Wednesday, July 28, 2010

களவாடிய கனவுகள்

                 முதலில் இப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் பற்றி அரிய விசயங்கள் அறிய
                           நண்பர் ஜெய் வலைப்பூ
                 இப்படத்தின் விமர்சனம் அறிய தேளு கருந்தேளு
         கனவுகளும் திருடப்படலாம். மனிதனது அந்தரங்க விஷயங்கள் கேமராக்களால் மட்டுமல்ல,கனவுகளைத் திருடுபவர்களாலும் நடக்கலாம் என்பதை சற்று கற்பனை கலந்து, ஹாலிவுட் வாசனை தடவி நமது மூளைக்குள் விதைக்கும் முயற்சிதான் இந்த ‘இன்செப்ஷன்’.


         பேராசைகாரர்களின் பேராசையால் கனவுகளுக்குள் புகுந்து அவர்களின் மூளைக்குள் சிந்தனைகளை மாற்றி அமைக்க முடியும் என்பது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், 


                வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அதுவும் சாத்தியம் என்றே நம்ப வேண்டியதாகிறது. கனவுகளுக்குள் பயணிக்கும் லியனார்டோ-டி-காப்ரியோவிற்கு ‘சாய்டோ’ என்பவன் கொடுக்கும் அசைன்மெண்டே இந்த திரைப்படத்தின் கதை.கனவுகளுக்குள் கனவாகி-அந்த கனவாலும் வேறொரு கனவுக்குள் பயணித்து உன்மைகளைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொஞ்சம் பிசகினாலும் குழப்பிவிடக் கூடிய திரைக்கதை.


         நாம் எல்லோருமே ‘பேரடாக்ஸ்’ என்ற சிந்தாந்தத்தை 
அறிந்திருக்கிறோம்.சிலருக்கு கல்லூரிப் பாடமாக கூட இருந்திருக்கிறது. ஒரு பொருள் என்னவாக இருக்க வேண்டுமோ அப்படியில்லாமல், வேறொன்றாக இருக்கும். அதனுள் அமைந்த சிக்கலை விடுவிக்க வேண்டும்.


                இது நிஜ வாழ்வில் ‘Maze' என்ற கட்டமைப்பின் மூலம் எளிமையாக விளக்க முடிகிறது. ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வெகு நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு 'Maze' அமைந்திருந்தார்கள். பயங்கர புதிராக இருக்கும். பல இளம்பெண்கள் வெளியே வர தெரியாமல் உள்ளிருந்து செல்ஃபோனில் அழைத்ததை கண்டிருக்கிறேன்.


      ஆனால் இந்த திரைப்படத்தில் அந்த 'Maze' என்ற கற்பனை கட்டமைப்பை உருவாக்கும் பெண்ணாக Ellen Page நடித்துள்ளார். கனவுகளுக்கு பொதுவாக நிறமில்லை என்பர்.ஆனால் இந்த படமெங்கும் வண்ணமயம்.


       உளவியல் தொடர்பான நூல்களைப் படிப்பவர்களுக்கு இந்த திரைப்படம் கூடுதல் ஆனந்தமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ’சிக்மண்ட் ப்ராய்ட்’ தன் உளவியல் சக்தி மூலமாக “Dreams and their interpretations" என்ற அற்புதமான நூலை நமக்கு வழங்கியுள்ளார். உறங்கும்போது கனவுகள் ஆழ்மனதில் ஏற்படும் எண்ண அலைகள் மட்டுமல்ல அவற்றின் மூலம் நமது வாழ்வில் பல குறுக்கீடுகள் நிகழும் என்பதை இதில் விளக்கியுள்ளார்.


         கனவுக்குள் பெரும்பாலும் கனவுகள் வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும் ஆனாலும் அதையே திரைக்கதையாக்கி இருப்பது சிறப்பான செயல்.


         ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் அருமை.முக்கியமாக Ellenக்கு Leonardo தனது புராஜக்டை விளக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் ஸ்பெசல் எஃபெக்டின் உச்சகட்டம்.Anti Gravity என்பதே கனவின் மிகச்சிறந்த உதாரணம்.எனக்கு கூட பல நேரங்களில் Anti Gravity force ல் பறப்பது போன்று கனவில் தோன்றி இருக்கிறது.அதை திரைப்படத்தில் மிக அருமையாக பயன்படுத்தி உள்ளனர்.


         நிகழ்காலத்தில் நடப்பதை wobbler மூலம் விளக்க முயன்று கடைசியில் அந்த wobbler பயன்படுத்தியே திரைப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருப்பது மிகவும் அருமை. படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கும் போது கனவுகள் வருவது உறுதி.ஆனால் Limboவிற்கும் பேசாமல் விழித்தெழுவது உங்கள் சாய்ஸ்.


