Tuesday, December 29, 2009

பைத்தியமாதலின் புதிர்கனங்கள்

                       லட்சுமி சரவணகுமார்
           நாம் மனரீதியாக சரியாக இருக்கிறோமென்பதனை நாமே உணர்ந்து கொள்வதைவிடவும் பிறரின் மூலமாக தெரிந்துகொள்வதே யாதார்த்தமாய் இருக்கிறது, மாறாக நாம் சரியாயிருக்கிறோமோ என்கிற கேள்வி நமக்கு எழுகிறபொழுது சிறியதாக ஏதொவொன்று நமக்குள் சேர்ந்துவிடுகிறது அல்லது நீண்ட நாட்கள் இருந்தவை வெளியே செல்ல நேரிடுகிறது. பெரும் நெருக்கடிகள் சூழ்ந்த இன்றைய சூழலில் நோயாளிகளாக்கப் படுபவர்களின் எண்ணிக்கை நாம் கற்பனை செய்யமுடியாத ஒன்று. ஒவ்வொரு வருடமும் புதியதொரு நோயை உலகின் மருந்து வியாபாரிகள் அறிமுகப்படுத்தி அதற்கான தற்காப்பிலும் சிகிச்சயிலும் பல மில்லியன் டாலர்களை சம்பாதிப்பவர்களாய் இருக்கிறார்கள். ஆக இங்கு நடக்கிற எல்லா விசயங்களையும் எக்கனாமிக்கலாகவே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.


                   மிகச்சில வருடங்கள் அந்தரங்கமாக என்னைச் சலனப்படுத்திய சில சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு கேள்வி தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ஒருமனிதன் தன் இயல்பினைத் தவறவிட்டு மனோரீதியாக பாதிக்கப்படும் குறிப்பிட்ட கனம் என்னவாயிருக்கும்? நிச்சயமாக விடைத் தேடப்பட வேண்டிய இக்கேள்விக்கு எவ்வளவு தூரம் பதிலிருக்குமென்று தெரியவில்லை. இது சில வருடங்களுக்கு முந்தைய ஒரு சம்பவம், அப்பொழுது இரவு நேர ஆடியோ கேசட் கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். காலை எட்டுமணியிருக்கும், ஒரு சிறுவன் கடை வாசலில் வந்து நின்றவன் பசிக்கிதென்றும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருமாறும் கேட்டான். முந்தைய தின இரவிலிருந்தே அவனைக் கவனித்திருந்தேன் தான், ஒருவேளை ஏதாவது லாரி கிளீனராக இருக்கக் கூடுமென பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நானும் நண்பனுமாகச் சேர்ந்து கொஞ்சம் இட்லிகளை வாங்கிக்கொடுத்தோம். அவனிடம் பேசின கேட்ட எதற்குமே பதில் சொல்லாதவனாய் இருந்தான். சாப்பிட்டு முடித்தவன் கடையை ஒட்டியே படுத்தும்விட்டான். சரிபோகட்டுமென்று விட்டுவிட்டு ஷிஃப்ட் முடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்டேன். மீண்டும் இரவு திரும்பி வருகையில் அப்பொழுதும் அவன் அங்கிருந்து போயிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் சாப்பாடு வேண்டுமென கேட்டு நிற்கவும்தான் கொஞ்சம் கலக்கமாகத்துவங்கியது. ஏனெனில் நான் அப்பொழுது வாங்கினதே முப்பத்தைந்து ரூபாய்ச் சம்பளம்{இதற்கு இரவு 9 மணியிலிருந்து காலை 9 மணிவரை கடையில் இருக்க வேண்டும்} வேறு வழியில்லாமல் உணவு வாங்கிக்கொடுத்து விட்டு வேலையைக் கவனிக்கத்துவங்கி விட்டேன். தொடர்ந்து இதைச் செய்யமுடியாது