Saturday, December 18, 2010

புதிய வீர்யம் - சாருவின் தேகம்

                தமிழில் இதுவரை ரெண்டே ரெண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டு வந்துள்ளது. ஒன்று அது இன்னொன்று இது, என்று ஒரு பிநவாண்டர் பல வருசங்களுக்கு முன்பாக அறிவித்தார். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தான் துவக்கம். அதன் பின்பாகத்தான் இலக்கியத்தில் இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கூட பொறுப்பான விசயங்கள், பொறுத்துக் கொள்ளக்கூடிய விசயங்கள் என்றே உருவானது.

       சாரு அந்த பிநவாண்டவருக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்தில் இருபத்திநாலு பக்க குற்றிதழ்களில் குசு,கிரிக்கெட் என்று தூள் பறத்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று கூட்டங்களில் தென்பட்ட உருவத்தைக் கண்டு பழமை இலக்கியவாதிகள் மிரண்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்தே சாருவிற்கு காதல் என்பது ஒரு தீராத மோகமாகவே இருந்தது. அழகான யுவதி மீது மோகம் தோன்றுவது இயற்கையானது தான். ஆனால் அது தீராத வேதனை தரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இதுதான் அவருக்கு என்று உணர்கிறேன்.

   வாசகனை தன் கதைப் பரப்பினுள் இழுத்துக் கொண்டு செல்லும் லாவகம் சாருவிற்கு அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே உண்டு.அந்த ஆரம்ப நேரத்தில், தான் தோன்றித்தனமான எழுத்தை இந்த இலக்கிய உலகு அறிந்ததே இல்லை. இதை எல்லாமா எழுதுவார்கள்? யார் இந்த முனியாண்டி என்று இங்கு பேசினார்கள்.

     கட்டுரை வடிவில் அவரது எழுத்தை முதலில் நான் படித்தது ஜேஜே சில குறிப்புகளுக்காக அவர் வெளியிட்ட சிறு நூல்தான். அதில் அவர் ஜே ஜேவை அவர் பிட்டு பிட்டு வைத்திருந்தார். இப்படியான சிறுநூல் கொண்டு வரும் பழக்கம் இன்று வரை அவரை விடவில்லை இந்த நவீண சூழலிலும்.

     வாசிப்புத் தன்மை இல்லாத எழுத்தும் எழுத்தே அல்ல.தமிழில் சூப்பர் என்று இலக்கிய நபர்கள் குறிப்பிடும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. கோவேறு கழுதைகள் என்ற புத்தகத்தை இன்றுவரை பத்து பக்கம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை என்னிடம் கோளாறு என்று பல முக்கிய நாவல்களை எடைக்கு போட்டுவிட்டேன்.சமீபமாக நான் படிப்பது பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,சுஜாதா.(சுஜாதா என்றதும் அவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பு உயிர்மையில் கேட்டு ஒரு வருடமானது நியாபகம் வருகிறது....படிக்க வேண்டும்)

         எனது ”ஆயிரம் சிறகுள்ள காமம்” நாவலை உயிர்மைக்கு கொடுத்த கையோடு மூன்றுமாத காலமாக புத்தகம், எழுத்து என்று யாருடனும் பேசவும் இல்லை, தொடவும் இல்லை. நண்பர்கள், தோழிகள் அனுப்பிய புத்தகங்களும் தொடப்படாமலேயே கிடக்கின்றன. தோழி கீதாஞ்சலி பிரியதர்சினி சாருவின் வெளியீடு விழாவில் பத்தாவது ஆளாக இறங்கிய மறுகணமே என்னை தொடர்பு கொண்டார். ”தேகம்” நாவல் வேண்டுமென கேட்டு கொண்டேன். வாங்கியதும் ”அன்பு நண்பர் வா.மு.கோமுவிற்கு” என்று முதல் பக்கத்தில் எழுதிவிடுங்கள் என்றேன். பார்க்க வாங்கிய நண்பர்களும் என் பெயரை கண்டதும் அவரிடமே திரும்ப தந்துவிட்டதாக கூறினார். ஆனால் எனக்கு வந்து சேர்ந்த புத்தகம் அவர் கையெழுத்திட்ட புத்தகம் அல்ல.
அவசரத்தில் அது அவர் வீட்டிலேயே தங்கிவிட்டதாம். ஓ.கே. அவர் வீட்டில் நுழைந்து யாரும் அதை கேட்ச் செய்து போக முடியாது.

          தமிழில் இதுவரை வந்த நாவல்களை பட்டியலிட்டால் முதலில் தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள்”.அடுத்து இரண்டாவது சாருவின் தேகம்”. மிச்சம் 8 நாவல்களை நான் மேலே போய் சேர்வதற்குள் யாராவது சிலர் எழுதலாம். நிச்சயம் இந்த லிஸ்டில் நான் இல்லை. நாவலே எழுதத் தெரியாதவன் நல்ல நாவலை எப்படி எழுதுவது? சாருவைப் போல சளைக்காமல் எழுதிக் குவித்தால் நானும் தேகம் போல ஒரு நாவலை ஐந்தாறு வருடங்களுக்குள் எழுதலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. சாருவிற்கே இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறதே!

          உயிர்மை பதிப்பகம் துவங்கப்பட்டு வருடங்கள் பல ஆயிற்று. பிரபலங்களை வைத்துக் கொண்டு புத்தக வெளியீடு செய்வது இனியும் தேவையில்லை என்று என் சென்னை நண்பர் அலைபேசியில் கதைத்தார். அட! ஒரு நல்ல வாசகனை புத்தக வெளியீட்டில் உயிர்மை அப்படிச் செய்யும் காலம் வரவேண்டும். ஒரு கூத்தாடிக்கு கூத்தாட்டம் பற்றித்தான் பேசத்தெரியும். பிணவறை காப்பாளனுக்கு பிணங்களின் அழகு பற்றித்தான் பேசத்தெரியும். குப்பி அடிப்பவனுக்கு குப்பி அடிப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றித்தான் பேசத்தெரியும், என்பது போல வாசகனால் தான் புத்தகம் பற்றி பேசமுடியும். சக எழுத்தாளரை பேச வைத்தால் கூட பிரச்சனை வருகிறது. பக்குவம் இல்லாதவர் பக்குவம் இல்லாதவர்களைப் பற்றிப் பேச போக இது தொடர்கிறது.
                                                                              
             சாரு நந்தலாலா என்கிற தமிழ்படத்தை சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று வேடிக்கை காட்டினார். அது சிறந்த 1000 படங்களில் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றுமே புத்திசாலிகள். சகலகலாவல்லவனும், வசந்த மாளிகையும், கரகாட்டக்காரனும் இன்றும் டிவி பொட்டியில் ஓடினால் உட்கார்ந்து விடுவார்கள்.

             ஆரம்பத்திலிருந்தே இளையராஜாவை ஏன் சாரு குற்றம் சொல்கிறார் என்று புரியாமல் இருந்தேன். எனது ரிங்டோன் கூட இளையராஜா குரல்தான்(என்ன என்ன கனவு கண்டாயோ சாமிஈஈஈ) ஆனால் நந்தலாலாவை பார்க்கையில் அது புரிந்து போனது. பாலிமர் சேனல் நிகழ்ச்சியில் இளையராஜா தெளிவாக சொல்லிவிட்டார், தியேட்டரில் இருக்கிறவனுக்காக நான் போட்டது என்று!.

       மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத, சொல்லாத, சொல்லத் தயங்கும் விசயங்களை சொல்வதே சாருவின் எழுத்துக்கள். வதைத்தல், வதைபடுதல் என்கிற விசயத்தை இந்த நாவலின் சாரமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான சித்திரவதைகளை வதைமுகாம்களில் நடப்பதாக நாம் படித்திருக்கிறோம் செய்திகளில் சில உலகப் படங்களிலும் கூட. அடடா! என்று அப்போதைக்கு பேசிவிட்டு நழுவுகிறோம். ஆனால் நாவலில் அவைகள் தான் நம் கண்முன் திரைப்படம் பார்பது போல் நடக்கிறது.

       உயிரினங்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் இல்லாத மனிதனால் இந்த நாவலை எழுத முடியாது அல்லது கடினமான தாக்குதலுக்கு மனதளவிலேனும் பட்ட மனிதனால் நிச்சயமாக எழுத முடியும். நாவலின் முதல் அத்தியாயமே புடுக்கறுபட்ட பன்றி மாதிரி வீறிடுகிறது. பன்றியடித்தல், பீ வாறுதல் என்று முதல் அத்தியாயம் பேசவருகையில் ஏதாவது தலித்திய ஏற்பாடோ என்று மிரண்டேன்.

         மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதே இந்த நாவலின் நோக்கம் என்பதால் அதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நாவல். செலின் தர்மாவிற்கு எழுதிய கவிதைகள், நேஹாவின் கடிதங்கள் எல்லாமே குறைவாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கின்றன.

          உலக நாவல்களில் பேசப்பட்ட நாவல்கள் எல்லாமே குருநாவல் அளாவில்தான் உள்ளன என்பது வாசகர்களுக்கு தெரியும். எதையும் பொட்டில் அடித்தாற்போல் சுருக்கமாக சொல்வதன் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடிகிறது. சாரு திட்டம் போட்டு பொட்டில் அடித்திருக்கிறார். நல்ல நாவல் பற்றி அதிகம் பேசுதல் கூடாது என்று இப்போது நகருகிறேன்.

