Monday, April 26, 2010

யதார்த்த சினிமாக்களின் வருகை

                                                                 வா.மு.கோமு   
                ஒரு விஜய்யோ ஒரு அஜித்தோ அல்லங்கேல் ஒரு 
சிம்புவோ ஒரு தனுஷ்ஷோ, இன்னும் சில தோக்களோ, 
வோக்களோ சோக்களோ நடிக்கவே முடியாத நடித்தாலும் குப்பையாய் போய் விடக்கூடிய யதார்த்த படங்களின் வரவு தமிழ்சினிமாவை பிரம்மாண்டங்களில் இருந்து மீட்டு வளர்த்தெடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது தான். பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிரமணியபுரம், வைகை என்று மிக மெதுவாய் காலடி வைத்த இந்தப் போக்கு இன்னமும் மந்த நிலையில் தான் நுழைகின்றன என்று சொன்னாலும் அது மிகையாகாது.


யதார்த்தப் படங்களில் கிராபிக்ஸ் கலக்கல்கள் தேவையில்லை. செலவீனங்கள் குறைவு. நகரங்களில் முப்பது நாட்கள் ஓடினாலே வெற்றி. நான் கடவுள் தோற்றுப் போனதற்கு காரணம் அதன் நாயக பிம்பம் தான். அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது எம்ஜிஆர் பார்முலா. எப்பேர்பட்ட விஷப்பூச்சியாக இருந்தாலும், அது வெளிக்கிரக ஜந்துவாக இருந்தாலும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாத சமாச்சாரம் அல்ல என்பது அங்கிலத் திரைப்படங்களின் பார்முலா.
                                                           
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு இன்று கிம்கிடுக் என்கிற கொரிய மொழி இயக்குனரின் படங்கள்தான் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரின் படங்கள் கொரியாவில் மூன்று நாட்கள் தான் ஓடும் என்பது அதைவிட ஆச்சரியம். எனது வாலன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.மொழி புரியாத படங்களை பார்பதில் தான் அவனுக்கு ஆர்வம்.’தி வே ஹோம்’லிருந்து ‘இன்னோசண்ட் வாய்சஸ்’ வரை பார்க்கிறான்.இரவு பனிரெண்டு மணி என்றாலும் தூங்காமல் பார்ப்பவனுக்கு தமிழ்படம் புதுசு என்று பார்க்கச் சொன்னால் ‘போப்பா’ என்று தூங்கச் சென்றுவிடுகிறான்.அந்த திருநீறு பூசாத கிறுஸ்துவ பையன் விஜய் நடித்த படம் சன் டீவியில் டமீர் டுமீர் என்று விளம்பரம் ஓடுவதால் அந்தப் பையனின் படம் என்றால் அரை மணிநேரம் பார்ப்பான்...பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று எட்டிப் பார்த்தால் தூங்கியிருப்பான்.நல்ல விமர்சனம்.


அண்ணா நீ எழுதுற மாதிரிதான் அங்காடித் தெருவுல கதாநாயகி பேசினாள் என்றான் தம்பி. இதென்றா வம்பு?’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா! ’ஏலே தம்பி என்னலே சொல்றே? அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு? ஏ நடவே சட்டுனு போயி அந்தப் படத்தைப் பார்ப்போம்”, என்று முதலாக பெண்டிங் வைத்திருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படம் பார்த்தேன்.
                                                                                   
படம் ஓடத்துவங்கிய ஆரம்ப காட்சிகளிலேயே பழைய நினைவுகளை அது கிளறிவிட்டது!     வாய்பபாடியில் நான் தோல் பொம்மையாட்டத்தை பார்த்த காலம் 1978. ராமாயணம் தான். ராமன்,  லெட்சுமணன் இருவரும் விடும் அம்புகள் எதிராளிகளின் நெஞ்சில் பாய்கின்றன. டக்கு டக்கு, டக்கு டக்கு டக். இரண்டு மரக்கட்டைகளை அடித்து ஒலி எழுப்புவது.அனுமன் இலங்கை நோக்கி வானில் பறக்கையில் பிண்ணனி நீலம், சிவப்பு,மஞ்சள் பல்புகள் மாறி மாறி ஒளிவிடுகின்றன. ஒளி நின்று வழக்கமான வெள்ளி நிற ஒளி வந்ததும் அனுமன் இலங்கையில் நிற்பான். அனுமனுக்காகவும் , ராமன், லட்சுமணன்,ராவணனுக்காகவும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஒரே ஆள்.


