Tuesday, September 21, 2010

எனக்கு சாருவை பிடிக்காது…

                                          - கோகுல்
ஆம். எனக்கு சாருநிவேதிதாவைப் பிடிக்காது. இன்றைக்கு நேற்றல்ல கடந்த 7 வருடங்களாக பிடிக்காது. ஆனாலும், என்ன செய்வது, இந்த எழுத்து சாத்தானை படிக்க நேர்ந்து 7 வருடங்கள் ஆகி விட்டதே! நானும் இன்றே இப்படம் கடைசி என்பதை போல இனி இவர் எழுத்தை படிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டு வேறு ஏதேதோ வேலைகளில் மூழ்கி விடுவேன். ஆனால் மூன்றாவது நாள் டாஸ்மாக்கை கடக்கும் குடிகாரனின் கை நடுங்குவதை போல எனது கை தானாக சாருஆன்லை வெப்சைட்டை ஓபன் செய்யும். தீபாவளி ரிலீஸுக்கு தலைவர் படம் பார்க்கும் ரசிகனைபோல மூன்று நாட்கள் அவர் எழுதிய அனைத்தையும் மூன்று மனி நேரம் படிப்பேன்.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்காது. ஏனென்றால் அவர் குடிப்பார். பெண்களைப் பற்றி பேசுவார். ஆம், நான் உத்தமன் தான். எனக்கு சினிமாவில் அரை நிர்வாணத்தில் வரும் பெண்களையும், குடித்து விட்டு பாட்டு பாடும் ஹீரோக்களையும் மட்டுமே ரசிக்க முடியும். எழுத்தாளர்களெல்லாம் குடிக்க கூடாது. அவர்கள் சமூக சீர்திருத்த வாதிகள். குடியையும் பெண்ணையும் பற்றி வர்ணிப்பதால் மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் என்றெல்லாம் பல குற்றச்சாட்டை எனது மனமும் முன் வைக்கும். ஆனாலும், நன்பரிடமிருந்து “தயாரா இரு, இன்னும் ஒரு மணி நேரத்தில கிண்டி வழியா நானும் சாருவும் வருவோம். அப்படியே ஈ.சி.ஆர் போகலாம்” என்ற குரல் செல்ஃபோன் வழியாக வரும் வரைதான். அதற்குப்பிறகு இந்த யோக்கிய சிகாமணி , ”சாரு வேற செம காஸ்டியூம்ல வருவாரே, நாம இந்த புளூ ஜீன்ஸ் போடலாமா இல்ல அந்த கார்கோஸ் போட்டிட்டு போகலாமா” என்ற ரேஞ்சில் தான் இருக்கும். அது குடிப்பதற்கான ஆர்வமோ அல்லது ஒரு பிரபலத்தை சந்திக்கப் போகும் ஆர்வமோ அல்ல. வேறொன்று….
                                
ஆனாலும் இன்னும் எனக்கு சாருவை பிடிக்காது. அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியும். எழுதும் அனைவருக்கும் பேசும் கலை அவ்வளவு எளிதில் வசப்படும். அவர்கள் பேச ஆரம்பித்தால் ஒன்று தூக்கம் வரும் , இல்லையேல் மூத்திரம் போக தோன்றும். ஆனால் இந்த சாத்தான் பேச ஆரம்பித்தால், வெறும் லெமன் மட்டும் அருந்தும் எனக்கே டேபிளில் உள்ளவற்றில் என்னுடைய லெமன் கோப்பை எங்கே என்னும் அளவிற்கு குழப்பம் வரும். அது காற்றில் கலந்திருக்கும் ஒயின் வாசனையால் மட்டுமல்ல பேச்சில் கலந்து வரும் போதையால்.
                             
என் மனசாட்சிக்கு இன்னும் சாருவைப் பிடிக்காது. எழுத்தை திறந்தாலே கெட்ட வார்த்தைகள். என்ன செய்வது ஒரு கெட்ட வார்த்தை கூட பேசாத எனக்கு சிக்னலில் காரை இடித்த படி வந்து நிற்கும் பைக் காரனையும், டிரெயினில் உரசிக் கொண்டு நிற்பவனையும் மட்டுமே, மனதுக்குள் ஆயிரம் கெட்ட வார்த்தைகளால் திட்ட தெரியும். அது நாம் நமக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு. வெளியில் மட்டுமாவது நல்லவனாக காட்டிக் கொள்ள விழையும் மனதின் வெளிப்பாடு. அதனால்தான் எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் எழுத்தெல்லாம் குப்பை. ராசலீலா ஒரு குப்பை. 655 பக்கங்களில் ஒரு நாவலாம். இதையெல்லாம் எவன் படிப்பான் என்றுதான் திட்டுவேன். ஆனாலும் ஹைதராபாத் 10 மணி நேரம் வேறு எந்த நாவலும் உருப்படியாக துணைக்கு வருவதில்லை என்று நினைக்கும்போது முற்று புள்ளி வைக்காமல் முப்பது பக்கம் எழுதும் எழுத்தாளர்களை நினைத்தால் ஒருவேளை எனக்கு சாருவைப் பிடிக்கிறதோ?..இல்லை..
இல்லை….எனக்கு சாருவைப் பிடிக்காது. இவர் உலக இலக்கியத்தைப் பற்றியெல்லாம் உளருகிறார். தேவையில்லாமல் பாரீஸை புகழ்கிறார். என்னவென்று யாருக்கும் சரியாக தெரியாத பின் நவீனத்துவத்தை போற்றுகிறார் என்றெல்லாம் நானும் விமர்சனம் செய்வேன். ஆனாலும் அவருடன் பேசும்போது ஒருநாள், அவர் டக்கீலாவையும், வழமை போல நான் லெமனும், அருந்தும்பொது நீட்ஷேவை பற்றி ஏதோ பேச்சு திரும்ப, அப்புறம் வழக்கம்போல அவர் டேபிளில் டக்கீலாவையும், லெமனையும் பார்த்து நம்ம சரக்கு எது என்ற குழப்பம்தான் வந்தது. எனக்குதான் சாருவைப் பிடிக்காதே. அதனால் அவரை எப்படியாவது மட்டம் தட்டம் வேண்டும் என்று லேப்டாப்பை என் பக்கம் திருப்பி அவர் பேசும்போது அவர் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று காண பேசிக் கொண்டே அவருடைய வார்த்தைகளை இண்டர்நெட்டில் கம்பேர் செய்து கொண்டிருந்தேன். போதை அதிகமானது தான் மிச்சம். அத்தனையும் உண்மை. அதைவிட அந்த பேச்சின் சாரம், ஒரு நிமிடம் திகைக்க வைத்தது, ஏனெனில் எனக்கு முன்னால் நீட்ஷேவின் வார்த்தைகள்…….நீட்ஷே தாக்கப்படும் காட்சியை அவர் விவரித்தது, ஒரு ஓரங்க நாடகம் பார்க்கும் விளைவை ஏற்படுத்தி விட்டது. அப்போதுதான் நினைத்தேன் இது விக்கிபிடியா பார்த்து பேசும் பேச்சல்ல. நீட்ஷேவின் எழுத்து ஆட்கொண்டதால் வரும் பேச்சென்று.
ஆனாலும் எனக்கு சாருவைப் பிடிக்கவில்லை. நான் இண்டர்நெட்டில் அவருடைய பேச்சை கம்பேர் செய்கிறேன் என்று அறிந்து சும்மா இருக்க வேண்டியது தானே. அவருக்கு பேச சுதந்திரம் இருக்குமளவிற்கு எனக்கு அவருடைய பேச்சை சந்தேகிக்கும் அளவிற்கு சுதந்திரம் இருக்கிறது தானே. ஆனால் என்னுடய லேப்டாப்பின் இண்டர்நெட் கனெக்டிவிடியை துண்டிக்க சொல்வதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு சாருவை பிடிக்காது.
எனக்கு சாருவைப் பிடிக்காது, பிச்சாவரம் தீவை மதுவால் நனைத்தாரே அதனால் எனக்கு பிடிக்காது. தனது வாசகர்களுக்கு நம்மாலும் ஒரு இரவு லத்தீன் அமெரிக்க வாழ்க்கை வாழ முடியும் என்று காட்ட முடிந்ததற்காக எனக்கு சாருவைப் பிடிக்காது. முப்பது வருடமாக எழுதும் இவர் முப்பது நாட்களாக எழுதிவரும் என்னைப் போன்றவர்களின் பின்னூட்டத்திற்கெல்லாம் , தான் படித்த லத்தீன் அமெரிக்க எழுத்திலிருந்து மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதுவதாலும் அவரை எனக்கு பிடிக்காது.
இப்படி பல காரனங்களுக்காக சாருவை எனக்கு பிடிக்காது. முக்கியமாக சாருவை எனக்கு பிடிக்கும் என்று நான் சொன்னாலே என்னை நீங்கள் அனைவரும் திட்டுவீர்கள் என்பதற்காகவே “எனக்கு சாருவை பிடிக்காது”. முக்கியமாக நன்பர் மயில்ராவணனுக்கு அவரைப் பிடிக்காது என்பதாலேயே எனக்கு சாருவைப் பிடிக்காது.

Saturday, September 11, 2010

மற்றுமொரு அயல் சினிமா-The Guns Of Navarone

2000 பிரிட்டிஷ் வீரர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றது ஜெர்மன் ராணுவம்.ரொம்ப ஆபத்தான இடம் யாரும் சென்றடைவதற்கு.போதாதற்கு இரண்டு பெரிய துப்பாக்கிகள் ராடாரால் இயங்கக்கூடியவை - மிகத்துல்லியமாக எதிரி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் சக்தி கொண்டவை.ஆக எந்தப்பக்கம் பார்த்தாலும் தடை,பிரச்சனை,ஆபத்து. 
இதையெல்லாம் தாண்டி ஒரு சிறு குழு எப்படி அந்த 2000 பேரை மீட்டெடுத்து வந்திருக்கின்றது என்பதை நாம் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு(1961’ல் இருந்த தொழில்நுட்ப வளார்ச்சியை பயன்படுத்தி!!) நம்பகத்தன்மையோடு தந்திருக்கின்றனர்.
                                                                                       
படம் ஆரம்பிக்கிறது.திரையில் ஸ்க்ரோல் வரிகள்.வர்ணனை(Narration) முறையில் காட்சி விளக்கப்படுகிறது - கிரேக்க நாட்டு இடிந்த கட்டிடங்கள்,கல் தூண்கள் என ஒரு வாழ்ந்து கெட்ட அல்லது போரினால் தன் புகழ, பெருமையெல்லாம் இழந்து நிற்கும் நாடாக நம் கண் முன்னே Greece தெரிகிறது. அதெ போல் அங்குள்ள ஏகன்கடறகரையும் முக முக்கியமான பல நிகழ்வுகளை தனக்குள்ளே கொண்டது.
                                                                        
1943ல் நடந்த காட்சிகள் திரையில் ஓட பின்னால் வரும் வர்ணனையும் நமக்கு மேலும் இப்படம் தொடர்பான ஆர்வத்தை இரட்டிப்பாக்கின்றன.2000பிணைக்கைதிகள் கிரோஸ் தீவில்(Island of Kheros) அடைக்கப்பட்டிருக்கின்றனர்.இன்னு ஒரு வாரமே அவர்கள் உயிருடன் இருப்பர் :) கிரோஸ் தீவிற்கு போவதற்கு போக, வர ஒரே வழிதான், அதிலும் எந்நேரமும் 2 ராடார் 
துப்பாக்கிகளின் கண்கானிப்பு 24 மணிநேரமும்.


இன்னும் 6 நாட்களே மீதம் உள்ளது.அதற்குள் அங்குள்ள அனைவரையும் அவ்விடத்தை விட்டு அகற்றவேண்டும்.இந்த 6 நாட்கள் நடந்த சம்பவக்கோர்வையே ‘The Guns of Navarone' நாவலும், திரைப்படமும்.
                                                             
ஆரம்பத்தில் கேப்டன் மல்லோரி,ஜென்சன்,ராய் மூன்று பேர் மீதமிருக்கும் வீரர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்- அதில் ஒருவன் கிண்டலாக ‘ஒரே வழிதான் இருக்கு, ஒரு விமானம் முழுவதும் குண்டுகள் நிரப்பி கொண்டு யாரோ ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டியதுதான், ஆனால் அப்பிடியொரு விமான ஓட்டிதான் கிடைக்க மாட்டான்’ என்கிறான்.


விசயம் நாளுக்கு நாள் தீவிரமாக உடனே ஆறு திறமையான வீரர்களுடன் ஒரு கப்பலில் தன் சாகசப்பயணாத்தை தொடர்கிறான் கேப்டன் மல்லோரி.கூடவே மல்லோரியை என்றைக்காவது கொன்றுவிட வேண்டும் என துடிக்கும் ஒரு வீரனோடு.கப்பலில் நடக்கும் உரையாடல்கள் மிக யதார்த்தமாகவும் இடையில் உளவுக்கப்பலுடனான ஒரு சண்டையும் 
நேர்த்தியாகவும் இருக்கும்.


ஒவ்வொரு நாளும் வெவ்வேரு விதமாக கழிய,ஆரம்பத்திலேயே ஜெனரல் ஃப்ராங்க்ளின் கால் ஒடிந்துவிட அவரை வேறு தூக்கிக்கொண்டே செல்கின்றனர்.அதேபோல் ஒரு இடத்தில் 2 பெண்களும்(local rebels) சேர்ந்து கொள்கின்றனர் இவர்கள் அணியில்.ஒரு கட்டத்தில் இவர்கள் ஜென்ரல் ஃப்ராங்க்ளினை மருத்துவரிடம் கொண்டு செல்லும் இடத்தில் கொத்தாக 
மாட்டிக் கொள்கின்றனர். ஜெர்மானிய அதிகாரி ஒருவன் இவர்களை ஒரு அறையில் வைத்து விசாரிக்கும் காட்சி, இவர்கள் அவனிடமிருந்து தப்பி ஜெர்மானிய வீரர்கள்போல உடையணிந்து தப்பும் காட்சி போன்று பல காட்சிகள் அருமையா இருக்கும்.


சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குறாது மாதிரி ‘அன்னா’ என்ற பெயருடைய பெண், நாஜிக்களால் தான் முகவும் துன்புறுத்தப்பட்டு இறுதியில் பேசும் திறன் இழந்து ஊமையான கதையையும் சொல்கிறாள்.ஆனால் இருதியில் இனும்ம்சில மர்ம முடிச்சுகள் உண்டு. இவர்கள் அந்த ‘Guns of Navarone' ப்ராஜக்டில் வெற்றி பெற்றார்களா இல்லையா? வேறு என்ன சிக்கல்கள் 
சந்தித்தார்கள்? ஜெனெரல் ஃப்ராங்க்ளினை விட்டு சென்றார்களே-அவ்ர் உயிர் பிழைத்தாரா?யருக்காச்சும் காதல் பூத்ததா, கனிந்ததா? இப்படி எல்லா கேள்விக்கும் விடை தெரிய படம் பாக்கறத தவிர வேறு வழியில்லை.


ரொம்ப திறமையான நடிகர்கள்,நல்ல இயக்குனர்,ஒலி, ஒளிப்பதிவாளர் இன்னும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டிக் கொண்டே செல்லலாம்.
வழமைபோல் இப்படத்தின் முன்னோட்ட காணொளி: இங்கே
வழமைபோல் இப்படத்தின் மேலதிக விவரம்: இங்கே


டிஸ்கி:
     பொதுவாவே ‘War Cinema’னா எனக்கு அம்புட்டு பிரியம். அதுவும் இந்த படம் நாம் நினைத்து பார்க்க முடியாத காலகட்டத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நேர்த்தியான நல்ல படம்.கண்டிப்பா அனைவரும் பாருங்கள்.ஏகப்பட்ட விருதுகள் பெற்ற இப்படத்தை அறிமுகப்படுத்திய என் நண்பனின் தந்தையும் அற்புதமான ஆளுமையுமான கிருஷ்ணமூர்த்தி சார்க்கு நன்றி நன்றி.
 
        

Tuesday, September 7, 2010

போயி புள்ளை குட்டிங்கள படிக்க வையுங்கய்யா! - கோகுல்

                         சக மனிதனின் ஊனத்தைக் கூட சரியான வார்த்தை மூலம் வெளிப்படுத்த தெரியாத விமர்சகர்கள் வாழும் இந்த தேசத்தில், என் கருத்தின் எதிர் வினைகள் எப்படி இருக்கும் என்று நினைத்தபோது இந்த கட்டுரையை எழுதவே தயங்கினேன்.

                        இருந்தாலும் , “கூட்டத்துல சத்தமாய் பேசுறவன் பேச்சுதான் எடுபட்டு போவுது, அதுல நியாயம் செத்துப் போவுது :” என்று தேவர் மகன் படத்தில் நாசர் சொல்வது போஅல பிளாக்கில் பதிவெழுதி , தமிழ்மணத்துல ஓட்டு வாங்கிவிட்டால் கமல் செய்த அனைத்தும் தவறு என்றும், விமர்சனங்கள் அனைத்தும் சரி என்றும் ஆகிவிடுமா?

                       ராஜபார்வை திரைப்படத்தின் மூலக்கதை சந்தான பாரதியிடம் இருந்து பெறப்பட்டது. ஆதாரம் கிழக்கு பதிப்பகத்தின் , தீனதயாளம் அவர்கள் எழுதிய “கமல்”. பக்கம் : 150. அந்த திரைப்படத்தில் கேரக்டர் மீது பரிதாபம் தோன்றுவதற்குப் பதிலாக ஒரு ஈர்ப்பு வர வேண்டுமென் பதற்காக ஸ்பெஷல் ஸ்பெக்ஸ் அணிந்து நடித்திருந்தார். ஆனால் நமது விமர்சன கண்களுக்கு அனைத்துமே காப்பிதான். கலைதான் நமது கண்களுக்குத் தெரியாதே. அதுவும் கமல் செய்திருப்பதால் மொத்தமும் தவறுதான். அல்லவா?

                       எப்போதோ படித்த ஞாபகம். “ அந்தப்புரத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் அங்குள்ள அழகிகளுக்கு தெரியுமாம். ஆனால் அவர்களால் அது முடியாதாம்.” அதைப்போல நம்மால் விமர்சனம் மட்டுமே செய்ய முடியும். ஒரு ஆகச் சிறந்த படைப்பை குப்பை என்று விமர்சனம் செய்ய மட்டுமே முடியும். அது அங்கிருந்து திருடப்பட்டது, இங்கிருந்து திருடப்பட்டது என்றெல்லாம் குறைகள் மட்டுமே சொல்ல முடியும்.

                      இப்போதெல்லாம் இணையத்தில் இருந்து ஏராளமான திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்க முடிகிறது. நம்மில் எத்தனை பேர் இத்தகைய உலகத்திரைப்படங்களை அது திரையிடப்படும் இடங்களிலும், ஒரிஜினல் டிவிடிக்களிலும் பார்த்திருக்கின்றோம். இதோ! சில திரைப்படங்களின் பட்டியல் தரப்பட்டுவிட்டது, இதிலிருந்துதான் கமல் கதையையும், காட்சியையும் திருடினார் என்று குற்றம் சாட்டி விட்டோம். விளைவு இன்னும் டோரண்ட் வழியாக திருடுவதற்கும், டவுன்லோட் செய்து பார்த்துவிட்டு, ஆமாம், ஆமாம், காப்பிதான் அடித்துள்ளார்! அப்பட்டமான காப்பிதான் என்றெல்லாம் பேசுவோம்.நம்மால் வேறென்ன முடியும்.
                       
                         ஒரு விவாதத்திற்காக அவர் அப்படித்தான் உலகத் திரைப்படங்களை காப்பி அடித்திருந்தாலும் கூட அதனை அவரிடம் சொல்வதற்கும், அல்லது அவதூறு பரப்புவதற்கும் நாமெல்லாம் உண்மையில் தகுதியானவர்கள்தானா?

                          ஹாலிவுட்டில் தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களின் கதைக் கரு பைபிளில் இருந்தே கிடைக்கிறதாம். அதற்காக ஸ்பீல்பெர்க் எடுக்கும் அனைத்து திரைப்படங்களும் பைபிளில் உள்ளது, எனவே அது பைபிளின் காப்பி என்று கூறுவது எவ்வளவு அசட்டுத்தனமோ அவ்வளவு அசட்டுத்தனம் நாம் கமலின் படைப்புகள் மீது வைக்கின்ற குற்றச்சாட்டுகள்.
                                                                                           
                           இது கமல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமல்ல எந்தவொரு படைப்பாளியின் , படைப்புக்கும் பொருந்தும். நாம் யார் இவற்றை விமர்சனம் செய்ய, நமக்கு என்ன தகுதி இருக்கிறது அடுத்தவர் படைப்பை குறைகூற என்பதை நிச்சயம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
நாயகன் திரைப்படம் “காட்ஃபாதரின்” அப்பட்டமான காப்பி என்று ஒரு குற்றச்சாட்டு, இதனை கமலே எல்லோருக்கும் முன்னால் ஒப்புக்கொண்டாரே. பிறகென்ன? அவரது பதிலை மட்டும் இருட்டடிப்பு செய்து விட்டு குற்றசாட்டை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருப்பதில் பயன் என்ன? அல்பாசினோ நடித்த scarface கலந்து உருவானது நாயகன் என்பதை கமல் அப்போதே ஒப்புக் கொண்டு விட்டார்.

அவை கமலின் வார்த்தைகளிலேயே
                 ”மரியோ பீஸோவை தமிழ்லே கொண்டு வரனும்கிறது கனவு. யூ கேன் சீ லாட் ஆஃப் கபோலா இன் தட் ஃபிலிம். ஆனா ரொம்ப இந்தியனா இருக்க அசாத்திய முயற்சியோட பண்னினோம். நாயகனின் வெற்றி ஆழ்வார்பேட்டை பையன்கள் எல்லோருடைய கனவும் நனவான மாதிரி” என்று அப்போதே கூறிவிட்டார்.

                இதைவிட வேறெந்த “கிரெடிட்டை” இந்த பிளாக் விமர்சகர்கள் கமலிடமிருந்து எதிர் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை.

