Saturday, December 18, 2010

புதிய வீர்யம் - சாருவின் தேகம்

                தமிழில் இதுவரை ரெண்டே ரெண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டு வந்துள்ளது. ஒன்று அது இன்னொன்று இது, என்று ஒரு பிநவாண்டர் பல வருசங்களுக்கு முன்பாக அறிவித்தார். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தான் துவக்கம். அதன் பின்பாகத்தான் இலக்கியத்தில் இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கூட பொறுப்பான விசயங்கள், பொறுத்துக் கொள்ளக்கூடிய விசயங்கள் என்றே உருவானது.

       சாரு அந்த பிநவாண்டவருக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்தில் இருபத்திநாலு பக்க குற்றிதழ்களில் குசு,கிரிக்கெட் என்று தூள் பறத்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று கூட்டங்களில் தென்பட்ட உருவத்தைக் கண்டு பழமை இலக்கியவாதிகள் மிரண்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்தே சாருவிற்கு காதல் என்பது ஒரு தீராத மோகமாகவே இருந்தது. அழகான யுவதி மீது மோகம் தோன்றுவது இயற்கையானது தான். ஆனால் அது தீராத வேதனை தரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இதுதான் அவருக்கு என்று உணர்கிறேன்.

   வாசகனை தன் கதைப் பரப்பினுள் இழுத்துக் கொண்டு செல்லும் லாவகம் சாருவிற்கு அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே உண்டு.அந்த ஆரம்ப நேரத்தில், தான் தோன்றித்தனமான எழுத்தை இந்த இலக்கிய உலகு அறிந்ததே இல்லை. இதை எல்லாமா எழுதுவார்கள்? யார் இந்த முனியாண்டி என்று இங்கு பேசினார்கள்.

     கட்டுரை வடிவில் அவரது எழுத்தை முதலில் நான் படித்தது ஜேஜே சில குறிப்புகளுக்காக அவர் வெளியிட்ட சிறு நூல்தான். அதில் அவர் ஜே ஜேவை அவர் பிட்டு பிட்டு வைத்திருந்தார். இப்படியான சிறுநூல் கொண்டு வரும் பழக்கம் இன்று வரை அவரை விடவில்லை இந்த நவீண சூழலிலும்.

     வாசிப்புத் தன்மை இல்லாத எழுத்தும் எழுத்தே அல்ல.தமிழில் சூப்பர் என்று இலக்கிய நபர்கள் குறிப்பிடும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. கோவேறு கழுதைகள் என்ற புத்தகத்தை இன்றுவரை பத்து பக்கம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை என்னிடம் கோளாறு என்று பல முக்கிய நாவல்களை எடைக்கு போட்டுவிட்டேன்.சமீபமாக நான் படிப்பது பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,சுஜாதா.(சுஜாதா என்றதும் அவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பு உயிர்மையில் கேட்டு ஒரு வருடமானது நியாபகம் வருகிறது....படிக்க வேண்டும்)

         எனது ”ஆயிரம் சிறகுள்ள காமம்” நாவலை உயிர்மைக்கு கொடுத்த கையோடு மூன்றுமாத காலமாக புத்தகம், எழுத்து என்று யாருடனும் பேசவும் இல்லை, தொடவும் இல்லை. நண்பர்கள், தோழிகள் அனுப்பிய புத்தகங்களும் தொடப்படாமலேயே கிடக்கின்றன. தோழி கீதாஞ்சலி பிரியதர்சினி சாருவின் வெளியீடு விழாவில் பத்தாவது ஆளாக இறங்கிய மறுகணமே என்னை தொடர்பு கொண்டார். ”தேகம்” நாவல் வேண்டுமென கேட்டு கொண்டேன். வாங்கியதும் ”அன்பு நண்பர் வா.மு.கோமுவிற்கு” என்று முதல் பக்கத்தில் எழுதிவிடுங்கள் என்றேன். பார்க்க வாங்கிய நண்பர்களும் என் பெயரை கண்டதும் அவரிடமே திரும்ப தந்துவிட்டதாக கூறினார். ஆனால் எனக்கு வந்து சேர்ந்த புத்தகம் அவர் கையெழுத்திட்ட புத்தகம் அல்ல.
அவசரத்தில் அது அவர் வீட்டிலேயே தங்கிவிட்டதாம். ஓ.கே. அவர் வீட்டில் நுழைந்து யாரும் அதை கேட்ச் செய்து போக முடியாது.

          தமிழில் இதுவரை வந்த நாவல்களை பட்டியலிட்டால் முதலில் தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகள்”.அடுத்து இரண்டாவது சாருவின் தேகம்”. மிச்சம் 8 நாவல்களை நான் மேலே போய் சேர்வதற்குள் யாராவது சிலர் எழுதலாம். நிச்சயம் இந்த லிஸ்டில் நான் இல்லை. நாவலே எழுதத் தெரியாதவன் நல்ல நாவலை எப்படி எழுதுவது? சாருவைப் போல சளைக்காமல் எழுதிக் குவித்தால் நானும் தேகம் போல ஒரு நாவலை ஐந்தாறு வருடங்களுக்குள் எழுதலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. சாருவிற்கே இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறதே!