பள்ளிக்கூடம் சென்று வந்ததும் பொறுப்பாய் படிப்பு. ஏழு முப்பதிற்கு ரெக்கார்டு போட்டு விடுவார்கள். அப்பாவிடம் சில்லறை வாங்கி ஓட்டம் தான். அதிசயம் ஒருநாளும் கோபித்துக் கொள்ளாமல் ஐம்பது பைசா சொடுத்தார். நண்பர்கள் நாங்கள் மொன்னையன், சொட்டையன் தமாஸ் காட்சிகளுக்காகத்தான் காத்திருப்போம். என் பத்து பைசாவை கொடுடா மொன்னை வக்காலி! தோல் பொம்மலாட்டம் முடியும் வரை மொன்னையனிடம் சொட்டயன் கொடுத்த பத்து பைசாவை வாங்க முடியவில்லை. பத்து நாட்கள் தொடர்ந்து தூக்கம் கெட்டு பார்த்தால் எனக்கு ஆசன வாய் துவாரத்தில் மூன்று நாட்கள் பின்னர் வர்ணம் வர்ணமாக கழிவுகள் வெளியேறியது கூட நடந்தது.


படத்தில் சொன்னது போலவே அந்தக்கலை அழிந்துவிட்டதுதான். ஆனால் புதியனவற்றை வரவேற்கும் நாம் ஒரு கலை சாவதற்காக வருத்தமே படக்கூடாது.ஏலே! நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி! ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே! ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது! மழை வரும் என்று சொன்னார்கள்! அண்ணன்மார் கதையை கூத்து கட்டி ஆடினார்கள்.உள்ளூர் ஆட்கள் கூட படுகள நிகழ்ச்சிக்காக விரதமிருந்து கலந்து கொண்டார்கள்.கூத்து முடிந்த நாள் மழை வந்தது! 


                 கூத்து முடியும் வரை பெண் வேடமிட்ட ஆணுக்கு உள்ளூர் பென்கள் சேலை கட்டி விட்டார்கள்.அவனை நிசமாகவே காதலித்தார்கள்.அவன் கூடவே சிலர் படுத்தார்கள்.அவன் மீது காதலாய் திரிந்தார்கள்.அவனுடன் கூடவே ஊர் ஊராக போகவும் ஆசைப்பாட்டார்கள். கூடவே சென்று வேறு ஊர்பெண்கள் மீது அவன் மையல் கொண்டு விடாமல் இருக்க,தான் மட்டுமே அவனிடம் நொட்டிக் கொள்ள ஆசைப்பட்ட பிசாசுகள் இன்று ஒன்றுமே நடவாதது போல் ஊருக்குள் திரிகின்றன.


தமிழரசி சின்னப்பெண். தோல்பொம்மை கூத்துக்காரப்பெண்.அவள் மீது பிரியமாய்த் திரிகிறான் நாயகன். உள்ளூரிலேயே அவர்கள் தங்கிவிட ஏற்பாடு செய்கிறான். பசங்க படம் வந்தபிறகு தான் இப்படி சிறுவர்களை வைத்து ரீல் நகர்த்தும் வேலையை இயக்குனர்கள் தைரியமாய் செய்கிறார்கள்.கதாநாயகி பாஸாகி பாஸாகி படிக்கிறாள்.நாயகன் பெயில் ஆகிவிடுகிறான். கண்டிப்பாக இதுதான் யதார்த்தம்.ஆனால் இதுவரை நாம் பாஸாகி மெடல் குத்திக் கொள்ளும் நாயகர்களைத் தான் திரையில் பார்த்திருக்கிறோம்.ஸ்டேட் பர்ஸ்ட் என்று வேறு நம் காதில் வாழைப்பூவையே சொருகுவார்கள்.


                  நண்பர்கள் கருத்துப்படி எங்கே நாயகி நைசாக நழுவி விடுவாளோ என்று நாயகன் நாயகியை பலாத் பண்ணி விடுகிறான். அவளின் படிப்பு கெடுகிறது. அவள் அம்மா தூக்கில் தொங்குகிறாள் ... நாயகி மகாராஸ்டிரா போகிறாள்.நாயகன் தேடிப் போகிறான் ... ஐய்யோடா சாமி! போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது! வழக்கம் போல நம்மை நோகடித்து தியேட்டரை விட்டு அனுப்புகிறது!


அடுத்ததாக துணிக்கடை சேல்ஸ்மேன் தான் கதாநாயகன் என்று பலராலும் எழுதப்பட்ட,  
பேசப்பட்ட படம் அங்காடித்தெரு.கிரிக்கெட் ஆடுவதற்காக சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்ட் போல வெட்டி பந்து தயாரித்து ஆடுவது வழக்கமே! திரையில் முதலாக வருகிறது!  அதில் அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பது அடியேனுக்கு தெரியும். வலி உயிர் போய் வரும்.எல்லாம் பந்து வாங்க காசில்லா கொடுமையால் வரும் வினைதான். வாத்தியாரிடமோ, அப்பாவிடமோ பெயில் ஆகி அடிதின்று படித்தால் தான் படிப்பு ஏறும். உள்ளூர் தெருவில் ஒரு கேரக்டர் அடிதின்று வெட்கப்படுகின்றது பெய்ல் ஆகி! நகரம் நோக்கி குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் தனங்களை விட்டு     
                                                      
திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு படையெடுத்து வரும் வெளியூர் ஆட்களின் கதிகள் இப்படித்தான். ஒரே குடோனில் அடைந்து கிடக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கம்பெனியிலேயே வெள்ளை நிற வில்லைகள் கொத்தாய் எடுத்து நீட்டும். ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது! என் தந்தை காக்காய் இப்போது! என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார். 


