Friday, October 22, 2010

தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு

இராமகாதையின் வாலிவதையிலும்
மகாபாரதக் குருஷேத்திரத்திலும்
‘இராம,’’கிருஷ்ண’ லீலாவினோதம்.


      கோட்சேயின் தொழுதகையிலும்
      மகாத்மாவின் புன்னகையிலும்
      பகவத்கீதையின் முரண்நகை.


சிங்க நாசிச ‘ஸ்வஸ்திகா’விலும்
புண்ய பூமியின் அசோகச்சக்கரத்திலும்
மகாவம்ச புத்தனின் மந்தகாசம்.


      செங்கொடி நீழற் கரடியணைப்பிலும்
      செஞ்சீனத்துப் பெருஞ்சுவரினிலும்
    ‘ஒலிவ’ப் புறாக்கள் சரணாகதி.


‘உதயசூரியன்’ ‘அறிதுயிலி’னும்
‘ஒபமா’த் தமிழரின் காத்திருப்பிலும்
‘பெண்டகன் கழுகி’ன் செட்டை விரிப்பு


      புலிகள் சீருடைத் ‘திருமா போஸிலும்
      மரணவணிகன்முன் ’திருதிரு’ போஸிலும்
      முத்துக்குமாரின் மரணசாசன உயிராயுதம்.


கச்சவிழ்த்திடும் ‘பூதகிமுலைகளும்’
கானல் நீராம் தமிழினத் தலைகளும்
தாய்மடியறியாக் குட்டிகள் அடைக்கலம்


     விடுதலைப்புலிகள் பின்னடைவினிலும்
     வன்னி மண்ணின் மயான அமைதியிலும்
     இந்துமாக்கடலின் மகா மவுனம்.


புகலிட இளைஞர் புலிகள் எதிர்ப்பிலும்
‘எங்கடமாக்ஸின்’ காந்தியத் தரிப்பிலும்
பின்நவீனத்துவத்தின் கேள்விக்குறி


    லங்காதகன அநுமார் வாலிலும்
   ‘ஸாம்மா’வின் சூத்திர நூலிலும்
    வெளித்தெரிவது பனிப்பாறை நுனி.


‘செம்மொழி கொண்டான்’ செங்கோலினிலும்
அரசவைக் கவிஞர் மெய்க்கீர்த்திகளிலும்
தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு.
                                                     - பொதிகைச் சித்தர்



நன்றி: சுந்தரசுகன்