தமிழில் இதுவரை ரெண்டே ரெண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டு வந்துள்ளது. ஒன்று அது இன்னொன்று இது, என்று ஒரு பிநவாண்டர் பல வருசங்களுக்கு முன்பாக அறிவித்தார். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தான் துவக்கம். அதன் பின்பாகத்தான் இலக்கியத்தில் இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கூட பொறுப்பான விசயங்கள், பொறுத்துக் கொள்ளக்கூடிய விசயங்கள் என்றே உருவானது.
சாரு அந்த பிநவாண்டவருக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்தில் இருபத்திநாலு பக்க குற்றிதழ்களில் குசு,கிரிக்கெட் என்று தூள் பறத்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று கூட்டங்களில் தென்பட்ட உருவத்தைக் கண்டு பழமை இலக்கியவாதிகள் மிரண்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்தே சாருவிற்கு காதல் என்பது ஒரு தீராத மோகமாகவே இருந்தது. அழகான யுவதி மீது மோகம் தோன்றுவது இயற்கையானது தான். ஆனால் அது தீராத வேதனை தரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இதுதான் அவருக்கு என்று உணர்கிறேன்.
வாசகனை தன் கதைப் பரப்பினுள் இழுத்துக் கொண்டு செல்லும் லாவகம் சாருவிற்கு அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே உண்டு.அந்த ஆரம்ப நேரத்தில், தான் தோன்றித்தனமான எழுத்தை இந்த இலக்கிய உலகு அறிந்ததே இல்லை. இதை எல்லாமா எழுதுவார்கள்? யார் இந்த முனியாண்டி என்று இங்கு பேசினார்கள்.
கட்டுரை வடிவில் அவரது எழுத்தை முதலில் நான் படித்தது ஜேஜே சில குறிப்புகளுக்காக அவர் வெளியிட்ட சிறு நூல்தான். அதில் அவர் ஜே ஜேவை அவர் பிட்டு பிட்டு வைத்திருந்தார். இப்படியான சிறுநூல் கொண்டு வரும் பழக்கம் இன்று வரை அவரை விடவில்லை இந்த நவீண சூழலிலும்.
வாசிப்புத் தன்மை இல்லாத எழுத்தும் எழுத்தே அல்ல.தமிழில் சூப்பர் என்று இலக்கிய நபர்கள் குறிப்பிடும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. கோவேறு கழுதைகள் என்ற புத்தகத்தை இன்றுவரை பத்து பக்கம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை என்னிடம் கோளாறு என்று பல முக்கிய நாவல்களை எடைக்கு போட்டுவிட்டேன்.சமீபமாக நான் படிப்பது பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,சுஜாதா.(சுஜாதா என்றதும் அவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பு உயிர்மையில் கேட்டு ஒரு வருடமானது நியாபகம் வருகிறது....படிக்க வேண்டும்)
எனது ”ஆயிரம் சிறகுள்ள காமம்” நாவலை உயிர்மைக்கு கொடுத்த கையோடு மூன்றுமாத காலமாக புத்தகம், எழுத்து என்று யாருடனும் பேசவும் இல்லை, தொடவும் இல்லை. நண்பர்கள், தோழிகள் அனுப்பிய புத்தகங்களும் தொடப்படாமலேயே கிடக்கின்றன. தோழி கீதாஞ்சலி பிரியதர்சினி சாருவின் வெளியீடு விழாவில் பத்தாவது ஆளாக இறங்கிய மறுகணமே என்னை தொடர்பு கொண்டார். ”தேகம்” நாவல் வேண்டுமென கேட்டு கொண்டேன். வாங்கியதும் ”அன்பு நண்பர் வா.மு.கோமுவிற்கு” என்று முதல் பக்கத்தில் எழுதிவிடுங்கள் என்றேன். பார்க்க வாங்கிய நண்பர்களும் என் பெயரை கண்டதும் அவரிடமே திரும்ப தந்துவிட்டதாக கூறினார். ஆனால் எனக்கு வந்து சேர்ந்த புத்தகம் அவர் கையெழுத்திட்ட புத்தகம் அல்ல.
அவசரத்தில் அது அவர் வீட்டிலேயே தங்கிவிட்டதாம். ஓ.கே. அவர் வீட்டில் நுழைந்து யாரும் அதை கேட்ச் செய்து போக முடியாது.
தமிழில் இதுவரை வந்த நாவல்களை பட்டியலிட்டால் முதலில் தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்”.அடுத்து இரண்டாவது சாருவின் “தேகம்”. மிச்சம் 8 நாவல்களை நான் மேலே போய் சேர்வதற்குள் யாராவது சிலர் எழுதலாம். நிச்சயம் இந்த லிஸ்டில் நான் இல்லை. நாவலே எழுதத் தெரியாதவன் நல்ல நாவலை எப்படி எழுதுவது? சாருவைப் போல சளைக்காமல் எழுதிக் குவித்தால் நானும் தேகம் போல ஒரு நாவலை ஐந்தாறு வருடங்களுக்குள் எழுதலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. சாருவிற்கே இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறதே!
