Friday, October 16, 2009

தீப ஒளித் திருநாள்

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.......மயில்ராவணன்

Thursday, July 23, 2009

ஒரு கலைஞன் காட்டுயிர் ஆர்வலாகிறான் -கோகுல்-

மலைக்காடுகளின் மீது நான் கொண்ட பிரியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.இதற்கு காரனம் நான் சில காலமாக வாசிக்கும், தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன் போன்றோரின் எழுத்தா?, மற்றும் சென்னை நகரின் ”கான்கிரீட்” காடுகளின் மீது கொண்ட வெறுப்பா அல்லது உண்மையில் காட்டின் தனிமையை விரும்பும் மனமா என்பதை என்னால் இப்போது தெளிவாக உணரமுடியவில்லை. சில நாட்களாகவே யாருமற்ற புல்வெளிகளில் கால்பதிய நடப்பது போன்ற கனவு வந்து கொண்டே இருந்தது. கடைசியில் அது நடந்தே விட்டது. 15பேரோடு பெரும்படை செல்வதுபோல டாப்ஸ்லிப்பை பார்க்க முடிவு செய்த பிளான், கைமாறும் ஐஸ் கட்டியாக கறைந்து கடைசியில் 4½ பேருடன் முடிந்தது. நன்றி நன்பர் விஜயகுமார்-நர்மதா தம்பதிகளுக்கு. பொள்ளாச்சி திருமணத்தை முடித்து விட்டு சேஷா மற்றும் அவரது மனைவி,குழந்தை , நன்பர் பாவா ஆகியோருடன் டாப் ஸ்லிப் பயனம் தொடங்கியது. ஆனால் தங்கும் வசதி கிடைப்பதில் சிறிது சிக்கல் இருந்தது. முன்பாகவே வன – அலுவலரிடம் முன்பதிவு செய்திருந்தாலும், நிச்சயமாக விடுதி கிடைக்கும் என்று கூறமுடியாமல் இருந்தது. 5 மணிக்கு மேல் பொள்ளாச்சி ஆனைமலை சாலையில் எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஏனெனில், இது ஒரு Tiger Reserve Forest ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் காட்டு யானைகள் எந்த நேரமும் சாலையில் குறுக்கிடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. அதேபோல மலையிலிர்ந்து ஆனைமலை செக்போஸ்ட்டை மீறி யாரும் பொள்ளாச்சியை அடைய முடியாது.


அதனால் அடித்து பிடித்து வேகமாக 4.55க்கு ஆனைமலை செக்போஸ்ட்டை அடைந்து விட்டோம். அநேகமாக அந்த வழியாக கடைசியாக சென்ற தனியார் வாகனம் எங்களுடையதாகத்தானிருக்கும். போகும் வழி, செங்குத்தான மலைப்பாதை என்றாலும் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டினார். ஒரு காட்டை அழிப்பதற்கு ஒரு நல்ல தார்சாலை போதும் என்பார், தியோடர் பாஸ்கரன். ஆனால் டாப்ஸ்லிப்பில் அந்த பிரச்சனை இல்லை. மோசமான கப்பி பாதைதான்.


அழகிய காட்டுவழி, ஆனால் சற்று ஆபத்தான பாதை. பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் செல்வதற்கும் இந்த மலைப்பாதையே பயன் படுத்தப்படுகிறது. மாலை மயங்கும் நேரத்தில் டாப்ஸ்லிப்பை சென்றடைந்தோம். எதிர்பார்த்ததைப்போலவே விடுதி அறைகள் எதுவும் காலியாக இல்லை. சில மணித்துளிகள் காத்திருந்ததை அடுத்து, பொள்ளாச்சி வன அலுவலரின் தயவால் “பைசன்” என்ற இரண்டு அழகான் அறைகள் கிடைத்தன. அவை 1959ல் கட்டப்பட்ட அருமையான உறுதியான அறைகள். மேலும் அறையின் ஜன்னல் கதவுகள் புறத்தில் உள்ள வன உயிரினங்களை கான்பதற்காக see thru கண்ணாடிகளால் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்கள் அத்து மீறி பிரவேசிக்காமல் இருக்க பின்பக்கம் உயரமான் மதில்களை கொண்டிருந்தாலும் அறையின் உள்ளிருந்து கொண்டு காட்டின் அனைத்துப்பகுதிகளையும் கான்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டிருக்கின்றன். அருமையான “கிளைமேட்”. அநேகமாக 16 டிகிரிக்கும் சற்றும் குறைவாக இருந்திருக்கும். அறையில் சென்று உடைமாற்றிக்கொண்டு ½ கி.மீ தூரம் காட்டுப்பாதையில் நடந்து சென்றோம். மனிதனின் தைரியத்தை சோதிக்கும் அளவிற்கு இருள் பரவிக்கிடந்தது. இருளுக்கு கண்கள் சற்று பழகியவுடன், ஆயிரக்கணக்கான விட்டில் பூச்சிகளை நம்மால் காண முடிகிறது.


