Friday, January 15, 2010

ஷாராஜ் கவிதைகள்


என்னால் நிச்சயமாக
சொல்ல முடியும்
நான் காணாமல் போய்விட்டேன் என்று
நம்புவது உங்களுக்கு சிரமமாகலாம்
நேரில் நானே தெரிவிப்பதால்
ஒருவேளை நீங்களும் இதை
உணர நேர்ந்தால் அறிவீர்கள்
என்பதும் உறுதி, ஒரே ஒரு சந்தேகம்
காணாமல் போவதற்கு முன்பு- நான்
இருந்தேனா என்பது மட்டும்.
--------------------------------------------------------------

வந்தமர்கின்றன நீலங்கலந்த சாம்பல் நிறம்
கழுத்தசைவில் பச்சை மெஜண்டா
கருநீலம் எனக் குழம்பி மின்னச்சிலதும்
கறுப்பில் சிலதும் - இரண்டும் கலந்து சிலதுமாய்
கோபுரத்தில் புறாக்கள்.
ஆகாசத்தின் விரிந்த மனசையா
இரைதேடிச் சலித்ததையா
எதைப்பேசி முணுமுணுக்கின்றனவோ
தங்களுக்குள்,
அண்ணார்ந்து பார்க்கும் கண்களுக்குச்
சிக்குவதில்லை புறாக்களின் ரகசியமொன்றும்
கோபுரத்து பொம்மைகளுக்குமப்படியே
உற்றுப்பார்த்தால் இன்னொன்றும் தெரிகிறது
எள்ளலா விகசிப்பா எனவறியாதபடிக்கு
உறைந்திருக்கும் அப்பொம்மைகளின்
காரைப் புன்னகை.
---------------------------------------------------------------------


3 comments:

Karthikeyan G said...

அருமையான கவிதைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி

ச.முத்துவேல் said...

முதல் கவிதை உங்கள் வீட்டில் படித்ததுதான். அப்போது வியந்து பாராட்டினேன்.

மரா said...

@கார்த்தி
அடிக்கடி வாங்க.நன்றி

@முத்துவேல்
வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.