Saturday, February 27, 2010

காதல் தேவதை

                                  -மயில்ராவணன்
         அஜித். அதுதான் அவன் பெயர். சினிமா நடிகரை நீங்கள் நினைத்துக் கொண்டால் அது என் தவறல்ல. அஜித் அவன் பெயர். அழகு என்று அவனை இந்தக் கதையில் நான் சொல்லப் போவதில்லை. கறுத்த நிறம். கறுத்த மீசை. ஆனாலும் ஒரு கவர்ச்சி தன்னிடம் இருப்பதாக நம்பிக் கொள்வான். அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள்.அவள் என்ன நிறத்தில் இருக்கிறாள் என்பதை இவன் தான் இன்று நேரில் பார்த்து நமக்கெல்லாம் அவள் அழகானவளா? என்று சொல்லப் 
போகிறான். அவளைப் பார்ப்பதற்காதத்தான் ஹோட்டல் அசோகாவிற்கு வெள்ளை நிற சட்டை நீலவர்ண பாண்ட்டினுள் இன் செய்து பெல்ட் போட்டு, கட் சூ மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

    அஜித்தின் காதலியின் பெயர் ஷில்பா.பெயரே கவர்ச்சியாய் இருக்கிறதல்லவா? ஷில்பாவோடு செல்போனில் தான் கடந்த ஒரு மாதமாக இவனுக்குப் பழக்கம். அவள் தான் முதலில் இவனை கூப்பிட்டது! முருகவேல் சாரா என்றாள். இவன் முருகவேல்இல்லை...அஜித் என்றான். சாரி சார் .......தப்பான நெம்பருக்கு கூப்பிட்டு விட்டேன்.......ஆனா உங்க வாய்ஸ்.......அழகா இருக்கு சார்...என்றதும் தான் இவன் மறக்காமல், உங்கள் வாய்ஸ் குயில் கூவுவது போல இருக்கிறது என்றான்.

           இப்படித்தான் ஆரம்பித்தது!காதல் எப்படி வேண்டுமானாலும் உதயமாகிவிடுமல்லவா? இவர்களுக்கும் உதயமாகிப் பூத்துவிட்டது. ஷில்பா ஷில்பா என்று உருகி வழிந்தான்.உங்களுக்கு எங்கே வேலை? என்றாள். இவன் தன் ஆபிஸ் சொன்னான்.உங்களுக்கு? என்றான். ’வாங்க’ ’போங்க’ என்று பேசுவதை விட்டுவிடுங்கள் அஜித் என்று கொஞ்சினாள். உனக்கு எங்கே வேலை என்றான்.
      
              அசோகா ஹோட்டலில் ரிசப்சனிஷ்டாக வேலையில் இருப்பதாக கூறினாள். சந்திக்க வரவா?பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்றான்.அங்கும் அதே 
நிலைமைதானே!எப்ப வர்றீங்க? என்றாள். ஆபிஸ் முடிந்ததும் என்ன வேலை. ஆறு மணிக்கு வருகிறேன். எந்த இடத்தில் உள்ளது? என்று கேட்டு தெரிந்து கொண்டான். இதோ கிளம்பிவிட்டான் தனது ஹீரோ ஹோண்டா ஸ்பெளண்டரில்!
    ஒரு காதலியை முதன்முதலாக பார்க்கச் செல்பவனுக்கு வழக்கம்போல படபடப்பு இருக்க வேண்டுமே!ஆமாம்.மனசு முழுக்க காதலை சுமந்து கொண்டு சினிமா கதாநாயகன் 
போலவே நகர வீதியில் சென்றான். தமிழ் சினிமாவுக்கு பெரிய துரதிஷ்டமே நம்ம அஜித் அவர்கள் கண்ணில் படாமல் இருப்பது தான். காதல் தேவதையை அவன் சந்தித்ததும் கையும் காலும் ஓடுமா? நமக்கே பதைபதப்பாய்த்தான் இருக்கிறது!

                இதோ ஹோட்டல்! பைக்கை ஓரம் கட்டிவிட்டு கண்ணாடிக் கதவிற்கு உள்ளே பார்த்தவன் அசந்து போனான். ச்சே! ஷில்பாவா? ’விண்ணைத்தாண்டி’ வந்த ஜெசி த்ரிஷாவா? பெரிய மச்சக்காரன் நான்தான்!கடவுளே உனக்கு நன்றி!ரிசப்சனில் இருக்கைகள் காலியாக இருந்தன!
     மூலையில் ஒரு அம்மா அமர்ந்திருந்தது! இவள்தான் பெரிய பேரேடு ஒன்றை விரித்து பேனாவில் கோடு போட்டுக் கொண்டிருப்பாள் போலிருக்கிறது! காவலாளி நீலவர்ண யூனிபார்மில் இவனைப் பார்த்து புன்னகைத்து உள்ளே போகணுமா? சார்? என்றான். 