எங்கு பார்த்தாலும் , காட்டுப் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அதற்கு முன்பாகவே, ஒரு பெரும் மான் கூட்டம் அங்குள்ள புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்ததை கண்டு லயித்திருந்தோம். அவை மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சில அடி தூரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. புள்ளி மான் இனத்தை சேர்ந்தவை என்று ரேஞ்சர் கூறினார். லேசாக மழை பெய்திருந்ததால் சாரளும் சேர்ந்து கொன்டு குளிரை அதிகப்படுத்தியது. உணவு ஆர்டரின் பேரில் அங்குள்ள சிறிய கேண்டீனிலேயே தயார் செய்து வழங்கப்படுகிறது.


இரவு உணவுக்குப்பின் வெகுநேரம், விடுதி அறையின் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதேதோ விநோதமான விலங்குகளின் ஒலிகளும், காட்டுப்பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டே இருந்தது. தங்கி இருந்த அறையின் பெயருக்கு ஏற்றார்பொல் அறைக்கு எதிரிலேயே ஒரு மிகபெரிய “பைசனை”-(காட்டு எருமை) காணமுடிந்தது, காட்டு எருமைக்கு நான்கு கால்களிலும் வெள்ளை காலுறை அணிந்தது போன்றிருக்கும். மேலும் இவை மூர்க்கமானது. சில நேரங்களில் இரை கொல்லிகளையே இவை திருப்பி தாக்க முயற்சிக்கும்.


அந்த வழியாக சென்ற ஒருவர் காட்டானைகள் இரவில் இந்த வழியாக வரும் உள்ளே சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை செய்து சென்றார். மதிப்பளித்து உள்ளே சென்று படுத்து விட்டோம். வெளியில் நல்ல மழை. செல்போன் சிக்னல் இல்லை. காட்டின் பறவை இசையை கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டோம். சற்று திரில்லாகத்தான் இருந்தது. ஆழ்ந்த உறக்கம், திடீரென முழித்துக் கொண்டேன். வெளியில் நல்ல மழை இருந்தாலும், கண்ணாடி வழியாக வெளியில் பார்க்க முடிந்ததால் அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு பார்த்து கொண்டிருந்தேன், இப்படி முழித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு நன்பர் பாவாவும் சேர்ந்து கொண்டார். வெளியே நிலா வெளிச்சத்தில் ஏராளமான மான்கள் மேய்ந்து கொண்டிருந்ததை பொறுமையாக பார்த்து கொண்டிருந்தோம். வார்த்தைகளில் வெளிக்காட்ட முடியாத அளவிற்கு உற்சாகம் சேர்ந்து கொண்டது. காடுதான் அழகு,


மீண்டும் ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையிலேயே குளித்து விட்டு காட்டுப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றோம். வெகு அருகில் இடது புறத்திலிருந்து வந்த ஒரு ஒலி எங்களை உலுக்கியது. அது ஒரு காட்டு யானையின் பிளிறல். காட்டு யானை ஒன்று அங்கிருந்த மூங்கில் புதர்களை ஒடிக்கின்ற ஒலியையும் அது வெளிப்படுத்திய ஒலியையும் கேட்ட ஒருவர், “காட்டாணை தனியா நிக்கிது, ஓரமா போங்க” என்று கூறிச்சென்றார்.


7 மணிக்கு வனத்துறையின் வாகனத்திலேயே ”கும்கி” யானைகளுக்கு உணவளிக்கும் இடத்திற்கு அவற்றை பார்க்க சென்றோம். செல்லும் வழி ஆழ்ந்த காடு, சிகரங்களை பணி உரசி செல்வதை வெகு அருகில் பார்ப்பதும், மலையிலிருந்து அழகாக பள்ளத்தை நோக்கி விழுகின்ற சிறு நதிகளையும் காண்பதற்கு கண்கோடி வேண்டும். கைடின் உதவியோடு பல காட்டுப்பறவைகளையும் பார்த்து ரசித்தோம். மயில்கள் நிறைந்து காணப்பட்டது. இவை நிறைந்திருப்பது காட்டின் ஆரோக்கியத்தை உணர்த்தும். தேவையான இரை உணவுகள் பல்கி கானப்படுவதும், மறைவிடங்கள் போதுமான அளவில் இருப்பதையும் மயில்களின் எண்ணிக்கையை வைத்து உணரலாம்.


கும்கி யானைகள் டாப்ஸ்லிப்பின் மற்றொரு சிறப்பு. இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் அத்து மீறி நுழையும் யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதற்கும். காட்டு யானைகள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது அவற்றை மீட்பதற்கும் பயன்படுகின்றன. சேறு படிந்து காணப்படும் இவைகள் கோயிலில் நிற்கும் நோஞ்சான் யானைகளை போலல்லாமல் கம்பீரமாக, வனப்பாக கானப்படுகின்றன. கிட்டத்தட்ட 13 யானைகள் இங்கு இருக்கின்றன. புதிதாக வந்துள்ள “வெங்கடேஷ்” என்ற யானை பாகனுக்கு கட்டுப்படாத காரனத்தால் தனியே நிறுத்தி வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை அருகில் சென்று பார்க்கும்போது ”ஜெயமோகனின்-மத்தகம்” நினைவில் வர சில நிமிடங்கள் திகைத்து நின்றோம். யானைகளின் கம்பீரத்தை அதனை மிக அருகில் பார்க்கும்போது ஏற்படும், பதைபதைப்பின் மூலம் மிக அழகாக உணர முடிந்தது. கேரள மக்கள் இவ்வகையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களின் அன்றாட வாழ்வில் யானைகளும் இனைந்தே இருக்கிறது.


பொறுமையாக ஒவ்வொரு யானையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தேன். இவை வளர்ப்பு யானைகளாகவே இருந்த்தாலும், காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிக்கப்பட்டிருக்கின்றபடியால், அவற்றில் இன்னமும் அந்த feral state இயல்பாக இருப்பதை உணர முடிகிறது.. பாகனுக்கு கட்டுப்படும் யானையையும், என்னதான் கட்டுப்பட்டாலும், மிகவும் எச்சரிக்கையுடன் கையாளும் பாகனையும் கானும்போது, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.


பிரிய மனமில்லாமல் மீண்டும் வனத்துறை வண்டியில் அமர்ந்து, என்னை அறியாமல் கைகளை அசைத்து விடைபெற்றுக்கிளம்பினேன். இப்போது லேசான மழையில் வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வரும்போது ஓயாமல் பேசிக்கொண்டிருந்த அனைவரும், இப்போது ஜன்னல்களுக்கு வெளியே அமைதியாக பார்த்து கொண்டே வந்ததை கண்டு அனைவரின் மனநிலையையும் உணர முடிந்தது.


விடுதிக்கு திரும்பி காலை உணவை முடித்துக்கொண்டு பரம்பிக்குளம் செல்வதற்காக மீண்டும் எங்கள் வாகனத்தில் அமர்ந்தபோது மனம் மிகவும் அமைதியாக உணர்ந்தது..........

Saturday, June 13, 2009

மோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries


(Journey Makes the change on life) --கோகுல்--


மனிதனுக்கு தான் வாழும் இடத்தை விட பிறரின் கலாச்சாரத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதற்கான முயற்சியின் விளைவாக பல நாடுகளை கண்டறிந்து, குடியேறி , குடிபெயர்ந்து, குடிபெயர்த்து….தன் சந்ததிகளை விட்டுச்செல்வதற்கான ஆசை ஆரம்ப காலம் முதலே இருந்து வந்துள்ளது. அதன் விளைவுதான் இன்றைய அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும்.


வரலாற்றின் கரையில் சிலர் மட்டும் சற்றே பிறழ்ந்து, வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களைப்பற்றிய நிகழ்வுகளையும் சரித்திரம் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வின் பதிவுதான் “மோட்டார் சைக்கிள் டைரிஸ்”. இரு வேறு தளத்தில் வாழும் இரண்டு நன்பர்கள், ஒரு கருத்து மட்டும் இருவருக்கும் பொதுவாக இருக்கிறது, அதுதான் அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவிற்கு தரை வழி போக்குவரத்தை மேற்கொள்வது. ஆசை , கனவு , இலட்சியம் அனைத்தும் உண்டு ஆனால் இலக்கு மட்டும் தெளிவில்லாத பயனம். அது மிக மிக ஆபத்தான கருத்தே என்றாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தோன்றாத இள வயது. ஆசை மட்டும் அதிகம் , முதிர்வு குறைவு. குடும்பத்தின் ஆசியுடன் அந்த பயன நாளும் வந்து விட்டது. இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த “லா பெடரோ” மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாட்டின் மறுபகுதியில் வாழும் காதலிக்கு பரிசளிக்க ஒரு சிறிய நாயும் பயனிக்கிறது. கண்களின் வழியாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை அழகை அள்ளிப்பருகிக் கொண்டு, அருமையான இசையுடன் நமது காதுகளும் பயணம் செய்கிறது.


எப்போதாவது கடந்து போகின்ற விவசாய டிராக்டர்களுக்காக போடப்பட்ட குண்டும் குழியுமான தார்சாலைகளில் தட தடத்து செல்கின்ற மோட்டார் சைக்கிள் உங்கள் நன்பரில் ஒருவனாக ஒட்டிக்கொள்கிறது .பயனம் சிறிது களைப்பைத்தர காதலியின் வீட்டில் ஓய்வு எடுக்கிறது.


ஒரு மனம் பரந்து விரிந்த இந்த உலகைக் காண பறக்கிறது. மற்றொரு மனம் காதலியோடு காதலோடு தங்கி விட சொல்லி புலம்புகிறது. இறுதியில் வென்றது உலகைக் காதலிக்கும் மனம்தான். காதலிக்கு நீச்சல் உடை வாங்க சேகரித்த சில அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையில். சம்பாதிப்பதற்கோ முழு பயிற்சியையும் முடிக்காத மருத்துவ படிப்பு கை கொடுக்காது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் வலிமையான மனது மட்டுமே துனைக்கு வர மீண்டும் வண்டி ஓடத்தொடங்குகிறது.


முழு வீச்சில் செல்லும்போது தோன்றும் முட்டுக்கட்டை போல் வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து ஏற்கனவே பழுதடைந்திருந்த வண்டி மேலும் மோசமாகிறது. ஆற்றங்கரையில் அமைக்கும் கூடாரமும் காற்றில் அடித்துச் செல்ல “ஆஸ்துமாவால்” சீரழிக்கப்பட்ட உடல்நிலை இரவு முழுவதும் சிக்கலாகின்றது. குளிர் அதிகரிக்க அதிகரிக்க குரல் வளையை உடையச் செய்யும் மோசமான் இருமல் பாடாய் படுத்துகிறது. வாழ்வின் இறுதியை பார்த்துவிட்ட மனிதனைபோல் காலையில் மீண்டும் இலட்சியம் துரத்த ஒரு விடுதியில் மது அருந்தும் சகோதரிகளை சரி செய்து, அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஒரு பகலை கழிக்கிறார்கள். இரவு அந்த சகோதரிகளின் வீட்டில் உறங்கி விட்டு, காலையில் கண் விழித்தவர்களின் கண்களில் இனி எப்போதும் பயன்படாத நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் தெரிய, வேறு வழியில்லாமல் அதனை அங்கேயே விட்டு விட்டு, ஒரு நன்பனை இழந்த வலியோடு, இரு நன்பர்களின் பயனம் தொடர்கிறது………


கரடு முரடான காட்டு வழியில் நடந்து வந்தவர்களுக்கு, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொனமையான நாகரிகத்தின் சுவடுகள் நம்பிக்கையூட்டுவதாகவும் , வரலாறு நம்பிக்கை அளிப்பதாகவும் தோன்ற பயனம் தொடர்கிறது. முதலாளிகளிடம் நிலத்தை இழந்த பலர், சுரங்கங்களில் தொழிலாளிகளாக வேலை செய்யும் அவல நிலை கண்டு முதல் முறையாக வாழ்வின் துயரத்தை உணர்ந்து, உண்ண மறந்து உணர்வின்றி பயனம் செய்கிறார்கள். வழியில் கண்ட ஒரு ஏழைத் தம்பதிகளின் குளிரைப்போக்க தனது கம்பளி ஆடையை தானம் செய்து விட்டு, ”ஆஸ்துமா” குளிரில் வருத்த உலகில் வாழ்க்கையை எதிர்கொள்ள மக்கள் படும் அவலத்தின் ஆபத்தை நன்பனை தவிர்த்து தனியே யோசிக்கிறான்.




தட்டுத்தடுமாறி தான் படித்த கல்விக்கேற்ப ஒரு தொழுநோய் மருத்துவமனையின் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் இருவரும். அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டை மீறி, நோயாளிகளுடன் கை குலுக்கி பேசியதற்காக , உணவு மறுக்கப்பட்டு பசியால் வாடும் நிலையில் தொழுநோயாளிகளின் கைகளாலேயே உணவு பரிமாறப்பட்டு இது ஒரு தொற்று நோயல்ல, என்று மனம் வருந்தி பார்க்கும்போது, ஒரு பயணியின் நிழல் மறைந்து ஒரு உண்மையான மனிதாபிமானம் மிக்க டாக்டராக தெரிகிறான். அங்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்க முடியாது, நன்பனோ பயனத்தை தொடர விரும்பாமல், நோயாளிகளுக்கான சேவைப்பிரிவில் பணிபுரிய விரும்பி அந்த சிறிய மருத்துவமனையிலேயே தங்கி விட முடிவு செய்கிறான். . தன் லட்சிய பயணத்தை விட்டு விட முடியாமல் முதல் முறையாக நன்பனை பிரிந்து தனியே பயனம் செய்ய முடிவு செய்கிறான்.


இந்நிலையில், பிரிவுபச்சாரமும், பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரே நாளில் நடக்கிறது. தொழுநோயாளிகள் ஆற்றின் ஒரு புரமும், மருத்துவ பணி விடுதி மறுபுரமும் அமைந்திருக்க, மிக சிறப்பான அவனது சேவையை அனைவரும் புகழ்ந்து பாராட்ட விருந்து நடைபெறுகிறது,


ஆனால் மனம் ஆற்றின் மறுகரையில் ஆடிக்கொண்டிருக்கிறது, அங்கு இவன் மேல் உண்மையான அன்பு கொண்டு, ஆனால் உடனடியாக அதை கொண்டாட முடியாத நோயாளிக்கூட்டம் இரவிலும் உறங்காமல் இவனுக்காக காத்திருக்கிறது. காற்றாட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. காசநோய் வேறு பாடாய் படுத்துகிறது. ஆற்றில் இறங்கினால் ஒன்று காற்றாறு வெள்ளத்தில் சாக வேண்டும், இல்லையேல் நீரின் குளிர்ச்சியால், இருமல் அதிகரித்து, இறக்க வேண்டியதுதான். கடப்பதற்கு படகு காலையில்தான் வரும், அது வரையில் அன்பர்களை காணாமல் இருக்க முடியாது. நன்பனின் எச்சரிக்கையையும் மீறி ஆற்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டான். அமேசான் ஆற்றை அவ்வளவு எளிதாக இரவில் யாரும் நீந்திக்கடந்து விட முடியாது. இருப்பினும், எளிமையானவர்களின் அன்பிற்கு முன்னால் அமேசான் நதியென்ன செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் நீந்த தொடங்கியவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுக்கிறது, கடப்பவனின் இருமல் அதிகரிக்கிறது, இருமலின் ஓசை அலை ஓசையை மீறி கேட்கிறது. அதைவிட இவனைக் கண்டு கொண்ட நோயாளிகளின் பேரொளி காட்டின் நிசப்தத்தை கிழிக்க, ஆம்…அவன் நீந்திக்கடந்தே விட்டான்.


தனது பிறந்த நாளை அவர்களோடு கொண்டாடிவிட்டு, மறுநாள் காலையில் வந்து சேர்ந்த தோணியில் ஏறி பயனம் செய்து, மறுகரை வந்து விட்டவனுக்கு, மனதில் தோன்றியது, ”என் ஒரு மனிதனின் இலட்சிய பயனத்தை விட இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் இலட்சியத்திற்காக இறப்பதே மேல்” என்ற கருத்தோடு, தனது வாழ்வின் இரண்டாம் பாகத்தின் அத்தியாயத்தில் முதல் பக்கத்தை எழுத தொடங்கிவிட்டான்…..


இம்மனிதனின் வரலாறு சில நேரம் கொச்சைப்படுத்தப்படலாம், ஆனாலும் இலட்சியவாதிகளின் வாழ்க்கை மறுக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை தினசரி தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறது என்பதே மறக்க முடியாத உண்மை.

Tuesday, May 26, 2009

தி டெர்மினல் The Terminal

--கோகுல்--

படித்த புத்தங்களையும், பார்த்த திரைப்படங்களையும், மீண்டும் பார்ப்பதென்பதென்பதும் அவற்றைப் பற்றி நண்பர்களுடன், விவாதிப்பது என்பதும் எனக்கும் மிகவும் பிரியமான ஒன்றாகும். அவ்வாறு சமீபத்தில் மீண்டும் பார்த்து ரசித்த திரைப்படம்- The Terminal.


க்ரோக்கோச்லேவியா என்ற நாட்டிலிருந்து, நியூ யார்க்கின் JF Kennedy விமான நிலையத்திற்கு வந்திறங்கும் , நவோஸ்கி என்ற மனிதனின் வாழ்க்கை இப்படத்தில் சொல்லப்படுகிறது. நாட்டிலிருந்து புறப்பட்ட பிறகு உள்நாட்டு கலவரம் வெடித்து, நாடு தனிமைப்படுத்தப்படுகிறது. இதன் காரனமாக அமெர்க்கா தன் நாட்டினுள், இதுபோன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் எவரையும் அனுமதிக்கத் தடை விதிக்கிறது.


இதை அறியாத நிலையில் தன்னுடைய மொழிப்பிரச்சனையின் ஊடாக அந்த விமான நிலைய கண்காளிப்பாளரைச் சந்தித்தும் நிலைமையை சரிவர உணராத சூழ்நிலைக் கைதியாக தனித்து விடப்படுகிறார். நிலைமை சரியாகும் வரை அவரை வெளியில் விட முடியாத சூழ்நிலையிலும் , ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையிலும், கண்காளிப்பார் உத்தரவின் பேரில் 64ம் நம்பர் கேட்டில் தங்கிக் கொள்ள அனுமதி பெறுகிறார்.


ஆங்கிலம் தெரியாத நாட்டில் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் உதவியுடன் அவர் எபேசும் ஆங்கிலத்தின் மூலமாக அவர் ஒரு காமெடியனாக அங்கு உணரப்படுகிறார்.


அதிகாரியின் கள்ளத்தனமான் உத்தரவால் விமான நிலையத்திலிருந்து வெளியேற வழிகிடைத்தாலும் அதனை நேர்மையான வழெயில் மட்டுமே அடைய வேண்டும் என்ற மனநிலையில் வாய்ப்பை வேண்டுமென்றே மறுத்து விடுகிறார்.


கையிலிருந்த பொருளாதாரம் செலவழிந்துவிட்ட நிலையில் உண்பதற்கும் உறங்குவதற்கும் அவர் செய்கின்ற கோமாளித்தனமான் செய்கைகளை மீறி ஒரு சோகம் வெளிப்படுவதை நம்மால் உணர முடிகிறது.


பிஸ்கட் தின்று பசியாற முயற்சி செய்யும்பொது விமான பயனிகளின் ‘டிராலி’ களை வரிசைப்படுத்தி அடுக்குவதால் கிடைக்கும் சில சில்லறை காசுகள், சில ‘Burger’ கள் வாங்க கிடைப்பதை உணர்ந்து மகிழ்ச்சியால் கத்தும்போது மணம் கலங்குகிறது. தற்காலிக உணவும் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு வேலைக்காரனால் பறி போகும்போது நிலைமை மேலும் சிக்கலாகின்றது.


தனது நாடு பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதை டிவியில், செய்தியில், பார்க்கும்ப்போது , அவரது பரிதவிப்பையும், மொழி புரியாமல் அல்லாடுவதையும், மேலும் விபரம் அறிந்து கொள்ள எஸ்கலேட்டர்களில் தாவித் தாவிச் செல்வதையும் காணும்போது மென்சோகம் நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.


இவரை உளவாளி என்று சந்தேகிக்கும். துப்புரவுத்த் தொழிலாளியையும் , டிராலி ஆப்ரேட்டரையும் காதலுக்காகத்திருட்டுத் தனமாக உணவு வழங்கும், உதவியாளரையும், தன்னுடைய நட்பு வட்டரத்தில் , மனிதபாமிமானத்துடனான செய்கைகளின் மூலமாக கொண்டுவந்து விடுகிறார்.


தன்னுடைய பாஸ்போர்ட், விசா மறுக்கப்பட்ட நிலையிலும், தினமும், “இளம்-பச்சை” நிறப்படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு மணிநேரம், வரிசையில் நிற்கும் இவரை, கவுண்டரில் உள்ள பெண் “Denied” சீலுடன் கேளி செய்யும்போது, எப்படியும் உனது மற்றொரு கையில் Approved” சீல் இருக்கிறதே என்ற தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளோடு சமாளிக்கும்போது இவரது ஆளுமையை முழுதாக உணர முடிகிறது.


அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக நினைத்து விமானப் பணிப்பெண்ணின் சோகக் கதையைக்கேட்டு அவள் மீது காதல் கொள்ளும்பொது, மனதிற்கு மொழியை விட வேகம் அதிகம் என்பதை உணர வைக்கிறார்.


தன் தந்தைக்காக கனடாவில் இருந்து கொண்டு வந்த ஒரு மருந்து பாட்டிலுடன் தன் நாட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன் அமெரிக்க விமான நிலையத்தில் பிடி படுகிறான். அவனுடைய மொழி புரியாத காரனத்தால் மொழிபெயர்ப்பாளராக நவோஸ்கி நியமிக்கப்படுகிறார். விசாரனையின் போது அவன் தடை செய்யப்பட்ட மருந்தை கடத்த முயன்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப் படுகிறான்.


அவன் மீதும் அவனது தந்தையின் மீதும் இரக்கப்பட்டு நவோஸ்கி மருந்து பாட்டிலில் இருப்பவை கால்நடைகளுக்கான் மருந்துகள் என்று அந்த இளைஞனை ஆங்கிலத்தில் சொல்ல வைக்கிறார். இதனால் இளைஞன் விடுதலை செய்யப்படுவதுடன் காவல்துறை அதிகாடியின் , வெறுப்பால், நியூ யார்க் விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறுவதற்கான உத்தரவு மறுக்கப்பட்டு மேலும் பல நாட்கள் விமான நிலையத்திலேயே அடைபட்டுக்கிடக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்.


விமானப்பணிப்பெண்ணைக் காதலிக்கும் அவர், அவளுக்கு டின்னர் கொடுக்க உறுதி அளித்து விட்ட காரனத்திற்காக, தன்னுடைய கடினமான முயற்சியால் விமான நிலைய “ கார்பெண்டர்” குழுவில் இணைந்து பணிபுரிந்து பணம் சேர்த்து, “ டின்னர்” வைக்கிறார்.


கடைசியில் தடை நீங்கி, வெளியேறினாரா, தனது காதலில் வெற்றி பெற்றாரா என்பது சஸ்பென்ஸ். பிரமாண்ட இயக்குநரான ஸ்பீல் பெர்க்கின் இயக்கம் இது என்பதை நம்பமுடியாத அளவிற்கு அற்புதமானத் திரைப்படம். மிக அருமையான் இசை. “The Queen” திரைப்படத்தின் இசையினை நமக்கு நினைவூட்டுகிறது.


விடாமுயற்சியும், சூழ்நிலையை தமக்குச் சாதகமான பயன்படுதும் திறனு, நேர்மையும். மனிதாபிமானமும் எந்த நாட்டிலும். என்றைக்கும், சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை ஒற்றை வரியாகக்கொண்டு எடுக்கப்பட்ட, அகதியாக வாழ்வது என்பது பெயரில்லாதவனாக வாழ்வதை விட கொடுமையானது என்பதை உணர்த்திய அருமையான திரைப்படம். “தி டெர்மினல்”.

Saturday, April 18, 2009

சிக்ஸ் சிக்மாவும் ரயில் பிச்சையும்

--கோகுல்--

ரொம்ப நாளைக்கு அப்புறம் சிஸ்டம் ஒரு வழியா கையில கிடைச்சிடுச்சி. இத கையில வாங்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. ரிப்பேர்க்கு கொடுத்த இடத்தில அவங்க ஏகப்பட்ட procedures வச்சிருக்காங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏகப்பட்ட formalities. அதுவே டெலிவரியை delay பண்ணுது. உம்...என்ன பன்றது மல்டி நேஷனல் கம்பெனியில்ல!..அப்படித்தான் இருப்பாங்க.. ஆமாங்க சொல்ல மறந்துட்டேன்...இந்த மல்டி நேஷனல் கம்பெனிகள் குவாலிட்டி கண்ட்ரோல்னு ஒரு மேட்டர் வச்சிருக்காங்க. இதுல பலவகை உண்டு. அதுல ஒருவகைதான் இந்த “சிக்ஸ் சிக்மா”. இத புரிஞ்சிக்கிறதுக்கு பல பெல்ட் வாங்கனும். சிம்பிளா சொல்லனும்னா, பல படிகள்ல நடக்குற வேலைய சிக்கல் இல்லாம, error இல்லாம செய்யறதுக்கு ஃபாலோ பன்ற மெத்தட்ஸ்னு சொல்லலாம். இதுல நிறைய mathematical calculation, Derivations எல்லாம் இருக்கு. நமக்கு கணக்கு வராதுங்கறாதால அதப்பத்தி கவலைப்பட வேண்டாம்.


இந்த சிக்ஸ் சிக்மாவுக்கு ஃபேமஸ் ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ், மோட்டரோலா, . இவங்களே பாத்து அதிசயிக்கற மாதிரி ஒரு விஷயம் இந்தியாவில அதுவும் நம்ம கூட்ட நெருக்கடி அதிகமா இருக்குற மும்பையில நடக்குதுனு , நேஷனல் ஜியாகரபி சேனல்ல ஒருதடவை சொன்னப்ப ரொம்ப பெருமையா இருந்தது. அது என்னனா, “டப்பா வாலா” அப்படினு ஒரு கோஷ்டி இருக்காங்க. அவங்க மும்பையின் ஒரு பகுதியில இருந்து இன்னொரு பகுதியில இருக்குற கம்பெனியில வேலையில இருக்குறவங்களுக்கு மதிய உணவு கொண்டு போகிறவர்கள். இவர்கள் பல வருஷங்களா இதை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. புறா கூடு மாதிரி இருக்கிற ஃபிளாட்டுகளில் இடத்தை கண்டுபிடிக்கிறதே கஷ்டம். இதை விட உணவை சரியான நேரத்தில சரியான இடத்தில இருக்கிற சரியான ஆளுக்கு கொண்டு போய் சேக்கிறதுக்கு இன்னமும் கஷ்டம். ஆனா இவங்க error ration பத்து இலட்சம் டிபன் கேரியர்ல ஒரு கேரியர் மிஸ் ஆகிறது பெரிய error. அந்த அளவுக்கு குவாலிட்டி ஃபாலோ பன்றாங்க.(ஆனா வடை வாங்கிட்டு வர சொல்லிட்டு ஆசையோட வெயிட் பன்னா, சட்னி சாம்பார் மிஸ் ஆனா கூட பொருத்துக்கலாம், வடையே வராம இருக்குறது தனி கொடுமை. அத வேற கட்டுரையில புலம்புறேன்...என்ன பன்றது..)


மும்பையில இந்த மாதிரி கேரியர் மிஸ் ஆகாம, கொண்டு போறதுக்கு சில அதீத கட்டுப்பாடுகளை இந்த நிறுவனம் ஃபாலோ பன்னுது. இந்த கட்டுப்பாடுகளும் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில குறியீடுகளும் சிக்ஸ் சிக்மாவின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்கிறது என்பது பெரிய விஷயம். இவ்வளவையும் திறமையாக கையாள்பவர்கள் , நிர்வாகவியல் படித்தவர்களோ, கணிப்பொறியோ அல்ல என்பதே சிறப்பு. இதைச்செய்பவர்கள் மிகச்சாதாரானக் கூலித் தொழிலாளிக ஒரு நாளுக்கு இவங்க தோராயமா 1,75,000 சாப்பாடு டப்பாவை ஹேண்டில் பன்றாங்க.


நான் மும்பைக்கு சென்றதில்லை. இந்த டப்பா வாலா- மனிதர்களை பார்த்ததில்லை. அடிப்படையில் இவர்களின் வெற்றிக்கு காரனமாக நான் நினைப்பது, நேரத்தை கண்க்கிட்டு பயன்படுத்துவதும், விநாடியையும் விரயம் செய்யாமல் செயல்படுவதுமே காரணமாகும்.


இதே போன்ற ஒரு செயல் திறனை நான் எலக்ட்ரிக் ரெயிலில் பிச்சை எடுக்கும் கும்பல்களிடம் கண்டிருக்கிறேன். பெரும்பாலானவர்கள் கண் தெரியாத பிச்சைக்காரர்கள். இருந்தாலும் இவர்களின் சிறப்பான தொழில்நுட்பம் என்னை பல முறை யோசிக்க வைத்திருக்கிறது. தினந்தோறும் ரயிலில் வந்தாலும் இன்றும் பலரால் இரயிலின் நுழைவு வாயில்(entry) அருகில் சரியாக கணித்து நிற்க இயலாது. ஆனால் இந்த கண் தெரியாத பிச்சைக்காரர்கள் ஒருநாளும் மிஸ் செய்வதில்லை. ஏறும் இருவரில் ஒருவர் பாட மற்றவர் யாசிக்க , கலெகஷன் முடிச்சி சரியான நேரத்தில அடுத்த ஸ்டேஷன் வர்றதுக்கு முன்னால இறங்க வேண்டிய இடத்துல சரியான நேரத்துல இறங்கி, அடுத்த பெட்டியில ஏறி தொழில continue பன்றத பாக்கும்போது, இந்த சிக்ஸ் சிக்மா, குவாலிட்டி மேனெஜ்மெண்ட், இதெல்லாம் ரொம்ப சின்னதாதான் தெரியுது. இதுல முக்கியமான் விஷயம் , பரிட்சை எழுதும்போது, கடைசி நேரத்தில 15 மார்க் ஆன்சர இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தா எழுதி இருக்கலாமுனு நமக்கு தோனும். அதுக்கு காரனம் நாம ஆரம்பத்திலேயே அந்த நேரத்த சரியா திட்டமிடாதுதானு நினைக்கத்தோனும். ஆனா இவங்க இதுவரைக்கும் டார்கெட் அச்சீவ் பண்ண நேரம் இல்லையேனு வருத்தப்பட்டதா ஒரு நாளும் தெரியல.


இவ்வளவும் சொல்றானே இவன் டைம் மேனேஜ்மெண்ட்ல எப்படினு நீங்க நினைச்சிங்கன்னா, இதுக்கப்புறம் படிக்காதீங்க. ஏன்னா, 5.25 ட்ரெயின பிடிக்கறதுக்கு, 5 மணிக்கு எழுந்து, எழுந்து காலையிலே டென்ஷனா 5.26க்கு ஸ்டேஷன் வந்து, 12B “ரன் லோலா ரன்”( 12B கதையின் மூலம்) கதைய ஞாபப்படுத்தறமாதிரி ட்ரெயின புடிச்சிருந்தா இப்படி, புடிக்கலனா இப்படினு, டயலாக் பேசிட்டு late message அனுப்புற கோஷ்டி நாம. இன்னும் சில பேர் இருக்காங்க..போதும்பா இதோட நிறுத்திக்கிறேன்...


குறிப்பு: ரன் லோலா ரன் (Run Lola Run). ஒரு நல்ல படம். முடிஞ்சா பாருங்க. எடிட்டிங்னா எப்படி இருக்குனும்னு இலக்கனம் வகுத்த தரமான படம். விநாடிகளின் முக்கியத்தை இதைவிட அருமையாக யாராலும் விவரித்து எடுக்க முடியாது.