Saturday, November 7, 2009

பாதரவு

மு.ஹரிகிருஷ்ணன்


சத்திப்பையன் வெச்சிருந்தது மொத்தம் எம்பது உருவாப் பின்னுக்குத்துக்காசு, ஒருப்பொட்டலங் குருணமருந்தும் ரெண்டு பாட்லு கோட்டரும் வாங்கி, ஒண்ண அப்பயே மூடிய திருவி வாயில ஊத்திக்கிட்டான், இன்னோன்ன வூட்டுக்கு கொண்டி ஒடச்சி அதோட இந்த குருண மருந்தையுங் கலக்கிக் குடிச்சிப்புடலாமுன்னு திட்டம், பின்ன என்னாப்பின்ன? இன்ன மேட்டும் அந்த உசுர வெச்சிருந்து ஆவப்போறதென்னா? சொத்து அழிஞ்சாலுஞ் சொல்லு அழியக்கூடாது, காத்தால ஒரு பேச்சி,மறுக்க மத்தியானம் ஒரு பேச்சா?


ஒடமையின்னு அவங்கிட்ட இந்தது அது ரெண்டுதான், அதுவும் அவஞ்சம்பாரிச்சதில்ல, அடமானம் வந்தது, நகுலூரு சுப்பனது அரப்பவுனு மோதரம், சௌரந்தரங் கோமாளியிது வாஸ்சு! நாளைக்கி ஒருநாளு குறுக்க, மறாநாளு ரெண்டு பேருந்சம்பந்தி, எதுப்பொண்ணு கட்டிக்கிறது. இந்தநாலு வருசமாக் கூத்தாடி அவந்தொச்சமா வெச்சிருந்தது அந்த மூவராயிரம் உருவா மொள்ளதான். அன்னிக்கி இருந்த பசையில ஆத்தர அவசரத்துக்கு கேட்க றாங்கன்னு ஈடுமானம் வாங்கிக்கிட்டுத்தான். காசக் குடுத்தான், அதயே தொழுவாடாப் பண்ற வள்ளலுமயிரு அவனுக்கு தெரியாது, அவன் அப்பேருகந்த ஆளுமில்ல, பழவுன தோசத்துக்கு ஒரு ஒதாரண நெனைக்கப்போயி பங்கம் வந்துட்டது.


வாங்கனவிகளச் சொல்லிக் குத்தமில்ல. அவிங்க குடுத்த தெல்லாம் ஒரு நாலணாப் பாக்கியில்லாம திலிப்பிக் குடுத்துட்டாங்க, இவனேத்தான் இவந்தலயில தட்டப்பொருத்தி வெச்சிக்கிட்டான், இந்தப் பித்தியா வாத்தியாருமாருங்க இவனுக்குச் சொல்லிக் குடுத்தாங்க?
மொதமொத பொன்னான் வாத்தியாரிண்டதான் இவங்கூத்துப் படிச்சது, கொன்னவாயனாக் கெடந்தவன வாய்கூட்டிப் பேச வெச்சி, பாட்டும், அடவுஞ் சொல்லிக் குடுத்தது அந்தப் புண்ணியவாந்தான்.! மவராசன குளுந்த நேரத்துல நெனைக்கனும்.! ராவுல கும்புட்டுட்டுப் படுக்கணும்.! என்னா அந்தாளுக்கிட்ட ஒருசிக்கலுன்னா எதயுத் திருத்தமாச் செய்யணும், இல்லையின்னா அவன் எதுப்புற நிக்க முடியாது. என்னாப் பண்டுவான். ஏதுப்பண்டுவான்னு அவனுக்கே தெரியாது. ஒரெட்டு ஆருலுப்பட்டி ஏரிக்கி அந்தாட்ட வெள்ளக்கல்லுப்பட்டியில முனியப்பந்தெவத்துக்கு கூத்துவுட்ருந்தாங்க, நளதமயேந்திரிக் கண்ணாலம் நாடகம்.! பொன்னாவிக தம்பிக்காரன் மணிப்பையன், நளச்சக்கரவர்த்தி வேசம்போட்டுக்கிட்டு வெளிய போனவனுக்கு சவய அடக்கிப் பேசத்தெரியில. அவம்பாட்டுக்கு என்னென்னம்மோ ஔப்பரிச்சிக்கிட்டுக் கெடந்தான், பொன்னானுக்கு கோவம் ஒண்ணுந் தாக்குப்புடிக்க முடியல, வலப்பையில வெச்சிருந்த பொறந்தவன் வேட்டிய எடுத்து ஒருப்பாட்டுக்கு ஒருக்க,
“கிழிஞ்சிப்போச்சிப்போ
கிழிஞ்சிப்போச்சிப்போ”!ன்னு
ஒருச்சாணுத்துணி மிச்சமில்லாம நூலு நூலாக் கிழிச்சியெஞ்சிப்புட்டான். விடிஞ்சி மணிப்பையன் முண்டக்கட்டயோட ஊரு மூப்பமூட்ல போயி பழைய வேட்டி வாங்கி கட்டிக்கிட்டு ஊடுபோயிச் சேந்தான்.
இன்னோரெட்டு, பக்க நாட்டுச் செட்டுக்கு ஆளுப்பத்தலைன்னு பொன்னானும். அவம்பங்காளி பெரிய கூவானும் போயிந்தாங்க, கொழலுல கூவாம் பேரேடுத்த ஆளு! அபி மன்னஞ்சண்டயோ, அர்ச்சுனந் தேவப்பட்டமோ அதென்னமோவொரு அலங்காரம் வெச்சிருந்தாங்க, பொன்னானுக்கு விடியாலம் வேசம், சேரிச் செத்தபடுத்துக் கண்ணசரலாமுன்னு டேசிக்கிப்பொறன படுதாவ விரிச்சுட்டு படுத்துக்கிட்டிருந்தான். பக்கநாட்டுச் செட்டுல ஆனையப்பன் ஆனையப்பன்னு ஒரு படயாச்சி பொண்ணு வேசக்காரன், அவனொரு சனஞ்சேராத நாயி! பொறத்தியாருன்னா அவனுக்கு பேண்ட பீய திலிம்பிப்பாத்தாப்பல ஓக்காளம், தானுங்கற கெவுரத்தி.


“சீருடன் தொண்டர் நாவில்
செழித்து வளர்பவளே போற்றி!
நாரணன் ஈன்றெடுத்த நான்முகன்
தேவியாளே!
சரஸ்வதி சாரதாம்பா உன்
தாழ்வினை போற்றி! போற்றி! ன்னு”


மூணடி விருத்தத்த முழுசாப் போடல, ஆனையப்பந் தொண்ட பொட்டிய அப்பிடியே கண்ணாப்பின்னான்னு கலைச்சது, மும்பாட்டு பணிக்கில்லையின்னா பிம்பாட்டுத்தான அத நேந்து நெரவுணும். கூவான் நெட்டா ஒரு அகவலு ஊத, உள்றயிருந்த ஆனையப்பன்.
“ஆர்ராவங் ங்கோயா பரதேசிப் புண்டமேல ஒக்க! என்றா கொழலு ஊதற, புண்டக்கொழலு? எங்கயிருந்துடா வர்றீங்க பறத்தாயாலிங்களா எம்பட தாலியறுக்க? அப்பிடியிப்பிடின்னு இன்னும் என்னனென்னம்மோ எச்சா வார்த்த பேசும்பிடி பொறனப் படுத்திருந்த பொன்னானுக்கு ஒவ்வொருச் சொல்லும் இந்த அல்லையிலக் குத்தி அந்த அல்லையில வருது, பின்ன என்னாப்பின்ன தானாடலையின்னாலும் தஞ்சரிகலம் ஆடாதா? எப்பேருகந்த தொழிலாளி? என்னா சேதி? வையகத்துல அவன பழிக்க ஆளுண்டா? குசல நாடகத்துல


சாமியும் வந்தாரா
சண்டைகள் செய்தாரா?
அனுமந்தப் பாலா ன்னு


அவன் ஊதறானே அந்த ஒருப்பாட்டுக்கு ஈடாவானா?இந்த ங்கொக்காளவோலி!
அவங்கால்ல ஒட்ன தூசி! இவனுக்குப்பாருவொரு மண்டக்கணத்த இருக்கட்டுண்டா ஒறக்கழுட்டிமாப்ள!
விடியறதுக்குள்ள உன்ன சின்னம் பண்ணலைன்னா ங்கப்பனுக்கே நாம் பொறக்கலைடான்னு மனசுல வெச்சிருந்தாம் பொன்னான்.
ஆனையப்பங் கழதயாட்டங் குதிச்சிப்புட்டு தர்பார முடிச்சிக்கிட்டு உள்ற வந்தான். மண்டையச் சுத்தி வழிச்சாலும் அவந்தலையில ஒரே மூணு மசுருச் சிக்காது. அக்கியானம் புடிச்சவன், ரெண்டடி சவுரி நால ஓட்டுக்கா வரிஞ்சி அதயே பூவு கீவெல்லாஞ் சிங்காரிச்சி நெத்தியோடச் சேத்தி சடையாட்டங் கட்டிக்கிவான். குதிக்கற முட்டுங் குதிச்சிப் புட்டு வந்து அத அவுத்து வெச்சிருவான்.
அன்னிக்கும் வந்தவன் மசுத்த தளத்தி பட்டிக்குச்சியிலக் கட்டிப்புட்டு வேசம் போட்டுக்கிட்டிருந்த சீனாங்கிட்ட பீடி வாங்கி பத்த வெச்சிக்கிட்டுக் குந்தியிருந்தான்.
மொழங்காலு குழி பொறிச்ச பொன்னான்,அலுங்காம அத அவுத்து குழிக்குள்ற போட்டு மண்ணத்தள்ளி மூடி,மேல படலப் பிரிச்சிப்போட்டு படுத்துக்கிட்டான், நாயம்பேசற முசுவுல ஆனையப்பனும் இதயெதயுங் கண்டுக்கல, அவஞ்சாயிண்டு வேசக்காரன் குஞ்சிப்பையன் தர்பாரு ஆவும்போதுதா எந்திரிச்சி சடயப் பார்த்தான், அது கட்ன தாவுல இல்ல.
“ஆயா ங்கொம்மா" ன்னு
பேசிக்கிட்டு தொழாவு, தொழாவுன்னு தொழாவுனா எங்கப்போயி அதுச் சிக்கப் போவுது? முடி இல்லாம மொட்டத்தலயோட எப்பிடி சவைக்கி வாறது? இவன் வேசத்த பொது வசனமாப் பேசி சரிக்கட்டிக்கிட்டாங் கு ஞ்சிப்பையன். இருந்தாலும் விடியாலம் ஒரு வேசம் வரவேயில்லைன்னு நூறு உருவாச் சொனயான ஆட்டமுட்டவங்க பாணிப்பண்டிப்புட்டாங்க.
அப்பேருகந்த ருஸ்தமான வாத்தியாரிண்ட வித்த கத்து என்னாப் பிரயோசனம்.?
அப்பறம்,
சிறுசுப் பெருசாச்சி, செட்டுங் கந்தறயாச்சி. பொன்னாங் கூப்புட்டுச் சொல்லிப்புட்டான்.
“அடே அடே சத்திப்பையா! இதப்பார்ராச் சாமி, உனக்கு பொழைக்க தடங்காட்டியுட்டுட்டன். நீயிப்போயி நெனப்பா பொழைச்சிக்கடாப்பா, இந்தச் செட்டயும். உங்களையும் கட்டி மாரடிச்சிக்கிட்டிருந்தா எம்பொண்டாட்டிப் பிள்ளைங்க கஞ்சிக்சிச் செத்து வீணாப் போயிருவாங்கடாப்பா”ன்னு.
கோழி, குஞ்சப் பிரிக்கறாப்பல பிரிச்சுட்டு அவரு கூப்புட்டப்பக்கம் கூத்துக்குப் போவ,,,,
சத்திப்பையன் அங்கயிருந்து எடப்பாடிக்கிப் போயி பொன்னியூட்டு மண்டயங்கிட்டச் சேந்தான், மண்டயன் ராவுலக் கூத்தாடி, பவல்ல சந்தப் பீச்சாண்டி.!
மொவங்கழுவி கண்ணாடிய எடுத்து, மின்ன வெச்சி வேசம் போட ஆரம்பிச்சா, அந்தக் கூறுமுஞ்சி காட்ற சேட்டைக்கிப் பயந்தே முக்காவாசிப்பேரு அந்த செட்லயிருந்து ஓட்டம் புடிச்சிருக்கறாங்க. நாயம் அநியாயங்கறது அவந்தலக் கட்டுக்கே தெரியாது, எல்லாந் சுதாரிச்சியிருந்தா எதோ ரெண்டு விசியஞ் தெரிஞ்சிக்கலாம்.
பேயிக்கி தாலிக்கட்னப்பொறவு சுடுகாட்டுக்கு பயந்தென்னா ஆவப்போவுது ? இவம் பாவம் படாத நிமுசுப் பட்டுக்கிட்டு அவனே கெதியின்னுக்கெடந்தான், மண்டயனுக்கு ஒரு கூத்தியா கந்தாயி, கந்தாயின்னு அவனோடவே இருந்தா கூத்தாடிக்கிட்டு. குஞ்சாம் பாளையத்துல ஒரு ஆட்டத்தன்னிக்கி சத்திப்பையந் தல கழுவிக்கிட்டு வந்துருந்தான்.
மைப்பந்துப்போட்டு ஊற வெச்ச எண்ணயப்பூசி பூசி அவனுக்கு மொழங்காலுமுட்லும் மசுரு, என்னதாஞ் சிக்கெடுத்துச் சீருப்பாத்தாலும் முடிஞ்சக்கொண்டய அவுத்தா அதோட மல்லுக்கட்டிதாம் படியவெக்கணும்!. வாக்கு அவ்வளச் சீக்கரம் பிரியாது. இவம்பாவம் கவடத்து
"கந்தாயிக்கா, கந்தாயிக்கா! இந்த தலயச் சித்த நேரெடுத்து ரெட்டச்சடப் போட்டுவுடுக்கா” ன்னு
கேக்க, அவளும் பாவஞ் சூதுவாது தெரியாம வாடா தம்பியின்னு ஒக்காரவெச்சி பெரும்பல்லுல நெவு நெவுன்னுச் சீவி ரெட்டச்சடப் பின்னிவுட்டா.
அன்னமுட்டும் மண்டயன் அவள நோட்டம் பாக்கறது ,பையன நோட்டம் பாக்கறது, வேசம் போடறதுன்னு கொறவனாட்டங் குந்தியிருந்தான். சத்திப்பையன் எந்திரிச்சி சீலயக்கட்டி சலங்காயக் கையிலெடுத்து,சாமிய வருந்தி கால்லச் சுத்திமுடிப்போட்டுக்கிட்டு, அரினனா,,,னா.ன்னு ராகம் போட்டான், கிடீர்னு ஒரு வொத கந்தாயிப்பிள்ள அல்ல வவுத்தக்கட்டி வுழுந்ததுப் பாரு, வடக்கத்தி படலோட அய்யோ யெஜ்ஜான்னு பொம்பள புழுதிக்காட்லப் போயி வுழுந்தா.
"ஏண்டி தேவிடியா! கொண்டவங் கொடுங்கையில, கொள்ளாதவன் உனக்கு மாரு மேலயாடி"ன்னு
மண்டயன் மூக்குல புளுத்துப்போயிக் கேக்க, சத்திப்பையன் நெட்டா அவங்காலடியில வுழுந்து
“அய்யோ வாத்தியாரே தப்பித் தவறிக்கூட உன்னு வாயால அப்பிடிச் சொல்லாத வாத்தியாரே அந்த தாயி ங்கம்மாளோட ஒணணு வாத்தியாரே”ன்னு
கெஞ்சிகெதர்றான்.
“ஏண்டா ங்கோயாலோக்க மொளச்சி மூணெலவுடல அதுக்குள்ள கூத்தியாச் சேத்தறயா கூத்தியா" ன்னு
வுட்டாம் பொத்துன்னு அவனுக்கு ஒருவொத! தெக்கித்திப்படலோட அவனும் புழுதிக்காட்ல போயிவுழுந்தான், வொதயத் தின்னுப்புட்டு என்னம்மோச் செரிக்கட்டி பொழுத ஒட்டி கதய முடிச்சி மங்கலம் பாடனாங்க. விடிஞ்சது, வேசத்த அழிச்சிப்புட்டு இவம்போறதுக்குள்ள மண்டயன் பைட்டேண்டு மோரிமேல தலகிழுதா கெடந்தாங் குடிச்சிப்புட்டு.
"வாத்தியாரே சம்பளம் வாத்தியாரே"ன்னு
பையங்கேட்க அந்த ஒணவு கெட்டவன் துள்ளிக் குதிச்செந்திரிச்சி,
"டே செட்டுக்கு வந்தமா குடுத்த வேசங்கட்டி ஆடனமான்னு உன்றச்சோலி மசுர பாத்துக்கிட்டுப் போயிக்கிட்டேயிருக்கனும், சம்பளங் கேக்கறப்பாரு, இந்தவொரு வேலப்புண்ட மட்லும் எங்கிட்ட வெச்சிக்காத"ன்னுப்புட்டு
திலுப்பியுங் குப்புற அடிச்சிப்படுத்துக்கிட்டாம் போதயில, என்னமுட்டும் நின்னுக்கிட்டிருக்கறது? பொட்டியத் தூக்கி தலமேல வெச்சிக்கிட்டு பதனெட்டு மைலு நடந்தேப்போயி வூடுச் சேந்தான்,
மண்டயங்கிட்ட சின்னப்பட்டு சீரழிஞ்சி ஒண்ணும் மோசம் போவல, ஒரு நல்லகாலம் பொறந்தது, மணிப்பையம் மறுக்கவுஞ் செட்டுக் கட்டனான், சத்திப்பையன் நாயா பேயா ஒழைச்சான், உருப்பிடியா தொழிலச் செஞ்சான், நாலுபேரு பரவால்ல சத்திப்பையன் வேசம் நல்லயிருக்குதுங்கற ரெவலுக்கு வந்தான், பொறவு சத்திப்பையன் இல்லையின்னா ஆட்டம் நெறக்காதுங்கற அளவுக்கு ஆச்சி, அவங்கையில ஒரு நூறு எரநூறு பொழக்காட்டம் போட்டது, அப்பறம் பாத்துக்க மாப்ளைக்கி கொம்பு மொளச்சிட்டுது, அறுப்புக்காலத்துல பெருக்கானுக்கு ஆறேழு கூத்தியாருன்னு சும்மாவாச் சொன்னாங்க?
பண்ணாடிக்கி போனபக்கம் பொண்டுங்க தொடுப்பு! பொழுது விடிஞ்சாலும் நழிச்சலு, கூட சீசாத்தண்ணீயும் போட பழவிக்கிட்டான், என்னம்மோ ங்காயா மேச்சேரி பத்ரக்காளி மொவம் முழிச்சி அவஞ்சாரீரத்த கெடுத்து பொழப்பல மண்ணள்ளிப் போடாம வுட்டுவெச்சிருந்தா.
இந்தக்கத இப்பிடியிருக்க.
சத்திப்பையனோட வீரப்பன் வீரப்பன்னு ஒரு குளுவன், அவனும் பொண்ணு வேசக¢காரஞ் செட்ல ஆடிக்கிட்டுயிருந்தான், பெருமைக்கிச் சொல்லல, தாயாலிக்கி கத்தியாட்டத்தொண்ட, முடிஞ்ச மட்லும் அவனும்பாவம் செட்டுக்குப் பாடுபட்டான், பாஞ்சாலக் கொறவஞ்சி நாடகம் வெச்சி அதுல இவங்கொறத்தி வேசங்கட்டிக்கிட்டு
சத்தியதுரோபதைக்கி தருமதயாளரும் விடையளித்து
சித்தமுங்கலங்கிவாடி தயங்கியே இருக்கும்போது
பத்தினி ரூபம்மாறி பாலனை இடுப்பில் வைத்து
அத்திமாநகரம் நோக்கி அம்மனும் வருகின்றாளே!ன்னு
விருத்தம்போட்டு


பாஞ்சால குறவஞ்சி வந்தாளே- பாலனையேந்தி
பாஞ்சால குறவஞ்சி வந்தாளே
பாஞ்சால குறவஞ்சி வந்தாள் பார்த்தாவ- பாலனாயேந்தி
செஞ்சிபதியாளுமம்மன் சிரசினில் கூடைவைத்து
நினைத்தகுறி தானுரைக்க நீலவர்ண மாயவரே
நீரும் வந்துதவவேணும் நினைத்தக்குறி சொல்லவேணும்
அக்கினியில் வந்துதித்து ஐவருக்கும் தேவியாகி
அக்யாதவாசம் விட்டு அத்திபுரம் போகலானேன்
முத்துமணிரத்தினங்களால் முடைந்து கட்டும் கூடையேந்தி
மூடனிட வாசலுக்கு முறைசொல்லப் போறேன் சாமி
சண்முகனார் அளித்த சதிரான கூடையேந்தி
சண்டாளன் வாசலுக்கு தான்போக நீதியாச்சே
ஆயனே மலர்கண்ணா அண்ணா அவரவர்க்கு குறியுரைக்க
அத்திபுர வீதிவந்து அமர்ந்திருக்க வேண்டும் சுவாமி.
மாபாவி துரியராசன் மானபங்கஞ் செய்திருக்க
மடையனிட வாசலுக்கு மாதுபோக காலமாச்சே
வனமாய் வனங்கடந்து வந்தேன் இருண்டவனம்
அந்தவனந்தனிலே ஆயனே துணை வருவாய்-ன்னு


இந்தப்பாட்ட பாடிக்கிட்டு வெளிய வந்தான்னா அடேயெங்கப்பா அவங்கொறத்தி வேசத்த அடிச்சி ஆட இன்னொருத்தன் பொறந்துதான் வருணும்.மணிப்பையனும் மத்தாளக்காரன் பள்ளிப்பட்டி பெருமாளும் ஆளுங்க நெலவரத்தக்கண்டு செட்டுச் சம்பளத்த நேக்கா ஏப்பமுட ஆரம்பிச்சிக்கிட்டாங்க மூவாயிரஞ் சம்பளம் வாங்கனா ஆயிரந்தள்ளி ரெண்டாயிரம் போட்டுப் பிரிக்கிறது, ரெண்டாயிரஞ் சம்பளமின்னா உருவா ஆயிரந்தாங் கணக்கு, சத்திப்பையன் ஒருநாளு
“அடேய் நல்லவாயஞ் சம்பாரிக்கறத நாரவாயந் திங்கறாப்ல திங்கறிங்க. தின்னுத் தொலையிங்க, தூரந்தொலயா இருந்துப் பாவம் பத்து இருவது பஸ் சார்சுப் போட்டுக்கிட்டு வர்ரான் வீரப்பன். அவஞ்செலவுக்கு உண்டானத ஒரு அஞ்சிப்பத்து சேத்திக் குடுங்கடான்ன ததுதாம்ப்பா"....
“அடடா கூத்தாடிங்களே! பரவால்ல நல்ல நாயம் பேசிப் படிவிட்டீங்க. எங்களுக்கு தெரியாதாச் சம்பளம் பிரிக்க. குடுக்கறத்த வாங்கிக்கணும். கொலாய மூடிக்கிட்டு இருக்கணும், இதுதாஞ் செட்டு நடமொற! நாங்க வர்றவிங்கள வான்னுஞ் சொல்லல, போறவிங்கள வேண்டாமின்னுஞ் சொல்லல, இந்த சரோசாதேவியும் கே,ஆரு, விசியாவும் இல்லையின்னாச் செட்டு மாண்டாப் போவுது இல்ல பூன'கண்ண மூடிக்கிட்டா பூலோவம் இருண்டுப்போயிருமா?" ன்னு கீட்டகம் பேசும்பிடி சத்திப்பையன் விசுக்குனு கௌம்பி வூட்டுக்குத் திலும்பிக்கிட்டான், மறாவது நாளு கூத்து இவனும் வீரப்பனும் போவாம நின்னுப்போச்சி. மணிப்பையஞ் சைக்கிலு எடுத்துக்கிட்டு சத்திப்பையமூட்டுக்கே வந்துட்டான்.
“என்றாச் சத்தி இப்பிடி சல்லியம் பண்றாப்ல பண்டிப்புட்ட? நீ பேசி வாங்கன வெத்தலப்பாக்கு, ச்சாமிச்சாமியா இருப்பியாம், இன்னிக்கி ஒரு நாத்திரியும்வந்து ஆடிக்குடுத்துர்றா. இல்லன்னா ஊருக்கரவத்தானுங்க ஈட்டுக்குச் சிக்கிப்போயிரவமுடா”ன்னு
அவங்கிட்டயும் அங்கயிருந்தபொண்டு பிள்ளைங்ககிட்டயும் நாயஞ்சொல்லி அழுவாத கொடுமயா கூப்புட, இவனுஞ் சேரி சேரின்னு போனான். போயி வேசம்போட்டு ஆடனான், விடிஞ்சி பெருமாளே வந்து இவங்கிட்டப் பேச்சிக்குடுத்தான்.
“ஏண்டாச் சத்தி நீரடிச்சி நீரு வெலகுமாடா? அப்பிடி என்றாப்பா நாஞ்சொல்லப்புட்டன்னு உனக்கு பொணக்கு வந்திரிச்சி, என்னம்மோ ஒரு பெரியமனுசன் வௌயாட்டுக்குப் பேசனா அதப்போயி கூரியமா மனசல வெச்சிக்கிறதா”ன்னு
கொழையிறான். கொணாய்க்கிறாஞ்சும்மா, இவனும் தொலையிதுடான்னு இருக்க அன்னிக்கி திருப்பியும் உருவா அயிநூறத்தின்னுப்புட்டாங்க நெண்டுப்பேரும், இவனும் வீரப்பனும் ஒரே முடுவாச் செட்டுக்கு போறதில்லன்னு தீருமானம் பண்டிக்கிட்டாங்க.
ஆட்டத்துக்கு போவலையின்னாச் சோத்துக்கு ஆரு குடுப்பா? அதும்போவ ஆடனகாலும் அவுசாரி போனப் பொச்சும் சும்மாயிருக்குமா?
கெடயில காலுத் தங்காம நத்தமேடு குளுவவமூட்டாரோட நாளு ராத்திரிக் கூத்துக்குப் போனாஞ் சத்திப்பையன்.


ஆரு ஆரோ ஆடறாங்க! பல பட்டறயுங் கூத்தாடுது அடோ சாமீ! கூத்துக்குன்னுப் பொறந்தவிங்க குளுவமூடுதான் நண்டுச் சிண்டு குஞ்சி குளுவான்னு சிறுகால் மட்டத்துலயிருந்து பெருங்காலுமட்டம் மட்லும் எதலயும் பூந்து வந்துருதுங்க அதுங்கச் சமாச்சாரமே வேற.
அவிங்க எசைக்கும் இவனோட எசைக்கும் ஒண்ணும்ரைனு வரல, ஆனா எடங்கண்டு பேசி தடங்கண்டுப் போறது எப்பிடின்னு அவிங்கக்கிட்டப் படிச்சிக்கிட்டான் உன்னப்பாரு என்னப்பாருன்னு கெழுடு கிண்டுங்களப் பாத்துக்கிட்டு எத்தன நாளைக்கி ஊட்டுல குந்தியிருக்கறது, அதும்பொறவு தொரசங்கட்டி ஏகாபுரத்துச் சுப்ருண்டப் போயி எடஞ்சேந்தான் அலங்காரத்துக்கு.
சுப்புரு ஒத்த உருவாயாயிருந்தாலுந் சேரி இன்னொருத்தங் காசுக்கு ஆசப்பட மாண்டான் ஒலக அனுப்பவம் தெரிஞ்சவன் எடப்பாடி மகுடஞ்சாவடியக்கட்டி, கெழக்க சேலம், தெக்க ராமக்கல்லு ஒருக்கோடியா பேரு தெரிஞ்ச கூத்தாடி. கொணம் மணம் ஆட்டம் பாட்டமின்னு, அவஞ்சங்கிதியே தனி. கச்சிதமான தொழிலாளி, நெலக்கடயானப் பாட்டுக்காரன். பதனெட்டாம் போர்க்களம் வெச்சி இவந்துரியோதனங்கட்டி,


“பாராளுந் திறமையிலாப் பாவியானேன்
பஞ்சவர்மேல் போர்தொடுத்தே விருதாவானேன்
தூறாதமரம்போல வொண்டியானேன்
துணையிழந்த பேடதுபோல் தவிக்கும்பாவி
நாராசங்காச்சிவிட்ட பான்மை போலே
நடுநடுங்கி மெய் சிலிர்த்து துரியன்தானும்
பொறாமையுள்ள சகுனி சல்லியன் சூழப்
போர்களத்தைக் கண்டு குறைமேற்கொள்வானே”


ன்னு, விருத்தம் போட்டு,பொறவு
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்
துரோகி துரியன் வந்தனன் ரணகளத்தில்
பாவி துரியன் வந்தேன் பாராச் சமர்களத்தில்
ஒண்டிக்கி ஒண்டியானேன் ஒருமரத்தோப்பானேன்
சிந்தனையில்லாது சிறகிழந்த பட்சியானேன்
பாவி துரியன் வந்தனன் ரணகளத்தில்”


ன்னு, பாட்டுப்பாடி வெளிய வந்து, படுகளத்துல வீமங்கெதயில அடிப்பட்டு காலொடிஞ்சி சாவற முட்டும் அவனப்பாத்து அழுத கண்ணுச் சிறுத்துப் போயிரும். சுப்புரிண்டப் போனப்பொறவு பரவால்ல. நல்லச் சேம்பரம் வரும்பிடிக்கும் ஒண்ணும் பஞ்சமில்ல.
கண்ணுச் சாளேசுரத்த கெவுணிக்க கெதியில்லாம திண்னையக் காத்துக்கிட்டு கெடந்த அவிங்கப்பங் கருப்பன மதுர கண்ணாசுப்பத்திரிக்கி கூட்டிப்போயி ஆப்பரேசன் பண்டி கண்ணாடி மாட்டிவுட்டான். மூட்டு வலியின்னும் மொழங்காலு வலியின்னும் வருசக்கணக்கா நடயில்லாம பாயிக்கி தொணயாப் படுத்துக்கிட்டிருந்த அவங்காயா செவிடிய ஈரோட்டு எலும்பாசுபத்திரிக்கி கொண்டி வைத்தியம் பாத்தான். அவந்தாயி தங்கப் பொண்ணூட்டுப்பிள்ள வயிசிக்கி வந்திச்சி, அதுக்கு அரப்பவுனு தோடு மூக்கித்தி ஆயிரம் உருவாயிக்கிச் சீலத்துணி மணி பதனேழு தட்டு வரிசயோட புளியம்பட்டி பல்லனையும் ஒலகடம் பூவரசனையுங் கூட்டியாந்து நையாண்டி கரவ முட்டாட்டி தெரட்டிச் செஞ்சாஞ் செரீங்கறாப்பிடி.. வவானித் சித்தாத்துல ஒருப்பொண்ணப் பாத்து அவனும் ஒரு கண்ணாலங் கார்த்திச் செஞ்சிக்கிட்டான்,அரமணைக்கிவொரு ஆம்பளப்பையனையும்,ஒரம்பரைக்கிவொரு பொட்டப்பிள்ளயையும் பெத்துக்கிட்டான், ஏழப்பால பொழச்சிட்டுப் போவுதுன்னு ங்கெப்பன் மவராசன் எம்,சி,யாரு அவிகப்பனும் ஆயாளும் போயி சம்பாரிச்ச சொத்துல காலனிக்கட்டிக் குடுக்க, அதுக்கொரு அய்யாயரம் வாக்கரிசிப்போட்டு சொந்த வூடுங்கட்டிக்கிட்டான்.
இதெல்லாம் மூணு நாலு வருசத்திக்கி மிந்தின ராமாயணம் மகாபாரதம், சுத்தமா இந்த வருசமும், போன வருசமும் பையம் பட்ட சித்ரவத பகவானுக்குதாந் தெரியிம், நேத்து வந்தானாங்குடி அவந்தலயில வுழுந்திச்சாம் இடிங்கறாப்பிடி உள்ளங்காலு வெள்ள எலும்பு தேய ஓழைச்ச சம்பாரிச்சி கட்ன வூட்ல எண்ணி எட்டு மாசங்கூட இந்தப் பையன் இருந்துப்பொழைக்கல.
மேக்க அந்தியூருக்கு அந்தல்ல எழுதிய மரத்தய்யங்கோயிலுக்கு கூத்தாடிப்புட்டு கழுத்துமுட்டும் கவட்டான் வரிச்சிக்கிட்டு வந்து மப்புல அவம் மச்சாங்காரன கண்டாரக் கழுதயின்னு பேச அவனிருந்துகிட்டு “இதாப்பாரு கடவுளே! என்னம்மோ கெடந்துசாட்டாவுது, நம்ப தங்கச்சிப் பிருசன் நம்பதங்கச்சிப் பிருசன்னு இத்தன நாளா நானும் வெச்சிப்பாத்தன், இன்னமேட்டும் போதப்போட்டுக்கிட்டு வந்து ஒரு வயசிப்பிள்ளைங்க இருக்கற எடத்துல நேந்தப்பிடி கொச்ச கோளாறு பேசிக்கட்டு திரியற வேல நம்பளுக்குச் சுத்தப்படாது, மட்டு மரிகேதிய கெடுக்கறதுக்கு மின்ன வூட்டவுட்டு அந்தண்ட தாண்டிக்க”ன்னு ஒரேவார்த்தயிலச் சொல்லிப்புட்டாங் கறாரா.
வெத்து மேலுல ஈமிய்க்க துணிமணியில்லாமக் கெடந்தவன் சிவுக்குனு எந்திரிச்சி சிண்ட ஒதிறித் தட்டி முடிஞ்சிக்கிட்டு இடுப்புலயிருந்த ஒட்டுக்கோமணத்தோட அப்பனாத்தா பொண்டாட்டி பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு அம்மாபேட்டைக்கி வந்து, பரசத்தாட்டி பூலாம்பட்டி வந்துட்டான்.ஆறுமாசம் ஒருவருசம் ஆவுமிந்தியே,அப்பனையும் அம்மாளையுந் தின்னு தண்ணிக் குடிச்சிப்புட்டான். அம்மா செத்த எலவுக்கு பொண்டாட்டி மூக்குல. காதுல இருந்தது அடவுக்குப் போச்சி, அப்பஞ்செத்த காரியத்துக்கு அந்த மோதரமும் வாஸ்சும் போச்சி.
மின்ன மாதரயா நோம்பி நொடிக்கி ஆட்டமுடறாங்க? இப்பத்தாங் குண்டியாட்டம் பாத்துப் பழவிக்கிச்சே சனம், எடவெளியே இல்லாம அலங்காரமா வந்து குமிஞ்ச எடத்துல கூத்துங்கறதே அறுதியாயிக்கிச்சி, கூழோ. கலியோ. கூப்புனு அரிசிச்சோறோ கொல நனஞ்சாப் போதுமின்னு வவுத்துப்பாடே பெருசாப்போச்சி, இதல எங்க அடமானத்த மூக்கறது, ஆறு மாசத்துல வட்டியும் மொதலுங்குடுத்தவனுக்கு இன்னிக்கி. நாளைக்கின்னு சாக்குச் சொல்லியே வருசம் ஒண்ணத் தாட்டியாச்சி.


தலமேல இருக்கறச் சொமயா கொண்டாடா நாஞ்சித்த தூக்கியாரமின்னு வாங்கிக்கிறதுக்கு உருவாச்சமாச்சாரம், இந்தக் காலத்துல ஒருத்தம் பொழைக்கறதப் பாப்பானா? பெறத்தியாங்கயிட்டத்தப் பாப்பானா? நகுலூருச் சுப்பனும். சௌந்தரங் கோமாளியும் ஆன முட்டும் இவஞ்சொல்ற தவுமானத்தக் கேட்டுக்கிட்டாங்க, ஆனாக் கண்ணாலக் காரியமாச்சே ஒரு நவ நட்டு இல்லாம எப்படி? பாக்கற வரைக்கும் பாத்துட்டு சுப்பஞ் சுருக்குனு ஒருச்சொல்லு சொல்லும்புடி சொல்லுப் பொறுக்க மாண்டாம ஒடி பனங்காட்டு மொண்டிச்சிக்கிட்ட ஒத்தைக்கி டவுலு கந்து வட்டிக்கி காசவாங்கி மோதரத்தையும் வாஸ்சயும் மூட்னதெல்லாம் மிந்தாநேத்தே மூட்டிப்புட்டாள் ரெண்டுநாளா ஆடவேண்டிய ஆட்டம் மழைக்கி நிக்கிம்பிடி அவுங்களும் நேர்ப்படல, மக்யாநாத்து சலகண்டபுரம் மதுர காளியம்மன் கோயில்ல அலங்காரம் இருந்தது, நேர்ல கொண்டி குடுக்க மொடப்பட்டுக்கிட்டு சேரி அங்க வந்தா பொருள ஒப்படச்சிப்புடலா மின்னுச் சிலேட்டமா இருந்தான். வெனய தேடிக்கிட்டான்.
செட்டுக்குப் போயும் தரித்தினியம் தொலயில, நீட்டாத கைய நீட்டி வாங்காத பக்கம் மொள்ளய வாங்கி வெச்சிட்டமே. எடப்பட தடப்பட எங்கியாச்சும் கூப்ட்டப்பக்கம் போயி பத்தஞ்சி ரெண்டு உண்டுன்னாச் சம்பாரிச்சாத் தானே கடங்கட்ட முடியிமின்னு மத்த செட்டுக்கும் போயிக்கிட்டிருந்தாம் பையன்.


வடச்சட்டிக்கிப் பயந்து அடுப்புல வுழுந்தாப்பிடி ஆயிப்போச்சி அன்னிக்கி இவங் கூத்துக்குப் போன கத, நம்ப சங்கிரி அஞ்சிப்பனையாண்ட கொரங்கச்செட்டுதுதாஞ் சதுரு, ஆனா கூத்துவுட்ட கரவத்தானுங்க பொண்ணு வேசத்துக்கு இவந்தான் வேணுமின்னு தனிச்சம்பளத்துக்கு பேசி வண்டிப்போட்டுக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.


கொரங்கனோட கூத்தாடறதும் ஒண்ணு அந்த நறவல்ல காலு வெக்கறதும ஒண்ணு, ஆலாமரத்துலக் குந்திக்கிட்டு கொரங்கு எம்புளுலேச் செம்புளுலுன்னுத் தடவித் தடவிப் பாக்குமாமே அந்த மாதர ஒருச்சுக்குந் தெரியலைன்னாக் கூட என்யைவெட பெரிய புளுத்தி எவனுமிந்த பூமியிலியே இல்லம்பான், அவனோட ஒராளு வேசம்போட்டு ஆடுதுன்னா அவனுக்கு அடங்கித்தான் இருக்கணும், கடுகத்தன மீர்றதுக்கில்ல, அப்பிடி எங்கியாச்சுந் தப்பிடியா ஒருத்தங் கொண்டயம் போட்டுட்டான்னா இவன் விடியறதுக்குள்ள எதோவொரு வகயில அவன மொக்கப்பட்டம் பண்டிப்புடுவான், அரியானூரு பழனிசாமியிலிருந்து தானாதியூரு அர்ச்சுனன் முட்டும் அவஞ்சில்ரப்பித்திய செருப்பலடிக்காதவங்களே இல்ல, துரோபத துயிலு நாடகம், மடத்தூரு ஆறுமொகம் திரியோதனன், கொரங்கந் துச்சாதனன் சத்திப்பையம் பாஞ்சாலி. செட்டிப்பட்டி சின்னாளு அர்ச்சுனன். சித்தூரு பழனி தருமரு, திரியோதனந் தர்பாருக்குப் பொறன பாண்டவரு அஞ்சிபேரும் தர்பாரு ஆனாங்க, பகடயாட்டம் முடிஞ்சி. துச்சாதனன் துரோவதி சந்திப்புக்கட்டம்.


“மதித்த துரோபதையே நீதான் மானமுள்ளவளே யானால்
தித்தரும்நூற்றோர்அன்புவேணும்என்பவளேயானால்
கொதித்திடும்எந்தன்அண்ணன்கொலுவிற்குவரவேச்சொன்னார்
எதிர்த்துரை சொல்லாமல் யென்பின்னே வாராய¢“
“மட்டும் மருங்கும் மரியாதி இல்லாமல்
பொட்டெனவே எனையழைத்த
புத்தியில்லா மைத்துனரே
தோற்றமுடி உங்கள் அண்ணன்
சூழ்ந்திருக்கும் சபையில் என்னை
இட்டு வரச் சொன்னவிதம் எனக்கறியச் சொல்வாயே“
“வள்ளியே தருமபுத்திரன்
வலிவந்த சூதுமாடி முன்னிலும்
நாடுநகரம் முழுவதும் தோற்றான் பெண்ணே!
தன்னையும் தோற்றான் தம்பிமாரையும்
தோற்றான் உன்னயுந் தோற்று நின்று
ஒடுங்கினான் வந்து பாராய்“
“என்னையும் சொக்கட்டானில் வைத்து
இசையவே தோற்றார் என்றால்
என்மன்னவர் ஐந்துபேரும் வரவழைத்திடுவார்
காண் உன்னயும் யார்தான்
கண்டார் உன் தமையைனையும் யார்
தான்கண்டார்? பின்னமா பேசாதே
பேசாமல் நடந்திடுவாயே“
“நடக்கத்தான் வந்தேன் வந்தேன்
ஒரு நாழிகை தனிலே யுன்னை
ஒடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
வேந்தர்கள் சபையின் முன்னே
கெடுக்கத்தான் வந்தேன் வந்தேன்
கெர்வத்தை அடக்க வந்தேன்“
“துரோகியே இதுவென்ன சொல்லடா
என்னை தொடவேண்டாம் தூரநில்லடா
நெருப்பென்று தெரியாது நீசனே நீயாடாதே
கருத்தினால் கெட்டு வீணாய்க் கருகிப்போகாதே“
“தொட்டு இழுக்காமல் போவேனோ
போனால் துரியந்தம்பி ஆவேனோ
செத்தமாடும் பில்லுத் திங்குமா இனி
உஞ்சித்திர மினுக்கெல்லாம் செல்லுமா“


இந்த மாதர பாட்டுக்குப் பாட்டு விருத்தத்துக்கு விருத்தம் சத்திப்பையன் வுட்டுக் குடுக்காமப் போடும்படி, கொரங்கனுக்கு வேக்காடு ஒண்ணும் பொறுக்கமுடியல.
"போடுசா பொக்க "
"போடுசா பொக்க "ன்னு
சும்மாவே அல்லையில காரிக்காரித் துப்பிக்கிட்டிருந்தான்.
போடுசா பொக்கன்னா கூட ஆடற வேசக்காரன தொம்பரூட்டு பாசையில நாஸ்தி பண்றது, இவன் என்னாப் பண்டறான், ஏதுப்பண்டறான்னு கண்ணுறுத்துப் பாத்துக்கிட்டிருந்தாஞ் சத்திப்பையன். ஹூம் அவனுக்கா தெரியாது பல தண்ணி குடிச்சவனுக்கு. இருந்தாலும் தொழில தொழிலாச் செய்யனுமின்னு,,, பையங் குட்டு வுடல.


துயிலுரியறக் கட்டம் வந்தது, எப்ப அந்தக்கட்டம் வருதோ,,, தொரவதி வேசக்காரனும். துச்சாதன வேசக்காரனும் இன்னதுதாம் பண்றமின்னு ரக்கு தெரிஞ்சி வெளையாடனும். இல்ல மந்தையில மானங்கெட்டு நிக்கணும், இதுதாண்டா சமயமின்னு எடங்கண்டு ஏறி மிதிச்சாங் கொரங்கன், ஏமாந்த வாக்குல நின்னு,வசனம் பேசிக்கிட்டிந்த சத்திப்பையஞ் சீலயப் புடிச்சி வெடுக்குனு இழுத்தாம் பாத்துக்க...... அவம் போட்ருந்த படி முடிச்சறுந்து முக்காச்சீல கொரங்கங் கையோட வந்துட்டது. அதறப்பதற அலயக்கொலய இப்பிடிச்செஞ்சா ஆருக்குத்தான் வெறி திலும்பாது? கங்கேடு மதிகேடா நட்ட நடு டேசியில போயிநின்னு சத்திப்பையன்,
“அடே கொழுந்தா! ஏண்டாப்பாவம் இவ்ள கயிட்டப்படற? இப்ப என்னா உனக்கு எம்பண்டத்தப் பாக்கணும் அவ்வளத்தான. இந்துரா பாத்துக்கடா”ன்னு
பாவாடய தூக்கி காட்டிப்புட்டு உள்ற போனவந் திரும்பி வரல, பிதுமாரு கெட்டுப்போச்சி, ஆயிரம் ஆட்டம் ஆடியிருக்கிறான், ஒரு நாளயிலியும் இந்த அவுமானம். நேந்ததில்ல.
பாஞ்சாலி சவதங் கூறாம கதய முடிக்க முடியாது, கூத்துட்டவங்க வந்து கெஞ்சிக் கொறமாட சத்திப்பையஞ் சாராயம் இல்லாம வெளி வரமாண்டேன்னுப்புட்டான், அஞ்சிப்பனையில சாராயத்துக்கா பஞ்சம்? நிழுசங் கொண்டாந்து குடுத்தாங்க சிலுவருப்போவுணி வழிய. சரக்கு அடிச்சிக்கிட்டுப் போயி ஒண்ணா ரெண்டா பாடி சந்தடைச்சிப்புட்டு வந்து வுழுந்தவன் உச்சி வெயிலு பொச்சியில அடிச்சப்பொறன எந்திரிச்சிப் பாத்தா, ஏப்பா கையிலிந்த மோதரத்தையுங் காணம்.! Õவாஸ்சயுங் காணம்! அவ்வளத்தாம் பையம் ஒடம்புல உசுரு இல்ல. கூட்ல ஆவியில்ல, எதக்கண்டு செரிக்கட்றது இருக்கற தொந்தரவ?
ஒடமக்காரஞ் சும்மாயிருப்பானா? மின்னயே “வயித்துக்கு என்றாத் திங்கறன்னு கேட்டுப்புடல? ஊருக்கெணத்தாண்ட ஒக்காந்தி வேசம் அழிக்கறப்பவே சத்திப்பையம்மேல சாவுக்கவுச்சி அடிச்சது, மொள்ள சங்கிரி வந்து அங்கயிருந்து முருகம்பஸ்ல ஏறி பூலாம் பட்டி வந்துச் சேந்தான்.
இவந் தலயக் கண்டதும் பையனும் பிள்ளயும் 'ஓ'ன்னுக்கத்தி கொணாய்ச்சிக்கிட்டு ஒடியாந்ததுங்க, பொட்டியக்கீழ வெச்சிட்டு கையிக்கு ஒண்ணாத் தூக்கயில தாயாலிக்கி எங்கிருந்து அத்தன ஆவுசம் வந்ததோ தெரியல! மென்னு முழுங்கறவனாட்டம் ரெண்டுங்களயுஞ் சொட்டவுடாம கடி கடின்னு கடிச்சி முத்தங் குடுக்கறானேச் சண்டாளப் பாவி!.
கள்ளு முள்ளு தெரியாத நிதானமாயிருந்தாலும் அதுங்களுக்கு நொறுவ வாங்க மறக்க மாட்டான், காலோட பின்னிக்கிட்டு வாற பிள்ளைங்களுக்கு பாலோடச் சோறூத்தலையின்னாலுங் கூட அகங்கைக்கிப் பத்தனத வஞ்சனையில்லாம வாங்கிப் போட்டு திங்கடிப்பான், அன்னிக்கிப்பாவம் வெறுங்கையோடதான் வந்தான், அதுங்களும் பாவம். அதப்பத்தி கண்டுக்கல, அப்பனோட சிரிச்சி மவுந்ததுங்க, ஒருச்சித்தய குடுமியப்புடிச்சேறி வௌயாண்டுதுங்க, போன நாயம் வந்தநாயம் பேசிக்கிட்டு அதுங்க தூங்கறதுக்கே ராவு வெகு நேரந்தாண்டிப் போச்சி...
தூக்கத்துல வில்லிதான், இருந்தாலுங் கடங்காரு வந்து போட்ட ரவுசுல சத்திப் பொண்டாட்டி காத்தாலப் புடிச்சே சோறுத்தண்ணியில்லாம கெடந்தா, வெறும் வவுத்துல எப்பிடி தூக்கம் புடிக்கும்? காலொருபக்கம், கையொருப்பக்கமா மாருமேல கெடந்த பிள்ளைங்கள தூக்கி ஒரு ஒரமாபோட்டுட்டு பொண்டாட்டியிண்ட வந்து படுத்தான், கண்டதும் அவ இவங் கோளாற நெனச்சி அழுதா,,, அழுதா,,, ஒயாம அழுதா.. சொல்ற சமாதானமெல்லாஞ் சொன்னவன் ஒண்ணும் வேலைக்கி ஆவாம பையம் ரவுக்குனு பண்ணயத்துல முசுவா பூந்துட்டான், வேணும் வேணாங்க உப்ப மழ அந்நேரம் பிச்சிக்கிட்டு ஊத்துது, வேர்த்த ஒடம்பு காத்து வேணுமிங்க பிருசனும் பொண்டாட்டியுந் திண்ணையில குந்தி மிய்க்க. மிய்க்க பொழைக்கற நாயம் பேசனாங்க.காத்துச் சிலச்சிலுப்புக்கு கண்ண சொழட்டிக்கிட்டு வரும்பிடி அவ ஒருபக்கங் கட்டயச் சாய்க்க, இவனும் ஒருபக்கம் சாக்க விரிச்சுட்டுப் படுத்துக்கிட்டான், புருசம்பெருமயில பொம்பளைக்கி மசத் தூக்கம் மாயமா வந்துட்டது..


சத்திப்பையன் சுத்தியும் ஒருவட்டம் எசவிருக்குதான்னு நோட்டமுட்டுட்டு இடுப்புல கைய வெச்சிப்பாத்தாங் குருண மருந்துப்பொட்டலம் பத்ரமாயிருந்தது,,,,ச்சேரி மாடப் பெரையில ஒளிய வெச்சிருக்கற வெராந்திப்பாட்ல எடுக்கனுமே, குந்தனவாக்குல பூனையாட்டம் நவுந்து மொள்ள எந்திரிச்சி, ஒரு எட்டு தரையில வெச்சவன் மறு எட்டு வெச்சான் மவக்காரி மணிக்கட்டுமேல! எளங்கையிக்கும் அதுக்கும் எலும்பு ச்சடக்குனு முறிஞ்சது.
"ரே யெஜ்ஜா" ன்னு பிள்ள ஒரேக் கத்தா கத்த "அய்யோ மவளே"ன்னு,தன்னப்பால பையங்கையி படக்குனு ரைட்டப்போட்டது

No comments: