Thursday, June 2, 2011

ஹிட்லர்- ஒரு வரலாற்றுப் புதிர்



போர்கள் ஆபத்தானவை.
இனவெறி அணுகுண்டை விட ஆபத்தானது.

இந்த கருத்தில் நான் வெகு தெளிவானவன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இது இந்த கட்டுரையின் நோக்கம்.

        உலகம் முழுதும் எதிர்மறையாளர்களால் நிறைந்துள்ளது. எந்த விஷயத்தையையும், அணுகும் முறையில் தெளிவில்லாமல் இருந்தால் வரலாறு முழுதும் வெறுப்பை மட்டுமே உமிழும்
.
1940 களில் ஜெர்மனி ஒரு திறமையான நிர்வாகியால் மிக மோசமாக நடத்தப்பட்டது என்பதே உண்மை. ”ஹிட்லர் – ஒரு வரலாற்றுப்புதிர்” என்ற புத்தகத்தை படிக்கும் வரை எனக்கும் மேற்கண்ட குழப்பமளிக்கும் கருத்தாகத்தான் இருந்தது.

அந்த நேரத்தில் ஒரு கொடுங்கோலன் நம்மிடையே வாழ்ந்தான் என்பதையும் மறுக்க முடியாது. வேண்டுமானால் அவன் வாழ்ந்த நாடு அவன் வரலாற்றை அடியோடு புதைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும். ஆனால் அவன் வாழ்க்கையை பற்றி பல்வேறு திரைப்படங்களும் நூல்களும், விவாதங்களும் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.

ஹிட்லர் பற்றி தமிழில் வெகுசில நூல்களே வந்துள்ளன. அவற்றில் இராசமாணிக்கம் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் குறிப்பிடத்தகுந்தது எனலாம்.

60 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கொடுங்கோலனின் தனிப்பட்ட வாழ்வையும், அவன் அவ்வாறு அவல நிலை வாழ்வதற்கு காரணமான வரலாற்று சுவடுகளையும், இந்த நூலில் ஆசிரியர் அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார்.
”எனது சகோதரர்கள், சகோதரிகள், மனைவியின் தாயார், என்னுடன் இணைந்து பணியாற்றிய விசுவாசமிக்க ஊழியர்கள், செயலாளர்கள், இவர்களுக்கு குறைந்தபட்ச எளிய அடிப்படை வாழ்க்கைகான வசதிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்”
என்று முடியும் உயில், ஒரு மிக மோசமான சர்வாதிகாரியின் நேர்மையான வார்த்தைகள் என்பதை ஏற்றுக் கொள்ள எனது சராசரி மனம் மறுக்கிறதுதான். ஆனால் அதுதான் உண்மை.

ஒரு மிகச்சிறந்த அரசியல் ஒழுக்கம் நிறைந்த போராளியாக ஹிட்லரை முன்னிறுத்துவதன் மூலம் இவர் ஹிட்லரின் அனைத்துக் கருத்துகளையும் ஆதரிப்பவர் என்று முத்திரை குத்தி ஒதுக்கித் தள்ளி விட முடியாது
.
யூத வெறுப்பையும் (Anti-Semite) , லட்சக்கனக்கான அப்பாவி மக்களின் சாவிற்கும் தன் எதிர்ப்பை இந்த புத்தகத்தின் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெரும்பாலான பகுதிகள் ஆழ்ந்த கருத்துகளை தற்கால அரசியலோடும், பாராளுமன்ற நடவடிக்கைகளோடும், துரோக அரசியலை, மக்கள் விரோத அரசின் போக்கை மறைமுகமாக சாடுவதாக இருப்பதாக எண்னத் தோன்றுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தான் ஒரு சாதாரன அநாதை ஓவியனை, ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக மாற்றியது என்பதை அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் “மிகச்சிறந்த” வரலாற்று ஆவணம் என்று கூட சொல்லாம். நூலின் வடிவமைப்பு அருமை. 236 பக்கங்களில் 140 ரூபாய்க்கு ஒரு நாவலின் வேகத்துடன் படிக்க கிடைக்கும் இந்த நூல், பொதுவாக வரலாற்று நூல்களை படிக்கும்போது தோன்றும் சோர்வை நிச்சயமாக தராது.

டிஸ்கி:

      இவருடைய மற்ற நூல்கள், ஆண்மீகம் சம்பந்தப்பட்டவை என்பதை உண்மையில் நம்ப முடியவில்லை. இந்த நூல் முழுக்க ஒரு “optimistic approach” இருப்பதை உணர முடிகிறது

Wednesday, January 26, 2011

ஆடுகளம் - என் பார்வையில்


                                                                                                                       -மரா
                      போன வாரம் ஆடுகளம் பார்த்தேன். பாசம், புகழ், போட்டி, கர்வம், பொறாமை, விசுவாசம், துரோகம் என முற்றிலும் வித்தியாசமான பரிணாமத்தில் தமிழில் இது போல ஒரு படம் வர இத்தனை நாளாயிருக்கிறது, படம் பார்த்து முடித்ததும் 1990 ஆம் ஆண்டு M.T.வாசுதேவன் நாயர் எழுதி அஜயன் இயக்கி திலகனும் , பிரஷாந்தும் நடித்த பெரும்தச்சன் என்னும் மலையாள மொழித் திரைப்படம்  நினைவுக்கு வந்தது, இரண்டின் கதைக்களம் வேறு என்றாலும் சொல்லும்  செய்தி ஒன்றே!!!, அது கட்டிடக்கலை, இது சேவற்சண்டை. அது அத்தனை தரமான படைப்பு என்பதால் தான் அதனுடன் இந்த  ஒப்பீடு.
                                                                                
                         நம் திருநாட்டில் இறைச்சிக்காக நாள்தோறும் கணக்கேயின்றி
ஆடுகளும் மாடுகளும் பன்றிகளும் வெட்டப்படுகின்றன.ஆயினும் ஒரு ஆட்டையோ மாட்டையோ நாயையோ,பூனையையோ குரங்கையோ சேவலையோ திரைப்படத்தில் காண்பித்தால் மிருகவதை என்று கொடி பிடிக்கவும் கோஷம் போடவும் ஒரு மிருகவதை தடுப்புக் கூட்டமே இருக்கிறது. இதனால் தான் படத்தில் மிக  ஆக்ரோஷமாக காட்டவேண்டிய சேவல் சண்டையைக் கூட கம்ப்யூட்டர் க்ராபிக்ஸில் எடுக்கவேண்டியதாகிவிட்டது போலும். 
                                                                              
                   எனக்குத்தெரிந்து பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் கூட சேவல் சண்டை மிக உக்கிரமாக காட்டப்பட்டிருக்கும், சேவலுக்கு சாராயம் புகட்டுவது, சேவலின் கால்களில் கூரிய கத்திகளை அணிவித்து சண்டைக்கு பறக்கவிடுவது என்று 90களிலேயே இந்த விஷயத்தை மிக டீடெய்லாக காட்டிவிட்டனர். பொல்லாதவனுக்கு டீடெய்லிங்கில் மிரட்டிய வெற்றிமாறன் இதில் சாதித்து இருந்தாலும் நாக்அவுட் சாதனை எல்லாம் புரியவில்லை. பொல்லாதவனில் பைக் திருட்டுப்போகும் போது கருணாஸ் தனுஷை புதுப்பேட்டைக்குள் கொண்டு செல்கையில் நாமும் நம் பைக் காணாமல் போனது போலவே பதட்டத்துக்குட்பட்டிருப்போம். 

              வடசென்னை வாசியாகவே மாறியிருப்போம். எத்தனை நிழல் மனிதர்களைப் பார்போம்? இதில் அந்த தீஸீஸ் இல்லை என்று மிகவருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது. இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தான் எனக்கு கபடி விளையாட்டின் விதிமுறைகளே தெரியும். அந்த அளவுக்கு சிறப்பானதொரு தீஸீஸ் கொண்டது அப்படம், கூடவே கைகொடுத்த டிடிஎஸ் ஒலிப்பதிவு, மிக்ஸிங். வேறு, ஆனால் சேவல் சண்டையை முன்னிறுத்தி பயணிக்கும் தீஸீஸ் என்பது டைட்டில்கார்டு நேரேஷனைத் தவிர  வேறெங்கும் இல்லை என்பதில் வருத்தம் தான். ஆனால் வெற்றிமாறன் மெத்தனமாக இருக்கவில்லை.ஆனவரை பாடுபட்டிருக்கிறார். சென்சா‌ர் அதிமேதாவிகள் வேறு படப்பிடிப்புக்கு முன்னும்,பின்னும் சேவல்கள் ஆரோக்கியமாக இருந்ததா? என்று மருத்துவரின் சான்றிதழ் கேட்டனராம், அவனுங்க தலைல இடி விழ.
                                                                        
          வெற்றிமாறனின் ரியாலிட்டி காட்சியாக்கத்துக்கு ஒரு உதாரணக்காட்சி சொல்கிறேன்.ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனில் தன் பாரில் வைத்து டூப்ளிக்கேட் சரக்கு விற்கிறார் என்று கிஷோரை பிடித்துக்கொண்டுபோய்,  உட்காரவைத்துவிடுவார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் நரேன் ஒரு அழுக்கு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே வருவார்.அங்கே பூனை மியாவ் என்று கத்தும் சத்தம் பிண்ணணியில் ஒலிக்கும். அங்கு இருக்கும்  எஸ் ஐ உள்ளே சிக்கன் பிரியாணி சாபிட்டுக்கொண்டிருப்பார். நரேன் வெளியே இருக்கும் தகவலை ஒரு கான்ஸ்டபிள் சொன்னதும்,அந்த எஸ் ஐ கைகூட கழுவாமல்,சாப்பாட்ட மூடி வைய்யா, பூனை வாய் வச்சிடப்போகுது என்றுவிட்டு வெளியே வருவார்.அப்போது போலீஸ் கைலி அணிந்திருப்பார்.போலீஸுக்கு போலீஸ் கொடுக்கும் போலி மரியாதையை கொடுத்து வணக்கம் வைப்பார் பாருங்கள்,இது உலகத்தரமான காட்சி என்பேன்.

                       இந்த அளவு நுட்பமாய் வர எவ்வளவு உழைத்திருக்கவேண்டும்? அநேக போலீஸ் ஸ்டேஷன்களில் காகிதக்கோப்புகளை எலிகள் தின்று விடுவதால் எலிபிடிக்க பூனைகளை வளர்க்கின்றனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?, அதைக்கூட ஆழ்ந்து அவதானித்து ஒரு உலகத்தரமான காட்சி வைத்தவர். நாயகன் கருப்புவின் சேவல் தொடர்ந்து எல்லா சேவல்களையும் வெற்றி கொள்ளும் அளவுக்கு எப்படி அதை தயார் செய்தார்,என்று நம்பும் படி சொல்லியிருக்கவேண்டாமா? அவருக்கு அந்த சேவல் மீதான் அபார நம்பிக்கை எப்படி வருகிறது?,அவர் பாதி நேரம் ஐரின் பின்னாடியே சுற்றியும், எப்படி அந்த சேவலை வீரதீரம் பொருந்தியதாக்கினார் என நன்கு சொல்லுவதற்கென்ன கொள்ளை?

                   தனுஷுக்கு இப்படத்தில் நடிப்பில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. மனிதர் உணர்ந்து செய்பவர், இதிலும் செய்திருக்கிறார். அவரின் காதலில் விழுந்து தவிக்கும் காட்சிகள், அம்மா இறந்துபோனதும் கிடந்து உருகும் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன.  ஆங்கிலோ இந்தியக்காதலி ஐரின் மிகவும் அழகு, ஆயினும் இவருக்கு தனுஷின் மீது கட்டாயத்தின் பேரில் காதல் வருவது நம்பும்படியில்லை, இன்றைய தேதியில் இளம் பெண்கள் மிகவும் விபரமாக இருக்கின்றனர். திருமணத்துக்கு முன்னரே எல்லா மேற்படி வேலைகளையும்  பருவத்தே பயிர்செய்து முடித்துவிடுவது நகரமாந்தர்களிடம் சகஜமான ஒன்றாய் இருக்கிறது, அப்படி இருக்கையில் , இவர் தனுஷுடன் நம்பி ஓடிவருவது நம்பும்படியாக இல்லை.

              படத்தில்  பேட்டைக்காரனாக வாழ்ந்த என் நண்பர் வ.ஐ.செயபாலன், ரத்னவேலு என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டராய் வந்த நரேனும் மிக அருமையாக நடித்திருந்தனர். அந்த போலீஸ் இன்ஸ்பெகடர் நரேன் மிகவும் எதிர்பார்ப்பை கூட்டிவிட்டார். படத்தில் பேட்டைக்காரனின் சேவல்சண்டையின் பால் மையல் கொண்டு பெற்றோரை எதிர்த்து அவருடன் ஓடி வந்து குடும்பம் நடத்தும் மீனாள் மிக அருமையான நடிகை, அவருக்கு தவமாய் தவமிருந்திற்கு பின்னர் மிக நல்ல பாத்திரம், 28வயது மூத்த பேட்டைக்காரனுக்கு ஜோடி, அப்பன் வயசு, பீடோஃபீல் என்று ஆகிவிடக்கூடிய பாத்திரப் படைப்பு, எந்த லஜ்ஜை, சங்கோஜமுமின்றி பிண்ணிப்பிணைந்து ஈடுபாட்டுடன் நடித்துள்ளார்.அவருக்கு பாராட்டுக்கள்.

              கிஷோர் என்ன ஒரு அருமையான நடிகர்?. பொல்லாதவனில் கிஷோரைப்பார்த்து இப்படி ஒரு நடிகனா? யார்டா அது? என்று அந்த தெனாவெட்டான பார்வைக்கும் ஏற்ற இறக்கமாக மழலைத்தமிழ் பேசும் குரலுக்காகவுமே சுமார் ஐந்து முறையேனும் பார்த்தது, வெண்ணிலா கபடிக்குழுவில் நெல்லைத் தமிழ் பேசுயது கூட நன்றாகவே இருந்தது.  வம்சம் படத்திலும் இவர் பேசும் தமிழ் எங்குமே நிரடலாகவே இல்லை. புதுமுகம் பேட்டைக்காரனுக்கு மிக அருமையாக பொருந்திவந்த ராதாரவியின் குரல், பழகியவரான கிஷோர் விசயத்தில் பொய்த்தது.   இதில் சமுத்திரக்கனியின் நயவஞ்சகம் ததும்பும் டப்பிங் குரல் எதற்கு வைத்தார் வெற்றிமாறன்?, இந்த குரலாலேயே இவர் மீது பார்வையாளருக்கு சந்தேக விதை விழுந்துவிடுகிறது. இந்த குரலாலேயே இவர் கிஷோர் தானா? என்னும் சந்தேகமே வருகிறது. உண்மையிலேயே கிஷோரை மிகவும் மிஸ் செய்தேன்.இதில் சுப்ரமணியபுரம் படத்தின் ஏனைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் மதுரை மண்ணின் மாந்தர்களான அவர்கள் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர்.

                    தவிர இவர் பேட்டைக்காரன் மனைவிக்கு வாங்கித்தரும் வளையல்கள் குறைந்தது மூன்று பவுனாவது இருக்கும்,,படத்தில் அதன் மதிப்பை 19ஆயிரம் என்கின்றனர். கடந்த ஒருவருடமாகவே தங்கம் பவுன் சேதாரம். செய்கூலியெல்லாம் சேர்த்து பவுனுக்கு 20அயிரம் வந்துவிடும். ஆக 60ஆயிரம் பெறுமானமுள்ள வளையலை 19ஆயிரம் என்றது உறுத்தல். இது சமகாலத்தில் நடக்கும் கதை என்பது மதுரையின் போத்தீஸை காட்டுகையில் டிவி எஸ்  கேஸ் ஆட்டோ ரிக்ஸாவை பார்க்கையில் புரிகிறது.இதுபோல பிழைகளை  எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டும்.

             ஜி.வி.பிரகாஷின் பிண்ணணி இசைக்கு சொல்லிக்கொள்ளும்படி ஒரு முதல் படம் என்றால் அது இதுதான். பாடல்களும் அருமை. தரமான இசையை அவர் வழங்கியுள்ளார்.படத்தின் ஒலிப்பதிவிலும் டிடிஎஸ் 5.1 மிக்ஸிங்கிலும் சிறப்பாய் கவனம்  செலுத்தியிருந்தால் மேலும் மெருகேறியிருக்கும். வேல்ராஜின் ஒளிப்பதிவு நேர்த்தியான ஒன்று. இருளில் முக்கால்வாசி காட்சிகள் நகர்ந்தாலும் மிக டீடெய்லாக இருந்தது. இயக்குனருக்கு தோள்கொடுத்து கதையின் போக்கினூடே அமைந்த ஒளிப்பதிவு என்பேன்.  கதாபாத்திரங்களின்முகபாவங்களுக்கு முக்கியத்துவம் தந்த ஒளிப்பதிவு. இனி பாலா போன்ற உணர்வுரீதியாக படங்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் மிகப்பெரும் போட்டியாக இருப்பார் என்பது அடியேனின் நம்பிக்கை.

Saturday, December 18, 2010

புதிய வீர்யம் - சாருவின் தேகம்

                தமிழில் இதுவரை ரெண்டே ரெண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டு வந்துள்ளது. ஒன்று அது இன்னொன்று இது, என்று ஒரு பிநவாண்டர் பல வருசங்களுக்கு முன்பாக அறிவித்தார். ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது தான் துவக்கம். அதன் பின்பாகத்தான் இலக்கியத்தில் இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கூட பொறுப்பான விசயங்கள், பொறுத்துக் கொள்ளக்கூடிய விசயங்கள் என்றே உருவானது.

       சாரு அந்த பிநவாண்டவருக்கு முன்பிருந்தே தமிழ் இலக்கியத்தில் இருபத்திநாலு பக்க குற்றிதழ்களில் குசு,கிரிக்கெட் என்று தூள் பறத்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் என்று கூட்டங்களில் தென்பட்ட உருவத்தைக் கண்டு பழமை இலக்கியவாதிகள் மிரண்டனர். அந்தக் காலகட்டத்திலிருந்தே சாருவிற்கு காதல் என்பது ஒரு தீராத மோகமாகவே இருந்தது. அழகான யுவதி மீது மோகம் தோன்றுவது இயற்கையானது தான். ஆனால் அது தீராத வேதனை தரக் கூடியது என்பதை உணர்ந்து கொண்ட நேரம் இதுதான் அவருக்கு என்று உணர்கிறேன்.

   வாசகனை தன் கதைப் பரப்பினுள் இழுத்துக் கொண்டு செல்லும் லாவகம் சாருவிற்கு அவர் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே உண்டு.அந்த ஆரம்ப நேரத்தில், தான் தோன்றித்தனமான எழுத்தை இந்த இலக்கிய உலகு அறிந்ததே இல்லை. இதை எல்லாமா எழுதுவார்கள்? யார் இந்த முனியாண்டி என்று இங்கு பேசினார்கள்.

     கட்டுரை வடிவில் அவரது எழுத்தை முதலில் நான் படித்தது ஜேஜே சில குறிப்புகளுக்காக அவர் வெளியிட்ட சிறு நூல்தான். அதில் அவர் ஜே ஜேவை அவர் பிட்டு பிட்டு வைத்திருந்தார். இப்படியான சிறுநூல் கொண்டு வரும் பழக்கம் இன்று வரை அவரை விடவில்லை இந்த நவீண சூழலிலும்.

     வாசிப்புத் தன்மை இல்லாத எழுத்தும் எழுத்தே அல்ல.தமிழில் சூப்பர் என்று இலக்கிய நபர்கள் குறிப்பிடும் புத்தகங்களை என்னால் வாசிக்க முடிவதில்லை. கோவேறு கழுதைகள் என்ற புத்தகத்தை இன்றுவரை பத்து பக்கம் தாண்ட முடியவில்லை. ஒருவேளை என்னிடம் கோளாறு என்று பல முக்கிய நாவல்களை எடைக்கு போட்டுவிட்டேன்.சமீபமாக நான் படிப்பது பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,சுஜாதா.(சுஜாதா என்றதும் அவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பு உயிர்மையில் கேட்டு ஒரு வருடமானது நியாபகம் வருகிறது....படிக்க வேண்டும்)

         எனது ”ஆயிரம் சிறகுள்ள காமம்” நாவலை உயிர்மைக்கு கொடுத்த கையோடு மூன்றுமாத காலமாக புத்தகம், எழுத்து என்று யாருடனும் பேசவும் இல்லை, தொடவும் இல்லை. நண்பர்கள், தோழிகள் அனுப்பிய புத்தகங்களும் தொடப்படாமலேயே கிடக்கின்றன. தோழி கீதாஞ்சலி பிரியதர்சினி சாருவின் வெளியீடு விழாவில் பத்தாவது ஆளாக இறங்கிய மறுகணமே என்னை தொடர்பு கொண்டார். ”தேகம்” நாவல் வேண்டுமென கேட்டு கொண்டேன். வாங்கியதும் ”அன்பு நண்பர் வா.மு.கோமுவிற்கு” என்று முதல் பக்கத்தில் எழுதிவிடுங்கள் என்றேன். பார்க்க வாங்கிய நண்பர்களும் என் பெயரை கண்டதும் அவரிடமே திரும்ப தந்துவிட்டதாக கூறினார். ஆனால் எனக்கு வந்து சேர்ந்த புத்தகம் அவர் கையெழுத்திட்ட புத்தகம் அல்ல.
அவசரத்தில் அது அவர் வீட்டிலேயே தங்கிவிட்டதாம். ஓ.கே. அவர் வீட்டில் நுழைந்து யாரும் அதை கேட்ச் செய்து போக முடியாது.

          தமிழில் இதுவரை வந்த நாவல்களை பட்டியலிட்டால் முதலில் தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்”.அடுத்து இரண்டாவது சாருவின் “தேகம்”. மிச்சம் 8 நாவல்களை நான் மேலே போய் சேர்வதற்குள் யாராவது சிலர் எழுதலாம். நிச்சயம் இந்த லிஸ்டில் நான் இல்லை. நாவலே எழுதத் தெரியாதவன் நல்ல நாவலை எப்படி எழுதுவது? சாருவைப் போல சளைக்காமல் எழுதிக் குவித்தால் நானும் தேகம் போல ஒரு நாவலை ஐந்தாறு வருடங்களுக்குள் எழுதலாம். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. சாருவிற்கே இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறதே!

          உயிர்மை பதிப்பகம் துவங்கப்பட்டு வருடங்கள் பல ஆயிற்று. பிரபலங்களை வைத்துக் கொண்டு புத்தக வெளியீடு செய்வது இனியும் தேவையில்லை என்று என் சென்னை நண்பர் அலைபேசியில் கதைத்தார். அட! ஒரு நல்ல வாசகனை புத்தக வெளியீட்டில் உயிர்மை அப்படிச் செய்யும் காலம் வரவேண்டும். ஒரு கூத்தாடிக்கு கூத்தாட்டம் பற்றித்தான் பேசத்தெரியும். பிணவறை காப்பாளனுக்கு பிணங்களின் அழகு பற்றித்தான் பேசத்தெரியும். குப்பி அடிப்பவனுக்கு குப்பி அடிப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றித்தான் பேசத்தெரியும், என்பது போல வாசகனால் தான் புத்தகம் பற்றி பேசமுடியும். சக எழுத்தாளரை பேச வைத்தால் கூட பிரச்சனை வருகிறது. பக்குவம் இல்லாதவர் பக்குவம் இல்லாதவர்களைப் பற்றிப் பேச போக இது தொடர்கிறது.
                                                                              
             சாரு நந்தலாலா என்கிற தமிழ்படத்தை சிறந்த பத்து படங்களில் ஒன்று என்று வேடிக்கை காட்டினார். அது சிறந்த 1000 படங்களில் ஒன்றாகக்கூட வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றுமே புத்திசாலிகள். சகலகலாவல்லவனும், வசந்த மாளிகையும், கரகாட்டக்காரனும் இன்றும் டிவி பொட்டியில் ஓடினால் உட்கார்ந்து விடுவார்கள்.

             ஆரம்பத்திலிருந்தே இளையராஜாவை ஏன் சாரு குற்றம் சொல்கிறார் என்று புரியாமல் இருந்தேன். எனது ரிங்டோன் கூட இளையராஜா குரல்தான்(என்ன என்ன கனவு கண்டாயோ சாமிஈஈஈ) ஆனால் நந்தலாலாவை பார்க்கையில் அது புரிந்து போனது. பாலிமர் சேனல் நிகழ்ச்சியில் இளையராஜா தெளிவாக சொல்லிவிட்டார், தியேட்டரில் இருக்கிறவனுக்காக நான் போட்டது என்று!.

       மற்றவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத, சொல்லாத, சொல்லத் தயங்கும் விசயங்களை சொல்வதே சாருவின் எழுத்துக்கள். வதைத்தல், வதைபடுதல் என்கிற விசயத்தை இந்த நாவலின் சாரமாக கையில் எடுத்துள்ளார். இப்படியான சித்திரவதைகளை வதைமுகாம்களில் நடப்பதாக நாம் படித்திருக்கிறோம் செய்திகளில் சில உலகப் படங்களிலும் கூட. அடடா! என்று அப்போதைக்கு பேசிவிட்டு நழுவுகிறோம். ஆனால் நாவலில் அவைகள் தான் நம் கண்முன் திரைப்படம் பார்பது போல் நடக்கிறது.

       உயிரினங்களை டார்ச்சர் செய்யும் பழக்கம் இல்லாத மனிதனால் இந்த நாவலை எழுத முடியாது அல்லது கடினமான தாக்குதலுக்கு மனதளவிலேனும் பட்ட மனிதனால் நிச்சயமாக எழுத முடியும். நாவலின் முதல் அத்தியாயமே புடுக்கறுபட்ட பன்றி மாதிரி வீறிடுகிறது. பன்றியடித்தல், பீ வாறுதல் என்று முதல் அத்தியாயம் பேசவருகையில் ஏதாவது தலித்திய ஏற்பாடோ என்று மிரண்டேன்.

         மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாக புரிந்து கொள்வதே இந்த நாவலின் நோக்கம் என்பதால் அதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நாவல். செலின் தர்மாவிற்கு எழுதிய கவிதைகள், நேஹாவின் கடிதங்கள் எல்லாமே குறைவாக இருப்பதாலேயே நிறைவாக இருக்கின்றன.

          உலக நாவல்களில் பேசப்பட்ட நாவல்கள் எல்லாமே குருநாவல் அளாவில்தான் உள்ளன என்பது வாசகர்களுக்கு தெரியும். எதையும் பொட்டில் அடித்தாற்போல் சுருக்கமாக சொல்வதன் மூலமாக வெற்றியை எளிதாக அடைய முடிகிறது. சாரு திட்டம் போட்டு பொட்டில் அடித்திருக்கிறார். நல்ல நாவல் பற்றி அதிகம் பேசுதல் கூடாது என்று இப்போது நகருகிறேன்.

சாருவிற்கான குறிப்பு:-

          மேற்கொண்டு நீங்கள் எழுதும் நாவல்களிலாவது நீலவர்ணத்தில் அவதார் படத்தில் தோன்றிய கடவுளைப் போல கிருஷ்ணா என்றும், ஆழ்வார் என்றும், சாரு என்றும் கேரக்டர்கள் உள் நுழைவதை தவிர்க்க முயற்சியுங்கள். அவைகள் தொடர்வது சலிப்பை தருகிறது. இந்த கேரக்டர்களை ஒதுக்கிவிட்டு எழுதிய நாவலை மறுமுறை வாசித்துப் பாருங்கள்.. நாவல் வேறு தளத்தில் நின்று ஒளிரும். நான் அப்படித்தான் வாசித்தேன்.

நூல் விவரம்:
                        தேகம்
                        சாரு நிவேதிதா
                        உயிர்மை பதிப்பகம்
                        விலை: 90ரூ

Sunday, December 5, 2010

......விளம்பரத்திலுமா?

கமல் செய்வது தவறு, மணிரத்தினம் செய்வது தவறு, சமீபத்தில் மிஷ்கின் செய்வது தவறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், நாம் நமது வாழ்வில் அன்றாடம் இந்த காப்பி சமாச்சாரம் நடந்து கொண்டிருப்பதை உற்று நோக்கி கொண்டிருப்பதில்லை. அதற்கு நமது கார்பரேட் கம்பெனிகளும் உடந்தையாகவோ, அல்லது அவைகளே இத்தகைய காப்பி வேலையை செய்து கொண்டிருப்பதையோ உணர்வதில்லை. இந்த சினிமாக்காரர்கள் சேர்ப்பதை விட , இத்தகைய காப்பி யால் கார்ப்பரேட் கம்பெனிகள் சேர்ப்பது அதிகம். போதும் இந்த பூடகப் பேச்சு. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ஷேக்ஸ்பியர் இன் லவ் என்றொரு அற்புதமான திரைப்படம், காதலும் காமமும் பொங்கி வழியும். ஒவ்வொரு காட்சியும், அருமையான வசனத்தாலும், இசையாலும் நிரம்பி வழியும். ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலகட்டத்தை நம் கண்முன்னால் ஓட விட்டிருப்பார்கள்.
அந்த திரைப்படத்தை நானும் என் நண்பரும் வீட்டில் பார்த்து கொண்டிருந்தபோதுதான் அது நடந்தது. அதில் வரும் இசையின் ஒரு சிறு பகுதியை கேட்டபோது, இருவருக்குமே அதை எங்கேயோ கேட்டது போன்ற ஞாபகம். காப்பி அடிப்பதை ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ரேஞ்சுக்கு கண்டுபிடிக்கும் கருந்தேளுக்கு உடனே ஃபோன் செய்து கேட்டோம். அவர் வேறொரு படத்தை துப்பறியும் வேலையில் பிசியாக இருந்தார். நாங்கள் மண்டையை போட்டு குழப்பிக் கொண்டோம்.
கடைசியில் அது ரிலையன்ஸ் விளம்பரத்தில் ஹிருத்திக் ரோஷன் வாசிக்கும் ஃப்ளூட் இசை என்பதை உணர்ந்தோம். டெம்போவை கொஞ்சம் மாற்றி அதே இசையை ஜிங்கிள்ஸாக போட்டு விட்டிருக்கிறார்கள். அந்த ஜிங்கிள்சின் ஸ்டோரி லைன் கூட சிறு வயதில் நாம் படித்த கதைதான். அந்த விளம்பரத்தின் லிங்கையும், ஷேக்ஸ்பியர் இன் லவ் திரைப்படத்தில் அந்த காட்சியையும் இசையுடன் கொடுத்திருக்கிறேன். நண்பர்கள் என் கூற்று சரிதானா என்பதை தெளிவு படுத்தினால் தன்யனாவேன்.

இது ஒரிசினல்:)



இது தழுவல்(எடுத்தாண்டது) :(



ரிலையன்ஸின் விளம்பரத்தை கம்போஸ் செய்தது யார் என்பதும் சரியாக தெரியவில்லை. இரண்டு மணி நேர திரைப்படம் என்றால் சில விநாடிகள் tribute அல்லது thanks கார்ட் போடலாம். சில விநாடிகளுக்கு பல கோடிகளை கொட்டி கொடுக்கும் விளம்பரங்களில் அதை எப்படி போடுவது. சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் போல ஸ்குரோல் போடலாமா? J

டிஸ்கி:
            காப்பி, டீ எல்லாம் எனக்கு பிடிக்கும்தான். நான் பெரிய உத்தமனெல்லாம் கிடையாது. இருந்தாலும் ஏதோ எழுதனும்னு தோணிச்சு..... எழுதிப்புட்டேன்.நன்றி.

Friday, December 3, 2010

ஆயிரம் சிறகுள்ள காமம் - வா.மு.கோமு

                                                                          
                                     இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் நான்(ம்) ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’. வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறாந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)