                   சூர்யா என்கிற நடிகரை ’அயன்’ என்கிற திரைப்படத்தில் கண்டு பிரமித்தேன். என்ன ஒரு குறுகிய வளர்ச்சி! அதை விட பிரமிப்பு தமன்னா! நெஞ்சே நெஞ்சே நீ எங்கே!நானும் அங்கே! பக்கத்திலிருந்த காதலியிடம் சொன்னேன். “ரொம்ப அட்டகாம்டி!” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல! இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம்! என்றாள். ஆனால் ஜீவா தான் செத்துப் போனார். இப்போது ஜீவா இல்லை. சாகலாம் என்று சொன்ன காதலியும் வேறு காதலனைத் தேடிக் கொண்டாள். அனாதையாயாகத் தான் அங்காடித்தெருவை பார்க்க கடவுள் என்னை நிர்பந்தப்படுத்தி விட்டார். ஆனால் அங்காடித்தெருவை காதலியின் துணையின்றி தனியாக பார்ப்பவன் நிச்சயம் பாவம் செய்தவன் தான்.


பேப்பர் செய்தி போல சாலையோரத்தில் 
தூங்கும் மனிதர்கள் மீது டாட்டா சுமோ ஏறிப்போகிறது! நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்படம் விட்டுவைப்பதில்லை! யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள்! சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனை!இவைதான் கேலிக்கூத்து! அங்காடித்தெருவில் முக்கியமான காமெடி இருக்கிறது!அது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும்! அவரது நடிப்பும்!அந்தப் பாடல் அதைவிட தமாஸ்! நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால்? பயங்கரம்தான்!!

Friday, April 23, 2010

மரணம்

இது ஒரு வழிப்பயணம்
தாயின் கருவறையிலிருந்து பூமித்
தாயின்   கருவரை. இது
ஒரு வழி பயணம்!

கைப்பேசி, கணினி
இனி இவன் அறியான் !
பங்குசந்தை, பணவீக்கம்
இனி இவன் கவனியான் !

கனவுகளும் கற்பனைகளும் 
இனி இவன் காணான்!
வாசனைகளையும், வண்ணங்களையும் 
இனி இவன் பிரித்தறியான்!

ஊன் கொடுத்தவரையும், உயிர் கொடுத்தவரையும் 
இனி இவன் பாரான் ;
உறவுகளும் உற்றாரும் 
இனி இவன் எட்டான்; 

பிள்ளையும் பெண்டிரும்
நண்பர்களும்,நலம் விரும்பிகளும்!
யாரோ என்றே 
இவன் இருப்பான் !

மீளா துயலில்.
மிஞ்சிய வாழ்க்கை 
மட்டும். ஒரு 
வழிப்பயனமே!
                                                   - அருள் 

டிஸ்கி :
           என் யூசர் ஐடி, பாஸ்வர்ட்   எல்லாம் காணாமப்போயி 2 மணி நேரம் ஆச்சு!

Wednesday, April 14, 2010

இஷ்கியா- கனவில் இன்பம்

                      நஸ்ருதீன்ஷாவும்(காலூஜா),அர்ஷத்வர்சியும்(பாபன்) கூட்டாளித் திருடர்கள்.இவர்கள் இருவரும் தங்களது உறவினனான முஸ்தாக்கிடம் பொய் சொல்லி,ஏமாற்றி,கட்டி போட்டுவிட்டு பை நிறைய பணத்துடன் தப்பிக்கிறார்கள். இவர்கள் தேடிச் செல்லும் பழைய நண்பன் இறந்ததை அறிந்து சிலநாட்கள் நண்பனின் மனைவி(வித்யாபாலன்) வீட்டில் தங்குகிறார்கள்


.                             
                                                                                
அப்போது ஏற்படும் ஒரு முக்கோண காதல் காவியம்தான்! இந்த இஷ்கியா. கதையின் பெரும்பாலான பகுதி கோரக்பூர் என்ற நேபாள எல்லை கிராமம் ஒன்றிலேயே நகர்கிறது. இருவரும் நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்காகத் தான் வித்யா வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.


அதனைத் தொடர்ந்து உடனடியாக கிளம்ப முயற்சி செய்யும் போது வித்யாபாலன் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கேயே தங்க வைக்க முயற்சி செய்கிறாள். அவளுடைய திட்டப்படி ஒரு ஸ்டீல் ஃபேக்டரி அதிபரிடமிருந்து கடத்தி பணம் பறிப்பதே முக்கியமான விஷயமாகிறது.

இந்நிலையில் காலூஜா காவியக் காதலோடு கிருஷ்ணாவைக் காதலிக்கிறார். பாபனோ மிகைக்காமத்துடன் கிருஷ்ணாவைக் காதலிக்கிறான். முக்கியமாக அந்த இரவில் இரத்தம் கொட்டும் காட்சியும், அதைத் தொடர்ந்த அழுத்தமான காட்சியும், இதனை நமக்கு குறிப்பால் எளிதாக உணர்த்தி விடுகிறது.