         மொத்தத்தில் திரையரங்கில் மட்டுமே காண வேண்டிய மிகச் சிறந்த திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


                        “An Idea. A single idea from the human mind can buid cities. An idea can transform the world and rewrite all the rules which is why i have to steal it."


                 "We can access your mind through your dreams!!"


வழமைபோல் இந்த படம் பற்றிய தகவல்கள் :     புள்ளிவிவரம்
வழமைபோல் இந்த படத்தின் முன்னோட்ட காணொளி சொப்பன வாழ்வில்... 

Monday, July 26, 2010

இது கவிதை- வா.மு.கோமு



அம்மா அவர்தான்
காதல் இளவரசர்
என்று சொன்ன
மகளைப் பார்த்து
தாய் சொன்னாள்
“தள்ளியே நட”
**********************************


இப்படி ஒன்றும்
செய்யாமல்
சும்மா கிடப்பதற்கு
பேசாமல்
காவடியாவது தூக்கலாம்.
***********************************


ஊர் மாரியம்மா
கனவில் வந்து புலம்பினாள்
பூசாரிகிட்ட எடுத்துச் சொல்
நானொருத்தி இங்க
குத்துக்கல்லாட்ட
இருக்கச்சே
சபரிமலைக்கு ஏன் மாலை போட்டேன்னு!
***********************************


தேடி வந்தவன்
திரும்ப போய் விட்டானாம்.
தேடிப் போனவன்
திரும்பி வந்துவிட்டேன்.
************************************


இப்படி பரிகாசமாய்
சிரிப்பது உனக்கு
வேடிக்கையென்றால்
இப்படி பரிகாசமாய்
எழுதுவது
எனக்கு டபுள் வேடிக்கை!
************************************


விடியலின் அழைப்பு கோழியின்
கொக்கரக்கோவில்!
நடந்து போன கொலுசொலி
என் பார்வைக்குத் தப்பி!
ஒரு நிமிரலில்
சாணி வண்டின் பர்ர்ர்ரிடல்!
நிமிடத்தில் வாசலில்
மறைந்த வாலில்லா நாய்!
பல்பொடி காகிதம் காலி!
வேப்பை குச்சியில் காக்கை எச்சம்.
இன்று தீர்வதில்லை இப்பிரச்சனை.
வட்டலில் இட்லி சட்னியுடன்.
அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்!
நாளையே பார்த்துக் கொள்வோம் பல்லை!
**********************************************

Saturday, July 24, 2010

லேசாப் பறக்குது மனசு- சிகப்பு ஊதுபை

                                                                        --மயில்ராவணன்
         சனிக்கிழமை காலங்காத்தால ஒரு குட்டிப் படம் பார்த்தேன். முதல்முறை பார்த்தேன்.ஒன்றும் சிறப்பா இருக்கறாப்ள தெரியல.டிவிடி குடுத்த நண்பன் கோகுல்கிட்ட கேட்டா தனுஷ் மாதிரி ‘அது பார்த்தா புடிக்காது,பாக்க பாக்கத்தான் பிடிக்கும்னு சொன்னார்.என்னடா இதுன்னு ரெண்டு,மூணு தரம் பார்த்தேன்.

   இந்தப் படம் வெளிவந்த காலம், அதில் காட்டப்படும் தெருக்கள்,கடைகள்,சின்ன சின்ன விஷயங்கள் தான் இப்படத்தின் சிறப்பே.ஏனெனில் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டிருக்கிறது அந்நகரம்.இப்படம் ஒரு மிகப்பெரிய பதிவாக விளங்குகிறது. படத்தின் கதை ரொம்ப சிம்பிள்.
        
         படம் ஆரம்பிக்கிறது.சோகம் நிறைந்த மெல்லிய இசை நம் மனசுக்குள் எஸ்.ராமகிருஷ்ணன் வெயிலைப் பற்றி சொல்வது போல் படர்ந்து ஊர்கிறது! ஒரு பொடியன் சிறுபடிகளில் இறங்கி பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறான். போகிற வழியில் ஒரு கொடிக்கம்பத்தில் சிக்கியிருக்கிற ஒரு சிகப்பு நிற பலூனை, கம்பத்தில் ஏறி எடுத்து செல்கிறான்.

       அந்த பலூன் ஒரு நண்பன் போலவே அவன் எங்கெல்லாம் செல்கிறானோ, அதுவும் கூடவே செல்கிறது.ரொம்ப ஒற்றுமையாய் இருக்கின்றனர் இருவரும்.வீட்டில் மட்டும் அவன் பாட்டி(குண்டுப் பெண்) பலூனை உள்ளே அனுமதிக்காது வெளியே தூக்கி எறிகிறார், இருப்பினும் அது சன்னலுக்கு பக்கத்திலேயே காத்திருக்கிறது காதலனைப் போல.