        இல்லை. நண்பர் வரவேண்டும்,வந்துவிடுவார், என்றவன் தன் செல்போனை எடுத்து ஷில்பாவை கூப்பிட்டான்.ஓரக் கண்ணால் ஷில்பாவைப் பார்த்தான். தன் ஹேண்ட்பேக்கிலிருந்து சந்தோஷமாய் காதுக்கு கொடுத்தாள். இவன் வேண்டுமென்றே சாலையைப் பார்த்து நின்றான்.

- ஹலோ அஜித்...வந்துட்டிங்களா?

        - இல்ல ஷில்பா..வந்துகிட்டே இருக்கேன். இடையில ஒரு நண்பன் காபி ஷாப்புக்கு போயிட்டு போலாம்னு கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்துட்டான்.

        - என்னை விட நண்பர் பெருசாப் போயிட்டாரா? என்றாள் ஷில்பா. இவன் அவளைத் திரும்பி நேரே பார்த்த வண்ணமே பேசினான். அவளும் பேசியபடியே இவன் கண்களைக்
கண்ணாடிக்கு இந்தப் புறம் பார்த்தாள்.

        - சாரி ஷில்பா..நீ தான் எனக்கு முக்கியம், என்றவன் அவள் 
பார்த்த பார்வையின் இன்ப அதிர்ச்சியில் தத்தளித்தான்.

        - நான் முக்கியம் தான..சீக்கிரம் கிளம்பி வாங்க..ரிசப்ஷன் 
காலியா இருக்கு.உங்க கூட ஃப்ரீயாப் பேச டைம் இருக்கு. 

       - அப்படியா..இதோ அவன்ட்ட விடைபெற்றாச்சு.....கிளம்ப வேண்டியதுதான்.

        - ஒரே துடியா துடிச்சுட்டு இருக்கேங்க அஜித். இன்னும் 
எவ்ளோ நேரம் ஆகும்? ’ சிணுங்கிக்கொண்டே கெஞ்சலாய் 
பேசினாள். இவனுக்கு கண்ணாடியை உடைத்து சென்று 
விடலாம் என்றே ஆயிற்று! அவள் இவனை பார்க்கையில்
 உதட்டை கடித்து புன்முறுவல் பூத்தான். திடீரென இவனை 
உற்றுப் பார்த்தவள் போனில் பேசினாள்.

        -  ஐயோ சீக்கிரம் வாங்க அஜித். இங்க என்னால நிற்கவே 
முடியல. எங்க ஹோட்டல் கண்ணாடி கதவுக்கு அந்தப்பக்கம் 
ஒரு கருமன் நின்னுகிட்டு பொறுக்கித்தனமா உதட்டை
கடிக்கிறான்......சேட்டை பண்றான் அஜித்! போன் பேசிகிட்டே 
பந்தா காட்றான் கொரங்கு....அவனும் அவன் மூஞ்சியும் ...
சிம்பன்ஸி பேண்ட் போட்டு இன் பண்ணிக்கிட்டு இருக்கிறதை 
இன்னிக்கித்தான் பார்க்குறேன்...ஐயோ சீக்கிரம் நீங்க வாங்களேன் அஜித்...!


டிஸ்கி:
         எம்புட்டு நாளைக்குதான் படத்துக்கு விமர்சனம் எழுவிக்கிட்டு இருப்பன்னு சொல்லி நாலைந்து புத்தகங்கள் ஃப்ரீயாக் குடுத்து,சிறுகதைகள் எழுது என்று 
தூண்டிய அண்ணன் சிவராமன்க்கு நன்றிகள் பல.

Friday, February 26, 2010

கிரிக்கெட் தொடர்பதிவுமீன்துள்ளிக்கு என்மேல ரொம்ப பாசம். தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டு பெங்களூருக்கு போயிட்டாரு. நன்றி சொல்லிக்கிறேன் .


  

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்:
                  
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
************************************************************************
1.பிடித்த கிரிக்கெட் வீரர்: சச்சின், டோனி

2.பிடிக்காத கிரிக்கெட் வீரர் : ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஜாகிர்கான், மெக்கிராத், டெல்ஸ்டய்ன், ஃப்ளிண்டாஃப்

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீசாந்த், பார்னல், ஸ்டுவர்ட் ப்ராட்,ஹாக்

5.பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஹர்பஜன், முரளிதரன் 

6.பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : ஷேன்வார்னே

7.பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர்: டெண்டுல்கர், பான்டிங்

8.பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர்: ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்

9.பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா,கங்குலி, ஹைடன்

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர்: சயீத் அன்வர்

11. பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ், டி வில்லியர்ஸ்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி, ஆஷிஷ் நெஹ்ரா

13. பிடித்த ஆல்ரவுண்டர் : ராபின் சிங், ஃப்லிண்டாஃப்

14. பிடித்த நடுவர்: சைமண்ட் டாஃபில், பில்லி பைவ்டன்
  

15. பிடிக்காத நடுவர் : ஸ்டீவ் பக்னர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ரவிசாஸ்திரி