இவர்களுடைய மாஸ்டர் பிளானுக்கு கார் ஒன்று தேவையாக இருப்பதால் அதனைத் திருடிக் கொண்டு வர காலூஜா நகரத்திற்கு சென்று வருவதற்கு ஆகும் நேரத்தில் கிருஷ்ணாவிற்கும், பாபனுக்கும் காமம் மலர்ந்து விடுகிறது.
                                                                                    
காவியக் காதலைக் கண்களில் சுமந்தபடி திரும்பி வரும் காலூஜா இருவரின் காம களியாட்டங்களைக் கண்டு மனமுடைந்து வித்யாபாலனிடம் பேச மறுக்கிறான். ஏன் இப்படிச் செய்தாய் என்று கிருஷ்ணாவிடம் பொங்கும் போது, அதைக் கேட்பதற்கு நீ ஒன்றும் என் கணவனில்லை என்ற பதில் மூலம் காலூஜாவின் காதலை நிராகரித்தாலும், தொடர்ந்து வரும் காட்சிகளில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் காண்பித்துக் கொகிறாள்.


கடைசியில் தனது கணவன் இறந்து விடவில்லை என்றும், போலிசில் சரணடைய சொல்லி வற்புறுத்தியதால் தன்னை கொல்ல முயற்சி செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக சொல்லவும், அதனை நம்பாமல் கிருஷ்ணாவைக் கட்டிப்போட்டுவிட்டு தப்ப முயலும்போது, கிருஷ்ணாவின் கணவன் கைகளில் அகப்படுகின்றனர்.
  விஷால் பரத்வாஜ் 


 கைகட்டி இருப்பவர் இயக்குனர் அபிஷேக் ஷோபே      
                                                                 
கடைசியில் பாபனும், காலூஜாவும் கிருஷ்ணாவை அவனது (முதல்) கணவனிடமிருந்து காப்பாற்றி தங்களோடு அழைத்துச் செல்வதாகப் படம் முடிகிறது.


முக்கியமாக நஸ்ருதீன் ஷா கிருஷ்ணாவிடம் பாடல்களில் மூலமாக தனது பிரியத்தை வெளிப்படுத்தும் இடமும், அதற்காக தன்னை இளமையாக்கிக் கொள்ள முயற்சி செய்வதுமான காட்சிகள் ஓவியம் போல வந்து செல்கின்றன.


மேலும் முக்கியமாக கிருஷ்ணாவிற்கும், அவனது கணனனுக்கும் இடையிலான காட்சிகள் அருமை. அப்போது அவன் “சரண்டர்” என்பதை “சிலிண்டர்” என்று உச்சரிப்பதன் காரணம் தெரிய கிளைமாக்ஸ் வரை மர்மம் நீடிக்கிறது. நம் மனதில் ஒளிந்துள்ளவை நம் பேச்சில் வெளிப்படும் என்று உண்மையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 


” Badi Dheere Jali” என்ற பாடலும் “Ab Mujhe Koyi"  என்ற ரேகா பரத்வாஜின் பாடலும், ஒரு கிராமத்துப் பெண்ணின் விரக தாபத்தை மிக அழகாக, விரசமில்லாமல் உணர்த்துகிறது. 


கிருஷ்ணாவைக் கொன்று விடுமாறு காலூஜா செல்லவும் அதற்கு பாபன் ‘உனக்கு காதல் மட்டும்தான், எனக்கு செக்ஸே உண்டு” என்று கூறும் இடத்தில் இயக்குனர் அபிஷேக்கின் திறமை அழகாகத் தெரிகிறது.


பாடல்களைத் தரவிறக்க சுட்டி இங்கே
இப்படத்திற்கான மேலதிக விவரங்கட்கு இங்கே


டிஸ்கி:
-----------
அருமையான திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்கள், இசை ஆகியவற்றின் ஒரு அற்புதமான கூட்டணியே இஷ்கியா. படத்தின் இயக்குனர் அபிஷேக் ஷைபே, இணை இயக்குனரும், இசையமைப்பாளரும், வசனகர்தாவுமாகிய விஷால் பரத்வாஜ், ஒளிஓவியர் மோகனகிருஷ்ணன், பாடலாசிரியர் குல்சார், அழகு தேவதை விதயாபாலன்,நஸ்ருதீன் ஷா, அர்ஷாத் வர்சி அனைவரையும் எவ்வளவு பாரட்டினாலும் தகும்.இந்த படத்தப் பத்தி யோசிச்சா கேபிளாரின் வரிகள் தான் நினைவுக்கு வருது- ”ம்ஹூம்.... எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி படம்..?” Ab Muje Koyi Intezaar Kahan.