          உயிர்மை பதிப்பகம் துவங்கப்பட்டு வருடங்கள் பல ஆயிற்று. பிரபலங்களை வைத்துக் கொண்டு புத்தக வெளியீடு செய்வது இனியும் தேவையில்லை என்று என் சென்னை நண்பர் அலைபேசியில் கதைத்தார். அட! ஒரு நல்ல வாசகனை புத்தக வெளியீட்டில் உயிர்மை அப்படிச் செய்யும் காலம் வரவேண்டும். ஒரு கூத்தாடிக்கு கூத்தாட்டம் பற்றித்தான் பேசத்தெரியும். பிணவறை காப்பாளனுக்கு பிணங்களின் அழகு பற்றித்தான் பேசத்தெரியும். குப்பி அடிப்பவனுக்கு குப்பி அடிப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றித்தான் பேசத்தெரியும், என்பது போல வாசகனால் தான் புத்தகம் பற்றி பேசமுடியும். சக எழுத்தாளரை பேச வைத்தால் கூட பிரச்சனை வருகிறது. பக்குவம் இல்லாதவர் பக்குவம் இல்லாதவர்களைப் பற்றிப் பேச போக இது தொடர்கிறது.
                                                                              
             சாரு நந்தலாலா என்கிற தமிழ்படத்தை சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று வேடிக்கை காட்டினார். அது சிறந்த 1000 படங்களில் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றுமே புத்திசாலிகள். சகலகலாவல்லவனும், வசந்த மாளிகையும், கரகாட்டக்காரனும் இன்றும் டிவி பொட்டியில் ஓடினால் உட்கார்ந்து விடுவார்கள்.

             ஆரம்பத்திலிருந்தே இளையராஜாவை ஏன் சாரு குற்றம் சொல்கிறார் என்று புரியாமல் இருந்தேன். எனது ரிங்டோன் கூட இளையராஜா குரல்தான்(என்ன என்ன கனவு கண்டாயோ சாமிஈஈஈ) ஆனால் நந்தலாலாவை பார்க்கையில் அது புரிந்து போனது. பாலிமர் சேனல் நிகழ்ச்சியில் இளையராஜா தெளிவாக சொல்லிவிட்டார், தியேட்டரில் இருக்கிறவனுக்காக நான் போட்டது என்று!.

       மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத, சொல்லாத, சொல்லத் தயங்கும் விசயங்களை சொல்வதே சாருவின் எழுத்துக்கள். வதைத்தல், வதைபடுதல் என்கிற விசயத்தை இந்த நாவலின் சாரமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான சித்திரவதைகளை வதைமுகாம்களில் நடப்பதாக நாம் படித்திருக்கிறோம் செய்திகளில் சில உலகப் படங்களிலும் கூட. அடடா! என்று அப்போதைக்கு பேசிவிட்டு நழுவுகிறோம். ஆனால் நாவலில் அவைகள் தான் நம் கண்முன் திரைப்படம் பார்பது போல் நடக்கிறது.

       உயிரினங்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் இல்லாத மனிதனால் இந்த நாவலை எழுத முடியாது அல்லது கடினமான தாக்குதலுக்கு மனதளவிலேனும் பட்ட மனிதனால் நிச்சயமாக எழுத முடியும். நாவலின் முதல் அத்தியாயமே புடுக்கறுபட்ட பன்றி மாதிரி வீறிடுகிறது. பன்றியடித்தல், பீ வாறுதல் என்று முதல் அத்தியாயம் பேசவருகையில் ஏதாவது தலித்திய ஏற்பாடோ என்று மிரண்டேன்.

         மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதே இந்த நாவலின் நோக்கம் என்பதால் அதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நாவல். செலின் தர்மாவிற்கு எழுதிய கவிதைகள், நேஹாவின் கடிதங்கள் எல்லாமே குறைவாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கின்றன.

          உலக நாவல்களில் பேசப்பட்ட நாவல்கள் எல்லாமே குருநாவல் அளாவில்தான் உள்ளன என்பது வாசகர்களுக்கு தெரியும். எதையும் பொட்டில் அடித்தாற்போல் சுருக்கமாக சொல்வதன் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடிகிறது. சாரு திட்டம் போட்டு பொட்டில் அடித்திருக்கிறார். நல்ல நாவல் பற்றி அதிகம் பேசுதல் கூடாது என்று இப்போது நகருகிறேன்.

சாருவிற்கான குறிப்பு:-

          மேற்கொண்டு நீங்கள் எழுதும் நாவல்களிலாவது நீலவர்ணத்தில் அவதார் படத்தில் தோன்றிய கடவுளைப் போல கிருஷ்ணா என்றும், ஆழ்வார் என்றும், சாரு என்றும் கேரக்டர்கள் உள் நுழைவதை தவிர்க்க முயற்சியுங்கள். அவைகள் தொடர்வது சலிப்பை தருகிறது. இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.. நாவல் வேறு தளத்தில் நின்று ஒளிரும். நான் அப்படித்தான் வாசித்தேன்.

நூல் விவரம்:
                        தேகம்
                        சாரு நிவேதிதா
                        உயிர்மை பதிப்பகம்
                        விலை: 90ரூ

Sunday, December 5, 2010

......விளம்பரத்திலுமா?