                 ஒரு ஹோட்டலுக்கு போயி சாப்பிடும்போது , அது வெளி நாட்டு உணவு என்றால் அதை சமைத்தவனை விட்டு விட்டு இது அந்த ஹோட்டல் உணவோட காப்பி என்று கூறி கொண்டா உள்ளோம். அதுபோல உணவிற்கு பக்கத்தில் "கிரெடிட்" போர்ட் வைத்தால்தான் சாப்பிடுவேன் என்பது போல உள்ளது இந்த விமர்சகர்களின் வாதம். அந்த உணவு வெளி நாட்டு உணவாகவே இருந்தாலும் இங்கு கிடைக்கின்ற பொருட்களையும் சமையல் காரர்களையும் வைத்து அருமையாக கொடுத்த சமையல்கரனை பாராட்டுவதே சிறந்த மனது. அனால் நமக்குத்தான் எதையும் விமர்சனம் செய்து மட்டுமே பழக்கமாயிற்றே பிறகு என்ன செய்ய முடியும்??

                  மேலும் தேவர்மகன் படத்தை எல்லாம் “காட்ஃபாதர்” திரைப்படத்தோடு ஒப்பிடுவதெல்லாம் டூ மச். அது ஒரு மிகச்சிறந்த படைப்பு. சாதியைக் காரணம் காட்டி அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பர். இப்போதும் அது நடக்கும். அந்த திரைப்படம் வெளிவர காணாத போராட்டமா? இதனை எந்த திரைப்படத்தின் காப்பி என்றும் சொல்ல முடியாது. மீறியும் நாம் விமர்சிப்போம் என்றால் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு வசனமே அதற்கு பதில் சொல்லும். “உனக்கொன்னும் தெரியாது!. நீயெல்லாம் அப்ப சின்னப் பய! பேயாம இருக்கணும்.!.

                    ஹேராம், இதையும் விடவில்லை. இதுவும் காப்பிதானா? திரைப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு நாவல். வசன் ஒவ்வொன்றும் ஒரு டிவிட் அல்லவா? இதைப்பற்றி நான் மேலும் பேசினால் ஒரு இந்து வெறியன் என்று மேலும் விமர்சிக்கப்படுவேன். இத்திரைப்படத்தை “சாதத் ஹாசன் மண்டோவின்” வரலாற்றுக் குறிப்புகளோடு ஒப்பிட்டால் கூடத் தகும். அவர் சொல்லில் வடித்த சித்திரங்களை இவர் ஃபிலிம் நமக்கு காட்டியிருப்பார்.

                   தமிழன் பெருமைப்படுவதற்கு வாழும் ஒரு கலைஞனை திட்டித்தான் தமிழ்மணத்தில்,இண்ட்லியில் ஓட்டு பெற வேண்டும் என்ற எண்ணத்தை தமிழர்கள் புறக்கணிக்கும் நாளில். தமிழ் சினிமா நிச்சயம் ஆஸ்கார் வென்றிருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களில் அத்திரைப்படமும் யாரோ ஒருவரால் இது அப்பட்டமான காப்பி என் விமர்சிக்கப்படும்!

                     வள்ளுவர் கூட மன்னன் செய்யும் தவறுகளை அவனுக்கு இடித்து உரைக்க ஒரு அமைச்சர் வேண்டுமென்கிறார். ஆனால் அதனைகூறக்கூட ஒரு அமைச்சர் வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனால் நாம்தான் அடிப்படையில் ஒரு நல்ல ரசிகன் கூட கிடையாதே.

                      இதுபோன்ற தேவையற்ற சச்சரவுகள்தான் பல நேரங்களில் நிகழ மறுக்கும் அற்புதங்கள் நிகழாமலே இருப்பதற்கும் காரனமாகி விடுகிறதோ!
      
                     வாருங்கள்! தமிழில் கெட்டவார்த்தையில் திட்டு வாங்கி வெகு நாட்களாகிறது. உங்களால் முடிந்த அளவு பின்னூட்டத்டை நாறடித்து செல்லுங்கள் ஆனால் இனியாவது ஒரு கலைஞனின் திறமையை விமர்சிப்பதை தவிருங்கள்..

                      போதுமய்யா இனி ஒரு கலைஞனுக்கு இது நடக்க கூடாதுய்யா!..போயி புள்ளை குட்டிங்களை படிக்க வையுங்கய்யா!!                                                                                அன்புடன் கோகுல்

Sunday, September 5, 2010

என் பார்வையில் ஜெயமோகனின் காடு - கோகுல்

                     விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கக் காட்டிற்கு சென்று வரும் நம் அனைவருக்கும் , ஊருக்குத்திரும்பி வந்த பிறகும், நம் மனதை விட்டு அகலாமல் ,  மறுபடியும் அடுத்த பயனத்தின் போது இருகரம் நீட்டி அழைக்கும் சக்தி கொண்டதுதான் காடு.  அதுபோல மேலோட்டமாக , ஜெயமோகனின் “காடு” நாவலை ஏற்கனவே வாசித்திருந்தாலும் மழையூறிய ஒரு இரவில் மீண்டும் என் கைகளில் வந்தமர்ந்தது இந்த நாவல்.

                   நாவலில் இடம்பெறும் கிரிதரன் கதாபாத்திரம் முதலில் காட்டிற்குள் வழிதவறி சென்று விடுவான். அடுத்தடுத்த முறை காட்டிற்குள் செல்லும்போது காடு வரைபடமாக அவன் கண்முன்னால் விரிவடைந்து கொண்டே போகும். அது போல இந்த மறுவாசிப்பின்பொது என்னால் நாவலின் கதாபாத்திரங்களோடு பேச முடிந்தது. எனக்கு சற்றும் பரிச்சயமில்லாத மொழி நடைத்தான். ஆனாலும் ஜெயமோகன் எழுதும்போது அப்படியொன்றும் அந்நியமாகத் தெரியவில்லைதான்.  பலகாலம் பழகிய மலையாளப் பெண்ணின் மொழியைபோல என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது. காடும் அது காட்டும் பல நிகழ்வுகளும் 48 மணி நேரத்துக்கும் மேலாக அந்த நாவலோடு என்னைக்கட்டிபோட்டு வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
காடு- ஜெமோ
                                                                                                     
                   முன்னும் பின்னும் நகரும் திரைக்கதை போன்ற எழுத்தின் மூலம், காடு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாற்றத்திற்கு உள்ளாகி வருவதை நாவலில் விரியும் பல்வேறு சம்பவங்களினூடாக காட்சிப் படுத்தும் தன்மை ஜெயமோகனுக்கு மட்டுமே உரித்தானது. முக்கியமாக கனவுகள் ஜெயமோகன் நாவல்களில் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த நாவலிலும், ஆழ்மனதின் காட்சிகள், நாவலின் கதா பாத்திரங்களின் கனவுகளின் மூலம் ஒரு யட்சியைபோல நம்மைத் தழுவிக்கொள்கின்றன.

                     கிரிதரன் குட்டப்பன் ஆகிய இரு கதாபாத்திரங்களின் வழியாகவே பெருமளவு நாவல் விவரிக்கப்படுகிறது. ஆயினும், குட்டப்பனை விட கிரிதரன் கதாபாத்திரம் சிறியதாகவே தெரிவதற்கு காரனம், குட்டப்பனின் வாழ்வனுபவமு, அவன் வாழ்க்கையை எளிமையாக புரிந்து வைத்திருப்பதுமேயாகும் என்பதின் மூலம் நமக்கு விளங்குகிறது. இந்த நாவல் நானறிந்த வரையில் மனிதர்களைப் பற்றி மட்டும் பேசுகின்ற மற்றும் வழமையான உறவுச் சிக்கல்களைப் பற்றி மட்டும் பேசுகிறது என்பதோடல்லாமல் , ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், குறிப்பிட்ட  காலத்தில் காணக்கிடைத்த , அழகிய காட்டைப் பற்றிய வரலாறு என்றே கூற வேண்டும்.

                      “ ஒரு சாலைபோதும் ஒரு முழுக்காட்டையே அழிப்பதற்கு” என்பார் கானியலாளர் தியோடர் பாஸ்கரன். அதுபோல சாதாரன கட்டுமானத் தொழிலுக்காக ஒரு காடும் அதன் வளமும் , அதன் சகல ஜீவராசிகளும் அழித்தொழிக்கப்படுவதன் ஆதங்கத்தை இந்த நாவல் வழிநெடுகிலும், ஒரு சிறுத்தையின் காலடித்தடத்தை போல விட்டுச் செல்கிறது.


                      “அப்படித்தான் நிகழும், எல்லாப் பெரு நகரங்களும் ஒரு காலத்தில் காடுகளாக இருந்தவைதான், காடுகள் அழிந்துகொண்டே இருக்கின்றன. பின்வாங்கிப் பின்வாங்கி மலையடிவாரத்துக்கு வந்து விட்டன. இனி நகரங்கள் மலைகளையும் வளைத்து உள்ளிழுத்துக் கொள்ளும்…”

                         “காடு அழிந்து ஊர்களானதே நாகரீகம்…”
                         “நாகரீகம் என்ற சொல்லுடன் புரண்டு படுத்தேன். நகர் சார்ந்தது நாகரீகம். அதற்கு எதிர்ப்பதம் காட்டுத்தனம், காட்டு மிராண்டி. எவ்வளவு தெளிவாக இருக்கிறது எல்லாம்.!.ஆரம்பப் பள்ளியிலேயே கற்பிப்பது. காட்டை வென்றடைக்கும் ஊர்களின் கதைதான் மனித நாகரீகம் போலும்” என்ற வரிகளின் மூலம் இந்த நாவல் காட்டின் முக்கியத்துவத்தை எந்தளவு பேசுகிறது என்பதை அறியலாம்.

                          டிஸ்கவரி சேனலின் “ Survivor Man” நிகழ்ச்சியில் வரும் சாகசக்காரர் இனி எனக்கு நாவலின் கதாபாத்திரமான “குட்டப்பனை” எப்போதும் நினைவு கூர்வர். காட்டில் உள்ள பொருட்களையே உணவாய் கொண்டு வாழும் குட்டப்பன் நாவலில் வாழ்ந்திருக்கிறார். அவருடைய முடிவு நாவலின் ஆரம்பத்திலேயே விவரிக்கப்பட்டுவிட்டாலும், நாவலின் ஒவ்வொரு கனத்திலும் அவரே நிறைந்திருக்கிறார்.

                          வெகுஜன வாழ்க்கையில் நாமனைவரும் சாதாரனமாக சந்திக்கும் ஒரு கதாபாத்திரமே “அய்யர்”. அவருடைய சபலத்தை அழகிய நகைச்சுவை உணர்வுடன் கையாண்டிருப்பது அழகு. குறிப்பாக கையுடைந்து மருத்துவமனையில் படித்திருப்பதாக வருமிடம். இந்த நகைச்சுவை ஜெயமோகனுக்கே உரியது.

                           நாவல் முழுக்க ஒரு சாதாரன மனிதனின் பயணத்தின் போது காட்டுக்குள் காணக் கிடைக்கு, மிளா, முயல், தேவாங்கு, மலை அணில், மாண், கூழக்கடா மற்றும்  யானை இவற்றை மட்டுமே பயன்படுத்தி இருப்பதன் மூலம் ஒரு பயனியின் நிறைவை நாம் அடைகிறோம். மற்ற அரிய உயிர்கள் ஆராய்ச்சியாளர்களின் பைனாகுலர் கண்களுக்கே கிடைக்கும் என்பதே உண்மை.

                           நீலி நாவல் முழுவதும் வந்தாலும், அவளுடைய முடிவின் மூலம் வாசகரை ஒரு கணம் துக்கப்பட வைக்கிறாள். நீலியுடனான கிரிதரனின் சந்திப்புகள் ஜெயமோகனின் வேறொரு நாவலை நினைவுறுத்துகிறது. கபிலனும் குறுந்தொகையும் காட்சிகளை விளக்குவதற்கு பயன்பட்டிருந்தாலும் ஜெயமோகனின் வரிகளே பெரிதான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருவேளை குறுந்தைகையையும் கபிலனையும் புரிந்துகொள்ள எனக்கு இன்னும் பல காலமாகலாம். ஆனால் எனக்கு அதுவரை ஜெயமோகன் போதும். அடுத்தமுறை இந்த நாவலைப்படிக்கும்போது 40 வருடம் காட்டில் அலைந்தவனைபோல பரிச்சயமாக இருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்.

                              நாவல் தந்த அனுபவம் காட்டை மேலும் மேலும் ரசிக்கவும், வாழ்க்கையை புத்துணர்ச்சியுடையதாகவும் ஆக்கும் என்ற ஆவலோடு அடுத்த காட்டு பயணத்திற்கு காத்திருக்கின்றேன்.

                              எனக்கு தீவிர இலக்கிய விமர்சகர்களின், பூதக்கண்ணாடிகளின் மேலும், இந்த நாவலைப்பற்றிய விமர்சனத்தின் மீதும் எந்த பிடிப்பும் இல்லை. ஜெயமோகனுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன். மாறாக ஒரு மண்ணும் அது சார்ந்த மலையினமும், நம் கண் முன்னே அழிந்து கொண்டிருப்பதை தேர்ந்த வாசகனுக்கு நாவலின் வழி சொன்ன ஜெயமோகனின் இலட்சம் வார்த்தைகளுக்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்
கோகுல்.