Sunday, April 11, 2010

இரவு பதினொரு மணி

மயில்ராவணன்
            சீனிவாசன் நடுத்தர குடும்பத்தின் தலைவன். அவன் குடும்பத்தில் மனைவி வள்ளி,மகன் சந்தோஷ்,மகள் சந்தியா, கடைக்குட்டி ராஜ் என இவனுடன் சேர்த்து மொத்தமாக ஐந்து பேர்.வள்ளி மூன்று குழந்தைகள் பெற்ற தாய் என்று பார்ப்பவர்கள் யாரும் கேட்க முடியாது.

             ஏங்க இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகலை ....மாப்பிள்ளை அமையலையா? என்று தான் கேட்பார்கள். அழகு குன்றாது அப்படி இருக்கும் தாய் தான் வள்ளி.சீனிவாசனின் மாத வருமானம் போதும் போதாததாய்த்தான் வீட்டில் இருந்தது!

            சீனிவாசன் ஒரு நாள் வேலைக்கு செல்லாமல் தலை கனக்கிறது என்று வீடு திரும்பினான். கையில் வள்ளி போட்டுத் தந்திருந்த டிபன் கேரியர் பை. அவன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.மனைவியை நோக்கியே அவன் மனக்குதிரை தாவியபடி இருந்தது!

           ”இன்று எப்படியும் உன்னை கையும் களவுமாக பிடிக்கப் போகிறேன். எனக்குத் தெரியாமல் எவ்வளவு நாளாக இது நடக்கிறது? கட்டின புருசனுக்கு துரோகம் செய்கிறாயா? இவ்வளவு நாள் யார் சொல்லியும் கேட்கலை நான்.என் வள்ளி அப்படி எல்லாம் நடக்க மாட்டாள் என்று நம்பிக்கை தான். ஆனால் நான் தான் முட்டாளாக போய்விட்டேனே...”

             நேற்று நைட் ஷிப்ட் போனதும் டைம்கார்டு(access card) எடுக்க மறந்தாச்சே என்று வீடு திரும்பி வந்தபோது தெருக் கோடியில் இருந்து பார்த்தபோது என் வீட்டில் லைட் எரிவது தெரிந்தது! நான் வந்து கதவை தட்டியதும்...நேரம் கழித்து வந்து கதவைத் திறந்தாள் வள்ளி.இவ்ளோ நேரமா கதவைத் திறக்க? என்று கேட்டதற்கு, கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் அப்படின்னு பொய் சொல்றாள்! என்னை வேறு, இந்நேரத்துல ஏன் திரும்பி வந்தீங்க! அப்படின்னு கேள்வி கேட்கிறாள்? வேலை இல்லையா? அப்படிங்கிறாள்? உள்ளே போய் பார்த்தேன். டைம் கார்டை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தன. யாரும் வந்ததிற்கான அடையாளத்தை சுத்தமாக அழித்து விட்டாளே! இருக்கட்டும்! கையும் களவுமாக நாளை பிடித்து விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு நேற்று வேலைக்கு சென்று விட்டான்.

            மனக்குதிரையை ஓடவிட்டுக் கொண்டே தெருக்கோடிக்கு வந்துவிட்டான் சீனிவாசன்.இன்னும் சமையல் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது! இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது சீனிவாசனுக்கு! வீட்டின் அருகில் பூனை மாதிரி சென்றான். அழகிய புள்ளிமானை பிடிக்க பதுங்கிப் போகும் புலிபோல.

             ஜன்னல் சந்தில் சமையலறையில் எட்டிப்பார்த்தான் சீனிவாசன். உள்ளே வள்ளி இவனுக்கு முதுகு காட்டியபடி அடுப்பில் வேலையாக இருந்தாள். புகை மூட்டமாக இருந்தது! சீனிவாசனுக்கு ஆச்சர்யம். இப்போது தானே எனது டிபனுக்கு சாதம் போட்டு, சாப்பிடவும் வைத்து வேலைக்கு அனுப்பினாள்! இப்போது என்ன செய்கிறாள். நமக்கு தெரியாமல் நான் இல்லாத நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைத்து வயிற்றில் கொட்டிக் கொள்கிறாளோ! குழந்தைகள் வேறு இந்நேரம் தூங்கியிருக்குமே!

             முன்பக்கமாக வந்து கதவைத் தட்டினான். நேற்றைப் போலவே சிறிது நேரம் கழித்துத் தான் கதவு திறந்தாள் வள்ளி.வள்ளி முகத்தில் புகை வாட்டம் தெரிந்தது! கூடவே இன்னும் கணவனைக் கண்ட அதிர்ச்சியும் தெரிந்தது.

              ”வள்ளி என்னது இது! இந்த ராத்திரி நேரத்துல குழந்தைகளை தூங்க வச்சுட்டு களி கிண்டிக்கிட்டு இருந்துருக்கே? ஆசையா இருந்தா நேரத்துலயே செஞ்சு சாப்பிட வேண்டியதுதானே? அதென்ன நான் வேலைக்கு போன பிறகு திருட்டுத்தனமா செய்யறே?” என்றான் சீனிவாசன். வள்ளியின் கண்களில் மளமளவென கண்ணீர் ஊற்றெடுத்தது!