கமல் செய்வது தவறு, மணிரத்தினம் செய்வது தவறு, சமீபத்தில் மிஷ்கின் செய்வது தவறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வாழ்வில் அன்றாடம் இந்த காப்பி சமாச்சாரம் நடந்து கொண்டிருப்பதை உற்று நோக்கி கொண்டிருப்பதில்லை. அதற்கு நமது கார்பரேட் கம்பெனிகளும் உடந்தையாகவோ, அல்லது அவைகளே இத்தகைய காப்பி வேலையை செய்து கொண்டிருப்பதையோ உணர்வதில்லை. இந்த சினிமாக்காரர்கள் சேர்ப்பதை விட , இத்தகைய காப்பி யால் கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ப்பது அதிகம். போதும் இந்த பூடகப் பேச்சு. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ஷேக்ஸ்பியர் இன் லவ் என்றொரு அற்புதமான திரைப்படம், காதலும் காமமும் பொங்கி வழியும். ஒவ்வொரு காட்சியும், அருமையான வசனத்தாலும், இசையாலும் நிரம்பி வழியும். ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தை நம் கண்முன்னால் ஓட விட்டிருப்பார்கள்.
அந்த திரைப்படத்தை நானும் என் நண்பரும் வீட்டில் பார்த்து கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. அதில் வரும் இசையின் ஒரு சிறு பகுதியை கேட்டபோது, இருவருக்குமே அதை எங்கேயோ கேட்டது போன்ற ஞாபகம். காப்பி அடிப்பதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ரேஞ்சுக்கு கண்டுபிடிக்கும் கருந்தேளுக்கு உடனே ஃபோன் செய்து கேட்டோம். அவர் வேறொரு படத்தை துப்பறியும் வேலையில் பிசியாக இருந்தார். நாங்கள் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டோம்.
கடைசியில் அது ரிலையன்ஸ் விளம்பரத்தில் ஹிருத்திக் ரோஷன் வாசிக்கும் ஃப்ளூட் இசை என்பதை உணர்ந்தோம். டெம்போவை கொஞ்சம் மாற்றி அதே இசையை ஜிங்கிள்ஸாக போட்டு விட்டிருக்கிறார்கள். அந்த ஜிங்கிள்சின் ஸ்டோரி லைன் கூட சிறு வயதில் நாம் படித்த கதைதான். அந்த விளம்பரத்தின் லிங்கையும், ஷேக்ஸ்பியர் இன் லவ் திரைப்படத்தில் அந்த காட்சியையும் இசையுடன் கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் என் கூற்று சரிதானா என்பதை தெளிவு படுத்தினால் தன்யனாவேன்.

இது ஒரிசினல்:)இது தழுவல்(எடுத்தாண்டது) :(ரிலையன்ஸின் விளம்பரத்தை கம்போஸ் செய்தது யார் என்பதும் சரியாக தெரியவில்லை. இரண்டு மணி நேர திரைப்படம் என்றால் சில விநாடிகள் tribute அல்லது thanks கார்ட் போடலாம். சில விநாடிகளுக்கு பல கோடிகளை கொட்டி கொடுக்கும் விளம்பரங்களில் அதை எப்படி போடுவது. சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் போல ஸ்குரோல் போடலாமா? J

டிஸ்கி:
            காப்பி, டீ எல்லாம் எனக்கு பிடிக்கும்தான். நான் பெரிய உத்தமனெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஏதோ எழுதனும்னு தோணிச்சு..... எழுதிப்புட்டேன்.நன்றி.

Friday, December 3, 2010

ஆயிரம் சிறகுள்ள காமம் - வா.மு.கோமு

                                                                          
                                     இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் நான்(ம்) ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’. வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறாந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

Sunday, November 21, 2010

கருந்தேளின் நடனம் - மயில்ராவணன்

                                    நீங்கள் நினைத்து வந்த எந்த காரணமும் இந்த கட்டுரைக்கு கிடையாது. கவலைப்பட வேண்டாம். இயற்கை மீதும், உயிரினத்தின் மீதும் உள்ள ஈடுபாடும் அதை தொடர்ந்து நான் ”மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட் சொசைட்டி” யின் உறுப்பினரானதும் நண்பர்கள் நீங்கள் அறிந்ததே. இலக்கியத்தின் மீது கொண்ட அதே அளவு ஈடுபாடும் , ஆர்வமும் இயற்கையின் மீதும் எனக்கு உண்டு. ஹாலிவுட் சினிமாவிற்கு எப்படி ஸ்பீல்பெர்கோ , தமிழ் இலக்கியத்திற்கு “எஸ்ரா,ஜெயமோகன்” எப்படியோ, அதே போல இந்த இயற்கை பற்றிய ஆய்வுகளுக்கு பெயர் போனவர் “டேவிட் அட்டன்பரோ”. இவருடைய பல ஆய்வுகளை, இயற்கையை இவர் நேசிக்கும் விதத்தினை டிஸ்கவரி சேனல் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம், தாய்மொமியான தமிழிலேயே அருமையான பல விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

                                அண்மையில் இவரின் நூலான “Life on Earth” ஐ தமிழில் “பரிணாமத்தின் பாதை” என்ற பெயரில் டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழிபெயர்ப்பில் படிக்க கிடைத்தது. அருமை! பக்கத்திற்கு பக்கம், இயற்கையை பற்றிய செய்திகளை அள்ளி தெளித்துள்ளார். இந்த பூமியில் எண்ணிலா உயிரினங்கள் வாழ்ந்து , மறைந்து, உறுமறைந்து, சந்ததிகளை பெருக்கி, மற்றும் நினைத்து கூட பார்க்க இயலாத பல விஷயங்களை செய்து வரும் உண்மைகளை இந்த நூலின் மூலம் விளக்க முயன்றிருக்கிறார். United Writers வெளியீடாக வந்துள்ள இந்த நூலை படிக்கும்போது, நாம் காண இயலாத பல இடங்களுக்கு இவரது எழுத்தின் மூலம் அழைத்துச் சென்று அந்த காணகத்தை, பூமியின் அடி ஆழத்தை, ஏன் கடலடியை கூட நம் கண் முன் காட்சிபடுத்துகிறார். மேலும், மனித இனத்தால் சீரழிக்கப்பட்ட இயற்கை வரலாற்றையும், மனிதனின் அஜாக்கிரதையாலும், ஆர்வகோளாறாலும் அழித்தொழிக்கப்பட்ட பல உயிரினங்களைப் பற்றி எல்லாம் அழகாக விளக்குகிறார்.

                                பறவையியலில் ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டிய பகுதி ஒன்று “ஆகாயத்தின் அரசர்கள்” என்ற தலைப்பில் இந்த நூலில் உள்ளது. பறவைகள் தோன்றிய விதமும், அவை மரமேறும் உயிரினங்களின் வழி தொன்றலே என்ற உண்மையும், எனக்கு உண்மையில் புதிய செய்திதான்.
ஊர்வனவற்றை பற்றி விளக்கும்போது, தேள்களைப்பற்றிய ஒரு செய்தி மிக அருமை.
                      அவர் வார்த்தைகளில் “ தீவிரமான போர்க்குணத்தோடுதான் ஆண் தேள் பெண் தேளை அணுகுகிறது. இவ்விணைப்பில் பெண் தேளின் ஆயுதங்கள் சமபலத்துடன் அமைய, அந்த ஜோடி நடனமாட ஆரம்பிக்கிறது. வால்கொடுக்கை உயர்த்தியவாறு இரண்டும் முன்னும் பின்னும் நகர்ந்து ஆடுகின்றன. சில சமயன்களில் வால் கொடுக்குகள் கூட பின்னிக் கொள்வதுண்டு. சிறிது நேரத்தில், அந்த நடன அரங்கிலுள்ள குப்பைத் துணுக்குகள் தேள் ஜோடியின் நடனத்தால் பெருக்கித்தள்ளப்படுகின்றன. பின்னர் ஆண் தேள் தனது மார்புப் பகுதிக்குக் கீழிருக்கும் விந்துதுளை வழியே விந்துத் திரளை வெளிப்படுத்தி பூமியில் இடும். தன் முன்பக்கக் கொடுகுகளால் பெண் தேளப் பற்றி விருக்கென முன்னுக்கிழுத்து அதன் விந்து ஏற்கும் துவாரம் விந்த்துத்திரளின் மேல் படியுமாறு செய்யும். விந்த்துத் திரளை பெண் தேள் கிரகித்துக் கொண்டதும் ஆணும் பெண்ணும் பிரிந்து தன்வழிச் செல்லும். இறுதியாக, முதிர்ந்த முட்டைகள் பெண் தேளின் முட்டைப் பையிலேயே கருவுயிர்ட்த்து தேள்க் குஞ்சுகள் தம் முதல் தோல உதிர்த்ததும் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றன.”

                           இப்படியொரு கருவுறும் செயலை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை கண்டறிய எவ்வளவு பொறுமையும் நேரமும் தேவைப்பட்டிருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது போன்ற ஆயிரத்துக்கும் மேலான தகவல் களஞ்சியமாக, இயற்கையின்பால் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஒரு கையேடாக விளங்கும் இந்த புத்தகம், தங்கள் சேமிப்பில் இருக்கவேண்டியது என்றால் அது மிகை அல்ல(#கேபிள்க்கு நன்றி).

                          மேலும், இவருடைய பல ஆய்வுகள் இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. முக்கியமாக. ஆர்க்கிவ் என்ற இணையத்தளத்தில் காணலாம். இந்த தளமும் இவருடைய முயற்சியால் கட்டற்ற களைக் களஞ்சியமாக வளர்ந்துள்ளது.
                                                                    
டிஸ்கி:

   தலைப்பு(தேள்), எஸ்ரா, ஜெமோ ஆகியவை சுவாரசியத்திற்காக சும்மா கலந்து விட்டது. மற்றபடி உள்குத்து எதுவும் இல்லைங்க.(குமுதம் பண்ணா மட்டும் நியாயம் , நான் பண்ணால் தப்பா? சரி விடுங்க…நாம் இயற்கையை போற்றுவோம்!

Thursday, November 18, 2010

ஆழத்திலிருந்த அனலொன்று - சுகன்

ஆழத்திலிருந்த அனலொன்று” சிறுகதை வித்தியாசமான யோசிப்பு. வழக்கமான மறுவாசிப்புச் சிறுகதையல்ல இது. எதிர்யோசிப்புச் சிறுகதை.ராகுல்ஜியின் ’வால்கா முதல் கங்கை’ வரை நூலை வாசித்த அனுபவம் உள்ளவர்களுக்கும், வேட்டைச் சமூகத்தில் தாய்
வழிச் சமூகம் இருந்ததை அறிந்தவர்களுக்கும், தாயே தலைவியாக திகழ்ந்த இனக்குழுமச் சமூகம் இருந்தது என்பதையும் அதையெல்லாம் கடந்துதான் பொருளுடமைச் சமூகமும், ஆணாதிக்கச் சமூகமும் வந்தது என்கிற
மனிதகுல வரலாறு கற்றோருக்கும் இந்த சிறுகதையை உணர்ந்து உள் வாங்குவது இயலும். மற்றொர்க்கு இது ஓர் அபத்தக் கற்பனையாகத் தோன்றலாம். உண்மையில் அபூர்வமான- அற்புதமான-கற்பனை.
தீப்பிரவேசம் என்ற ராமாயணக் காட்சியை தலைகீழாகப் புரட்டிப் போட்ட
கற்பனை. ராமன் மண்டோதரியின் வனத்தில் சிறை வைக்கப்பட, போரினால் மீட்டெடுத்த சீதை தீப்பிரவேசத்தின் போது மானுடத் தீர்ப்பு சொல்கிற தாய்மைப் பண்பு. மனிதப்பண்பு மிக்க தீர்ப்பெழுதுகிற உணர் பண்புச் சிறுகதை.
                                                                          -மேலான்மை பொன்னுச்சாமி

புத்தகத்தின் விலை: 80ரூ
புத்தகம் கிடைக்குமிடம்: அம்மாவீடு,
                                                  சி-46 இரண்டாம் தெரு,
                                                 முனிசிபல் காலனி,
                                                 தஞ்சாவூர்- 613 007
                                                 செல்: 94423 46334
                                                 soundarasugan@gmail.com          mayilravanan@gmail.com                                      

Friday, October 22, 2010

தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு

இராமகாதையின் வாலிவதையிலும்
மகாபாரதக் குருஷேத்திரத்திலும்
‘இராம,’’கிருஷ்ண’ லீலாவினோதம்.


      கோட்சேயின் தொழுதகையிலும்
      மகாத்மாவின் புன்னகையிலும்
      பகவத்கீதையின் முரண்நகை.


சிங்க நாசிச ‘ஸ்வஸ்திகா’விலும்
புண்ய பூமியின் அசோகச்சக்கரத்திலும்
மகாவம்ச புத்தனின் மந்தகாசம்.


      செங்கொடி நீழற் கரடியணைப்பிலும்
      செஞ்சீனத்துப் பெருஞ்சுவரினிலும்
    ‘ஒலிவ’ப் புறாக்கள் சரணாகதி.


‘உதயசூரியன்’ ‘அறிதுயிலி’னும்
‘ஒபமா’த் தமிழரின் காத்திருப்பிலும்
‘பெண்டகன் கழுகி’ன் செட்டை விரிப்பு


      புலிகள் சீருடைத் ‘திருமா போஸிலும்
      மரணவணிகன்முன் ’திருதிரு’ போஸிலும்
      முத்துக்குமாரின் மரணசாசன உயிராயுதம்.


கச்சவிழ்த்திடும் ‘பூதகிமுலைகளும்’
கானல் நீராம் தமிழினத் தலைகளும்
தாய்மடியறியாக் குட்டிகள் அடைக்கலம்


     விடுதலைப்புலிகள் பின்னடைவினிலும்
     வன்னி மண்ணின் மயான அமைதியிலும்
     இந்துமாக்கடலின் மகா மவுனம்.


புகலிட இளைஞர் புலிகள் எதிர்ப்பிலும்
‘எங்கடமாக்ஸின்’ காந்தியத் தரிப்பிலும்
பின்நவீனத்துவத்தின் கேள்விக்குறி


    லங்காதகன அநுமார் வாலிலும்
   ‘ஸாம்மா’வின் சூத்திர நூலிலும்
    வெளித்தெரிவது பனிப்பாறை நுனி.


‘செம்மொழி கொண்டான்’ செங்கோலினிலும்
அரசவைக் கவிஞர் மெய்க்கீர்த்திகளிலும்
தொப்பூழ்க் கொடியின் துரோக முடிச்சு.
                                                     - பொதிகைச் சித்தர்நன்றி: சுந்தரசுகன்

Saturday, September 25, 2010

காமினி - மயில்ராவணன்

ச்ளக்
எனஃப் எனஃப்
என்ன பரந்தாமன் ராவா குடிக்கிறீங்க, இன்னும் ரெண்டு ஐஸ் க்யூப் போட்டுக்குங்க.
நோ நோ போதும். 15 வயசிலேர்ந்து ராவாதான் குடிக்கிறேன் வைரம் பாஞ்ச கட்ட இது தெரியிதா? ஹா ஹா என்ற சிரிப்பில் கையிலிருந்த் கோப்பையில் இன்னும் கொஞ்சம் உற்சாக திரவத்தை ஊற்றிக் கொண்டார்.

போதும் பரந்தாமா யூனிவர்சிட்டில, டாக்டர் பட்டம் வாங்கி இளையதலைமுறைக்கு நல்லது சொல்லிட்டு..இப்ப என்னடான்னா ஹாட்ட ராவா அடிச்சி ரவுசு பண்ற. உன் பொன்னு காமினிக்குத் தெரிஞ்சா என்னத்தான் கோவிச்சிக்குவா.

ஏன்யா குடிக்கற நேரத்துல வீட்ட ஞாபகப் படுத்தற. சரி. சரி மிச்சத்த கார்லயே வெச்சிக்கறேன் என்று எழுந்த பரந்தாமன். ட்ரைவருக்கு /போன் போடு இன்னிக்கு பெரிய வீட்டுக்குப் போகவேண்டாம் ஃபார்ம் அவுஸ் போனும்னு சொல்லு.  
************************************************************************************************************************************************************
என்னடி இது?

திருஷ்டி சுத்திப் போடனும்க மொத மொத டாக்டராயிருக்கீங்க. இனிமே டாக்டர்னுதான் உங்கள கூப்பிடனும்னு வீட்ல எல்லாருக்கும் ஆர்டரே போட்டுட்டேன்.

ஆர்டி இவ? விட்டா வரிசையா எல்லாரையும் நிக்க வை. ஊசி போட்டு, மாத்தர கொடுக்கறேன். ஆனாலும் இந்த டீல் நல்லாதான் இருக்கு. கெக் கெக் என்ற சிரிப்பு காமினி ரூம் வரைக்கும் கேட்டது. சகிக்காமல் காதைப் பொத்திக் கொண்டாள்.
எங்க காமினி. என்ற பரந்தாமன் காமினி ரூமுக்குள் நுழைந்தார். என்னம்மா ஆச்சு என் பொண்ணுக்கு
ஃபேஸ் மாஸ்க்குங்க. அப்பத்தான் முகம் பள பளன்னு இருக்கும்.

ஏண்டி இதெல்லாம் உன் வேலையா? இந்தக் கிரீமெல்லாம் தோல்ல எதுனா அலர்ஜி கொண்டுவரப்போகுது. இதென்ன சீக்கு பிடிச்சவன் மாதிரி ஒயர் எல்லாம் மாட்டி வெச்சிருக்க?

அட க்ரீமெல்லாம் இல்லீங்க இது துணிமாதிரி முகத்துல போட்டுகிட்டா போதும். பாட்டரி போட்டு இந்த ஒயர் வழியா ஏதோ லைட் மூஞ்சில அடிச்சா, கரும்புள்ளி எல்லாம் வராதாம்.

யார் சொன்னா?

டிவில அதுவும் ஒரு வெள்ளக்காரம்மா தமிழ்லயே பேசுதுங்க என்ற பெரிய நாயகியை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட டாக்டர் பரந்தாமன். இவ உண்மையிலேயே மண்டைல மசாலா இல்லாதவளா? இல்ல நடிக்கறாளா என்ற யோசனையுடன் காமினியின் அறையை விட்டு வெளியேறினார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

மெதுவாய் காரேஜுக்கு சென்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஈசிஆர் ரோடில் முட்டுக்காடு நோக்கி விரட்டினாள்.

************************************************************************************************************************************************************
சாரி சிவா என்ற காமினியை அடுத்த வார்த்தை பேச விடாது முத்தமிட்டான் சிவா. எங்க உன்னை பார்க்காமலேயே போய்டுவேனோன்னு நினெச்சேன் என்ற சிவாவின் வாயை மூடி

ச்சு என்ன இது அபசகுனமா? என்ற காமினியை கண்களில் கலக்கத்தோடு பார்த்தான் சிவா. இல்ல காமினி இந்தவாட்டி சியாச்சின். நான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. போய் திரும்ப நாளாகும். அது மோசமான ஆபத்து நிறைஞ்ச இடம். உயிர் போவது கவலையில்ல ஆனா நீதான் என் கண்ல வர்ற கண்ணீருக்குக் காரணம்.

ச்ஸ்ஸ் ஏன் நெகட்டிவ்வா பேசனும். நீ ஒரு மிலிட்டரி மேன். நீ திரும்ப வருவ. அதுக்கு நீ இப்ப ஒரு விஷயம் பண்னனும்.

என்ன இந்த ப்ரிட்ஜ்லேர்ந்து குதிக்கனுமா?

நோ கல்யாணம் பண்ணு இப்பவே இங்கயே.

ஆர் யூ க்ரேஸி.

நோ சிவா டாம் சீரியஸ். எது என்னை விட உன்னோட நெருக்கமா இருக்கமோ அது சாட்சியா நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாம். டூ இட் மேன்.

அப்ப என் துப்பாக்கிய சாட்சியா வெச்சித்தான் பண்ணிக்கனும். பட் காமினி..

வாவ் நைஸ் ஐடியா. துப்பாக்கி எங்க அது எடு, இப்படி நிக்க வை.

ஹும்ம் இப்ப உன் செயின எனக்குப் போடு. மெதுவாய் சிவா கீ கொடுத்த பொம்மையைப் போல காமினி கூறுவதை ஒவ்வொன்றாய் செய்து கொண்டிருந்தான்,

க்ரேட் நான் இப்ப மிஸர்ஸ் சிவா. தி கமாண்டோ.

நோ ஒன்னு பாக்கி இருக்கு

 "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

ஓஹ் கமாண்டொ பயிற்சியில துப்பாக்கில பொட்டு வெக்கறதெல்லாம் சொல்லித்தர்றாங்களா?

ஏய் நாட்டி. என்றவனைப் பார்த்து நோ யாம் யுவர் பொண்டாட்டி என்றாள் காமினி. போதும். கிளம்பு சிவா நேரமாகுது.

அடிப்பாவி ஃபர்ஸ்ட் நைட் இல்லையா?

உண்டு பத்திரமா திரும்பி வந்ததுக்கபுறம்.

முத்தம் ஒன்றைப் பறக்க விட்டு வேகமாய் ஸ்கூட்டியில் செல்லும் காமினியை கனவா நினைவா என்று பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

************************************************************************************************************************************************************

சப்த்தமில்லாது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வெளிப்புற படிகள் வழியாக. தன் அறைக்கு மெல்ல நடக்கும் போது டாக்டரின் ச்சே அப்பாவின் குரல் கேட்டது.

இந்த நேரத்தில் யாருடன் பேசுகிறார்.

எக்ஸலண்ட் பீதாம்பரம். கோவில்லேர்ந்து சிலை கடத்தறதுக்கு இது சிம்பிள் ரிஸ்க் இல்லாம பணம் பார்த்துடலாம். ஆமா இந்த வைரத்துக்கு என்ன பேரு வைக்கலாம். கோட் ரொம்ப முக்கியம். நிறைய பண்ணும்போது நமக்கும் அடையாளம் இருக்கும்.

காமினின்னு வெக்கலாம் தலைவ்ரே. ஆனா..இந்த வாட்டி கொஞ்சம் பார்த்து கவனிங்க ஏகப்பட்ட போலீஸ்.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே" என்று பாராட்டினார் பரந்தாமன். கவனிப்புதானே செஞ்சிடலாம்.

திக் என்றது காமினிக்கு அடப்பாவிங்களா, கோவில்லயே கை வெச்சாச்சா? மெதுவாய் தன் ரூமுக்குப் போனாள். சிவாவுக்குப் போன் செய்தாள்,

சிவா

ஹே காமினி வீட்டுக்குப் போயிட்டயா?

ஆச்சு. ஒரு முக்கியமான விஷயம்.
சொல்லு..

எங்கப்பா.....

டாக்டர்.பரந்தாமனக்கு ஆப்பு ரெடியாகிக் கொண்டிருந்தது
************************************************************************************************************************************************************

Tuesday, September 21, 2010

எனக்கு சாருவை பிடிக்காது…

                                          - கோகுல்
ஆம். எனக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காது. இன்றைக்கு நேற்றல்ல கடந்த 7 வருடங்களாக பிடிக்காது. ஆனாலும், என்ன செய்வது, இந்த எழுத்து சாத்தானை படிக்க நேர்ந்து 7 வருடங்கள் ஆகி விட்டதே! நானும் இன்றே இப்படம் கடைசி என்பதை போல இனி இவர் எழுத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டு வேறு ஏதேதோ வேலைகளில் மூழ்கி விடுவேன். ஆனால் மூன்றாவது நாள் டாஸ்மாக்கை கடக்கும் குடிகாரனின் கை நடுங்குவதை போல எனது கை தானாக சாருஆன்லை வெப்சைட்டை ஓபன் செய்யும். தீபாவளி ரிலீஸுக்கு தலைவர் படம் பார்க்கும் ரசிகனைபோல மூன்று நாட்கள் அவர் எழுதிய அனைத்தையும் மூன்று மனி நேரம் படிப்பேன்.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் குடிப்பார். பெண்களைப் பற்றி பேசுவார். ஆம், நான் உத்தமன் தான். எனக்கு சினிமாவில் அரை நிர்வாணத்தில் வரும் பெண்களையும், குடித்து விட்டு பாட்டு பாடும் ஹீரோக்களையும் மட்டுமே ரசிக்க முடியும். எழுத்தாளர்களெல்லாம் குடிக்க கூடாது. அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகள். குடியையும் பெண்ணையும் பற்றி வர்ணிப்பதால் மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டை எனது மனமும் முன் வைக்கும். ஆனாலும், நன்பரிடமிருந்துதயாரா இரு, இன்னும் ஒரு மணி நேரத்தில கிண்டி வழியா நானும் சாருவும் வருவோம். அப்படியே .சி.ஆர் போகலாம்என்ற குரல் செல்ஃபோன் வழியாக வரும் வரைதான். அதற்குப்பிறகு இந்த யோக்கிய சிகாமணி , ”சாரு வேற செம காஸ்டியூம்ல வருவாரே, நாம இந்த புளூ ஜீன்ஸ் போடலாமா இல்ல அந்த கார்கோஸ் போட்டிட்டு போகலாமாஎன்ற ரேஞ்சில் தான் இருக்கும். அது குடிப்பதற்கான ஆர்வமோ அல்லது ஒரு பிரபலத்தை சந்திக்கப் போகும் ஆர்வமோ அல்ல. வேறொன்று….
                                
ஆனாலும் இன்னும் எனக்கு சாருவை பிடிக்காது. அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். எழுதும் அனைவருக்கும் பேசும் கலை அவ்வளவு எளிதில் வசப்படும். அவர்கள் பேச ஆரம்பித்தால் ஒன்று தூக்கம் வரும் , இல்லையேல் மூத்திரம் போக தோன்றும். ஆனால் இந்த சாத்தான் பேச ஆரம்பித்தால், வெறும் லெமன் மட்டும் அருந்தும் எனக்கே டேபிளில் உள்ளவற்றில் என்னுடைய லெமன் கோப்பை எங்கே என்னும் அளவிற்கு குழப்பம் வரும். அது காற்றில் கலந்திருக்கும் ஒயின் வாசனையால் மட்டுமல்ல பேச்சில் கலந்து வரும் போதையால்.
                             
என் மனசாட்சிக்கு இன்னும் சாருவைப் பிடிக்காது. எழுத்தை திறந்தாலே கெட்ட வார்த்தைகள். என்ன செய்வது ஒரு கெட்ட வார்த்தை கூட பேசாத எனக்கு சிக்னலில் காரை இடித்த படி வந்து நிற்கும் பைக் காரனையும், டிரெயினில் உரசிக் கொண்டு நிற்பவனையும் மட்டுமே, மனதுக்குள் ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் திட்ட தெரியும். அது நாம் நமக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு. வெளியில் மட்டுமாவது நல்லவனாக காட்டிக் கொள்ள விழையும் மனதின் வெளிப்பாடு. அதனால்தான் எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் எழுத்தெல்லாம் குப்பை. ராசலீலா ஒரு குப்பை. 655 பக்கங்களில் ஒரு நாவலாம். இதையெல்லாம் எவன் படிப்பான் என்றுதான் திட்டுவேன். ஆனாலும் ஹைதராபாத் 10 மணி நேரம் வேறு எந்த நாவலும் உருப்படியாக துணைக்கு வருவதில்லை என்று நினைக்கும்போது முற்று புள்ளி வைக்காமல் முப்பது பக்கம் எழுதும் எழுத்தாளர்களை நினைத்தால் ஒருவேளை எனக்கு சாருவைப் பிடிக்கிறதோ?..இல்லை..
இல்லை….எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் உலக இலக்கியத்தைப் பற்றியெல்லாம் உளருகிறார். தேவையில்லாமல் பாரீஸை புகழ்கிறார். என்னவென்று யாருக்கும் சரியாக தெரியாத பின் நவீனத்துவத்தை போற்றுகிறார் என்றெல்லாம் நானும் விமர்சனம் செய்வேன். ஆனாலும் அவருடன் பேசும்போது ஒருநாள், அவர் டக்கீலாவையும், வழமை போல நான் லெமனும், அருந்தும்பொது நீட்ஷேவை பற்றி ஏதோ பேச்சு திரும்ப, அப்புறம் வழக்கம்போல அவர் டேபிளில் டக்கீலாவையும், லெமனையும் பார்த்து நம்ம சரக்கு எது என்ற குழப்பம்தான் வந்தது. எனக்குதான் சாருவைப் பிடிக்காதே. அதனால் அவரை எப்படியாவது மட்டம் தட்டம் வேண்டும் என்று லேப்டாப்பை என் பக்கம் திருப்பி அவர் பேசும்போது அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று காண பேசிக் கொண்டே அவருடைய வார்த்தைகளை இண்டர்நெட்டில் கம்பேர் செய்து கொண்டிருந்தேன். போதை அதிகமானது தான் மிச்சம். அத்தனையும் உண்மை. அதைவிட அந்த பேச்சின் சாரம், ஒரு நிமிடம் திகைக்க வைத்தது, ஏனெனில் எனக்கு முன்னால் நீட்ஷேவின் வார்த்தைகள்…….நீட்ஷே தாக்கப்படும் காட்சியை அவர் விவரித்தது, ஒரு ஓரங்க நாடகம் பார்க்கும் விளைவை ஏற்படுத்தி விட்டது. அப்போதுதான் நினைத்தேன் இது விக்கிபிடியா பார்த்து பேசும் பேச்சல்ல. நீட்ஷேவின் எழுத்து ஆட்கொண்டதால் வரும் பேச்சென்று.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்கவில்லை. நான் இண்டர்நெட்டில் அவருடைய பேச்சை கம்பேர் செய்கிறேன் என்று அறிந்து சும்மா இருக்க வேண்டியது தானே. அவருக்கு பேச சுதந்திரம் இருக்குமளவிற்கு எனக்கு அவருடைய பேச்சை சந்தேகிக்கும் அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே. ஆனால் என்னுடய லேப்டாப்பின் இண்டர்நெட் கனெக்டிவிடியை துண்டிக்க சொல்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு சாருவை பிடிக்காது.
எனக்கு சாருவைப் பிடிக்காது, பிச்சாவரம் தீவை மதுவால் நனைத்தாரே அதனால் எனக்கு பிடிக்காது. தனது வாசகர்களுக்கு நம்மாலும் ஒரு இரவு லத்தீன் அமெரிக்க வாழ்க்கை வாழ முடியும் என்று காட்ட முடிந்ததற்காக எனக்கு சாருவைப் பிடிக்காது. முப்பது வருடமாக எழுதும் இவர் முப்பது நாட்களாக எழுதிவரும் என்னைப் போன்றவர்களின் பின்னூட்டத்திற்கெல்லாம் , தான் படித்த லத்தீன் அமெரிக்க எழுத்திலிருந்து மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதுவதாலும் அவரை எனக்கு பிடிக்காது.
இப்படி பல காரனங்களுக்காக சாருவை எனக்கு பிடிக்காது. முக்கியமாக சாருவை எனக்கு பிடிக்கும் என்று நான் சொன்னாலே என்னை நீங்கள் அனைவரும் திட்டுவீர்கள் என்பதற்காகவேஎனக்கு சாருவை பிடிக்காது”. முக்கியமாக நன்பர் மயில்ராவணனுக்கு அவரைப் பிடிக்காது என்பதாலேயே எனக்கு சாருவைப் பிடிக்காது.