     பள்ளியில் இவன் கூடப் படிப்பவர்கள்,அவன் தெருப் பிள்ளைகள் இந்த பலூனைப் பார்த்து ”இதை எப்படியாவது கைப்பற்றவேண்டும்” என எண்ணுகின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் அவனால் தான் மாணவர்கள் கத்தி கூப்பாடு போடுகின்றனர் என்றெண்ணி அவனை ஒருநாள் முழுவதும் தனியறையில் அடைத்துவிடுகின்றார்.கதாநாயகியை தமிழ்பட கதாநாயகர்கள் காப்பாற்றுவதுபோல் இந்தப் பலூனும் அவரைச் சுற்றி சுற்றி வந்து கதவை திறக்கவைக்கின்றது.

            சில நேரங்களில் இவன் பலூனுடன் நடந்து செல்லும்போது அப்பாவோடு போகும் பையன் அழகிய பறவைகளை (இளைஞிகளைக்!!) கண்டால் ஒரு சிறுபார்வை விடுத்து உடனே தன்னிலைக்கு திரும்புவதுபோல் இந்த பலூனும் ஒரு சின்னபெண் ஊதா நிற பலூனுடன் அவனைக் கடக்கும் போதெல்லாம் பறந்து அருகில் செல்கின்றது, பின் திரும்ப இவனிடமே வருகின்றது.

     இப்படியே நாட்கள் ஓட ஒருநாள் இவனை அவன் தெருப் பையன்கள் ஓடி ஓடி விரட்டி பிடிக்கின்றனர்.எவ்வளவோ போராடுகிறான்.பலூனை பறக்கவிடுகிறான். திரும்ப அவன் கைக்கு அது வந்துவிடுமென்றெண்ணி(அதற்கு முன் பல தடவை பலூனைப் பறக்கவிடுவான், பிற்பாடு தானாக அவன் கைகளில் வந்தடைந்துவிடும் அது!)....ஆனால் அது எதிரிகள் கைகளில் சிக்கி கல்லடிபட்டு, ஓட்டை போடப்பட்டு உயிரிழக்கிறது.நம் இதயமும் கனக்க தொடங்குகிறது.

அழுது ஆர்ப்பாட்டம் பண்னுகிறான் சிறுவன்.இசை இந்த இடத்தில் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது.திடீரென அச்சம்பவம் நடக்கிறது. அந்த ஊரிலுள்ள அனைத்து பலூன்களும் அவனை நோக்கி பறந்து வருகிறது .....கட்டிய இடங்களிலிருந்து அறுத்துகொண்டு.

இது என்ன பெரிய காவியமென்கிறவர்களுக்கு சில தகவல்கள்:

 *  1956 ல் இப்படி ஒரு படம் எடுக்கனும்னு ஒருத்தன் சிந்தித்திருக்கிறான். அவர் இப்படத்தின் தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர் ”ஆல்பர்ட் லெமோரிஸ்”.
         * 40 வயதிற்கு மேல் தான் இவர் இன்னிங்க்ஸே ஆட ஆரம்பிச்சிருக்கார். ஒரு நல்ல ஸ்டில் போட்டோகாரராகவும் , குறும்பட இயக்குனராகவும்தான் ரொம்ப காலம் இருந்திருக்கார்.யாரோ என்னைப் போன்ற நண்பர்கள் சொல்லி தான் திரைத்துறைக்கு வந்திருக்கார்.

          இப்படம் ஒரு அருமையான வரலாற்று ஆவணம்.ஏனெனில் இப்படத்தில் காண்பிக்கப்பட்ட பல விசயங்கள் இப்போது இல்லை. ஏகப்பட்ட விருதுகளையும் குவித்தது இப்படம்.

        இப்படத்தின் தகவல்கள் : ரெட் பலூன்
        முன்னோட்ட கானொளி : ரெட் பலூன்

டிஸ்கி:
    என்னாது எம்.ஜி.ஆர் செத்துட்டாரான்னு கொஞ்சம் பேர் கேக்குறது எம்பட காதுல விழுகுது. இது ரொம்ப காலத்துக்கு முன் எழுதி டிராஃப்ட்ல இருந்துச்சி. சரி வெளியிட்டிருவோமேன்னுதேன்.

Tuesday, July 20, 2010

அடிச்சுவிடு டபுள் விசில் போலாம் ரைட்- சிறுகதைத் தொகுதி

         வா.மு.கோமு தன்னுடைய ‘இறக்கை’ சார்பாக ஒரு சிறுகதை தொகுதியை தயார் செய்து கொண்டிருக்கிறார்.அதென்னங்க அதுன்னு விசாரிச்சதுல கிடைத்த தகவல்கள்:

   தான் நடத்திய ‘இறக்கை’ சிற்றிதழின் 53வது இதழ் பாலியல் சிறுகதைகள் அடங்கிய சிறப்பிதழாக வர இருக்கின்றதாம்.’உயிர்மை’ வெளியிடுகின்றதாம். யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் அல்லது எழுதப்போகிறார்கள்-

   ஜ்யோவ்ராம் சுந்தர்
   கேபிள் சங்கர்
   வா.மு.கோமு
   ஷாராஜ்   
   ஜாகீர்ராஜா 
   லட்சுமி சரவணக்குமார்
   இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
   கவியோவியத் தமிழன்
   பாக்கியம் சங்கர்
   ஓவியர் செந்தில்குமார்
   ஆலங்கரை பைரவி
   சிவக்குமார்.முத்தையா
   இரா.எட்வின்
   சிநேகிதன்
   விஜய் மகேந்திரன்
   பேரெழில் குமரன்
   செல்மா ப்ரியதர்சன்
   ஹாலிவுட் பாலா

           இன்னும் தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளும் உண்டு என்கிறார் கோமு.

        “அடிச்சுவிடு டபுள் விசில்....போலாம் ரைட்...” ????- ஒருவேளை கதைத்தொகுப்பின் பெயராக இருக்கலாமோ?

      மேற்கொண்டு விவரங்கள் வேண்டின் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கைப்பேசி எண்: 9865442435 - கோமு

Monday, July 5, 2010

எழுத்து- கவிதைகள் இரண்டு

            பயணம்


  பயணம் புறப்பட்டு
  பாதி வழி வந்தால்,
  உட்கார நிழலில்லை,
  ஓய்வற்ற வழி,நடை.
  அடுத்தவன் நிழலை
  அண்டினால் அபாயம்,
  எனது நிழலோ
  எனக்கும் பின்னால்,
  மரத்தின் நிழலோ
  நெடுந் தொலைவில்;
  நிற்கவா, ஓடவா?
  நெருப்புக் கொதியில்
  என்ன அமைதி?
  தூரத்தில் தெரியும்
  கானல் நீரை
  நம்பி
  நடக்க முடியுமா?
  செல்லும் பாதை
  சேணெடுந்தூரம்;
  அல்லும் பகலும்
  அடி வைத்தாலும்;
  மீளாப் பயணம்
  முடியுமோ விரைவில்.
              - சுப.கோ.நாராயணசாமி

-----------------------------------------------------------------------------        
             பழம்பெருமை

   குழம்பு மாங்கொட்டை
   குலப்பெருமை பேசிற்று;
   நட்டுவைத்துக்
   காத்திருந்தேன்;
   நெடுமரமும் மரக்கனியும்
   நிழலாச்சு!
   நெளிந்தது
                      - தி.சோ.வேணுகோபாலன்

நன்றி- தாத்தா சி.சு.செல்லப்பா

Sunday, July 4, 2010

நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன்

                              அன்பு, பிரியம் ,சினேகம் ஆகியவற்றுடனும் அவை போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யா சுந்தரராஜனின் கவிதைகள்.அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் லாவண்யாவின் கவிதைகள் இயங்குகின்றன.
                                                                                                                               - கலாப்ரியா


                                கற்காலம்

              இடறிய ஒவ்வொரு கல்லும்
              சொல்லிப் போகின்றது
              ஒரு நூற்றாண்டுக்கான
              தன் கதையை

              புண்ணியம் செய்தது
              ரசனயானது
              பாவம் செய்தது

              தேவதை கல்
             கன்னிக் கல்
             பூக்களால் ஆன கல்

             சொல்லித் தீராதது
             கற்களின் வாழ்க்கை

             எவற்றின் மிச்சமிது
             என்ற என் கேள்விக்கு
             அடுக்கிச் செல்கிறது
             தன் புலம்பல்களை.
-----------------------------------------------------------


                     கவிதை போலும்
 
           காலம் காலமாய் வாழும் அது
          என்றாய் நகைத்திருந்தேன்

          காவியம் போல அது
         என்றாய் புன்னகைத்திருந்தேன்

         பூவிலும் மெல்லியதது அது
         என்றாய் சிறு இதழ் விரித்திருந்தேன்

         சாவிலும் கூடவே வரும் அது
         என்றாய் இறுகிய முகம் கொண்டிருந்தேன்

          இறுதியில் நீ உமிழ்ந்து விட்டு போன
           எச்சில் மிதக்கும் சாக்கடையில் நிலவொன்று
           கலங்கியது எனக்காக.

டிஸ்கி:

        ரொம்ப நாளாச்சு வாங்கி. நேற்று படித்தவுடன் பிடித்து போயின கவிதைகள். ’அகநாழிகை’ வெளியீடு. கண்டிப்பாக வாங்கி படியுங்கள். அருமையான வரிகள்.