               ”இல்லீங்க....இது ஆசையா இருக்குதுங்கறதுக்காக நான் செய்யலை. நீங்க வேலைக்கு போன அப்புறமா நாங்க தினமும் இதைத்தான் சாப்பிடுறோம்”.

                 ”என்னது? எதுக்காக நாலு பேரும் நான் இல்லாதப்ப சாப்பிடணும்?”

                  ”ஆமாங்க,வேற வழி இல்லை.நீங்களும் முடிஞ்ச அளவு சம்பாதிக்கறீங்க. நான் சந்தோஷ்,சந்தியா ஸ்கூல் பீஸ் கட்டவும்,பால்,மளிகை பணம் கொடுக்கவும் தான் அதை கொடுக்கிறேன்.....அதுக்கே சரியா இருக்குது. பல சமயம் பத்தவே மாட்டேங்குது. அதனாலே செலவைக் குறைக்கத்தான் இப்படி செஞ்சேங்க.எனக்கு வேற வழியும் தெரியலை.என்னை மன்னிச்சிடுங்க”   என்று வள்ளி அழுதாள். சப்தம் கேட்டு குழதைகள் அறைக்குள் கண்ணை தேய்த்துக் கொண்டே எழுந்து வந்தார்கள். “அம்மா பசிக்குதும்மா...இன்னுமா களி செய்யுறே!”    சந்தோஷ் தான் கேட்டான்.
                      
                           இவளைப் போயி சந்தேகப்பட்டோமே!” என்று அவன் மனதில் வேதனை புகுந்தது!சந்தோஷும், சந்தியாவும் வேறு இவர்களை கட்டிக் கொண்டார்கள். மணி இரவு பதினொன்று!

Thursday, April 8, 2010

பொன்.வாசுதேவன்-கணையாழி கவிதைகள்

               பார்வை

தொலைவிலேயே

நோக்கத் தொடங்கியது பார்வை

கோவில் யானையும்

கோபுரமும் மட்டுமே தெரிந்தது

சுவாமியின் உள் அறையை

என்னதான் பூசாரி

வெளிச்சமிட்டு காட்டினாலும்

ஒன்றுமே தெரிவதில்லை இருளில்...

வடிவம் தவிர!

எட்டாத உயரத்திலிருந்த

நான்காவது மாடியின் விளக்கொளி

மிக நன்றாகவே புலப்பட்டது.

தேய்ந்துபோன

பாத்திரங்களின் ஒளி கூட

இன்னமும் மனசில் நிற்கிறது.

எதற்கென என்றில்லாமல்

என்னுடனிருக்கும்

இந்தப் பார்வை என்ன செய்ய? 
                                    - பொன்.வாசுதேவன்

                                       அக்-92 கணையாழி


                  மொழி

உன்னுடன் சேர்ந்து வரும்

அந்த மௌனம் போதுமெனக்கு.

நீ என்னுடன்

பேசவேண்டியது அவசியமில்லை.

எனது பேச்சினைக் கேட்டு

எதையும் வெளிப்படுத்த

வேண்டியதில்லை.

உனது மௌனத்தைத் தவிர.

உனது மௌனம் என்னை

என்றும் மறுத்துப் பேசாது.

உனக்கும் எனக்குமிடையே

என்றும்

கருத்து வேறுபாடுகளில்லை

என்றாலும்

எனது மொழி உனக்கும்

உனது மௌனம் எனக்கும்

என்றும் விளங்கும்

தொடர்பின்றி நான் பேசினாலும்

உன் மௌனம்

கைகட்டி, தலை குனிந்து

நிற்கும் என்னிடம்.

உனக்கும் எனக்குமிடையே

போட்டிகளோ பொறாமைகளோ

ஒரு போதும் இல்லை

நீ உனது மௌனத்தை

கடைபிடிக்கும் வரை!
                    
                           பொன்.வாசுதேவன்
                                 -மே.92.கணையாழி


டிஸ்கி:
       ஆமாம் இப்ப என்ன திடீர்னு ’பப்ளிஷர்’ கவிதைகள்னு கேக்குறீகளா? ரெண்டே காரணந்தேன்
          *  92’ க்கு முன்னாடிலேர்ந்தே ‘கணையாழி’ போன்ற எளக்கிய இதழ்களை வாசிச்சவிங்க தான் நாங்க.
         * கதை, கவிதை, குறுநாவல் எல்லாம் எழுதி முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரம் புக் போடணுமில்ல? :)

Sunday, April 4, 2010

குரக்கடைல் காய்ச்சல்

                                                                     மயில்ராவணன்


                        “என்னதான் முடிவா சொல்றே நாகராஜ்?” என்றான் ரகு. ஏனெனில் ரகுவும் நாகராஜும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஒரே விசயத்தைத்தான் பேசிக் கொண்டேயிருந்தார்கள். சிகரெட் ஒரு பாக்கெட் காலியாகியும் விட்டது. ஒரு சிகரெட் பாக்கெட் என்று எடுத்துக் கொண்டீர்கள் என்றால் பத்து சிகரெட்டுகளை அது உள்வாங்கியிருக்கும். யாருக்கும் தெரியாத விசயத்தை புதிதாகத் தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் நீங்கள் எப்போதுமே சிகரெட்டை பாக்கெட்டாக குடிப்பதேயில்லை. 