எனபதுடன் அவனை அங்கிருந்து அனாதரவாக விரட்டி விடுவதற்கும் மனதில்லை. யோசனைக்குப் பின்னால் மதுரையிலிருக்கும் ஒரு சைல்ட் கேர் செண்டருக்குத் தகவல் சொல்லி வந்து கூட்டிப்போகச் சொன்னேன். மறுநாள் காலையில் கூட்டிப்போவதாகச் சொல்லிவிட்டார்கள். மீண்டும் காலையில் நினைவுபடுத்திவிட்டு முகவரியையும் சொல்லி வரச்சொல்லி பிறகு அவர்கள் வரும்வரை காத்திருக்க முடியாமல் நான் வீட்டிற்குப் போய்விட்டேன். இரவு வந்த பொழுதுதான் இவனைக் கூட்டிப்போக வந்தவர்கள் காலில் முடி அடர்த்தியாக வள்ர்ந்துள்ளதென்றும் வயது சிறிது அதிகமாக இருக்கலாமென கூறி அழைத்துப்போக மறுத்துவிட்டதாகக் கூறினார்கள். அவனும் சாய்ந்தரத்திற்குமேல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். அதன்பிறகு சில நாட்கள் அவனை எங்குமே பார்க்க முடியவில்லை. ஒரு நாள் மாலையில் நூலகத்திலிருந்து திரும்பி வருகையில் நகரின் பிரதான வீதியில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு அல்லது கிழிபட்டு ஏதேதோ பினாத்தியபடி குறுக்கும் நெறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தான். சில நிமிடங்கள் அதிர்சியாக இருந்தும் எதுவுமே செய்ய முடியாத இயலாமைதான் அப்பொழுது மிஞ்சியிருந்தது. எது அவனை பைத்தியமாக்கியிருக்கக் கூடும் பசியா? அல்லது தனக்கு ஒருவருமில்லை என்கிற வெறுமையா? அல்லது இதைத்தாண்டி வேறு ஏதோவொன்று ஒளிந்துகிடக்கிறதா?
            நாய் பூனைகளைப் பராமரித்து வளர்க்கிற எவ்வளவோ பேருக்கு ஏன் இதுமாதிரியாக நிராதரவான மனிதர்களை பராமரிக்க வேண்டுமெனத் தோன்றுவதில்லை. சாலையில் பின்னிரவில் கடுங்குளிரிலும் மழையிலும் ஒதுங்குவதற்கான எந்த இடங்களும் இல்லாமல் அல்லாடும் முதியவர்களும் குழந்தைகளும் நம்மைச் சுற்றியே நிரைய இருக்கிறார்கள். பாதுகாப்பான நமது வீடுகளின் சுவர்களுக்கு அப்பால் எதையுமே பார்க்கத் தெரியாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறோம். சாலையில் நம்மிடம் கையேந்துகிறவர்களிடம் பிச்சை கொடுப்பதை மறுக்கும் கொள்கையுடையவன் என வியாக்கினம் பேசிவிட்டு பியர்போத்தல்களுக்கு செலவளிக்கும் அறிவுஜீவிகள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு நேர்மையான தூய்மையானவர்களாய் இருந்தாலும் மதிக்கத் தகுதியற்றவர்கள். அனிச்சையாய் கையிலிருந்து எடுத்துக் கொடுக்கிற ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் நாணயத்தில் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை நண்பர்களே. சென்னையின் மின்சார ரயிலில் நாள்முழுக்க பயணம் செய்துபாருங்கள், ஒரு நாளைக்கு எத்தனையாயிரம் பயணிகளிடம் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு நிற்கிறார்கள். எவ்வளவுபேர் இதில் கொடுப்பவர்களாக இருக்கிறார்களென கவனித்தால் அதிர்ச்சியடையக்கூடும். மூன்று நான்கு வயது சிறுமிகள் கையேந்தி