Thursday, November 26, 2009

The Great Pied Hornbill இருவாச்சி

                         தி க்ரேட் பைட் ஹார்ன்பில் 
                                                                                                                       கோகுல்
           டாப்ஸ்லிப் யானைகள் முகாமிற்கு போகும் வழியில் உள்ள மழைக்காட்டில் காரில் செல்லும்போது, உதவியாளர் ஒருவர் “அதோ, இருவாச்சி பாருங்க” என்று சொல்லி வலப்புறம் சுட்டிக்காட்டினார். காரில் இருந்த பயணிகள் அனைவரும், கேமராக்களை இயக்கி படம் பிடிக்க முயற்சி செய்தனர். நானும் ஒரு பெரிய பறவை தன்னை மறைத்துக் கொள்ள ஒரு உயரமான மரத்திலிருந்து மற்றொரு அடர்த்தியான மரத்திற்கு பறந்து செல்வதைக் கண்டேன். திரு.தியோடர் பாஸ்கரனுடைய நூலிலிருந்து இது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு அறிய பறவை என்றும், இதனுடைய இருப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்பதையும் அறிந்திருந்ததாலும், மற்ற பயணிகள் அதை மேலும் பார்ப்பதற்கு முனைப்பு காட்டாத காரணத்தால் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாத வருத்தத்துடன் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

                   ஆனாலும், ஊருக்கு திரும்பியவுடன் அந்த அறிய பறவையை பற்றி மேலும் சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். இதற்கு சலீம் அலியின் புத்தகம் உதவியாக இருந்தது. இது ஒரு endangered species என்பதை அறியும்போது சற்று கவலையாக இருந்தது. கருப்பு, வெள்ளை நிற உடலும், வெள்ளை வாலில், கருப்பு பட்டையும், மிக வசீகரமான, பெரிய மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்த அலகையும் கொண்ட அழகான ஒரு பெரிய வளர்ந்த வல்லூறின் பருமனைக் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் என்று அழைக்கப்படும், மழைக்காடுகளில், நெடிதுயர்ந்த மரங்களின் மேல் இவற்றை காணலாம். இதனுடைய கடுமையான சத்தம், கானகத்தில் தனியே பயனம் செய்கின்ற யாரையும் ஒரு நிமிடம் கலக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.     

                    சோலைக்காடுகளின் பரப்பளவு குறைக்கப்படுவதும், மழைக்காடுகள் தேயிலைத்தோட்டங்களாக மாற்றம் அடைந்து பசுமை பாலைவனமாக மாறி வருவதும் இந்த இனம் பூண்டோடு அற்று போவதற்கு வழிவகை செய்துள்ளது. 

                   Madras Naturalist Society-ன் member-களான பிரசன்னா மற்றும் விவேக் இவர்களின் ஒரு கட்டுரை என் கவனத்தை இரண்டு நாட்களாக கலைத்துப் போட்டது. அது பாண்டிச்சேரிக்கு அருகில் பிடிபட்ட லேசாக காயமடைந்த ஒரு ஹார்ன்பில் Hornbill பற்றியதாகும். இப்பறவை தற்போது வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கவேண்டும் என்று வண்டலூருக்கு அலுவலகத்தில் விசாரித்தபோது, பெரும்பாலும் veterinary – ல் வைக்கப்பட்டிருக்கும் என்ற பதிலை கேட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது. மிக மோசமான நிலையில் இருக்கும் பறவைகளை அங்கே வைத்து மருத்துவர்கள் பராமரிப்பது சகஜம். ஆனாலு, மேலும் விசாரித்தபோது, அது மீண்டும் கூண்டில் விடப்பட்டதும் , தற்போது பார்வைக்கு இருக்கிறது என்பதையும் அறிந்த போது, அந்த இறுக்கம் தளர்ந்தது   

கம்பி வலைகளுக்கு இடையில், வெட்டி நடப்பட்ட மரக்கிளையின் மீது அமர்ந்து கொண்டு, எப்படியும் தப்பி விடலாம் என்ற ஆசையுடன் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு அதிசயமான பறவையை மிக அருகில் இருந்து பார்க்கும்போது, சற்று உணர்ச்சிகரமாகத்தான் இருந்தது. நேர்த்தியான தன்னுடைய கொண்டையை எப்போதும் சுறுசுறுப்புடன் சுழட்டிகொண்டே இருந்தது. வெகு நேரம் இதன் கூண்டிற்கு அருகில் அமர்ந்து இதனுடைய செய்கையை பார்த்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 2 மணிநேரம் அமர்ந்திருந்தேன் எனும்போது, அதனுடைய வசீகரத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதற்கு தெரியவில்லை.
          பொதுவாக இவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து மும்பைக்கே வலசை போவதாகவும் மிக அரிதாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் தற்போது பிடிபட்ட இந்த பறவை பாண்டிச்சேரிக்கு அருகில் என்பதை அறியும்போது குழப்பம் மேலிடுகிறது. சலீம் அலி இந்த பறவை அரிதாகி வருவதற்கு இதனுடைய உணவுத்தேவையும், நெடிதுயர்ந்த சோலை காடுகளில் மரங்கள் வெட்டப்படுவதும் மிக முக்கிய காரணங்கள் என்று குறிப்பிடுகிறார். இவை சிறிய அளவிலான, பல்லி, பாம்பு முதலிய காணுயிர்களையும்  பழங்கள் , கொட்டைகளையும் தின்று வாழும். அதிகபட்சமாக 2 முட்டைகளை மட்டுமே இடும். அரசு இப்பறவையை காப்பாற்ற மிகச்சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மிச்சமுள்ள சோலைகாடுகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படாமல், அழிக்கப்பட்டால் நம்முடைய அடுத்த தலைமுறை இவற்றைப்பற்றி அறிந்து கொள்ள மிருககாட்சி சாலைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை விரைவில் வரும். ஏற்கனவே பல சிறப்பான பறவைகளை இழந்திருக்கிறோம். 
           அடுத்த முறை ஏதேனும் ஒரு சோலைக்காட்டின் உயர்ந்த மரமொன்றில் வாழும் இந்த பறவையின் சொந்தகாரர்களைப் பார்க்கும் போது, உங்கள் குடும்பத்தில் ஒருவர் எங்கள் ஊருக்கு அருகில் கூண்டுக்குள் தங்களின் இருப்பை இந்த உலகத்திற்கு அறிவிக்குமாறு வாழ்கிறார் என்பதை உரக்கச் சொல்லவேண்டும் போலுள்ளது.
    
       காம்ரேட் நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகளை என்னை அழைத்துச் சென்றதற்காக தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு பின்வரும் இணைப்பைப் பார்க்கவும்.


1 comment:

பட்டிக்காட்டான் said...

”கொம்பன்” என்றும் சொல்லுவார்கள் இப்பறவையை!

இப்பறவையை பார்க்க சிலவருடங்களுக்கு முன் திருப்புடை மருதூர் (திருநெல்வேலி மாவட்டம்) சென்றிருந்தேன். ஆனால் பார்க்க முடியவில்லை.

நானும் வண்டலூரில் பார்த்தேன் 1 வருடத்திற்கு முன். கூண்டில் இருந்த அதை மிக கிட்டத்தில் பார்க்க மகிழ்ச்சியாகவும் அதே சமயம் பரிதாபமாகவும் இருந்தது.

வலுவான அலகும், மஞ்சள் கருப்பு சிவப்பு கலந்த தலையும் கம்பீரத்தை கொடுக்கும். கண்கள் மனிதக் கண்களை போலவே இருப்பதோடு நாங்கள் உங்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்வது போல் இருக்கும்.

கவலையாக இருக்கிறது... இவற்றை நமது அடுத்த தலைமுறை பார்க்குமா? உயிரோடு...