மலைக்காடுகளின் மீது நான் கொண்ட பிரியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.இதற்கு காரனம் நான் சில காலமாக வாசிக்கும், தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன் போன்றோரின் எழுத்தா?, மற்றும் சென்னை நகரின் ”கான்கிரீட்” காடுகளின் மீது கொண்ட வெறுப்பா அல்லது உண்மையில் காட்டின் தனிமையை விரும்பும் மனமா என்பதை என்னால் இப்போது தெளிவாக உணரமுடியவில்லை. சில நாட்களாகவே யாருமற்ற புல்வெளிகளில் கால்பதிய நடப்பது போன்ற கனவு வந்து கொண்டே இருந்தது. கடைசியில் அது நடந்தே விட்டது. 15பேரோடு பெரும்படை செல்வதுபோல டாப்ஸ்லிப்பை பார்க்க முடிவு செய்த பிளான், கைமாறும் ஐஸ் கட்டியாக கறைந்து கடைசியில் 4½ பேருடன் முடிந்தது. நன்றி நன்பர் விஜயகுமார்-நர்மதா தம்பதிகளுக்கு. பொள்ளாச்சி திருமணத்தை முடித்து விட்டு சேஷா மற்றும் அவரது மனைவி,குழந்தை , நன்பர் பாவா ஆகியோருடன் டாப் ஸ்லிப் பயனம் தொடங்கியது. ஆனால் தங்கும் வசதி கிடைப்பதில் சிறிது சிக்கல் இருந்தது. முன்பாகவே வன – அலுவலரிடம் முன்பதிவு செய்திருந்தாலும், நிச்சயமாக விடுதி கிடைக்கும் என்று கூறமுடியாமல் இருந்தது. 5 மணிக்கு மேல் பொள்ளாச்சி ஆனைமலை சாலையில் எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஏனெனில், இது ஒரு Tiger Reserve Forest ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் காட்டு யானைகள் எந்த நேரமும் சாலையில் குறுக்கிடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. அதேபோல மலையிலிர்ந்து ஆனைமலை செக்போஸ்ட்டை மீறி யாரும் பொள்ளாச்சியை அடைய முடியாது.
அதனால் அடித்து பிடித்து வேகமாக 4.55க்கு ஆனைமலை செக்போஸ்ட்டை அடைந்து விட்டோம். அநேகமாக அந்த வழியாக கடைசியாக சென்ற தனியார் வாகனம் எங்களுடையதாகத்தானிருக்கும். போகும் வழி, செங்குத்தான மலைப்பாதை என்றாலும் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டினார். ஒரு காட்டை அழிப்பதற்கு ஒரு நல்ல தார்சாலை போதும் என்பார், தியோடர் பாஸ்கரன். ஆனால் டாப்ஸ்லிப்பில் அந்த பிரச்சனை இல்லை. மோசமான கப்பி பாதைதான்.
அழகிய காட்டுவழி, ஆனால் சற்று ஆபத்தான பாதை. பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் செல்வதற்கும் இந்த மலைப்பாதையே பயன் படுத்தப்படுகிறது. மாலை மயங்கும் நேரத்தில் டாப்ஸ்லிப்பை சென்றடைந்தோம். எதிர்பார்த்ததைப்போலவே விடுதி அறைகள் எதுவும் காலியாக இல்லை. சில மணித்துளிகள் காத்திருந்ததை அடுத்து, பொள்ளாச்சி வன அலுவலரின் தயவால் “பைசன்” என்ற இரண்டு அழகான் அறைகள் கிடைத்தன. அவை 1959ல் கட்டப்பட்ட அருமையான உறுதியான அறைகள். மேலும் அறையின் ஜன்னல் கதவுகள் புறத்தில் உள்ள வன உயிரினங்களை கான்பதற்காக see thru கண்ணாடிகளால் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்கள் அத்து மீறி பிரவேசிக்காமல் இருக்க பின்பக்கம் உயரமான் மதில்களை கொண்டிருந்தாலும் அறையின் உள்ளிருந்து கொண்டு காட்டின் அனைத்துப்பகுதிகளையும் கான்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டிருக்கின்றன். அருமையான “கிளைமேட்”. அநேகமாக 16 டிகிரிக்கும் சற்றும் குறைவாக இருந்திருக்கும். அறையில் சென்று உடைமாற்றிக்கொண்டு ½ கி.மீ தூரம் காட்டுப்பாதையில் நடந்து சென்றோம். மனிதனின் தைரியத்தை சோதிக்கும் அளவிற்கு இருள் பரவிக்கிடந்தது. இருளுக்கு கண்கள் சற்று பழகியவுடன், ஆயிரக்கணக்கான விட்டில் பூச்சிகளை நம்மால் காண முடிகிறது.
எங்கு பார்த்தாலும் , காட்டுப் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அதற்கு முன்பாகவே, ஒரு பெரும் மான் கூட்டம் அங்குள்ள புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்ததை கண்டு லயித்திருந்தோம். அவை மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சில அடி தூரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. புள்ளி மான் இனத்தை சேர்ந்தவை என்று ரேஞ்சர் கூறினார். லேசாக மழை பெய்திருந்ததால் சாரளும் சேர்ந்து கொன்டு குளிரை அதிகப்படுத்தியது. உணவு ஆர்டரின் பேரில் அங்குள்ள சிறிய கேண்டீனிலேயே தயார் செய்து வழங்கப்படுகிறது.
இரவு உணவுக்குப்பின் வெகுநேரம், விடுதி அறையின் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதேதோ விநோதமான விலங்குகளின் ஒலிகளும், காட்டுப்பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டே இருந்தது. தங்கி இருந்த அறையின் பெயருக்கு ஏற்றார்பொல் அறைக்கு எதிரிலேயே ஒரு மிகபெரிய “பைசனை”-(காட்டு எருமை) காணமுடிந்தது, காட்டு எருமைக்கு நான்கு கால்களிலும் வெள்ளை காலுறை அணிந்தது போன்றிருக்கும். மேலும் இவை மூர்க்கமானது. சில நேரங்களில் இரை கொல்லிகளையே இவை திருப்பி தாக்க முயற்சிக்கும்.
அந்த வழியாக சென்ற ஒருவர் காட்டானைகள் இரவில் இந்த வழியாக வரும் உள்ளே சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை செய்து சென்றார். மதிப்பளித்து உள்ளே சென்று படுத்து விட்டோம். வெளியில் நல்ல மழை. செல்போன் சிக்னல் இல்லை. காட்டின் பறவை இசையை கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டோம். சற்று திரில்லாகத்தான் இருந்தது. ஆழ்ந்த உறக்கம், திடீரென முழித்துக் கொண்டேன். வெளியில் நல்ல மழை இருந்தாலும், கண்ணாடி வழியாக வெளியில் பார்க்க முடிந்ததால் அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு பார்த்து கொண்டிருந்தேன், இப்படி முழித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு நன்பர் பாவாவும் சேர்ந்து கொண்டார். வெளியே நிலா வெளிச்சத்தில் ஏராளமான மான்கள் மேய்ந்து கொண்டிருந்ததை பொறுமையாக பார்த்து கொண்டிருந்தோம். வார்த்தைகளில் வெளிக்காட்ட முடியாத அளவிற்கு உற்சாகம் சேர்ந்து கொண்டது. காடுதான் அழகு,
மீண்டும் ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையிலேயே குளித்து விட்டு காட்டுப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றோம். வெகு அருகில் இடது புறத்திலிருந்து வந்த ஒரு ஒலி எங்களை உலுக்கியது. அது ஒரு காட்டு யானையின் பிளிறல். காட்டு யானை ஒன்று அங்கிருந்த மூங்கில் புதர்களை ஒடிக்கின்ற ஒலியையும் அது வெளிப்படுத்திய ஒலியையும் கேட்ட ஒருவர், “காட்டாணை தனியா நிக்கிது, ஓரமா போங்க” என்று கூறிச்சென்றார்.
