Monday, June 7, 2010

ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்

                                                   -மயில்ராவணன்

                          இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்கள் எல்லாம் பதினாறு வயது பெண்களின் உடல் வாகைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டும். ஆகவே பதினாறுகள் நிற்கும் பஸ்நிறுத்தத்தை இருபத்திஇரண்டுகள் தவிர்த்து வேறு நிறுத்தத்திற்கு சென்று விடுவார்கள். முகம் ஒடுங்கிப்போன இருபத்தி இரண்டு பார்ப்பதற்கு முப்பது போன்று தோற்றமளித்தது. என் பார்வையை அது சட்டை செய்யவில்லை. கிட்டே நெருங்கி வந்து மணி 
என்ன என்றது!


                       நானோ வேறு ஏதோ ஞாபகத்தில் நாலே முக்காலோ கிளாக் என்றேன். சார் நான் கேட்டது டைம்! என்றது மீண்டும். சாரி மேடம்...ஐந்தேமுக்கால் என்றேன். தேங்க்ஸ் என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றது. இதற்கு சிரிப்பு வேறு க்லோஸப் விளம்பரப்பெண் போல!


பஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. காலேஜ் பையன்கள் ஒரே ஒரு லாங்சைஸ் நோட்டை கையில் பிடித்து விரலில் வைத்து பம்பரம் போல சுற்றிக் கொண்டு வந்தார்கள்.இருபத்தி இரண்டு என் அருகிலேயே பஸ்சுக்காக காத்திருந்தது!


’ம்மா சுமதி, அன்று உனக்குப் பிறந்தநாள்...நான் உனக்காக குங்குமச்சிமிழ் பரிசு குடுத்தேனம்மா... நீயும் அதை வாங்கீட்டு கோடி நட்சத்திரம் ஒண்ணா சேந்தாப்ல ஹ்ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரிச்சியேம்மா...உன்னால அந்த குங்குமச்சிமிழுக்கு அழகு வந்ததா? இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா? அம்மா...சுமதி? என்று சிவாஜி போல ஒருவன் வசனம் பேச, என் அருகில் நின்ற பெண் சுமதி போலிருக்கிறது. உதடுகள் பிதுங்க என்னைப் பார்த்தாள். 


                       நான் என்ன சிம்புவா? சும்மா சம்மு சம்மு சம்மு சம்மாணம் பண்ணிடுவேன்னு வசனம் பேச? இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க? நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹா!ஹா! என்று சிரித்தான். நான் நினைத்ததை கண்டு கொண்டானோ? 
பையன்கள் பஸ்சுக்காக காத்திராமல் அகன்றார்கள். சுமதி அமைதியானாள்.


எனக்கு திடீரென சிந்தனை தறிகெட்டு ஓடியது!பாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லை! இன்று ரத்தமில்லா கொலை ஒன்றுசெய்யபோகிறேன். ஆமாம். அந்த கொலையை நான் செய்வதற்காக யோசித்தபோதே என் முகம் விகாரமாகி விட்டதாம்.


                      ஆபிஸில் ஷாலினி, நைட்டு தூக்கமில்லையா மயில்? விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க? பேய் மாதிரி முழிக்கிறீங்க? என்று கிண்டலடித்தாள்! ஆனால் அவள் முகம் தான் தூங்கா முகம் போல இருந்தது!


நான் பஸ்ஸிற்கு காத்திராமல் நடையிட்டேன். சுமதி, சார் நடந்தேவா என்றாள். அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காவு கேட்கும்பேய்களையும், குறுக்கிட்ட பூதங்களையும் கைகளால் அப்புறப் படுத்தி விட்டு வீடு நோக்கி நடந்தேன்.


நான் வீடு வந்த சமயம் உள்ளே..அனுஷ்காவின் கொஞ்சும் குரல் வீட்டினுள் கேட்டது!” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா! ஆசை முத்தம் தா தா! இலையில் சோறு போட்டு!” என்று! எனக்கா வந்தது கோபம்! 


                      “அனு” என்றேன். அப்பா வந்துட்டார்டா கண்ணா! சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது! அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார்! கறுவினேன்.


வாழ்வில் எப்போதும் சந்தர்ப்பங்கள்தான் முந்திக் கொள்கின்றன. நாம் தான் தயாராக எப்போதும் இருப்பதில்லை, என்று வேறு மனம் கூறியது. அனுஷ்கா எனக்கு காபி கலந்து கொடுத்தாள். நான் லுங்கியை அணிந்து கொண்டே வாங்கிக் கொண்டேன். பக்கத்து வீட்டிலிருந்து குட்டிப்பெண் ஓடி வந்து அனுவை, அம்மா கூப்பிடுது என்று அழைத்துப் போனாள். நான் தயார் ஆனேன். பாண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து விரித்தேன். 


                         ஷோபாவுக்கு விரைந்தேன். சதக்...சதக்.. ஸ்பிரிங் ஒருபக்கம் தெரித்தது! அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை! பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா! காபியை எடுத்துக் கொண்டு ஷோபாவில் நிம்மதியாய் அமர்ந்தேன். ஒரு மூன்று வாரமாக மனைவியை கொஞ்சவே விடாத சனியனை ஒழித்தாயிற்று! 


                        இவள் அக்கா ஃபாரினில் இருந்து வாங்கி வந்து கொடுத்த குட்டிச் சாத்தான் அது! எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள்? இவள் அவளுக்கும் மேல்! முத்தம் கொடுக்கலாம் என்றால் குழந்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறதாம்! இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்! பாட்டு வேறு!


சரி போகட்டும்! விசயம் என்னவாயிற்று என்கிறீர்களா? மங்கிய பூஜ்ய வாட்ஸ் பல்பு போல ஒளி மங்கிய என் மனைவியின் முகம் காண ஒரு மாதம் சிரமம் தான் எனக்கு! ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது! இப்போது இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு ஒளிர்கிறது!


ஒன்று போனால் தான் ஒன்று வரும்.
மூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்!
டிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்!
டூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்!