                           தோன்றிய போது பெட்டிக்கடையில் ஒன்று மட்டும் வாங்கி அங்கேயே புகைத்து டிச்சில் சுண்டி எறிந்துவிட்டு விடுகிறீர்கள். யார் உங்களிடம் எந்த இன்டர்வியூவில் கேட்டாலும் தைரியமாகச் சொல்லுங்கள். பாக்கெட்டுக்கு பத்தே சிகரெட்டுகள் தான். புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு சுகமானது! புகை பிடிக்காமல் மனிதமூளை வேலை செய்வதில்லை. ரகுவிற்கு அப்படித்தான். புகை ரகுவின் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.


”ப்ளீஸ் ரகு...இந்த விஷயத்தில் நாம் அவசரம் காட்டவே கூடாது! அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும். அது உனக்கே தெரியும்.” என்றான் நாகராஜ்.


”சரி அவசரம் இல்லை.ஆனால் ரெண்டு மாதங்களாக இப்படி நடக்கிறது அப்படின்னு சொல்றே! அவள் பெயர் கோபிகா அப்படிங்கறே! அவளுக்கு கூடவே பிறந்தவர்கள் எத்தனை பேர்?அப்பா அம்மா உயிரோடு இருக்கிறார்களா? இல்லை நரகத்திற்கு சென்றுவிட்டார்களா? இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் கோட்டையில் ஓட்டை விட்டிருக்கிறேயே!” 


”ஆமாம் ரகு!அதைப்பற்றி எல்லாம் நான் யோசிக்கவேயில்லை. என் காதல் என் மூளையை மழுங்கடித்து விட்டது!கண்ணை மங்கலாக்கி விட்டது! காதுகளை கேட்காதவை களாக்கி விட்டது. ஆனா எனக்குள்ள அந்த உணர்ச்சி பத்திக்கிச்சு. கோபிகா என்னோட கையைப் பிடிச்சு தான் கூல்டிரிங்க்ஸ் தருவா, சில்லரை தருவா! அவ அழுத்தலே அவளோட காதலைச் சொல்லும்.அவ சில்லறை தரவேண்டுமென்பதற்காகவே நோட்டாக தான் தினமும் தருவேன்.”


”கங்காகௌரி” படத்துல வர்ற லியோனி மாதிரி கஞ்சப் பேர்வழியை விட மோசமா பைசா விசயத்தில் நடந்து கொள்கிற ஆட்கள் கூட காதல் என்று வந்தபிறகு விட்டுக் கொடுத்து தாராளமான மனசு உடையவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்தோ பரி பாரிதாபம்.


” நாகராஜ், நாளைக்கு உன்கூடவே அந்த சர்பத் கடைக்கு வர்றேன். அவ உன்னைப் பார்த்து நீ சொன்னாப்புல எல்லாம் சிரித்தமாதிரி நடந்துகொண்டாள் என்றால் உடனே உனக்கு ரிசல்ட் தான். இப்போ எனக்கு அவசரமா வேலை இருக்கு ...... நாளை சந்திப்போம்.” என்று கூறிவிட்டு ரகு புறப்பட்டுப் போனான். நாகராஜ் மீண்டும் கனவு உலகுக்கு போனான். கனவில் கோபிகா  குதிரை வண்டி ஒன்றில் டக்டக்டக் என்று குதிரையின் கடிவாள கயிற்றை பிடித்துக் கொண்டு வெள்ளை நிற ஜிகினா உடையில் வந்தாள். நாகராஜ் இரண்டு கைகளையும் உயரே விரித்துப் பிடித்தபடி...


                ராணியின் முகமே....ரசிப்பதில் சுகமே...பூரண நிலவோ....புன்னகை மலரோ... அமுதத்தை குடித்தேன் .....அணைக்கத் துடித்தேன்...... என்று இதழ் விரித்து பாடினான். ஆனால் கனவில் அவதார் நாயகனைப் போல் நீல வர்ணத்தில் காதுகள் நீண்டவைகளாக தனக்கு ஏன் இருந்தன என்று தெரியவில்லை.

அடுத்த நாள்---

குரோம்பேட்டை ஹைஸ்கூல் முன்பாகவிருந்த அந்த சர்பத் கடைக்குள் நண்பர்கள் இருவரும் நுழைந்தார்கள். மதியம் சரியாக பதினொன்று இருக்கும். கடைக்குள் ஈக்கள் தான் பறந்து கொண்டிருந்தன. கோபிகா விசிறி ஒன்றின் உதவியால் அவைகளை விரட்டிக் கொண்டிருந்தாள். நாகராஜை பார்த்ததும் புன்னகை ஒன்றை உதிர்த்தாள். வெண்பற்கள் வரிசையாக பளீரிட்டன! கருவிழிகள் அங்கும் இங்குமாய் சுழன்றன! ரகு அவள் கண்களில் காதல் என்ற விசயத்தை, ஓடுகிறதா? என்று தேடினான்.


          -இன்னைக்கு நேரத்துலயே வந்துட்டீங்க ரகு சார்! ஜோலி முடிஞ்சு போயோ? என்றாள்.


        -இல்லை...கோபிகா... ஒரு ஜோலியா நண்பனோட இந்தப்பக்கமா வந்தேன்.அதான் உன்னையும் பார்த்துட்டு ... ஒரு லெமன் ஜூஸ் அடிச்சுட்டு போலாம்னு வந்தோம்...என்றான் நாகராஜ். பேச்சு தடுமாற்றமாய் வெளிப்பட்டது! காதலில்,தடுமாற்றம் ஆகவே ஆகாது என்று ரகு சொல்கிறான். காதலில் என்றுமே பெண்கள் நேராக சொல்ல மாட்டார்கள் என்று வேறு வகுப்பு எடுக்கிறான். புன்னகையோடு கோபிகா  இரண்டு பூப்போட்ட கண்ணாடி டம்ளர்களில் இருவருக்கும் லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

  ” என்ன கோபிகா கடையில் கூட்டம் இன்று குறைவு போல?” என்றான் நாகராஜ்.  
        ” ஸ்கூல மதியம் விட்டாச்சுன்னா கூட்டமிருக்கும் ”
” அப்ப சும்மா இருக்க போர் அடுக்கும் இல்ல? ”
” போர் எல்லாம் இல்லங்க நாக... இதோ ஒயர்கூடை பின்னிக்கிட்டு இருக்கேன் ... அதுவும் வேலை தான். சாப்பாட்டு கூடை, புத்தக கூடைன்னு டிசைன் டிசைனா போடுவேன். உங்களுக்கு வேணுமா?” என்றவள் எழுந்து வந்து டம்ளர்களை எடுத்துப் போய் கழுவினாள். நாகு இருபது ரூபாய் நோட்டு கொடுத்தான். கோபிகா  கல்லாவில் சில்லறை கொண்டு வந்து நாகராஜ் கைக்குள் அழுத்தித் திணித்து விட்டு புன்னகைத்துச் சென்றாள். 
எந்தா நன்னாயிட்டுண்டோ? என்று சொல்லாமல் சொல்லியது அவள் முகம். ரகு விழிப்படைந்தான்.


” கோபிகா  நீங்க நாகராஜை விரும்புகிறீங்களா?” என்று எடுத்ததுமே குட்டை உடைத்தது போல கேட்டான் ரகு! கோபிகாவிற்கு உடனே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.சுதாரிக்கவே சற்று நிமிடம் ஆனது! ஒரு சின்ன அதிர்ச்சிதான்.

” நான் எதுக்கு நாகராஜ விரும்பணும்? நாகு என்ன அத்தை பையனா? ஏன் நீங்க தப்பா கேட்கிறீங்க? அதுவும் நாகு சார் கேட்கலை. நீங்க கேட்கிறீங்க? “ என்றான்.


             ” இல்ல...அவனுக்கும் கேட்க ஆசைதான். உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னான். நீங்களும் சில்லறையை அவன் கையில அழுத்தி குடுக்கறீங்க..சிரிச்சு பேசுறீங்க...அதான் கேட்டேன் ”.


              ” வியாபாரத்துக்கு லாபம் பாக்கறத்துக்கு தான் நான் கடைவெச்சு இங்க உட்கார்ந்திருக்கேன். புருஷன் பிடிச்சு கட்டிக்கிறதுக்கு இல்லை. நாகு சார் என் கடைக்கு டெய்லி கஸ்டமர். டெய்லியும் வர்றதால நான் சிரிச்சு பேசி பழகுவேன். டெய்லி கஸ்டமர் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா! எல்லார் கூடவும் சிரிச்சுதான் பேசுவேன். முகத்தை கொரங்கு மாதிரி வச்சுட்டு வியாபாரம் செஞ்சா கடைக்கு கூட்டம் வருமா? கையில காசு கொடுத்தா காதல் வந்துருமா? ஒரே அதிசியம் தான் நீங்க பேசுறது! “ என்று கூடை பின்னுவதில் மும்முரமானாள்.


              ரகு ‘சாரி’ கேட்டுவிட்டு எழுந்தான். பின்னையே நாகராஜும் முகத்தை தொங்க வைத்துக் கொண்டு கிளம்பினான். காதல் பின்னே எப்படி வரும்? என்று நாகராஜ் சாகும் காலம் வரை தெரிந்து பொள்ளவே இல்லை. குரக்கடைல் காய்ச்சல் வந்து அதன்பின் ஆறுமாதத்தில் நாகராஜ் செத்துப் போனான். பறவைக் காய்ச்சல், பன்னிக் காய்ச்சல் வரும்போது குரக்கடைல் காய்ச்சல் வராதா என்ன?