நிற்கையில் மிக மும்முரமாக செய்தித்தாள் மயிரை படிக்கிற பாவனையில் நமது கனவான்கள் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பார்கள். சிலதினங்கள் இவற்ரையெல்லாம் பார்த்தே கடும் மன உளைச்சல்தான் மிஞ்சியது. கிண்டி ஸ்டேசனை வண்டிக் கடக்கிறது காசுகேட்டு நின்ற சிறுமியை இருக்கையில் அமர்ந்தபடியே அடுத்த இடம் பார்க்கச் சொல்லி ஒருவன் தள்ளிவிடுகிறான். ஒருவரும் வாய்திறந்து ஒருவார்த்தைக் கேட்பதற்கில்லை, இதில் இந்த காதலிக்கிற மயிராண்டிகளின் தொல்லை வேறு. ஏனோ அதிகமாக கோபமேபடாதவன் அன்று வந்த ஆத்திரத்தில் சகட்டுமேனிக்குத்திட்டத் துவங்கிவிட்டேன். யாரையும் நான் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதில்லை நிச்சயமாக அவனும் யாரிடமும் அவ்வளவு திட்டு வாங்கியிருக்க மாட்டான். அவசரமாக கோடம்பாக்கம் ஸ்டேசனில் இறங்கி ஓடிவிட்டான்.
          எழுதிற விசயம் வெவ்வேறு இடங்களுக்கு மாறுவதாக உங்களுக்குத் தோன்றலாம். அடிப்படையில் எல்லாவற்றிற்குமே சம்பந்தம் இருக்கிறது. சில தினங்களுக்கு முந்தைய ஒரு சம்பவத்தை சொன்னேன்றால் இன்னும் அதிர்ச்சியாகக் கூட இருக்கும். மயிலாடுதுறையில் நடந்த சம்பவம். அலுவகங்கள் பள்ளி கல்லூரிகள் முடிந்து வீடு திரும்புகிற மாலை நேரம் நகரப்பேருந்துகளின் ஆராவாரங்கள் மிகுந்து கிடக்கும் முக்கியவீதி பேருந்திலிருந்து இரங்கிய ஒரு இளம்பெண் அதிகமாகப்போனால் இருபது வயதுகூட இருக்காது. அவ்வளவு அழகானவள்,கல்லூரி முடிந்து திரும்பியிருப்பாளாயிருக்கும். திடீரென சத்தமாக சிரித்தவள் உடைகளையெல்லாம் கிழித்துவிட்ட நிர்வாணமாக அந்தச் சாலையையே சுற்றி வந்தாள். அவ்வளவு பரபரப்பும் சில நிமிடங்களில் அடங்கிப் போனதோடு எல்லா வாகனங்கலையும் நிறுத்திவிட்டார்கள் ஒரு பெண்ணின் ரெளத்ரமான சிரிப்பொலி மட்டுமே இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு கேட்குமளவிற்கு நிலவிய மெளனமது. உண்மையில் அவளின் சிரிப்பும் நிர்வாணமும் சுறியிருந்த அத்தனைபேருடைய பிரதிபலிப்புதான். அந்த வயதில் ஒரு மகள் இருப்பவர்களும் அல்லது அக்கா தங்கைகள் இருப்பவர்களும் அல்லது காதலியை நினைவுபடுத்தக் கூடியதுமான பேரதிர்ச்சிதான்.சற்றேறக்குறைய முக்கால் மணிநேரத்திற்குப்பின் மகளிர் காவலர்கள் வந்து அவளை மீட்டெடுத்தனர். அங்கிருந்தவர்கள் இயல்பிற்குத் திரும்பி கலைந்த நொடி மாபெரும் வன்முறை நடந்து பெரும் சேதங்கள் விளைவித்த சோகத்துடந்தான் இருந்தது. அவ்வளவு அழகானவளுக்கு அப்படியென்ன சுமை இருந்திருக்கும்? தன்னிடமிருப்பதை பேசுவதற்கு பகிர்ந்துகொள்வதற்கு ஒருவர்கூடவா இல்லாமல் போய்விட்டார்கள். மறுநாள் பத்திரிக்கையில் செய்திபோடுகிறான் நடுவீதியில் இளம்பெண் நிர்வாண ஓட்டமென்று. எதை செய்தியாக்குவது என்கிற மனிதாபிமானமில்லாமல், அப்படி ஓடியது செய்திபோட்டவனின் மனைவியாக இருந்திருந்தால்?

