Saturday, December 12, 2009

ரயிலின் எல்லாப் பெட்டிகளும் அளவின் ஒன்றானவை

- க்ருஷாங்கினி
மெத்தென்ற முதல் ஒலி உள்நுழைந்தது
சூடுபடுத்தாத தோல் கருவியின் ஒற்றையாக.
கணுக்காலளவு கவுன் அணிந்த சின்னஞ்சிறுசிறுமி
ரயில் பெட்டியை நோட்டமிட்டு அளந்தாள்.
இரண்டெட்டு வைத்து எதோ தீர்மானித்தவள் போல
சடாரென தலையைப் பின்புறமாகத் தாழ்த்தினாள்
உடல் வில்லாயிற்று, கையிரண்டும் காலும் தரையில்
கணநேரத்தில் கால்களும் மேலெழும்ப திகைத்துப்
பதறியது மனம் எனது சுழன்றது உள்ளாடை உண்டா?
ஆண்களும் பெண்களுமாக வழியும் அப்பெட்டியினுள்
எத்தனை ஜோடிக் கண்கள்? எதை எதைக் காணும்?
சொல்லொணா துக்கத்துடன் தூக்கும் கால்கள் கண்டேன்.
தோல் நிறத்தொரு பைஜாமா இறுக்கமாக அப்பியபடி
கால்களை முன் வளைத்து கையொன்றில் மட்டும்
ஏந்தி நின்றாள் உடலை ஈசனைக் காண
கையேறிச் சென்று கைலாயம் காண, சிறு புனிதவதியென
மறுபடியும் கவிழ்ந்தாள். மீண்டும் இரண்டடி
மற்றுமொரு வில், பின் ஒரு கால் தூக்கி
பின்னும் விழுந்தாள் பெட்டியின் தரையில்
தெருவோரம் ஓய்வெடுக்கும் சொகுசுக் கார்களின்
தலையிலும் பின்னாலும் துவண்டு, படுத்து அமர்ந்திருக்கும்
மெது பொம்மையென புரண்டெழுந்தாள் பெட்டியின் முனைவரை.
 மறுமுறை சிறுவளையம் கைகொண்டு கண்ணளந்தாள்
 மறுமுறையும் தோதான இடம்தன்னில் உட்செலுத்தி வெளி
இழுத்து விட்டாள் உடலை வளையத்துள் சிறு உடலை.
கண்கள் அகல கண்டு களித்தனர் சிறார்கள்
சூடூட்டப்படாத தொய்ந்த தோலும் கருவியுமாய் ஆணும்
இழுத்துக் கட்டிய தோலுடன் சிறு பெண்ணும்,
முன்னமே இருந்த சில்லறையுடன் குலுங்கி
ஒலி எழுப்பி வலம் வந்தனர் கண்கள் நோக்கி.
    மேலும் மேலும் என சில காசுகள் இணைந்து குலுங்க
அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிற்கத் தயாரனது ரயில்
ஒத்த வயதுடைய எனது சிறுமியைப் பற்றி இழுத்தேன்
வளையும் வளையச் சிறுமிமேல் பட்டுவிடாதவாறு
நகரும் இரயிலிலிருந்து கீழே இறங்கி விடுவானோ
என பயந்த மற்றொரு ஆணோ
பதறி கதவருகில் சென்றணைத்தான் சிறுவனை
சிறு கூட்டம் இறங்கியது தரைநோக்கி
மெதுச் சிறுமியும் மெத்தென்ற கருவியின் அவனும் கூட
இரயிலின் எல்லாப் பெட்டிகளும், எப்போதும்
அகல, நீளத்தில் ஒன்றானவைதான் இன்றளவும்.  

2 comments:

krishnapriya said...

arumaiyaana kavithai....
manathai urukkum varikal...

கிருஷ்ணப்ரியா said...

எல்லோரும் தான் பார்க்கிறோம், சிலர் தான் எழுதுகிறார்கள்.. உங்களைப் போல. அருமையான கவிதை.. பாராட்டுக்கள் கிருஷாங்கினி