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்: டேனி மோரிஸன்

18. பிடித்த அணி: இந்தியா

19. பிடிக்காத அணி : ஆஸ்திரேலியா

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா-ஆஸ்திரேலியா

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே-பங்களாதேஷ்

22. பிடித்த அணி தலைவர் : டோனி

23. பிடிக்காத அணித்தலைவர் : டெண்டுல்கர்

24. பிடித்த போட்டி வகை : ஒரு நாள் ஆட்டம்

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், சேவாக்-காம்பீர்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : தில்சான் - ஜெயசூர்யா

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின்

29. பிடித்த விக்கெட் கீப்பர்: டோனி, கில்கிரிஸ்ட் 
 

டிஸ்கி:
    சின்னபுள்ளயா இருக்கும்போதே குரங்குமடையில கிரிக்கெட் வெளையாண்டவங்க நாங்கெ. இருந்தாலும் துணைக்கு மச்சானை வெச்சுகிட்டு இப்பதிவ எழுதிப்புட்டேன். தொடர் பதிவெழுத யாரையும் கூப்பிடல.

Thursday, February 11, 2010

காதல்- காற்றாய் சுவாசமாய் WindStruck

                                                                              - மயில்ராவணன்

 அணு அணுவாய்ச் சாவதென
முடிவெடுத்தப் பிறகு
காதல் சரியான வழிதான்
                  - அறிவுமதி

கொரியத் திரைப்படங்களைத் தவிர்த்து உலக சினிமாக்களை லிஸ்ட் பண்ணுவது ரொம்பக் கஷ்டம்.முக்கியமாக கடந்த பத்து ஆண்டுகளில் வந்த படங்களை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. தமிழ் சினிமாக்களில் வரும் சில பல காதல் காட்சிகள் இவ்வகைப் படங்களிலிருந்து எடுத்தாளப்பட்டவைதான்!, முக்கியமாக 2001ல் வெளியான ‘My Sassy Girl' (பாக்காதவங்களுக்கு சொர்க்கம் கிடையாது!)

அப்படத்தப் பாத்துட்டு அந்த நாயகியின் நிழற்படத்தை மூன்று மாசம் என் மடிக்கணினியின் 'wallpaper’ ஆக வைத்திருந்தேன்.. அவ்வளவு அழகு!!இயக்குனர் 'Kwak Jae-yong' கொரிய சினிமாவின் குறிப்பிடத் தகுந்த ஒரு ஆளுமை.’Windstruck' படம் ‘My Sassy Girl-2' அப்பிடின்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல முடியாது. சில காட்சி ஒற்றுமைகள் உள, இயக்குனர் அவரே இருபடத்திற்கும்.

கடைசிவரைக்கும் இந்தப் படத்தப் பத்தி சொல்லவே இல்லையே.. சிம்பிள் ஸ்டோரிங்க. கதைநாயகி க்யூஞ்சின்(Jun Ji-hyun) நேர்மையான போலீஸ் அதிகாரி. கதைநாயகன் ம்யூங்வூ-கோ(Jang Hyuk) அப்பாவி இயற்பியல்ஆசிரியர். 

தவறுதலாக இருமுறை நாயகனைக் கைது செய்கிறாள். ஒருதடவை ஜேப்படித் திருடனென்று, மறுமுறை அவன் வீட்டுக்குத் திரும்பும்போது ஒரு ஹேண்ட்பேக் கிடக்கு, என்னடா இதுன்னு பாக்குறான் ‘வேட்டையாடு விளையாடு’கமல் மாதிரி ‘நான் அப்பவே நெனச்சேன்னு’ சொல்லி திரும்ப போலீஸ் ஸ்டேசனுக்கு அழைச்சிட்டு போயிருது அந்தப்பொண்ணு. 

நல்லவேளை ஒரிஜினல் திருடனை அதற்குள் பிடித்து விடுகிறார்கள். அங்கே ஒரு சின்ன சம்பவம் . நாயகியை உள்ளூர் தாதா காவல்நிலையத்தில் வைத்து அறைகிறான்.  நாயகன் தொண்டைத் தண்ணி போகக் கத்தி பெரிய ரவுடியாக நடித்து நாயகியை அவமானப்படுத்துபவனை துப்பாகியைக் காட்டி ஓட வைக்கிறான். அப்பிடியே அவனை விட்டுவிட்டு கிளம்பி போய்விடுகிறாள் நாயகி.

நாயகன் கடுப்பாகி,’ஒரு ஸாரியாவது சொல்லலாம்ல’ எனக்கேட்கிறான்.  அதுக்கு நாயகி ’கொரியால எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஸாரிதான். வேணுமின்னா உன் பேரை ‘ஸாரின்னு’ மாத்திக்க..கூப்பிட முயற்சி பண்றேன்னு ’அலப்பறையைக் குடுக்கிறாப்ள. அதுலப் பாருங்க... அடுத்த காட்சியில கைவிலங்குல பஞ்சும்,நெருப்பும் ஒருநாள் பூரா (அதாங்க. ஹீரோவும், ஹீரோயினும்) ஒண்ணாத் திரியிறாங்க....எதுக்குன்னு தெரிஞ்சிக்க படத்தப் பாருங்க..காதல் பிறந்து விடுகிறது.