7 மணிக்கு வனத்துறையின் வாகனத்திலேயே ”கும்கி” யானைகளுக்கு உணவளிக்கும் இடத்திற்கு அவற்றை பார்க்க சென்றோம். செல்லும் வழி ஆழ்ந்த காடு, சிகரங்களை பணி உரசி செல்வதை வெகு அருகில் பார்ப்பதும், மலையிலிருந்து அழகாக பள்ளத்தை நோக்கி விழுகின்ற சிறு நதிகளையும் காண்பதற்கு கண்கோடி வேண்டும். கைடின் உதவியோடு பல காட்டுப்பறவைகளையும் பார்த்து ரசித்தோம். மயில்கள் நிறைந்து காணப்பட்டது. இவை நிறைந்திருப்பது காட்டின் ஆரோக்கியத்தை உணர்த்தும். தேவையான இரை உணவுகள் பல்கி கானப்படுவதும், மறைவிடங்கள் போதுமான அளவில் இருப்பதையும் மயில்களின் எண்ணிக்கையை வைத்து உணரலாம்.
கும்கி யானைகள் டாப்ஸ்லிப்பின் மற்றொரு சிறப்பு. இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் அத்து மீறி நுழையும் யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதற்கும். காட்டு யானைகள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது அவற்றை மீட்பதற்கும் பயன்படுகின்றன. சேறு படிந்து காணப்படும் இவைகள் கோயிலில் நிற்கும் நோஞ்சான் யானைகளை போலல்லாமல் கம்பீரமாக, வனப்பாக கானப்படுகின்றன. கிட்டத்தட்ட 13 யானைகள் இங்கு இருக்கின்றன. புதிதாக வந்துள்ள “வெங்கடேஷ்” என்ற யானை பாகனுக்கு கட்டுப்படாத காரனத்தால் தனியே நிறுத்தி வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை அருகில் சென்று பார்க்கும்போது ”ஜெயமோகனின்-மத்தகம்” நினைவில் வர சில நிமிடங்கள் திகைத்து நின்றோம். யானைகளின் கம்பீரத்தை அதனை மிக அருகில் பார்க்கும்போது ஏற்படும், பதைபதைப்பின் மூலம் மிக அழகாக உணர முடிந்தது. கேரள மக்கள் இவ்வகையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களின் அன்றாட வாழ்வில் யானைகளும் இனைந்தே இருக்கிறது.
பொறுமையாக ஒவ்வொரு யானையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தேன். இவை வளர்ப்பு யானைகளாகவே இருந்த்தாலும், காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிக்கப்பட்டிருக்கின்றபடியால், அவற்றில் இன்னமும் அந்த feral state இயல்பாக இருப்பதை உணர முடிகிறது.. பாகனுக்கு கட்டுப்படும் யானையையும், என்னதான் கட்டுப்பட்டாலும், மிகவும் எச்சரிக்கையுடன் கையாளும் பாகனையும் கானும்போது, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.
பிரிய மனமில்லாமல் மீண்டும் வனத்துறை வண்டியில் அமர்ந்து, என்னை அறியாமல் கைகளை அசைத்து விடைபெற்றுக்கிளம்பினேன். இப்போது லேசான மழையில் வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வரும்போது ஓயாமல் பேசிக்கொண்டிருந்த அனைவரும், இப்போது ஜன்னல்களுக்கு வெளியே அமைதியாக பார்த்து கொண்டே வந்ததை கண்டு அனைவரின் மனநிலையையும் உணர முடிந்தது.
விடுதிக்கு திரும்பி காலை உணவை முடித்துக்கொண்டு பரம்பிக்குளம் செல்வதற்காக மீண்டும் எங்கள் வாகனத்தில் அமர்ந்தபோது மனம் மிகவும் அமைதியாக உணர்ந்தது..........
No comments:
Post a Comment