு நீச்சல் உடை வாங்க சேகரித்த சில அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையில். சம்பாதிப்பதற்கோ முழு பயிற்சியையும் முடிக்காத மருத்துவ படிப்பு கை கொடுக்காது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் வலிமையான மனது மட்டுமே துனைக்கு வர மீண்டும் வண்டி ஓடத்தொடங்குகிறது.


முழு வீச்சில் செல்லும்போது தோன்றும் முட்டுக்கட்டை போல் வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து ஏற்கனவே பழுதடைந்திருந்த வண்டி மேலும் மோசமாகிறது. ஆற்றங்கரையில் அமைக்கும் கூடாரமும் காற்றில் அடித்துச் செல்ல “ஆஸ்துமாவால்” சீரழிக்கப்பட்ட உடல்நிலை இரவு முழுவதும் சிக்கலாகின்றது. குளிர் அதிகரிக்க அதிகரிக்க குரல் வளையை உடையச் செய்யும் மோசமான் இருமல் பாடாய் படுத்துகிறது. வாழ்வின் இறுதியை பார்த்துவிட்ட மனிதனைபோல் காலையில் மீண்டும் இலட்சியம் துரத்த ஒரு விடுதியில் மது அருந்தும் சகோதரிகளை சரி செய்து, அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஒரு பகலை கழிக்கிறார்கள். இரவு அந்த சகோதரிகளின் வீட்டில் உறங்கி விட்டு, காலையில் கண் விழித்தவர்களின் கண்களில் இனி எப்போதும் பயன்படாத நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் தெரிய, வேறு வழியில்லாமல் அதனை அங்கேயே விட்டு விட்டு, ஒரு நன்பனை இழந்த வலியோடு, இரு நன்பர்களின் பயனம் தொடர்கிறது………


கரடு முரடான காட்டு வழியில் நடந்து வந்தவர்களுக்கு, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொனமையான நாகரிகத்தின் சுவடுகள் நம்பிக்கையூட்டுவதாகவும் , வரலாறு நம்பிக்கை அளிப்பதாகவும் தோன்ற பயனம் தொடர்கிறது. முதலாளிகளிடம் நிலத்தை இழந்த பலர், சுரங்கங்களில் தொழிலாளிகளாக வேலை செய்யும் அவல நிலை கண்டு முதல் முறையாக வாழ்வின் துயரத்தை உணர்ந்து, உண்ண மறந்து உணர்வின்றி பயனம் செய்கிறார்கள். வழியில் கண்ட ஒரு ஏழைத் தம்பதிகளின் குளிரைப்போக்க தனது கம்பளி ஆடையை தானம் செய்து விட்டு, ”ஆஸ்துமா” குளிரில் வருத்த உலகில் வாழ்க்கையை எதிர்கொள்ள மக்கள் படும் அவலத்தின் ஆபத்தை நன்பனை தவிர்த்து தனியே யோசிக்கிறான்.




தட்டுத்தடுமாறி தான் படித்த கல்விக்கேற்ப ஒரு தொழுநோய் மருத்துவமனையின் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் இருவரும். அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டை மீறி, நோயாளிகளுடன் கை குலுக்கி பேசியதற்காக , உணவு மறுக்கப்பட்டு பசியால் வாடும் நிலையில் தொழுநோயாளிகளின் கைகளாலேயே உணவு பரிமாறப்பட்டு இது ஒரு தொற்று நோயல்ல, என்று மனம் வருந்தி பார்க்கும்போது, ஒரு பயணியின் நிழல் மறைந்து ஒரு உண்மையான மனிதாபிமானம் மிக்க டாக்டராக தெரிகிறான். அங்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்க முடியாது, நன்பனோ பயனத்தை தொடர விரும்பாமல், நோயாளிகளுக்கான சேவைப்பிரிவில் பணிபுரிய விரும்பி அந்த சிறிய மருத்துவமனையிலேயே தங்கி விட முடிவு செய்கிறான். . தன் லட்சிய பயணத்தை விட்டு விட முடியாமல் முதல் முறையாக நன்பனை பிரிந்து தனியே பயனம் செய்ய முடிவு செய்கிறான்.


இந்நிலையில், பிரிவுபச்சாரமும், பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரே நாளில் நடக்கிறது. தொழுநோயாளிகள் ஆற்றின் ஒரு புரமும், மருத்துவ பணி விடுதி மறுபுரமும் அமைந்திருக்க, மிக சிறப்பான அவனது சேவையை அனைவரும் புகழ்ந்து பாராட்ட விருந்து நடைபெறுகிறது,


ஆனால் மனம் ஆற்றின் மறுகரையில் ஆடிக்கொண்டிருக்கிறது, அங்கு இவன் மேல் உண்மையான அன்பு கொண்டு, ஆனால் உடனடியாக அதை கொண்டாட முடியாத நோயாளிக்கூட்டம் இரவிலும் உறங்காமல் இவனுக்காக காத்திருக்கிறது. காற்றாட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. காசநோய் வேறு பாடாய் படுத்துகிறது. ஆற்றில் இறங்கினால் ஒன்று காற்றாறு வெள்ளத்தில் சாக வேண்டும், இல்லையேல் நீரின் குளிர்ச்சியால், இருமல் அதிகரித்து, இறக்க வேண்டியதுதான். கடப்பதற்கு படகு காலையில்தான் வரும், அது வரையில் அன்பர்களை காணாமல் இருக்க முடியாது. நன்பனின் எச்சரிக்கையையும் மீறி ஆற்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டான். அமேசான் ஆற்றை அவ்வளவு எளிதாக இரவில் யாரும் நீந்திக்கடந்து விட முடியாது. இருப்பினும், எளிமையானவர்களின் அன்பிற்கு முன்னால் அமேசான் நதியென்ன செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் நீந்த தொடங்கியவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுக்கிறது, கடப்பவனின் இருமல் அதிகரிக்கிறது, இருமலின் ஓசை அலை ஓசையை மீறி கேட்கிறது. அதைவிட இவனைக் கண்டு கொண்ட நோயாளிகளின் பேரொளி காட்டின் நிசப்தத்தை கிழிக்க, ஆம்…அவன் நீந்திக்கடந்தே விட்டான்.


தனது பிறந்த நாளை அவர்களோடு கொண்டாடிவிட்டு, மறுநாள் காலையில் வந்து சேர்ந்த தோணியில் ஏறி பயனம் செய்து, மறுகரை வந்து விட்டவனுக்கு, மனதில் தோன்றியது, ”என் ஒரு மனிதனின் இலட்சிய பயனத்தை விட இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் இலட்சியத்திற்காக இறப்பதே மேல்” என்ற கருத்தோடு, தனது வாழ்வின் இரண்டாம் பாகத்தின் அத்தியாயத்தில் முதல் பக்கத்தை எழுத தொடங்கிவிட்டான்…..


இம்மனிதனின் வரலாறு சில நேரம் கொச்சைப்படுத்தப்படலாம், ஆனாலும் இலட்சியவாதிகளின் வாழ்க்கை மறுக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை தினசரி தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறது என்பதே மறக்க முடியாத உண்மை.