இந்தக் காட்சிகள், நாயகி நாயகனின் பள்ளிக்கு போய் மாணவிகளிடம் சிற்றுரை ஆற்றுவது, அதற்கப்புறம் வரும் அனைத்துமே கண்களுக்குக் குளிர்ச்சி..அதுவும் மழையில் ஆடும் டூயட் அருமையான புதுக்கவிதை.

கொஞ்ச நாளுக்கு அப்புறம் நாயகன் ஒரு ஜீப்பில் நம்ம ‘தமிழ்ப்படம்’ சிவா மாதிரி நாயகியுடன் சுற்றுலா செல்கிறான். ஒரு பெரிய மலையின் உச்சிக்கு செல்கின்றனர். இயற்கையை ரசிக்கின்றனர் (நம்புங்கப்பா!). வழக்கம்போல ஒரு விபத்து,நாயகி நாயகனைக் காப்பாற்றுகிறாள். அதன்பின் வரும் காட்சிகள் மனதை பெரிதாக பாதித்ததால் அதை சொல்லி உங்களையும் 
அழுவாசியாக்கப் போவதில்லை.படத்தின் வசனங்களும்,காட்சியமைப்புகளும், பிண்ணனி இசையும்,எடிட்டிங்கும் அவ்வளவு அருமையா இருக்கும்.

அப்புறமென்ன வழமைப் போல அவுட்டோர் சூட்டிங்தான்.வெறும் பாட்டு, காதல்னு இருந்தா படம் எப்புடி?முதல்பாதி முழுவதும் இப்படிப் போக, இரண்டாம் பாதி கொஞ்சம் மனசைக் கனக்க வைக்கும் துயரங்களாகவும், சம்பவங்களாவே வரும்.

ஒருவரின் மீது அளவுகடந்த பாசம் வைத்தோமானால் பின் அவரின் பிரிவு நம்மை எந்தளவு துயரத்தில் ஆழ்த்தும் என்பது இப்படத்தைப் பார்த்தால் விளங்கும். காதலிக்கும், காதலித்த அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காதல்காவியம் தான் இது.
வழமைப்போல் இப்படத்தின் மேலதிக விவரம் இங்கே
வழமைப்போல் இப்படத்தின் டிரைலர் இங்கே

டிஸ்கி:
  காதலனை காற்றோடு ஒப்பிட்டு அவனுக்கு நம் மனதில் ஒரு நீங்கா இடம் கொடுத்த இயக்குனர்க்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.என்ன படத்தப் பார்த்துவிட்டு நானும் வீட்டில இருக்கிற காகிதங்களிலெல்லாம் காத்தாடியும், விமானமும் செய்ய ஆரம்பித்துவிட்டேன். படத்த அப்பிடியே தமிழ்ல ரீமேக்கினாலும் நூறு நாட்கள் ஓடும். காதலர்தினத்துக்கு என்னால முடிஞ்சது இப்பட விமர்சனம்.

Tuesday, February 9, 2010

படிச்சா புரிகின்ற கவிதைகள்......வா.மு.கோமு

அந்தத்துக்கனாங்குருவி மேல்
அளவு கடந்த காதல் எனக்கு.
உன் வீடு உன்மனம் போலவே
அழகானதென நண்பர்கள்
சொல்கிறார்களே...
கூட்டிப் போயேன் என்றேன்.
பின்னொரு நாளில்-
ஜன்னல் வழியே தன்
திருமண அழைப்பிதழை
போட்டுச் சென்றது அது !
இனி குருவி கூடு போனாலென்ன ?
காடு போனாலென்ன ?
காத்திருந்தேன் ஜன்னலில்
அடுத்த குருவிக்காய் !
***************************************************
மங்காங்காட்டு கெணத்துல
தண்ணியில்லாத போது
பக்கத்தூட்டு அம்முணி
வுழுந்தபோது வேடிக்கை
பார்த்தது பதினெட்டு பேரு.
அதே கெணத்துல
அவ புள்ளை சரஸா வுழுந்தப்போ
வேடிக்க பார்த்தது
இரவத்தி அஞ்சு பேரு.
நானு உழுந்தபோது ?
எனக்குத்தா நீச்ச தெரியுமே!
நனைஞ்சு வந்தேன்.
ஏழு பேரு ரோட்டுல பார்த்தாங்க.

***************************************************

கண்ணுக்கு எட்டியது வரை 
கெழக்கால கோடியில
விநாயகர் கல்லு
மேற்கால கோடியில
சரோசா வீடு.
தெக்கால கோடியில
திரும்பிப் பார்க்க முடியல.
வடக்கால கோடியில
ரயில்வே ரோடு
இதையெல்லாம் படுத்துட்டே
வேடிக்கை பார்த்துட்டு நானு.

***************************************************

மாயமுமில்லே !
சிகரெட் நுனி
கோபப்படப் போகிறது.
எங்கே யாராச்சிம்
வத்திப் பெட்டி குடுங்க !