உயிர்மை பதிப்பகம் துவங்கப்பட்டு வருடங்கள் பல ஆயிற்று. பிரபலங்களை வைத்துக் கொண்டு புத்தக வெளியீடு செய்வது இனியும் தேவையில்லை என்று என் சென்னை நண்பர் அலைபேசியில் கதைத்தார். அட! ஒரு நல்ல வாசகனை புத்தக வெளியீட்டில் உயிர்மை அப்படிச் செய்யும் காலம் வரவேண்டும். ஒரு கூத்தாடிக்கு கூத்தாட்டம் பற்றித்தான் பேசத்தெரியும். பிணவறை காப்பாளனுக்கு பிணங்களின் அழகு பற்றித்தான் பேசத்தெரியும். குப்பி அடிப்பவனுக்கு குப்பி அடிப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றித்தான் பேசத்தெரியும், என்பது போல வாசகனால் தான் புத்தகம் பற்றி பேசமுடியும். சக எழுத்தாளரை பேச வைத்தால் கூட பிரச்சனை வருகிறது. பக்குவம் இல்லாதவர் பக்குவம் இல்லாதவர்களைப் பற்றிப் பேச போக இது தொடர்கிறது.
சாரு நந்தலாலா என்கிற தமிழ்படத்தை சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று வேடிக்கை காட்டினார். அது சிறந்த 1000 படங்களில் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றுமே புத்திசாலிகள். சகலகலாவல்லவனும், வசந்த மாளிகையும், கரகாட்டக்காரனும் இன்றும் டிவி பொட்டியில் ஓடினால் உட்கார்ந்து விடுவார்கள்.
ஆரம்பத்திலிருந்தே இளையராஜாவை ஏன் சாரு குற்றம் சொல்கிறார் என்று புரியாமல் இருந்தேன். எனது ரிங்டோன் கூட இளையராஜா குரல்தான்(என்ன என்ன கனவு கண்டாயோ சாமிஈஈஈ) ஆனால் நந்தலாலாவை பார்க்கையில் அது புரிந்து போனது. பாலிமர் சேனல் நிகழ்ச்சியில் இளையராஜா தெளிவாக சொல்லிவிட்டார், தியேட்டரில் இருக்கிறவனுக்காக நான் போட்டது என்று!.
மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத, சொல்லாத, சொல்லத் தயங்கும் விசயங்களை சொல்வதே சாருவின் எழுத்துக்கள். வதைத்தல், வதைபடுதல் என்கிற விசயத்தை இந்த நாவலின் சாரமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான சித்திரவதைகளை வதைமுகாம்களில் நடப்பதாக நாம் படித்திருக்கிறோம் செய்திகளில் சில உலகப் படங்களிலும் கூட. அடடா! என்று அப்போதைக்கு பேசிவிட்டு நழுவுகிறோம். ஆனால் நாவலில் அவைகள் தான் நம் கண்முன் திரைப்படம் பார்பது போல் நடக்கிறது.
உயிரினங்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் இல்லாத மனிதனால் இந்த நாவலை எழுத முடியாது அல்லது கடினமான தாக்குதலுக்கு மனதளவிலேனும் பட்ட மனிதனால் நிச்சயமாக எழுத முடியும். நாவலின் முதல் அத்தியாயமே புடுக்கறுபட்ட பன்றி மாதிரி வீறிடுகிறது. பன்றியடித்தல், பீ வாறுதல் என்று முதல் அத்தியாயம் பேசவருகையில் ஏதாவது தலித்திய ஏற்பாடோ என்று மிரண்டேன்.
மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதே இந்த நாவலின் நோக்கம் என்பதால் அதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நாவல். செலின் தர்மாவிற்கு எழுதிய கவிதைகள், நேஹாவின் கடிதங்கள் எல்லாமே குறைவாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கின்றன.
உலக நாவல்களில் பேசப்பட்ட நாவல்கள் எல்லாமே குருநாவல் அளாவில்தான் உள்ளன என்பது வாசகர்களுக்கு தெரியும். எதையும் பொட்டில் அடித்தாற்போல் சுருக்கமாக சொல்வதன் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடிகிறது. சாரு திட்டம் போட்டு பொட்டில் அடித்திருக்கிறார். நல்ல நாவல் பற்றி அதிகம் பேசுதல் கூடாது என்று இப்போது நகருகிறேன்.
சாருவிற்கான குறிப்பு:-
மேற்கொண்டு நீங்கள் எழுதும் நாவல்களிலாவது நீலவர்ணத்தில் அவதார் படத்தில் தோன்றிய கடவுளைப் போல கிருஷ்ணா என்றும், ஆழ்வார் என்றும், சாரு என்றும் கேரக்டர்கள் உள் நுழைவதை தவிர்க்க முயற்சியுங்கள். அவைகள் தொடர்வது சலிப்பை தருகிறது. இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.. நாவல் வேறு தளத்தில் நின்று ஒளிரும். நான் அப்படித்தான் வாசித்தேன்.
நூல் விவரம்:
தேகம்
சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்
விலை: 90ரூ
6 comments:
அண்ணே மரா ஒன்னியும் புரியலே ...
இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.."
இப்படி செய்யும் சுதந்திரத்தை அவர் தந்து விடுகிறாரே..
நல்ல பார்வை... ரசித்தேன்
’புதிய வீர்யம் - சாருவின் தேகம்’ - இதுல ஒன்யும் உள்குத்து இல்லியே? :-)
நம்ம பக்கம் வந்து பாருங்க.. மாத்தியாச்சிபா
நல்ல விமர்சனப் பதிவு.
முதல் நான்கு பத்திகள் என்னை அவ்வளவாக கவர வில்லை. கடைசி நான்கு பத்திகள் அருமை.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ஒரு நல்ல விமர்சனம், ஆனால் எழுதிய முறை வித்தியாசமாக இருந்தது, ஆனால் படிக்கு ஒரு சவாலாகவும் புதிய விதமாகவும் இருந்தது புதிய எழுதும் முறைபோல தோன்றுகிறது, சுவையாக இருந்தது.
சாரு படித்தாரா? அந்த கடைசி கருத்தை?
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
Post a Comment