சாருவிற்கான குறிப்பு:-

          மேற்கொண்டு நீங்கள் எழுதும் நாவல்களிலாவது நீலவர்ணத்தில் அவதார் படத்தில் தோன்றிய கடவுளைப் போல கிருஷ்ணா என்றும், ஆழ்வார் என்றும், சாரு என்றும் கேரக்டர்கள் உள் நுழைவதை தவிர்க்க முயற்சியுங்கள். அவைகள் தொடர்வது சலிப்பை தருகிறது. இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.. நாவல் வேறு தளத்தில் நின்று ஒளிரும். நான் அப்படித்தான் வாசித்தேன்.

நூல் விவரம்:
                        தேகம்
                        சாரு நிவேதிதா
                        உயிர்மை பதிப்பகம்
                        விலை: 90ரூ

Sunday, December 5, 2010

......விளம்பரத்திலுமா?

கமல் செய்வது தவறு, மணிரத்தினம் செய்வது தவறு, சமீபத்தில் மிஷ்கின் செய்வது தவறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வாழ்வில் அன்றாடம் இந்த காப்பி சமாச்சாரம் நடந்து கொண்டிருப்பதை உற்று நோக்கி கொண்டிருப்பதில்லை. அதற்கு நமது கார்பரேட் கம்பெனிகளும் உடந்தையாகவோ, அல்லது அவைகளே இத்தகைய காப்பி வேலையை செய்து கொண்டிருப்பதையோ உணர்வதில்லை. இந்த சினிமாக்காரர்கள் சேர்ப்பதை விட , இத்தகைய காப்பி யால் கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ப்பது அதிகம். போதும் இந்த பூடகப் பேச்சு. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ஷேக்ஸ்பியர் இன் லவ் என்றொரு அற்புதமான திரைப்படம், காதலும் காமமும் பொங்கி வழியும். ஒவ்வொரு காட்சியும், அருமையான வசனத்தாலும், இசையாலும் நிரம்பி வழியும். ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தை நம் கண்முன்னால் ஓட விட்டிருப்பார்கள்.
அந்த திரைப்படத்தை நானும் என் நண்பரும் வீட்டில் பார்த்து கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. அதில் வரும் இசையின் ஒரு சிறு பகுதியை கேட்டபோது, இருவருக்குமே அதை எங்கேயோ கேட்டது போன்ற ஞாபகம். காப்பி அடிப்பதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ரேஞ்சுக்கு கண்டுபிடிக்கும் கருந்தேளுக்கு உடனே ஃபோன் செய்து கேட்டோம். அவர் வேறொரு படத்தை துப்பறியும் வேலையில் பிசியாக இருந்தார். நாங்கள் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டோம்.
கடைசியில் அது ரிலையன்ஸ் விளம்பரத்தில் ஹிருத்திக் ரோஷன் வாசிக்கும் ஃப்ளூட் இசை என்பதை உணர்ந்தோம். டெம்போவை கொஞ்சம் மாற்றி அதே இசையை ஜிங்கிள்ஸாக போட்டு விட்டிருக்கிறார்கள். அந்த ஜிங்கிள்சின் ஸ்டோரி லைன் கூட சிறு வயதில் நாம் படித்த கதைதான். அந்த விளம்பரத்தின் லிங்கையும், ஷேக்ஸ்பியர் இன் லவ் திரைப்படத்தில் அந்த காட்சியையும் இசையுடன் கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் என் கூற்று சரிதானா என்பதை தெளிவு படுத்தினால் தன்யனாவேன்.

இது ஒரிசினல்:)இது தழுவல்(எடுத்தாண்டது) :(ரிலையன்ஸின் விளம்பரத்தை கம்போஸ் செய்தது யார் என்பதும் சரியாக தெரியவில்லை. இரண்டு மணி நேர திரைப்படம் என்றால் சில விநாடிகள் tribute அல்லது thanks கார்ட் போடலாம். சில விநாடிகளுக்கு பல கோடிகளை கொட்டி கொடுக்கும் விளம்பரங்களில் அதை எப்படி போடுவது. சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் போல ஸ்குரோல் போடலாமா? J

டிஸ்கி:
            காப்பி, டீ எல்லாம் எனக்கு பிடிக்கும்தான். நான் பெரிய உத்தமனெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஏதோ எழுதனும்னு தோணிச்சு..... எழுதிப்புட்டேன்.நன்றி.

Friday, December 3, 2010

ஆயிரம் சிறகுள்ள காமம் - வா.மு.கோமு

                                                                          
                                     இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் நான்(ம்) ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’. வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறாந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)