                 நான் சொல்கிற சம்பவங்கள் வெறுமனே சாம்பிள்கள்தான் நிஜம் இதைவிடவும் தீவிரமானது. கவிஞனும் நண்பருமான ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் பசிமிகுந்த ஒரு பிற்பகலில் உணவு ஏற்படுத்திய தவிப்பு என்னை முக்கால் பைத்தியமாய் ஆக்கிவிட்டிருந்ததென்றார். இப்படி எவ்வளவோ கனங்கள் காரணங்கள் இருக்கின்றன. மிலொஸ் ஃபோர்மெனின் one flew over the cuckoos nest படம் பாருங்கள். சைக்காலஜிக்கலாகவும் போலித்தனமான தத்துவங்களின் பின்னாலிருக்கும் மனிதவாழ்விற்குமான போதாமையும் படம் முழுக்க சென்றிருக்கும்.{ எனக்கும் விருப்பமான திரைப்படங்களைப் பற்றி எழுத ஆசைதான், ஆனால் ஒருசிலர் திரைப்படங்கள் குறித்து எழுதுவதைப் பார்த்தால் உலக திரைப்படங்கள் குறித்து எழுதுகிற இவர்களைவிட குமுதம் குங்குமம் வகையறா சினிமா விமர்சனங்கள் மேலெனத் தோன்றுகிறது. சத்தமாக சொன்னால் பஞ்சாயத்து எனக்கெதற்கு ஊர்வம்பு.} வாழ்வின் மீது கொள்ளும் விசாரணை, நாம் எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத நுணதிகார மையங்களால் கண்கானிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வருவதை மீறித்தான் சுயமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.
                      இதெல்லாம் எனக்கு நேர்வதற்கான எந்த சாத்தியங்களுமில்லையென நீங்களோ நானோ எதையுமே இன்று தவிர்த்துவிட முடியாது. நாம் தப்பித்தலின் கனத்தில்தான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஸ்டவசமாக அல்லது அதிர்ஸ்டவசமாகவோ மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரேயொரு தினம் என்னவெல்லாம் நடக்க சாத்தியமிருக்கும். கொஞ்சம் வசதியானவர்களாய் இருந்தால் மருத்துவமனை அல்லது காஸ்ட்லியான ஜிகினா சாமியார்களின் மடம் இப்படி கரைசேர்த்தலுக்கான முயற்சி நடக்கும். இதுவே வசதியில்லாதவர்களாய் இருந்தால் இருக்கவே இருக்கு சாமியென்று எப்பொழுதும்போலவே அவனை நடத்தத் துவங்கிவிடுவார்கள். ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது அக்கம்பக்கம் ஆறுதலென்கிற பெயரில் மொத்தக் குடும்பத்தையும் பைத்தியமாக்கி விடுவார்கள். சர்வ நிச்சயமாய் இதுதானென காரணம் கூறிவிடமுடியாதுதான் யோசிக்கையில் ஒன்றுமட்டும் தோன்றுகிறது, பைத்தியமாதல் சிலருக்கு வாழ்வின் திரும்பமுடியாத பாதைக்குள் பயணம் செய்யத்துவங்குவதைபோல் ஆகிறது, இன்னும் சிலருக்கு சகிக்கவியலாத வாழ்வின் துயரங்களிலிருந்து விடுதலையாகி விடுவதாக இருக்கிறது………

நன்றி-லட்சுமி சரவணகுமார்

No comments: