Wednesday, January 20, 2010

சௌந்தரசுகன்- இலக்கிய மாத இதழ் Soundarasugan

சௌந்தரசுகன்- இலக்கிய இதழ்





1987 ல் தொடங்கி இன்றுவரை திங்கள் தோறும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இலக்கிய இதழ் ’சௌந்தரசுகன்’. சனவரி 2010 இதழ்


சுகனின் 272 வது இதழ். 23 ஆண்டுகாலமாய் வாசகர்களின் பார்வையில் பயணித்து வருகிறது சுகன்.


வாசகனின் இரசனைக்கு எற்ற இதழ் அல்ல சுகன்.வாசகனுக்கு புதிய புதிய இரசனைகளை கொண்டு வந்து சேர்க்கும் இதழ் சுகன்.


தரமான எந்தப் படைப்பும் பெயரின் ஒளிவட்டம் பார்க்காது சுகனில் வரும்.


உங்களுக்குப் பிடித்த உங்கள் உயர்ந்த படைப்புகளை சுகன் இதழுக்கு அனுப்பலாம்.


விளம்பரங்கள் வாங்கிப் போடுவதில்லை.எதற்காகவும் சமரசம் செய்துக் கொள்வதுமில்லை.


சுகன் இதழின் ஆண்டுக் கட்டணம் ரூ.120,அரையாண்டுக் கட்டணம் ரூ.60,தனி இதழ் ரூ.10.


சுகன் இதழுக்கு ஆண்டுக் கட்டணம் கட்ட விரும்புகிறவர்கள் சு.சௌந்தரவதனா என்கிற பெயருக்கு தொகையை அனுப்பி வைக்க


வேண்டும்.வங்கி மூலம் செலுத்த விரும்பினால் விபரங்கள்-
கணக்கின் பெயர் - சௌந்தரசுகன்
கணக்கு எண் - cDCC 5306
கிளை - I.O.B வங்கி, நீலகிரி வட்டக்கிளை எண்-212, தஞ்சாவூர்.


கட்டணம் அனுப்புகிறவர்கள் முகவரியை அவசியம் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி- soundarasugan@gmail.com
பிளாக்-  எழுதுகோலால் எண்ணக்கண் திறப்போம்


அனைத்து தொடர்புகளுக்கும்


சு.சௌந்தரவதனா
சி-46 இரண்டாம் தெரு,
முனிசிபல் காலனி,
தஞ்சாவூர் - 613 007


மேலும் சுகன் பற்றிய தகவல்களுக்கு அடியேனின் மெயில் ஐடி - mayilravanan@gmail.com

Monday, January 18, 2010

வெறுங்குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம்-வா.மு.கோமு

உங்களுக்கு தெரியப்படுத்த....


மகாத்மாவை தெரிய வருகிறது
உங்களுக்கெல்லாம்
ஆனால் பாருங்கள் பகத்சிங்கை
யாரெனக் கேட்கிறீர்கள்.
அப்படியாயின் கிடக்கட்டும் விடுங்கள்.
-தகவல் ஒன்று.
சுள்ளிமேட்டு ராமசாமி தி.மு.க. காரன்
பாவம் கிட்னி பெய்லியராகி செத்துப்போயிட்டான்.


-தகவல் இரண்டு
அத்திக்காடு சின்னச்சாமி மதிமுக காரன்
பாவம் எழுச்சி பேரணிக்கு
மெட்ராஸ் போறச்சே லாரி மோதி
வைகுந்தம் போயிட்டான்.


-தகவல் மூன்று.


பெரியபுளியம்பாளையம் சுப்பு இந்தா இருக்கே
புளியமரத்திலே சுருக்கு மாட்டிட்டு செத்துட்டான்.
நெஞ்சுல ரெட்டெல பச்சை குத்தியிருந்தான்.


மகாத்மா,பகத்சிங்க்,ராமசாமி,சின்னசாமி
அல்லாருமே செத்துப் போயிட்டாங்க!
நீங்கெல்லாம் மூச்சு வாங்குற காத்துல
கார்பண்டை ஆக்சைடு
இருக்காமா கவலப்படாதீங்க!


==============================================
திருவிழா முடிந்த வீதி


தைப்பூச விழாவுக்காக வீதி சுற்றி
வந்த தேர் அலைக்கழிப்பு முடிந்தானபின்
அமைதியானது தேர்முட்டியில்!
எதை எடுத்தாலும் பத்து ரூபாய் சாமான்காரர்கள்
அவ்வப்போது கடந்து போகும் பயணிகளை
நம் கடைக்குத்தான் வுருகின்றனரா
எனப் பார்த்து ஈ ஓட்டினர்.
சாலையெங்கும் கரும்புத் தோகைகள்
மிட்டாய் காகிதங்கள் மீந்திருந்த
மக்காச் சோளங்கள் என இறைந்து கிடந்தன.
தைப்பூச சிறப்பு பேருந்துகள்
அதனதன் ரூட்டுக்கு சென்றுவிட்டன.
முதலியார் வீட்டு பேரக்குழந்தை
உடைந்து போன பலூனை
வாயில் சப்பி மென்று கொண்டிருந்தது.
இன்று ஏதவது தேறுமாவென
மொட்டை முனிசாமி கையில் வதங்கிய
அலுமினியப் போசியோடு சில்லறைக்காய்
வீதிக்குள் கால் வைத்தான்,
பொம்மை கடைக்காரனின் பொம்மை அழுதது
விளையாட ஒரு குழ்ந்தை வேண்டுமென!
பஸ் நிறுத்தத்தில் பாலுக்காய் அழும்
குழந்தையை இடுப்பில் வைத்தபடி
வற்றிய முலை பார்த்து
பெருமூச்சு விட்டாள் பிச்சைக்காரி.
ஏதோ ஒரு வீட்டினுள்ளிருந்து
“இன்னைக்கும் இட்லியா?”
என்றொரு குரல் கேட்டது.
தெருவில் நின்றிருந்த கருநாய்
யாராவது மொபெட்டில் போனால்
கடித்தத் துரத்தலாமென
தருணம் பார்த்து நின்றது!


Saturday, January 16, 2010

We Were Soldiers போரின் மறுபக்கம்

                                                            -மயில்ராவணன்
நவம்பர் 1965 வியட்னாம் டிராங்க் பள்ளத்தாக்கு(மரணப் பள்ளத்தாக்கு)ல் நடந்த உண்மைச்சம்பவங்கள்.இந்த கதை வியட்னாம் வீரர்களுக்கு காணிக்கை,அமெரிக்க வீரர்களுக்கு testament என்ற வரிகளுடன் படம் ஆரம்பிக்கிறது.

இந்த கதையை சொல்வதானால் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஃப்ரெஞ்ச் படை 1954ல் நடத்திய தாக்குதலை 5 நிமிடம் தான் காண்பிக்கின்றனர்....திரை முழுதும் இரத்தம் ஓடுகிறது.வியட்னாம் வீரர்கள் எளிதாக வெல்கின்றனர்.


ஹெரால்ட் மூரின் ‘We Were Soldiers Once......And Young' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு அருமையான திரைப்படம் தான் ‘we Were Soldiers'.’Braveheart' படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்தாவான 'Randall Wallace'இப்படத்தை இயக்கியிருக்கிறார்.இவர் அமெரிக்காவின் பிரபல நாவலாசிரியரும் கூட.

மெல்கிப்ஸன் லெப்டினன்ட் கர்னல் ஹால்மூராக வாழ்ந்திருப்பார்.அவர் மனைவியாக வரும் மேடலின் ஸ்டொய் படம் முழுவதும் அழுவாச்சிதான்.சர்ஜண்டாக வரும் ஸாம் எலியட் படம் முழுவதும் மெல்கிப்ஸனோடைய வருவதால் அவரும் முக்கிய பங்கு வகிக்கிறார்.போர்க்களத்தில் நொடிப்பொழுதில் முடிவுகள் எடுத்து உத்தரவுகள் பிறப்பிப்பதனாலும் சரி சிறு குழந்தைகளின் தகப்பனாகவும் சரி,மனைவிக்கு நல்ல கணவனாகவும் சரி,கதாபாத்திரத்தின் கணம் அறிந்து நடித்திருப்பார் மெல்கிப்ஸன்.

ஹால்மூர்(மெல்கிப்ஸன்) புதிதாக கலோனலாகப் பதவியேற்று தன்னுடைய அனுபவமில்லா படையினருக்கு பலவிதமான போர்த்தந்திரங்களையும், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் விமானப்படையைப் பற்றியும் விளக்குகின்றக் காட்சி,சர்ச்சில் ஹால்மூரும் அவரது படைவீரர் ஒருவருக்கருமான உரையாடல்-பின்பு அவ்வீரன் போரில் இறந்து கிடக்கும் போது அவன் கையில் இருக்கும் ஜெபமாலையைப் பார்த்து அடையாளம் கண்டு கண்கலங்கும் காட்சி,ஹால்மூர் மற்றும் இதர வீரர்கள் வீட்டைவிட்டு நள்ளிரவில் மனைவியரைவிட்டு பிரிந்து போருக்கு கிளம்பும் காட்சி,போரில் எரிந்து போன நண்பனை இழுக்கும்போது சதை கையோடு வரும் காட்சி-அந்த சமயம் பிண்ணனியில் வரும் flute இசை இன்னும் எத்தனையோ நெஞ்சைவிட்டு நீங்காத காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

வீட்டில் இருக்கும் சமயத்திலெல்லாம் 1950ல் ஃப்ரெஞ்ச் படைக்கும் வியட்னாம் படைக்கும் நடைபெற்ற போர் பற்றிய நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறான்.  
போர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அமெரிக்கப் படையை நிலைகுலைய செய்கின்றனர் வியட்னாம் வீரர்கள்.நெடிய மலைகளும்,புட்புதர்களும் வியட்னாம் படையினர்க்கு சாதகமாக இருக்கின்றன.

இருப்பினும் அமெரிக்கப் படையினரின் புதிய விமானப்படையைக் கொண்டு ஓரளவு சமாளிக்கின்றார் கலோனல் ஹால்மூர்.ஒவ்வொரு முறையும் ஹால்மூர் பலவாறு வியூகங்கள் அமைத்து போரிட்டாலும் வியட்னாம் வீரர்கள் இவர்களை வளைத்து வளைத்து தாக்குகின்றனர்.இதற்கிடையே இவர்களுடன் வந்த ஒரு நிருபர் போர் படக்காட்சிகளைப் பதிவு செய்துகொண்டிருக்கிறான்.ஒரு கட்டத்தில் போரின் உக்கிரம் அதிகமாகவே நிருபரிடம் அமெரிக்க அதிகாரி  துப்பாக்கி,குண்டுகள் தந்து போரிடச் செய்கிறான்.
ஹால்மூர் கடைசியில் ‘Broken Arrow broken arrow' என்று 4,5 முறை ஆபத்து செய்தியை base stationக்கு அறிவித்ததும் அதிபயங்கரமான போர் விமானங்களை அனுப்பி குண்டு மழை பொழிகிறது அமெரிக்க ராணுவம்.
போர் மூர்க்கமாகப் போய்க்கொண்டிருக்கிறது.வியட்நாம் படைத்தலைவனும் பின்னால் இருந்து தாக்குமாறு பல வழிகளைக் கூறியவண்ணம் உள்ளான்.ஒருகட்டத்தில் அமெரிக்க ரணுவத்தின் கை ஓங்குகிறது.

வியட்னாம் படைத்தலைவன் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு 
ஓடுகிறான்.பிணக் குவியல்களும்,கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலும் மலை போல கிடக்கின்றன.நிருபர்கள் வேறு இவையனைத்தையும் பார்வையிடுகின்றனர்.மெல்கிப்ஸன் குலுங்கி குலுங்கி அழுதுவிட்டு மிச்சமுள்ள வீரர்களுடன் ஊர் திரும்புகிறான்.இறுதிக்காட்சிகளில் வரும்இசையும்,ஒளிப்பதிவும்,ஒலிப்பதிவும் நனி நன்று.

இறுதி 15 நிமிடங்கள் ரொம்ப அருமையாக கொண்டுபோயிருப்பார்கள்.
வியட்னாம் படைவீரன் களத்தைப் பார்வையிடுதல்,மெல்கிப்ஸன் வீடு திரும்புதல்,கல்வெட்டு ......etc..etc..

இது வியட்னாம் போரில் பங்குபெற்ற அமெரிக்க ராணுவம் பற்றி மட்டும் கூறவில்லை,மாறாக வியட்னாம் படையினரையும் சிறந்த வீரர்களாகவும்,
நேர்மையானவ்ர்களெனவும்,போரின் தாக்கங்கள்,பின்விளைவுகளையும் சோகத்தையும் படைவீரர்களின் மனைவியர் படும் துன்பத்தைச் சித்தரிக்கும் படமாகவும் உள்ளது.நிறையக் காட்சியமைப்புகள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின்
‘Saving Private RYAN'ஐ ஞாபகப்படுத்துகின்றன.இருப்பினும் இதுவும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.

இந்த படத்தின் ட்ரைலர் இங்கே
மேலும் இப்படம் பற்றிய தகவல்களுக்கு இங்கே இருக்கு.


டிஸ்கி:
வித்தியாசமான war cinema.போர்க்களத்தை மட்டும் காண்பிக்காமல் parallel ஆக அவர்களின் குடும்பத்தையும் அவர்கள் படும் துயரததையும் சேர்த்துக் காண்பித்திருக்கிறார்.சமயத்தில் அதுவே சில நேரத்தில் தொய்வையும் ஏற்படுத்துகின்றது.

Friday, January 15, 2010

ஷாராஜ் கவிதைகள்


என்னால் நிச்சயமாக
சொல்ல முடியும்
நான் காணாமல் போய்விட்டேன் என்று
நம்புவது உங்களுக்கு சிரமமாகலாம்
நேரில் நானே தெரிவிப்பதால்
ஒருவேளை நீங்களும் இதை
உணர நேர்ந்தால் அறிவீர்கள்
என்பதும் உறுதி, ஒரே ஒரு சந்தேகம்
காணாமல் போவதற்கு முன்பு- நான்
இருந்தேனா என்பது மட்டும்.
--------------------------------------------------------------

வந்தமர்கின்றன நீலங்கலந்த சாம்பல் நிறம்
கழுத்தசைவில் பச்சை மெஜண்டா
கருநீலம் எனக் குழம்பி மின்னச்சிலதும்
கறுப்பில் சிலதும் - இரண்டும் கலந்து சிலதுமாய்
கோபுரத்தில் புறாக்கள்.
ஆகாசத்தின் விரிந்த மனசையா
இரைதேடிச் சலித்ததையா
எதைப்பேசி முணுமுணுக்கின்றனவோ
தங்களுக்குள்,
அண்ணார்ந்து பார்க்கும் கண்களுக்குச்
சிக்குவதில்லை புறாக்களின் ரகசியமொன்றும்
கோபுரத்து பொம்மைகளுக்குமப்படியே
உற்றுப்பார்த்தால் இன்னொன்றும் தெரிகிறது
எள்ளலா விகசிப்பா எனவறியாதபடிக்கு
உறைந்திருக்கும் அப்பொம்மைகளின்
காரைப் புன்னகை.
---------------------------------------------------------------------


Wednesday, January 13, 2010

தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்க்ள்..........
                        ---------------------------------------
தேடியபோது கிட்டாது
கிட்டினாலும் நிறைவளிக்காது
நிறைவு தந்தாலும் பொருள் தராது
பொருள் தந்தாலும் சுகம் தராது
சுகமே தந்தாலும் நிலை நிற்காது
நிலை நின்றாலும் நானாகாது என்று
தெரிந்தும் இவைகளை எழுதிய நான்
இன்றும் எனக்குப் புதிதே
எளிதே ! பயமே !
--------------------------------------------------------
காலம் மனிதனைத்
தின்று கொண்டிருந்தது.
மனிதர்கள்
காலத்தை நொறுக்கிக்
கொண்டு இருந்தார்கள்.
காலம் என்பது
கற்பனை.
அதில்
இன்னொரு கற்பனை
மனிதன்.
--------------------------------------------------------
        தூசிபடலம்
கனவு காண்பதென்
வாழ்க்கை !
வாழ்வதல்ல !
வாழ்வதென் வழி 
விதிக்கப்பட்டது
விதி யாயல்ல
பிறக்கவில்லை என்
வாரிசு !
வேண்டவில்லை என்போல்
இன்னொருவன்
கனவை நனவாக்குவதென்
சிரமம்
சிரமமே எல்லாமல்ல
இருண்டு கிடக்குதென்
பாதை.
போகும் பாதி எனின்
நானே அஃதல்ல
ஒளிவேண்டிப்பறப்பதென்
சிறகு !
கண்ணறியாது என் இருபுறமும்
வீசுது பயனற்று
வானம் எனக்கு
மண்
விளைவது என்
உயிர்
பழம் பழுக்குது
நுனியில்
என் கால்களோ
புழுதியில்
ஆம் என்
புழுதியே நான் மீதியாய் !