Thursday, May 13, 2010

இசை சுனாமி சாருவுக்கு - S.சுதர்சன்


                   ஒருவரை குறை சொல்வது வழமையாக 
இன்னொருவருக்கு அல்வா சாப்பிடுவது போல . மாற்றுக்கருத்துக்கு எப்போதும் பிரபலம் உண்டு என தெரிந்த சிலர் செய்யும் வேலைகள் , அதுவும் பிரபல எழுத்தாளர்கள் செய்வது தாங்க முடியல்ல . இப்பிடி தான் பிரபலம் ஆகி இருப்பாங்க போல இருக்கு !! . இது வரை சிலருடைய கேவலமான கருத்துக்கு( மன்னிக்கவும் சாடலுக்கு ) எதிர்பதிவு போட்டாலே பிடிக்காது காரணம் அது மேலும் அவர்களது கருத்தையும் அவர்களையும் பிரபலமாக்கும் என்பது எனது கருத்து .  ஆனாலும் இந்த எழுத்தாளர்(தனிப்பட்ட கருத்து எழுதுபவர் ) ஏற்கனவே பிர(ரா)பலம் !!. தவறான கருத்தும் ரசனையாளர்களை சென்றடையலாம் . நிச்சயமாக இதற்கு பதில் எழுதியே ஆக வேண்டும் என்று எழுதும் பதிவு .

இது அவரை சாடும் பதிவல்ல . அவர் பதிவை பற்றியே பதில் எழுதியிருக்கிறேன் . அதுவும் இசையை பற்றி கதைச்சிட்டார் . இதுக்கு மேலயும் பொறுமையா இருக்க முடியேல்ல . மனுஷன் விட்டா ஒபாமா , அப்துல் கலாமுக்கே கடிதம் எழுதுவார் போல .



கீழே உள்ள பதிவை வாசித்துவிட்டு எனது பதிவை தொடருங்கள் . முதலில் இதை வாசிக்கவும் .
சாரு நிவேதிதாவின் பதிவு 
ஒரு கால கட்டத்தில் இளையராஜாவின் இசை அதன் சத்தை  இழந்து வெறும் சத்தமாக மாறிய போது நீங்களும் இளையராஜாவைப் போல் பென்ஷன் வாங்குவோர் பட்டியலில் சேர்ந்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.  

           இளையராஜா இசை பற்றி என்ன சேர் தெரியும். அவருடைய பாட்டில் நவீன காலத்துக்கு ஏற்றது போல பேஸ் கூடியது . அதை தான் சத்தம் என்கிறீர்களோ   ? ஏன் காதலுக்கு மரியாதை , கண்ணுக்குள் நிலவு, ஹேராம்  பாட்டெல்லாம் கேட்கவில்லையோ ? ரகுமானுக்கு பிந்திய காலத்தில் வந்தவையே அவை . இளையராஜா நவீன காலத்துக்கு மாற முயற்ச்சி செய்திருப்பது இந்த பாடல்கள் கேட்டால் தெரியும் . வேணாம் இளையராஜா பற்றி போனால் எழுதி  கொண்டே போவேன் . ரகுமான் விஷயத்துக்கு வருவோம் .

உங்களிடமிருந்துதான் தன்னடக்கம் என்ற பண்பைக் கற்றேன்.
      உண்மையாவா சார் ? ரகுமான் தன்னை பற்றி தானே புகழுவதில்லை. தெரியும் தானே சார் ?

நான் கடப்பா சென்று பெட்டா தர்காவில் அடங்கியிருக்கும் ஔலியாவை தரிசித்து வந்தேன்

        யாராவது கேட்டாங்களா இப்ப. அப்போ நித்தியானந்தா நிலைமை? 


இரண்டு ஆண்டுகள் கழித்து  தமிழில் முதல்முதலாக வந்த ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் உங்கள் இசை மிகவும் பலவீனமாக இருந்தது.  ரோஸானா என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் கேட்கும்படியாகவே இல்லை.

         ஹோசானா பாடல் சாதாரண ரசனையாளர்களுக்கும் பிடிக்கும் பாடல் தான் .நீங்கள் ஷாஜியின் பதிவில் இருக்கும் கருத்தை அப்பிடியே பிரதி பலித்திருப்பது போல தெரிகிறதே ? உங்களுக்கு பிடித்தவர் தான் . முதல்ல நீங்க போய் பாட்டை கேட்டு விட்டு வந்து எழுதுங்கள் .

        விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் கொஞ்சம் உயர்தரம் . ரசனையுடன் கேட்டாலே அனைத்து பாடல்களும் தரம் . கொஞ்சம்  உயர் தரத்தில் கொடுக்கப்பட்ட பாடல்களே உங்களுக்கு விளங்கவில்லையே !! இதிலை உலகத்தரம் வேணுமாம் .. (லொள்ள பாரு )

அனைத்தும் பல்லவி சரணம்  என்ற சாதாரண தமிழ் இசை முறையை மாற்றி அமைத்த பாடல்கள் .

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற கார்த்திக் பாடிய பாடல் தனியே கிட்டாரின் திறமை . ரகுமான் இசையை இம்ப்ரோவயிஸ் பண்ணுவதில் வல்லவர் .  கோட்ஸ் மாற்றம் அருமை . ஜாய்ஸ் வகை .

அன்பில் அவன் என்ற பாடல் டெக்னோ இசையை கொண்டது . டெக்னோ இசை ரசிகர்களுக்கு பிடிக்கும் அதுவும் கோரசுடன் அருமையாக இருக்கும் . ரகுமானின் சவுண்ட் இஞ்சினியர் புகுந்து விளையாடி இருப்பார் .

கண்ணுக்குள் கண்ணை  கீஸ் , கிடார் , வயலினின் பயன்பாடு . என தனியே வேண்டும் என்றாலும் பதிவு போடலாம் .

ஆரோமலே  என்ற பாடல் ரொக்கும் நமது இசையும் கலந்த பாடல். இவ்வாறான பாடலை மலயாள இசை அமைப்பாளர்கள் உருவாக்குவதே கடினம் . உயர்ச்தாயியில் பாட வைத்து கிடார் இசையையும் எமது இசையையும் கலந்திருப்பார் . 

விண்ணைத்தாண்டி வருவாயா பாடல் விமர்சனமாக இந்த பதிவு அமையக்கூடாது  என்பதால் சுருக்கமாக வழங்கியுள்ளேன் .  பாடல் விமர்சனப்பதிவு(பழைய பதிவு  )  கிளிக்         

ரகுமானுக்கெண்டு ஒரு தனி பாணி உண்டு . அவரை அவர் பாதையில் செல்ல விடுங்கள். மற்றவர்களால் ரகுமானை போலவோ அல்லது ரகுமானால் மற்றவர்கள் போலவோ இசை அமைக்க முடியாது . உலக அரங்கில் நமது இசையை அரங்கேற்ற முயற்ச்சிக்கும் அவர்களிடம் நீங்கள் புத்தகத்தில் மட்டுமே  படித்த உலக இசை அமைப்பாளர்களை உதாரணம் காட்டுவது என்ன நியாயம். 

ரகுமான் திருக்குறளை அறிமுகப்படுத்தி இருப்பார் மன்னிப்பாயாவில் , இளையராஜா தேவாரத்தை அறிமுகப்படுத்தி இருப்பார் தளபதி பட பாடலில் . இருவரும் எமது இசையையும் மேலைத்தேய இசையையும் கலந்து கொடுப்பதில் வல்லவர்கள் . அவர்கள் நோக்கமும் வேறு .

   ’பெஹனே தே’ பாடலின் கடைசியில் வரும் கோரஸ் சகிக்க முடியாததாக இருந்தது.  இதே போன்ற ஒரு கோரஸை ’குலால்’ படத்தின் ’ஆரம்ப்’ என்ற பாடலில் நீங்கள் கேட்கலாம்.

        குலால் திரைப்பட ஆரப் பாட்டில் இதே போல கோரஸ் கேக்கவில்லையே. தேவையிலாமல் ஒப்பிட வேண்டாம் . அத்தகைய இசை குலால் படத்திற்க்கு தேவைப்பட்டிருக்கலாம் . ராவணா கதைக்கு இப்படியான இசை தேவைப்பட்டிருக்கலாம் . குழல் இசையில் அரச கால வாத்திய பயன்பாடு இருக்கும் . இது நவீன கால ராவணன் ,இதற்கு தேவைப்பட்டிருக்காது .
பியுஷ் மிஸ்ரா , விஷால் பரத்வாஜ் போன்றோரின் பாணி வேறு , தயவு செய்து ஒப்பீட்டை நிறுத்துங்கள் . ரகுமானுக்கு தெரியாத இசையோ அல்லது இசை அமைப்பாளர்களோ உங்களுக்கு தெரியும்  என்று எண்ணம் போல. என்ன கொடுமை ? 

 ராவணில் நீங்கள் மிக பலவீனமான ஆட்டத்தை ஆடியிருக்கிறீர்கள்.


ஆகா. இவருக்கு யாராவது வூபர் செட் வாங்கி குடுங்கப்பா . ஏதோ ரேடியோவிலை கேட்டிட்டு  வந்து எழுதிறார் போல . ரகுமானின் சவுண்ட் என்ஜினியரை  மறந்திட்டீங்க  போல . போய் ஹோம் தியேட்டர் இல்லாட்டி தரமான சத்தத்தில் கேளுங்க . நீங்க எந்த வகை பாட்டுகளை நல்ல பாடல்கள் என்கிறீர்கள் என்று தெரியவில்லை . பேஸ் கூடிய பாடல்கள் சரியில்லை என்கிறீர்கள் போல .கூடுதலாக ரகுமானின்  திறன் பாடகர்களை சரியாக பயன்படுத்துவார் . இசையை விடுத்து . கட்டா கட்ட வும் பீரா பிராவும் கேட்டதில்லையோ ? டிம்பெர்லான் போன்றோரின் இசையில் வித்தியாசமான சத்தங்கள் பின்னணியில் இருக்கும் . பிண்ணனியில் ஒலிக்கும் சிறு சிறு சத்தங்கள் தான் ரகுமானின் பலமும் .
பியுஷ் மித்ரா புகழ் பாடும் நீங்கள் லகான் பாடல்கள் கேட்டதில்லையோ ? லகான் பாடல்களில் புரட்சியுடன் கண்ணீரும் வரும் .




உங்களுடைய திறமை வெளிப்பட தமிழை விட இந்தி சினிமா அதிக இடம் கொடுத்தது

இவ்வாறு தரம் குறைந்த விமர்சனங்களை பண்ணினால் எப்படி வரவேற்பு கிடைக்கும்.
விண்ணை தாண்டி வருவாயா அனைத்து பாடல்களும் ரகுமான் தமிழுக்கு வழங்கியது . இப்போது என்ன செய்கிறீர்கள் சேர் . ஒரு வேளை இப்படியான எழுத்தாளர்கள் ஹிந்தியில் இல்லை போல. 

ஷாப் ஹாஸ்னி (அல்ஜீரியா), நான்ஸி அஜ்ரம் (லெபனான்), ரிக்கார்தோ மொந்தனர் (அர்ஜெண்டினா), பின் நவீனத்துவ இசைக்கு ஐயானிஸ் ஸெனகிஸ் (க்ரீஸ்) 

இவங்கட பாடல் எல்லாம் உண்மையிலேயே நீங்கள் கேட்டிருக்கிறேர்களா ? ஏதாவது புத்தகத்தில் இருந்து சுட்டதா ? அவர்கள் டிராக் வேறு . ரகுமான் ரகுமான் தான் .ரகுமானாகவே  இருக்க விடுங்கள் .

படிப்படியாக தனக்கென்று ஒரு பாணியை உருவாக்க ரகுமானுக்கு தெரியும் . சாதரணமாக கோட்ஸ்  மாற்றி இம்ப்ரோவிசிங் பாடல்களே விளங்கவில்லை . இதிலை எங்கிருந்து இவங்க இசை உங்களுக்கு விளங்க போகுது எண்டு தெரியேல்ல.

ரகுமான் அடிக்கடி சொல்லும் ஒன்று இசைக்குள் இறங்குங்கள் அப்போது தான் எவளவு பெரிய கடல் என்று தெரியும். நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றார். மற்றும் மேலைத்தேய படங்களில் பின்னணி இசை வேறு பாடல்கள் இசைக்கு வேறு இசையமைப்பாளர்  ஒரு படத்துக்கு பின்னணி இசை போடும் நேரத்துக்கு 4 பட பாடல்கள் போடலாம் என்பார் . அவளத்துக்கு பின்னணி இசை முக்கியத்துவம் பற்றி கூறியிருப்பார் . தமிழ்சினிமா அப்படியா?       
   -S.சுதர்சன்

டிஸ்கி:
    
    நண்பர் சுதர்சனின் வலைப்பூ பக்கம் சென்றேன். இப்பதிவு நல்ல கருத்துச்செறிவாக இருந்தது. வழமைபோல தெரியாத விடயங்களையேப் பேசும் எழுத்தாளர் தகதிமிதாவுக்கு நல்ல பல விளக்கங்கள் கொடுத்துள்ளார். நண்பர் சுதர்சன் கல்லூரி மாணவர், நல்ல பல விடயங்களை எழுதுபவர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் .



Sunday, May 9, 2010

தட்ஸ் ஆல் Thats all

                                                -மயில்ராவணன்
         காதல் யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது? என்னை
மட்டும் போடா மயி(ரு)லு என்று விட்டுவைத்து விடுமா என்ன? என்னையும் அது கப்பென்று பிடித்துக் கொண்டது! பின்விளைவு,முன்விளைவு எதுவும் தெரியாமல் நான் எக்கச்சக்கமாக இந்த சாயங்கால மாலைவேளையில் மாட்டிக் கொண்டேன்.

               எதிர்க்கே தெரியும் இந்த சாலையை எவ்வளவு நேரம் தான் தேமே என்று பார்த்தபடி இருப்பது? அலுப்பாகவும் இருக்கிறதுதான். கிழக்கும் மேற்குமாக தெரியக் கிடந்த இந்த வீதி அப்பிடியேதான் இருந்தது! வாகனங்களின் இறைச்சல்கள், சமயங்களில் சில நல்ல மனிதர்களும் கண்களுக்குத் தென்பட்டனர்.

         நான் உட்கார்ந்திருந்த இந்த திண்ணைக்கு நேர்பார்வையில தெருவிற்கு எதிர்புறம்(நீங்கள் எதிர்பார்த்தவண்ணம்!) அந்த வீட்டின் கதவு ரொம்ப நாழியாகவே திறக்கப்படாமலேயே இருந்தது! பார்த்துக் கொண்டே இருந்ததில் கண்களுக்கு எரிச்சல் வேறு. கண்களை இறுக மூடிவிட்டாலும் அந்த மூடப்பட்ட கதவு கண்ணுக்குள் தெரிவது மாதிரியே பழகிப் போய்விட்டது. கதவு இப்போதைக்கு திறப்பது மாதிரியே தெரியவில்லை.

                    ஒரு வேளை நான் நினைக்கிறேன் கதவு இப்போதைக்கு திறப்பது மாதிரியே தெரியவில்லை. ஒரு வேளை நான் நினைக்கிறேன் கதவு சுவராகவே ஆகியிருக்குமோ
என்று! ஆனாலும் காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது! என்ன ஒரு அழகான சுகம். ஒரு மணிநேரம் ஓடிப்போனது தெரியவில்லை. ஒவ்வொரு கண காத்திருப்பும் சுகம்தான். சிகரெட்டுகள் எட்டு காலியாகி விட்டன. இனி ரொம்ப நேரம் இந்த இடத்தில் இருப்பது சரிப்படாது.

                     ரோட்டின் முக்கு வரை சென்று வர எண்ணி
திண்ணையை விட்டு எழுந்தேன். நான் எழுந்ததுமே அதே இடத்தில் படுத்துக் கொள்ள சிவந்த நிற பெட்டை நாய் ஒன்று காத்து நின்றது போலும். (இங்கிலீஸ்காரன் படம் பார்க்கலை நான்!!)

           சாயங்காலத்தை பொன்மாலைப் பொழுது என்பார்கள். ஒரு அழகிய பாடல் கூட ஒன்று உள்ளதே! “இது ஒரு பொன்
மாலைப்பொழுது... வானமகள் நாணுகிறாள்....! வைரமுத்து திரைப்படத்திற்கு எழுதிய முதல் பாடல் கூட அதுதானே! நான் திரைப்படத்திற்கு பாடல் எழுதும் காலம் ஒன்று வரும். அப்படி வந்ததென்றால் பொன்மாலைபொழுது என்று தான் முதல் வரியை எழுதி பலவரிகளை இந்த சந்தம் என்கிறார்களே ... அவற்றை எல்லாம் எழுத வேண்டும்.

         சாலை இப்போது கலகலப்புக்கு மாறி இருந்தது. வானம் போலவே பூமிக்கும் மஞ்சள் கலந்திருந்தது. நல்ல ரம்யமான மாலை என்று சொல்லிவிடுகிறேன். சென்னை மாதிரியான நகரங்களில் இந்த மஞ்சள் மலையை காதலி ஒருத்தியுடன் கழிக்க கடற்கரை தான் நல்ல இடமென்றாலும் அங்கேயும் மனுசப்பய கூட்டங்களின் இறைச்சலில் காதலியிடம் மஞ்சள் பற்றி பேச முடியாது.

        பேசினாலும் அவள் ‘கயிற்றைக் கட்டுகிறீர்களா?’ என்பாள்.
காதலிக்கும் சமயத்தில் காதலி ஒருவள் மஞ்சள் மாலைநேரம் பற்றி கவிதை பாடாமல் மஞ்சள் கயிற்றைப் பற்றி பேசினால் என்றால் என் காதுகளிலும் உங்கள் காதுகளின் துளைகளிலும் மஞ்சள் நிற புகை தான் குபுகுபுவென செல்லும்! பின்னர் ஒரே புகைமூட்டமாகி விடும்.

         யார் அது? அய்யோ தூரத்தில் வருவது அப்பாவின் நண்பரா
அது? அவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபடியால் நான் ரோட்டோரத்திற்கு போனாலும் இவர்கள் வேறு இம்சை! பார்த்தால் சும்மா விடுவார்களா? என்ன? ஏது? இந்த பக்கமா என்ன job? என்றே விசாரிப்பார்கள். அப்பாவிடம் வேறு மறக்காமல் சொல்லி விடுவார்கள் என்னமோ இதுதான் தலையாய கடமை போல! உங்க ஆளை போனவாரம் அந்த வீதியில் பார்த்தேனே!

              எல்லாம் வம்பு தான். காதல் என்றாலே ஆரம்பம் முதலே வம்புதான். வம்பு இல்லாத காதல் மொட்டைக் காதல்!
மொட்டைக்காதலை யாரும் விரும்புவதில்லை.அப்பாடா? அவர் போய்விட்டார். என்னை அவர் பார்த்ததும் பார்க்காததுபோல போயிருக்கலாம்!அக்கம் பக்கம் பார்த்துதான் காதலை டெவலப் செய்ய வேண்டும். என்னுடைய நண்பர் கார்த்திகேயன் அக்கம்பக்கம் பக்கம் அக்கம் பார்க்காமல் காதலை டெவலப் செய்ய போய்தான் குத்துப்பட்டான்.

      தெருமுனையில் பெட்டிக்கடைக்கு அருகே வந்து சேர்ந்தேன். கடைக்காரர் என்னைப் பார்த்து புன்னகையை சிந்தினார். சமீப காலமாக எனது நடவடிக்கைகளை அவர் உன்னித்து கவனித்திருக்க வேண்டும். அவரிடம் அடிக்கடி சிகரெட்டுகளை வேறு வாங்குவேன். நானும் புன்னகை ஒன்றை அவருக்கு பரிசளித்துவிட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டேன்.

         கடையில் தொங்கும் புத்தகங்களின் அட்டைபடங்களை மேலோட்டமாக பார்த்து ரசித்தேன். உள்ளே விசயம் இருக்கிறதோ இல்லையோ அட்டைகள் கலர் கலராக கவர்ச்சியாக இருந்தன! சாமியார் ஒருவர் மீது ஒரு பெண் கட்டிலில் முகம் காட்டாமல் சாய்ந்து காதல்? புரிவதை அட்டையில் போட்டிருந்தார்கள். நடிகைகள் சினிமாவில் தான் காதலிப்பார்கள் காசுக்காக! என்றே நான் விவரமாக
யோசித்து வைத்திருந்தேன். நிஜத்திலும் அவர்கள் காசுக்காக நடிப்பார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. நான் நடக்கத் தொடங்கினேன்.

        பாழும் திண்ணை மறுபடியும் வந்துவிட்டது! நாய் என்னைக் கண்டதும்
மரியாதை நிமித்தமாக எழுந்து அகன்றது! கதவு இன்னமும் திறந்தபாடில்லை. மணி வேறு ஆறு இருக்கலாம். பஜாஜ் M-80ல ஒரு பால்காரன் ஹாரன் அடித்தபடி எதிர்வீட்டின் முன் நின்றான். அட இது நல்ல ஐடியாதான். ஆனா பைக் வேணுமே!
                                                                                         
        ஆவலாக நானும் நீங்களும் வெகு நேரமாக எதிர்பார்த்த கதவு திறந்தது! ரொம்ப நேரமாய் மேகங்களுக்குள் மறைந்து போன நிலா எட்டிப் பார்த்து பூமிக்கு வெளிச்சம் தந்தது போலிருந்தது! தமன்னா பால் சொம்போடு பால்காரனிடம் வந்தாள். எந்த நேரமும் தூக்கமா இவளுக்கு! முகம் வேறு வீக்கமாய் இருந்தது!

                   திண்ணையை அவள் பார்த்தது மாதிரி இருந்தது! நாலே எட்டில் வீதியைக் கடந்தேன். பால் ஊற்றிவிட்டு பால்காரன் நகர்ந்தான். ” தமன்னா... இந்தா புடி லெட்டரு. சாயந்திரமா நாளைக்கு கண்டிப்பா உன்னை வரச் சொல்லிட சொன்னான் ஃப்ராங்கி”.அவள் கையில் ஃப்ராங்கியின் கடிதத்தை  கொடுத்துவிட்டு நான் நகர்ந்தேன். Thats all.

Wednesday, May 5, 2010

மூளை கிலோ 100.ரூ

             நான் மயில்ராவணன்.உங்களிடம் சரளமாய்
பேசுவதற்கு என்னிடம் கொஞ்சம் இந்த அறிவு என்று சொல்வார்களல்லவா .... அதை மூர்மார்க்கெட்டில் கிலோ நூறு ரூபாய்க்கு வாங்கி மண்டைக்குள் சேகரமாக்கியிருக்கிறேன். நான் இந்த மூளையை வாங்கிய நாள் அன்று மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளும் குறைந்த விலையிலேயே விற்றுத் தீர்ந்தன.நான் வாங்கி வந்த மூளைக்குள் ஆங்கில அறிவு, உலக அறிவு என்று சகலமும் உள்ளன. அதனால் தான் தைரியமாக உங்களிடம்
பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தயாராகவே இருக்கிறேன்.

            இந்த மூளை வந்த நாளில் இருந்து எனக்கு ஒரே ஒரு தொந்தரவு தான். சின்ன விசயத்தைக் கூட அரைமணி நேரம் மூளை யோசிக்கத் துவங்கி விடுகிறது! ஒரு பின்னூட்டம் எழுதிவிடலாம் என்றால் முன்னெல்லாம் உடனே எழுதிவிடலாம். ஆனால் இப்போது எழுத ஒரு மணிநேரம் யோசிக்க வேண்டி இருக்கிறது! எல்லாம் இந்த 100ரூபாய் பிதிர் கெட்ட மூளையால் தான்.

         நகர்புறத்தில் திரியும் எனக்கு ஈஸ்ட்,வெஸ்ட்,நார்த் குளறுபடிகள் பழைய மூளையில் இருந்தது! புதிய மூளையில்(100ரூ) அந்த குளறுபடிகள் இல்லை. சூரியன் எங்கு உதிக்கிறானோ அது ஈஸ்ட் என்று இப்போதுதான் ஒரு மணிநேரமாக யோசித்து முடிவுக்கு வந்திருக்கிறேன். அது சரியா?சரியல்லவா? என்று சந்தேகம் தோன்றுவதே இல்லை!(100ரூ)

       சமீபமாக நகரின் ஒதுக்குப்புறம் வரை சென்றிருக்க
வேண்டிய நிர்பந்தம் ஒன்று ஏற்பட்டது! அது குறு நகரம். ஆகாரங்களை வயிற்றில் நிரப்பிக் கொண்டவன் சாலையில் சற்று தூரம் நடந்து வரும் ஆசையில் சென்று கொண்டிருந்தேன். அந்த சமயம் 100ரூ மூளை ஓய்வாகத்தான் இருந்தது. சாலையில் ஒரு குப்பைத்தொட்டி!

                அதனுள் தான் ஒரு குழந்தையின் அழுகை குரல் கேட்ட வண்ணமாக இருந்தது! ஒரு டேப் ரிக்காடரோ,அல்லது புதிய செல்போனாகவோ, உள்ளே கிடக்கலாம் அல்லவா?(100ரூ மூளை). நின்று நிதானித்தேன்.

        உள்ளே போய் எட்டிப் பார்க்கவில்லை.வெடிகுண்டாக இருந்தால்? காலை பேப்பரில் போட்டுவிடுவார்களல்லவா! இளம்பதிவர் மரணம் என்று!(நான் பிரபலபதிவர் என்று 100ரூ மூளை வாங்கியதில் இருந்து அறிவிப்பதேயில்லை)

        ஒரு கணவரும் மனைவியும் அந்த குப்பைத்
தொட்டியை கடந்து செல்கையில் எட்டிப் பார்த்து விட்டு சென்றார்கள்.”எவளோ குழந்தைபெத்து ... தொட்டிக்குள்ளாரப் போட்டுட்டுப் போயிட்டாளுங்க ... பாவம் அழுதுட்டு கிடக்குது...அவ பொம்பளையா இருக்க மாட்டாளுங்க! மனசு வந்திருக்குது பாருங்க..வீசிட்டு போவதற்கு!” அந்த மனைவி
                                                                  
                பேசியபடியே சென்றாள். கணவர் அவளை அதட்டி வைத்தார். கம்முன்னு வரமாட்டியாடி! பெரிய இவ இவ! என்றார். இவ என்ற வார்த்தையை நான் யோசித்தேன். எப்படி பார்த்தாலும் இவ ஒரு சமூக சீர்திருத்த அக்கரை உடைய பெண் என்று அர்த்தம் தந்தது மூளை.

         ”கம்முன்னு தான் வர்றேன். நான் என்ன அதை
எடுத்துட்டு வந்து கொஞ்சுறேன், வளர்க்கிறேன்னா சொன்னேன். இன்னும் ஆறுமாசம் போனா எனக்கு ஒரு குழந்தை வந்துரும்....நடங்க போலாம்”. அவர்கள் போய் விட்டதும் இன்னொரு நடுத்தர ஜோடி அதன் வழியே வந்தது! நான் கவனிக்காதவன் போல சுவற்றில் இருந்த ‘சுறா’-சினிமா சுவரொட்டியை வேடிக்கை பார்த்தேன்.

          ”என்னங்க...நமக்கு தான் 5 வருஷமா குழந்தையே இல்லையே...இதை எடுத்து வளர்ப்போமா? என்னமா அழுது பாருங்க!” என்றாள். ”அய்யே...சும்மா வரமாட்டே!எவளோ தூக்கி வீசிட்டு போயிட்டா...வழியை போற சண்டை நமக்கு எதுக்கு? சொந்த செலவில சூன்யம் வெச்சுக்கலாங்கிறியா?அனாதை இல்லத்துல எடுத்துக்கலாம்...நட நட...நாடு அநியாயத்துக்கு கேவலமாப் போயிடுச்சு”.அவர்களும் போய்விட்டார்கள்.

         ”ஐய்யா பிச்சை போடுங்க தர்மராஜா” என்று தட்டு
ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு ஒரு பெண் வந்தது! என்னிடம் தட்டை நீட்டினாள்! ஒரு ரூபாய் சில்லறை ஒன்றை பாக்கெட்டிலிருந்து எடுத்து தட்டில் போட்டேன். குழந்தையின் அழுகுரல் கேட்டதுமே அவள் குப்பை தொட்டிக்கு ஓடினாள்.

         ”ஐய்யோ! பச்சை கொழந்தை இப்புடி கத்துதே! அழுவாதடா சாமி! செல்லம் ” என்று குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு குழந்தையை அவள் எடுத்துக் கொண்டாள். தூரி தூரி என்று ஆட்டினாள்.
         ”உங்கா வேணுமா ராசா! நம்ம ஊட்டுக்கு போயி உங்கா வாங்கித் தர்றேன் ..” என்றவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னிடமே வந்தாள்.

        ” இன்னாய்யா மனுசன் நீ! கொழந்தை அழுது!
பார்த்துட்டு சும்மா நின்னுக்கினே இருந்தியா? நீதான் எடுத்துனு வந்து போட்டியா?”
         ”என்னுது இல்லை, அதான் எடுத்துட்டியே... இன்னா
 வரைக்கும் இதுல போனவங்க யாருமே எடுக்கலை..........நீ தான் எடுத்திருக்கே! என்ன பண்ணப் போறே இதைக் கொண்டு போய்?” என்றேன்.

         ”வறுத்து சாப்பிடுவேன்”.

       ”என்ன?” மூளைதான் உடனே வேலை செய்வதில்லையே!

       ”படிக்க வைப்பியா?” மூளை மூளை!!

       ”புடுங்க வைப்பேன்...நானே பிச்சை எடுத்து வகுத்துப் பாட்டை ஓட்டிட்டு இருக்கேன். இதுல படிக்க வக்கிறதாமா! பல ஊட்டு சோறு ஊத்தி வளர்த்து பிச்சை எடுக்க உடுவேன். நான் வயசாகிப் போய் கெடந்தா சோறு ஊத்துறதுக்கு ஆள் வேணுமில்ல!”
      ”உன் புருசன்?”

     ”அவனா? அவனை பார்த்து மூணு வருஷம் ஓடிப் போச்சு!
தாலி கட்டி ரெண்டு மாசம் இருந்தான்.ஓடிட்டான்.இதைய வளர்த்து காலை ஒடிச்சு நொண்டியா நடக்க உட்டு பிச்சை எடுக்க வைப்பேன்!சாமி! அழாதடா! நான் இருக்கேண்டா! போ சார்! இங்க ஏன் நின்னுக்கிட்டு போறவுங்க வர்றவங்கள பராக்கு பார்த்துட்டு நின்னுட்டு இருக்கே? இல்லைனா நீயும் போயி தொட்டிக்குள்ளார படுத்துட்டு அழு! உன்னைய தூக்கிட்டு போக வேனு ஒண்ணு வரும்..!

               அவள் குழந்தையோடு சென்றாள்! நான் குப்பைத் தொட்டிக்குள் வேறு சத்தம் வருகிறதா என்று கேட்டேன்! பின்னர் சப்தம் வரவில்லை என்றதும் ஒரே ஜம்ப்பில் தொட்டிக்குள் தாவி குறுக்கலாய் படுத்துக் கொண்டு அழத்துவங்கினேன்! குழந்தையைப் போல!மூளை!
                                                                                              -மயில்ராவணன்
       

Monday, April 26, 2010

யதார்த்த சினிமாக்களின் வருகை

                                                                 வா.மு.கோமு   
                ஒரு விஜய்யோ ஒரு அஜித்தோ அல்லங்கேல் ஒரு 
சிம்புவோ ஒரு தனுஷ்ஷோ, இன்னும் சில தோக்களோ, 
வோக்களோ சோக்களோ நடிக்கவே முடியாத நடித்தாலும் குப்பையாய் போய் விடக்கூடிய யதார்த்த படங்களின் வரவு தமிழ்சினிமாவை பிரம்மாண்டங்களில் இருந்து மீட்டு வளர்த்தெடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது தான். பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிரமணியபுரம், வைகை என்று மிக மெதுவாய் காலடி வைத்த இந்தப் போக்கு இன்னமும் மந்த நிலையில் தான் நுழைகின்றன என்று சொன்னாலும் அது மிகையாகாது.


யதார்த்தப் படங்களில் கிராபிக்ஸ் கலக்கல்கள் தேவையில்லை. செலவீனங்கள் குறைவு. நகரங்களில் முப்பது நாட்கள் ஓடினாலே வெற்றி. நான் கடவுள் தோற்றுப் போனதற்கு காரணம் அதன் நாயக பிம்பம் தான். அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது எம்ஜிஆர் பார்முலா. எப்பேர்பட்ட விஷப்பூச்சியாக இருந்தாலும், அது வெளிக்கிரக ஜந்துவாக இருந்தாலும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாத சமாச்சாரம் அல்ல என்பது அங்கிலத் திரைப்படங்களின் பார்முலா.
                                                           
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு இன்று கிம்கிடுக் என்கிற கொரிய மொழி இயக்குனரின் படங்கள்தான் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரின் படங்கள் கொரியாவில் மூன்று நாட்கள் தான் ஓடும் என்பது அதைவிட ஆச்சரியம். எனது வாலன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.மொழி புரியாத படங்களை பார்பதில் தான் அவனுக்கு ஆர்வம்.’தி வே ஹோம்’லிருந்து ‘இன்னோசண்ட் வாய்சஸ்’ வரை பார்க்கிறான்.இரவு பனிரெண்டு மணி என்றாலும் தூங்காமல் பார்ப்பவனுக்கு தமிழ்படம் புதுசு என்று பார்க்கச் சொன்னால் ‘போப்பா’ என்று தூங்கச் சென்றுவிடுகிறான்.அந்த திருநீறு பூசாத கிறுஸ்துவ பையன் விஜய் நடித்த படம் சன் டீவியில் டமீர் டுமீர் என்று விளம்பரம் ஓடுவதால் அந்தப் பையனின் படம் என்றால் அரை மணிநேரம் பார்ப்பான்...பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று எட்டிப் பார்த்தால் தூங்கியிருப்பான்.நல்ல விமர்சனம்.


அண்ணா நீ எழுதுற மாதிரிதான் அங்காடித் தெருவுல கதாநாயகி பேசினாள் என்றான் தம்பி. இதென்றா வம்பு?’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா! ’ஏலே தம்பி என்னலே சொல்றே? அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு? ஏ நடவே சட்டுனு போயி அந்தப் படத்தைப் பார்ப்போம்”, என்று முதலாக பெண்டிங் வைத்திருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படம் பார்த்தேன்.
                                                                                   
படம் ஓடத்துவங்கிய ஆரம்ப காட்சிகளிலேயே பழைய நினைவுகளை அது கிளறிவிட்டது!     வாய்பபாடியில் நான் தோல் பொம்மையாட்டத்தை பார்த்த காலம் 1978. ராமாயணம் தான். ராமன்,  லெட்சுமணன் இருவரும் விடும் அம்புகள் எதிராளிகளின் நெஞ்சில் பாய்கின்றன. டக்கு டக்கு, டக்கு டக்கு டக். இரண்டு மரக்கட்டைகளை அடித்து ஒலி எழுப்புவது.அனுமன் இலங்கை நோக்கி வானில் பறக்கையில் பிண்ணனி நீலம், சிவப்பு,மஞ்சள் பல்புகள் மாறி மாறி ஒளிவிடுகின்றன. ஒளி நின்று வழக்கமான வெள்ளி நிற ஒளி வந்ததும் அனுமன் இலங்கையில் நிற்பான். அனுமனுக்காகவும் , ராமன், லட்சுமணன்,ராவணனுக்காகவும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஒரே ஆள்.


பள்ளிக்கூடம் சென்று வந்ததும் பொறுப்பாய் படிப்பு. ஏழு முப்பதிற்கு ரெக்கார்டு போட்டு விடுவார்கள். அப்பாவிடம் சில்லறை வாங்கி ஓட்டம் தான். அதிசயம் ஒருநாளும் கோபித்துக் கொள்ளாமல் ஐம்பது பைசா சொடுத்தார். நண்பர்கள் நாங்கள் மொன்னையன், சொட்டையன் தமாஸ் காட்சிகளுக்காகத்தான் காத்திருப்போம். என் பத்து பைசாவை கொடுடா மொன்னை வக்காலி! தோல் பொம்மலாட்டம் முடியும் வரை மொன்னையனிடம் சொட்டயன் கொடுத்த பத்து பைசாவை வாங்க முடியவில்லை. பத்து நாட்கள் தொடர்ந்து தூக்கம் கெட்டு பார்த்தால் எனக்கு ஆசன வாய் துவாரத்தில் மூன்று நாட்கள் பின்னர் வர்ணம் வர்ணமாக கழிவுகள் வெளியேறியது கூட நடந்தது.


படத்தில் சொன்னது போலவே அந்தக்கலை அழிந்துவிட்டதுதான். ஆனால் புதியனவற்றை வரவேற்கும் நாம் ஒரு கலை சாவதற்காக வருத்தமே படக்கூடாது.ஏலே! நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி! ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே! ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது! மழை வரும் என்று சொன்னார்கள்! அண்ணன்மார் கதையை கூத்து கட்டி ஆடினார்கள்.உள்ளூர் ஆட்கள் கூட படுகள நிகழ்ச்சிக்காக விரதமிருந்து கலந்து கொண்டார்கள்.கூத்து முடிந்த நாள் மழை வந்தது! 


                 கூத்து முடியும் வரை பெண் வேடமிட்ட ஆணுக்கு உள்ளூர் பென்கள் சேலை கட்டி விட்டார்கள்.அவனை நிசமாகவே காதலித்தார்கள்.அவன் கூடவே சிலர் படுத்தார்கள்.அவன் மீது காதலாய் திரிந்தார்கள்.அவனுடன் கூடவே ஊர் ஊராக போகவும் ஆசைப்பாட்டார்கள். கூடவே சென்று வேறு ஊர்பெண்கள் மீது அவன் மையல் கொண்டு விடாமல் இருக்க,தான் மட்டுமே அவனிடம் நொட்டிக் கொள்ள ஆசைப்பட்ட பிசாசுகள் இன்று ஒன்றுமே நடவாதது போல் ஊருக்குள் திரிகின்றன.


தமிழரசி சின்னப்பெண். தோல்பொம்மை கூத்துக்காரப்பெண்.அவள் மீது பிரியமாய்த் திரிகிறான் நாயகன். உள்ளூரிலேயே அவர்கள் தங்கிவிட ஏற்பாடு செய்கிறான். பசங்க படம் வந்தபிறகு தான் இப்படி சிறுவர்களை வைத்து ரீல் நகர்த்தும் வேலையை இயக்குனர்கள் தைரியமாய் செய்கிறார்கள்.கதாநாயகி பாஸாகி பாஸாகி படிக்கிறாள்.நாயகன் பெயில் ஆகிவிடுகிறான். கண்டிப்பாக இதுதான் யதார்த்தம்.ஆனால் இதுவரை நாம் பாஸாகி மெடல் குத்திக் கொள்ளும் நாயகர்களைத் தான் திரையில் பார்த்திருக்கிறோம்.ஸ்டேட் பர்ஸ்ட் என்று வேறு நம் காதில் வாழைப்பூவையே சொருகுவார்கள்.


                  நண்பர்கள் கருத்துப்படி எங்கே நாயகி நைசாக நழுவி விடுவாளோ என்று நாயகன் நாயகியை பலாத் பண்ணி விடுகிறான். அவளின் படிப்பு கெடுகிறது. அவள் அம்மா தூக்கில் தொங்குகிறாள் ... நாயகி மகாராஸ்டிரா போகிறாள்.நாயகன் தேடிப் போகிறான் ... ஐய்யோடா சாமி! போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது! வழக்கம் போல நம்மை நோகடித்து தியேட்டரை விட்டு அனுப்புகிறது!


அடுத்ததாக துணிக்கடை சேல்ஸ்மேன் தான் கதாநாயகன் என்று பலராலும் எழுதப்பட்ட,  
பேசப்பட்ட படம் அங்காடித்தெரு.கிரிக்கெட் ஆடுவதற்காக சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்ட் போல வெட்டி பந்து தயாரித்து ஆடுவது வழக்கமே! திரையில் முதலாக வருகிறது!  அதில் அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பது அடியேனுக்கு தெரியும். வலி உயிர் போய் வரும்.எல்லாம் பந்து வாங்க காசில்லா கொடுமையால் வரும் வினைதான். வாத்தியாரிடமோ, அப்பாவிடமோ பெயில் ஆகி அடிதின்று படித்தால் தான் படிப்பு ஏறும். உள்ளூர் தெருவில் ஒரு கேரக்டர் அடிதின்று வெட்கப்படுகின்றது பெய்ல் ஆகி! நகரம் நோக்கி குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் தனங்களை விட்டு     
                                                      
திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு படையெடுத்து வரும் வெளியூர் ஆட்களின் கதிகள் இப்படித்தான். ஒரே குடோனில் அடைந்து கிடக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கம்பெனியிலேயே வெள்ளை நிற வில்லைகள் கொத்தாய் எடுத்து நீட்டும். ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது! என் தந்தை காக்காய் இப்போது! என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார். 


                   சூர்யா என்கிற நடிகரை ’அயன்’ என்கிற திரைப்படத்தில் கண்டு பிரமித்தேன். என்ன ஒரு குறுகிய வளர்ச்சி! அதை விட பிரமிப்பு தமன்னா! நெஞ்சே நெஞ்சே நீ எங்கே!நானும் அங்கே! பக்கத்திலிருந்த காதலியிடம் சொன்னேன். “ரொம்ப அட்டகாம்டி!” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல! இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம்! என்றாள். ஆனால் ஜீவா தான் செத்துப் போனார். இப்போது ஜீவா இல்லை. சாகலாம் என்று சொன்ன காதலியும் வேறு காதலனைத் தேடிக் கொண்டாள். அனாதையாயாகத் தான் அங்காடித்தெருவை பார்க்க கடவுள் என்னை நிர்பந்தப்படுத்தி விட்டார். ஆனால் அங்காடித்தெருவை காதலியின் துணையின்றி தனியாக பார்ப்பவன் நிச்சயம் பாவம் செய்தவன் தான்.


பேப்பர் செய்தி போல சாலையோரத்தில் 
தூங்கும் மனிதர்கள் மீது டாட்டா சுமோ ஏறிப்போகிறது! நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்படம் விட்டுவைப்பதில்லை! யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள்! சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனை!இவைதான் கேலிக்கூத்து! அங்காடித்தெருவில் முக்கியமான காமெடி இருக்கிறது!அது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும்! அவரது நடிப்பும்!அந்தப் பாடல் அதைவிட தமாஸ்! நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால்? பயங்கரம்தான்!!