***************************************************

அந்த பூமட்டும்
வாசமடிக்காம இருந்திருந்தா
நா ஏன் அதைப் போயி கிள்ளுறேன் ?
நீ மட்டும் சிரிக்காமப்
போயிருந்தா  நா ஏன் இப்புடி
கவிதை எழுதீட்டு இருக்கோனும்?
இப்புடி எல்லாம் நடக்கலீன்னா
கிரீஸ் கழுவீட்டு...
பிளேட் கழுவீட்டு...
பஞ்சர் ஒட்டீட்டு...
இப்புடி ஏதாவது ஒன்னுதான
பண்ணீட்டு இருப்பேன்!

***************************************************

ஒடக்கானை கல் விட்டெறி
பனைநீர்ச் சட்டிக்கும் கல்விட்டெறி
குரைத்து ஓடும் நாயையும்
விட்டுவிடாதே!-கல்விட்டெறி.
சண்டைக்காரனின் மண்டையை உடை.
பம்மிப் பம்மிப் பின்வாசல் வழி போ.
திருஷ்டி சுற்றும் அம்மாவுகு
அமைதியா குந்தி உட்காரு.
முதுகில் போட்டா ரெண்டு வாங்கிக்க.
கருவாட்டு வத்தக் குழம்போட
கூலு குடிச்சுப் போட்டு
பள்ளியோடத்து புஸ்தவத்த
தலைக்கு கொடுத்து
கால் நீட்டித் தூங்கு !
கனவுல அஞ்சாங்கிளாசு
அம்சா வந்தாலும் வருவா !
கூட்டிட்டு போயி ஒரு பாட்டு பாடு.
அனுபவிடா ராசா !
***************************************************
டிஸ்கி:
இவைகளும் நமது வலைப்பூவுக்காக வா.மு.கோமு இயற்றிய கவிதைகளே..............................

Sunday, February 7, 2010

தஹான் - ஒரு வெள்ளைக் காவியம்

  -மயில்ராவணன்
           This film is a fable with fictitious characters and non-fictitious incidents.
சந்தோஷ் சிவன் என்கிற ஒரு பிரபலமான ஒளிஓவியர் இயக்கி, ஒளிப்பதிவு செய்த ஒரு தனித்துவமானப் படம் ‘தஹான்’. கதை மற்றும் திரைக்கதை மூவர்-சந்தோஷ் சிவன், ரித்தேஷ் மேனன், பால் ஹார்டர்ட். படம் முழுவதுமே காஷ்மீரில் எடுக்கப்பட்டது. ஒரு சிறுவன், சற்று வளர்ந்த சிறுமி,இவர்களின் அம்மா,தாத்தா இவர்களுடன் ஒரு கழுதை, இவர்கள் தான் இப்படம் முழுவதும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை.


தொப்பியணிந்த சிறுவன்(தஹான்) ஒருவன் ‘பீர்பால்’, ’பீர்பால்’ நீ எங்கே தொலைந்தாய்? சூரியன் வேறு மறையத் தொடங்கி விட்டது. உனை எங்கு தேடுவது”, எனக் கத்திக்கொண்டே மலைகள் முழுதும் எதிரொலிக்கும்
குரலினூடே சாலைக்கு வருகிறான். திடீரென மலையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. தாத்தா அவனைப் பிடித்து கண்டித்து அழைத்து செல்கிறார். கழுதையும் கிடைக்கிறது.

கழுதையைத் திட்டிக்கொண்டே வீட்டுக்கு வருகிறான். கழுதை காண்பிக்கும் இடத்தில் ஒரு பறவை இறந்து கிடக்கிறது. அங்கே தாத்தாவிற்கும் பேரனுக்கும் நடைபெறும் உரையாடல் தத்துவமார்த்தமானது. நம் மனமும் படத்துடன் பயணிக்க தயாராகிறது.

பீர்பால் எனப் பெயரிடப்பட்ட கழுதை,சிறுவனுக்கு அவன் தந்தை பரிசாகக் கொடுத்தது. பெரும்பாலான நேரம் அவன் அக்கழுதையோடு தான் செலவு செய்கிறான்.அவன் அப்பா இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஒரு நபர். தாத்தா குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். பல்வேறு கஷ்டங்களுக்கிடையே வாங்கிய கடனனுக்காக மாதா மாதம் வட்டி கொடுத்துக்  கொண்டு வருகிறார்.
இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே.........இதப் போயி உலகசினிமான்னு விமர்சனமா? மக்களே! கொஞ்சம் அமைதி... 


திடீரென தாத்தா இறைவனடி சேர்கிறார்,கடன் வாங்கியவனுக்கு வீட்டில் இருந்த நகை, பணம் ..... எல்லாத்துடன் கழுதையும் சேர்த்து தஹனின் அம்மா கொடுத்துவிட்டு வந்து விடுகிறாள். வீடு திரும்பும் தஹன் அழுது அரற்றுகிறான். எப்படியாவது 
பீர்பாலை மீட்டுக் கொண்டு வரவேண்டி பகீரதப் பிரயத்தனம்(’செந்தமிழ்’) செய்கிறான்.


இதற்கப்புறம் தான் இப்படம் நம்மை அப்பிடியே ஃபெவிக்கால் போட்டு ஒட்ட வைக்குது சீட்டுடன். பீர்பால் அவனைவிட்டுப் பிரிந்தது, அது வேறொருவருக்கு சுபான் தாராக வரும் அனுபம் கெருக்கு விற்கப்படுவது, தஹான் அதைத் தொடர்வது, இத்ரிஸ் பாயின் சந்திப்பு, அனுபம் கெரின் பேரனின் நட்பு, இன்னும் எத்தனையோ சம்பவங்கள். என்னவெல்லாம் நடந்தது? 


பட டைட்டிலில் வரும் அடைமொழி ‘A Boy With A Grenade’ க்கு என்ன அர்த்தம். தஹான் என்ன சிரமங்களை,மனிதர்களைச் சந்திக்கிறான்? படம் சொல்லும் செய்தியென்ன? எல்லாத்துக்கும் விடை படத்தில்..நாமெல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ‘Visual Treat’ தஹான் என்றால் மிகையாகாது. 

காஷ்மீரின் வெள்ளை அழகு நம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. படத்தில் ஊமைத்தாயாக வரும் சரிகா, சுகந்தராக வரும் அனுபம் கெர், ராகுல் போஸ், தஹானாக வரும் Purav Bhandare, அவன் அக்காவாக வரும் அனைவருமே படத்தின் பலம்.


வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே
வழமைபோல் இப்படத்தின் விவரம் இங்கே


டிஸ்கி:
இந்திய மொழிகளிலேயே நிறைய நல்ல படம் இருக்கே? வெளிநாட்டுப் படங்களோடு சேர்த்து இதையெல்லாமும் எழுதுன்னு சொல்லி உறைக்க வைத்த அண்ணன் மணிஜிக்கு நன்றிகள் பல.Friday, February 5, 2010

வா.மு.கோமுவும் இன்னபிற கவிதைகளும்

வா.மு.கோமு தமிழின் ஒரு தவிர்க்கமுடியாத படைப்பாளி. சிறுகதைகளே இவரது பலம், தற்போது நாவலும் கைகூடிவருகிறது. சௌந்தரசுகன் என்ற சிற்றிதழில் மட்டுமே இவரின் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருக்கின்றன. 


மேலும் எனக்கு ‘சௌந்தரசுகன்’ இதழாசிரியர் சுகன் மூலமாகத்தான் வா.மு.கோமு அறிமுகம் தஞ்சைப் ப்ரகாஷ் இவருடைய எழுத்துக்களைப் பற்றி என்னிடத்தில் வியந்து சொல்லி யிருக்கிறார்.


இவர் எழுதி சுகனின் ‘சுகன் பைந்தமிழ் தடாகம்’ வெளியீடாக வந்த ‘அழுவாச்சி வருதுங் சாமி’ இவரது ஆகச் சிறந்தக் கதைகளைக் கொண்டது. இவர் தந்தை கவிஞர். முத்துப்பொருணன் நடத்திய ‘நடுகல்’ சிற்றிதழ்
 இன்று இலக்கிய உலகில் இருக்கும் பல பெரிய தலைகள் உருவாகிட வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.


பின் இவரின் பல சிறுகதைத் தொகுப்புகள் ‘உயிர்மை’ வெளியீடாகவும், ‘உயிரெழுத்து’ வெளியீடாகவும் இன்னும் பல பதிப்பகங்களின் வாயிலாகவும் வெளியானது. இவரின் நாவல் முயற்சிகளும் வெற்றியே. பரவலாக வாசிக்கபடும் கோமு நானறிந்த நல்ல கவிஞனும் கூட.  அகநாழிகை வெளியீடாக வரும் ’எடுறா வண்டிய’ என்னும் நாவலை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் வா.மு.கோமு நமது வலைப்பூவுக்கென இயற்றிய கவிதைகள் உங்களுக்காக.....


பல்லாக்கு குதிரை ஏறி
பவனி வந்த மீனாட்சி
ஒருநாள்-
நடுவீதியில் ஹவாய் இன்றி
என்னெதிரே வந்தால் மட்டும்
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததென்று
சொன்னாலும் சொல்வேன்!
------------------------------------------------------------------------------

நல்ல கவிதை
கெட்ட கவிதை
சும்மா படி கவிதைகளை.
------------------------------------------------------------------------------


விழிக்கவா போகிறேன்? 
போதும் உலுப்பி எழுப்பாதே விடு.
அப்படி என்னதான்
சொல்லப் போகிறாய் 
செத்துப்போன என்னிடம்?
உலுப்பி எழுப்பாதே விடு.
மூன்றாம் நாள் எழுவேன்
அப்புறம் பேசிக் கொள்வோம்.
--------------------------------------------------------------------------------


- யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
 என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
 கழண்டு டேராமேல கெடக்குதுங்க
 எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
 கழண்டுக்காத அளவுக்கு
 இறுக்கி கட்டு ஏசப்பா !
---------------------------------------------------------------------------------


கிணற்றின் உச்சியிலிருந்து
எனது கால்கள்
அந்தரத்தில் குதித்தது.
இதயமெங்கும் பயப்பிரளயம்
தண்ணீரில் விழும் வரை!
“தொபுக்கடீர்”
கிணற்றிலிருந்து மேலே ஏற
படிகளைக் காணோம்!?
பாம்பேறியின் துவாரங்களில்
பாம்பைப்போல் பூரான்கள்,
பூரானின் நெளியல்
பயப் போர்வையாய் மனமெங்கும்.
குஞ்சிலிருந்து கிளம்பிய நீர்
லுங்கியை நனைத்து,பாயையும்.
அம்மாவின் குரல்
விடிந்தபின் இன்றும் ஒலிக்கும்.
கெடைமல்லா!
------------------------------Wednesday, February 3, 2010

அவசியம் கலந்துக்குங்க...

THE MADRAS INSTITUTE OF DEVELOPMENT STUDIES (MIDS)
INVITES YOU FOR A SEMINAR ON:

DEVELOPMENT AND DESTRUCTION ON A WATERWAY:
A Critical Examination Of Transportation And Restoration Projects On The River Cooum

VENUE:    MALCOLM ADISESHIAH AUDITORIUM,
MADRAS INSTITUTE OF DEVELOPMENT STUDIES
79, 2nd MAIN ROAD, GANDHINAGAR, ADYAR, CHENNAI 600020

DATE AND TIME:     FRIDAY 5 FEB 2010,   3.00 TO 5.30 PM.

The last six months have seen the announcement of two major projects, an elevated expressway and a river restoration project, that will transform the physical and social landscape of the Cooum River in Chennai. The four-lane 19-km-long elevated expressway is slated to be built from the Chennai Port to Maduravoyil by the National Highways Authority of India (NHAI) at a cost of Rs.1,655 crore. Part of this expressway will run along the River Cooum, involving complex social, technical and environmental impacts for the interlocked ecologies of this waterway. 

The enormous social costs of this project, in terms of large-scale destruction of homes and livelihoods of urban poor communities residing along the river banks have already become evident, with over 5000 families having been evicted even before the project has received full clearance.  The urban poor have been scapegoated as being responsible for the chronically pathological state of the river, despite officially established evidence that the slums are responsible for less than 1% of its pollution. Procedural, legal and governance problems concerning methods of eviction, resettlement and compensation are also emerging.  Additionally, the environmental implications of this heavy engineering project in an ecologically sensitive area protected by the Coastal Regulation Zone Act have not yet been fully examined.

While these issues are still awaiting full analysis, the Government of Tamilnadu has announced a Restoration Masterplan for the river, the main component of which appears to be the eviction of habitations along the river to make way for parks, greening and beautification, with no clear idea of what it would take to revive the water course.  This model of waterways “development”, involving the construction of elevated corridors and beautification projects, is also being extended to other waterways in the city including the Adyar River and the Buckingham Canal.  Seen together, these two-pronged interventions appear to be part of a strategy for rapid commodification of Chennai’s precious and highly vulnerable waterways.  They are oriented toward transforming the waterways and their environs into high-end real estate for commercial exploitation, posing serious threats to their sustainability and life.

This seminar will critically examine the proposals, procedures and implications of the two major developments along the Cooum River, with a view to developing a more comprehensive and deeper understanding of the issues involved.
Objectives:
1. To develop a comprehensive understanding of issues arising from the two proposed projects slated for the Cooum River.
2. To critically examine the technical, environmental, financial and social costs and implications of these two projects;
3. To examine planning, procedural and governance issues in conceiving and implementing these projects.

Speakers and Topics.

1.      Overview of the projects slated for the Cooum river in the context of transportation and beautification plans for the city.          T.Venkat, Ph.D student, MIDS.
2.      Analysis of policy-making and decision-making processes involved in these projects, in the context of statutory planning procedures.            M.G.Devasahayam, Managing Trustee, SUSTAIN.
3.      Analysis of technical issues in the Feasibility Report of the Port-Maduravoyil Elevated Expressway.        Mr. K.P. Subramaniam, Retd. Professor, Transportation Department, Anna University.
4.      Analysis of the Implications of the Elevated Expressway on the River Flow. Mr. Moorthy Dheenadayalan, Retd. PWD engineer.
5.      Analysis of the Cooum Restoration plan in the light of past experience Mr.T.K.Ramkumar, Advocate and Environmental Activist
6.      Analysis of procedural issues related to governance on the Elevated Expressway project.                 Joshua Jayaseelan, MCCSSS
7.      Legal issues.                  N.L.Rajah, Advocate, Madras High Court
8.      Social issues.                 Beulah Azariah, IWID.
  
FOR MORE DETAILS CONTACT
DR. KAREN COELHO, MIDS.  24412589 EXT 318. MOBILE: 94449 54401.
OR
T.VENKAT. MIDS. MOBILE: 98847 06531.

Monday, February 1, 2010

Shutter 2008 பேயாகவும் ஆவாள் பத்தினி

  -மயில்ராவணன்
கல்யாணமான மறுநாளே புதுமணத் தம்பதி பென் மற்றும் ஜேன்ஷா டோக்கியோவிற்கு பயணிக்கின்றனர். பென் சிறந்த புகைப்படக் கலைஞன். டோக்கியோவில் வேலை கிடைக்கிறது. வீட்டிற்குப் போகும் வழியில் தெரியாத்தனமாக ஒரு இளம்பெண்ணின் மேல் காரை ஏற்றி இறக்கி விடுகிறாள், கார் ஓட்டிய ஜேன்ஷா. கார் தாறுமாறாக ஓடி வழக்கம்போல் ஒரு மரத்தில் மோதி நிற்கிறது. என்னமோ, ஏதோவெனப் பயந்து இறங்கி அப்பெண்னை தேடுகின்றனர், யாரும் இல்லை, ரத்தமும் இல்லை.போலீஸ் வருகிறது.யாரும் அடிபடவில்லை, ஏதோ விலங்காக இருக்கலாம் என்று சொல்லிச் செல்கின்றனர். இருப்பினும் ஜேன் அதே நினைப்பாகப் புலம்பிக் கொண்டு வருகிறாள்.

மறுநாளிலிருந்து ’பென்’ தனது புகைப்பட வேலையைத் தொடங்குகிறான். மனுஷனாவது சும்மாயிருப்பான்,ஆவி விடுமா?! ’பென்’ எடுக்கும் புகைப்படங்களிலெல்லாம் வெவ்வேறு இடங்களில் ஆவியின் தோற்றங்களை நிழல்களாகப் பார்த்ததும்தான் ,’ஆத்தாடி ஆவி நம்மள ஃபாலோ பண்ணுது, கொல்லாம விடாதுபோல’ என முதலில் அவளும் பின் அவனும் உணர்கிறார்கள். அப்புறமென்ன படம் விறுவிறுவென விரைகிறது.


பென் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை, ஆனால் ஜேன்ஷா ‘Spirit Photography’ பற்றி பெரிய ஆராய்ச்சியே நடத்துகிறாள்.கதையை முழுவதும் சொல்லக் கூடாது. டிவிடியில் பாருங்கள்.(நம்ம சோம்பேறித்தனத்த என்னமா சமாளிக்க வேண்டியிருக்கு :D ).இந்தப் படத்தைப் பேய்ப் படம் என்று சொல்வதைக் காட்டிலும் மர்மத்திகில் படம் என்று கூறுவதே சரி. ஏனெனில் படம் போகப் போக நமக்கு நிறைய விசயங்கள் புலப்படும். டோக்கியோவின் கட்டிடங்கள், ரயில்வண்டிகள், குகைகள் இன்னும் பல விசயங்களை அழகாகப் படம்பிடித்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் கூட நிறைய பேருக்கு நண்பர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும் - ஒரு புகைப்படம்-அதன் பின்னால் நிழல் போல் ஒரு ஆவி.எப்படி வந்தது எனத் தெரியவில்லை.ஃபார்வர்ட் செய்யவும், இல்லைனா ரத்தம் கக்கி செத்துப் போய்ருவீங்கோன்னு. நாமெல்லோரும் உடனே டெலிட்டிருப்போம்(என் நண்பர்கள் சிலர் அதன்படி fwd செய்ததும் உண்டு!)ஆனால் இப்படத்தைப் பார்த்தால் அதெல்லாம் உண்மையோன்னு லேசா ஒரு பயம் சில வீரர்களுக்கு வரும். நானும் வீரன்தான்..(நானும் ரவுடிதான்கிறது பழய டயலாக்!)

இயக்குனர் ‘Masayuki Ochiai’ ஜப்பான் திகில் படங்கள் எடுப்பதில் அரசன். ஆங்கிலத்தில் இது இவரின் கன்னி(பேய்)முயற்சி. ஆனாலும் வசூலில் அசத்தல். பேயாய் வரும் ‘Megumi Okina’ நேற்று பூரா தூங்க விடல. ஓய்வறை திரைச்சீலைகளில்லாம் வர்றாங்க. சித்தனாதன் விபூதி பூசிக்கிட்டுதேன் தூங்கினேன். பென்னாக வரும் ‘Joshua Jackson', ஜேனாக வரும் ‘Rachael Taylor’ம் நல்ல சாய்ஸ். ஒலி, ஒளிபதிவுகள், ரீரெக்கார்டிங்கெல்லாம் சொல்லவே வேண்டியதில்லை.


 வழமைபோல் இப்படத்தின் டிரைலர் இங்கே
 வழமைபோல் இப்படத்தின் விவரம் இங்கே
டிஸ்கி:
சிவனேன்னு இருந்த என்னை உசுப்பி விட்டு ராவோடு ராவாகப் பார்க்க வைத்து, விமர்சனம் எழுத வைத்த நண்பர் கைலாஷத்தான் தேடிக்கிட்டு இருக்கிறேன். ‘Polaroid'  காமிராக்களக் கண்டாலேப் பயமாக உள்ளது.